“சௌந்திரிய மஹாலின் இரகசியம்”

“மீண்டும் சத்தியமூர்த்தியின் அட்டகாசம்” என்னும் தலைப்பின் கீழ் சௌந்திரிய மஹாலில் சில தினங்களுக்கு முன் நடந்த மீட்டிங்கைப் பற்றி ஒரு நிருபர் அக்டோபர்  15-ந்தேதி ஜஸ்டிஸ் பத்திரிகையில் எழுதியிருப்பதின் சாராம்சமாவது:- சென்னை சுயராஜ்யக் கட்சியின் பிரதம புருஷராகிய ஸ்ரீமான் சத்தியமூர்த்தியும், வைதீகப் பிராமண கோஷ்டியின் தலைவரும், சமுதாய முன்னேற்றத்துக்கு எதிரிடையாயுள்ளவருமான, ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியாரும், புதிதாக இக்கோஷ்டியில் சேர்க்கப்பட்ட ஸ்ரீமான்.டி.குழந்தையும் சில நாட்களுக்குமுன் சௌந்திரிய மஹாலில் நடைபெற்ற மீட்டிங்குக்கு வந்திருந்தனர். ஸ்ரீமான். எம்.கே. ஆச்சாரியார் அக்கூட்டத்தில் தலைமை வகித்தார். இவர் முன்னுரை பேசுகையில் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் சிலரைத் தாக்கிச் சில வார்த்தைகளுரைத்தார். இங்ஙனம் கூறியதற்குக் காரணமென்னவென்றால், காலஞ்சென்ற டாக்டர்.டி.எம்.நாயர், ஸர்.பி.டி.செட்டியார் முதலிய தலைவர்களின் முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட ஜஸ்டிஸ் கட்சியானது பிராமணர்களின் செல்வாக்கை ராஜீய விஷயத்திலும், சமூக விஷயத்திலும் மற்றும் இரண்டொரு துறைகளிலும் குறைத்துக் கொண்டு வருகிறதினாலேயாம். பிராமணரல்லாதாரும், ஆதிதிராவிடர்களும் தங்கள் நிலைமையை நன்கறிந்து உஷாராய் நடந்து கொள்ளச் செய்ததும் இக்கக்ஷியேயாகும். காரியம் இப்படியிருக்க, ஸ்ரீமான். ஆச்சாரியாரின் தாக்குதல் ஓர் அதிசயமுமன்று.

சத்தியமூர்த்தி

சௌந்திரிய மஹால் கூட்டத்தில் பேசியவர்களில் ஸ்ரீமான். சத்தியமூர்த்தி பிரதானமானவர். இவர் தன் பிரசங்கத்தை ஆரம்பிக்கும்போதே, ஜஸ்டிஸ் கட்சியைத் தாக்கத் துவங்கினார். பிறரைத் தாக்க வேண்டுமானால் மரியாதையின்றி அசட்டுத்தனமாகவும், கண்ணியக்குறைவாகவும் பேசுவதில் இவர் சமர்த்தரென்று கூறலாம். இவர் கூறுவதில் மெய்யும், பொய்யும் நிறைந்து இருக்கும். தான் சட்டசபையிலாகட்டும், சர்வகலாசாலைக் கூட்டத்திலாகட்டும், மற்றும் எந்த மேடையிலும் பேசும்போது பிராமணரல்லாதாரின் முன்னேற்றத்துக்குப் பலத்த சாதனமுள்ள ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாய்ப் பேசுவதில் மட்டும்பின் வாங்குவதில்லை. இப்பேர்ப்பட்டவரும் ஓர் தேச பக்தராம்!

ஆச்சாரியாரின் அதிகப் பிரசங்கம்

அக்கூட்டத்தின் அக்ராசனர், ஸ்ரீமான் ஏ. இராமசாமி முதலியாரை தாக்கிப் பேசினார். ஸ்ரீமான் முதலியார் இங்கிலாந்தில் ஒருவிதமாகவும் இந்தியாவிற்கு வந்ததும் வேறு விதமாகவும் பேசுகின்றாரென்றும், இவருக்கென்று இங்கிலாந்தில் ஒரு கக்ஷியும், இந்தியாவில் மற்றொரு கக்ஷியும் இருக்கின்றதாவென்றும் சுட்டிக்காட்டி அலக்ஷியமாய்ப் பேசினார். இவர் இவ்வித முறையில் பேசுவதற்குக் காரணமென்னவென்பது முன்னரே கூறப்பட்டிருக்கிறது. ஸ்ரீமான் முதலியார், இங்கிலாந்தில் பேசும்போது, ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே இந்தியா தேசத்தின் விடுதலையைப் பற்றிக் கூறினார். இங்கு வந்ததும், அக்கொள்கைகளைக் கொண்டேதான், பிராமணர்களின் கொடுமைகளைத் தகர்த்து பிராமணரல்லாதாரின் விடுதலைக்கென்று பேசிவருகிறார்.

பிராமணரல்லாத சமூகத்தினுடையவும், தீண்டாதாரல்லாத சமூகத்தினுடையவும், தீண்டாதார்களினுடையவும் விடுதலையே தேச விடுதலையென்பது அவருடைய கருத்து. சென்னை மாகாணத்தில் ஆச்சாரியர்கள், சத்தியமூர்த்திகள், ஐயங்கார்கள் செய்யும் அட்டூழியத்தைக் காணும் எந்தப் பிராமணரல்லாதாரின் மனந்தான் நோகாமலிருக்கின்றது. பிராமணரல்லாதாரின் தலைவர்கள், இந்தப் பாழும் பிராமணர்களைப்போல் வேஷதாரிகளல்ல. உண்மைக்கும் யோக்கியதைக்கும் பாடுபடுகின்ற பெரியோர் என்பது இந்த ஆச்சாரியாருக்கும் தெரிந்தேயிருக்குமென்பது எனது நம்பிக்கை.

இப்பிராமணர்களின் சொல்லொன்று, செயலொன்று என்பதற்கு ஒரு உதாரணத்தைக் கூறிவிட்டு அடுத்த பாகத்திற்குச் செல்லலாம். ஸ்ரீமான்கள் ஆச்சாரியார், ஏ.ரெங்கசாமி ஐயங்கார் முதலியவர்களின் கோஷ்டியினர், மந்திரிகளும், நிர்வாக சபை மெம்பர்களும், கவர்னர்களும் ஆங்காங்கு திக் விஜயம் செய்து வேண்டுவன செய்வதைக் கண்டியாமலிருப்பதில்லை. இந்த பெரிய உத்தியோகஸ்தர்கள், பொது ஜனங்களின் பணத்தைப் பிரயாணத்திலேயே பாதி கழித்துவிடுகின்றார்கள் எனக் குறைகூறுவதற்கும் இவர்கள் பின்வாங்குவதில்லை. இதற்கெல்லாம் காரணமென்னவென்றால், இந்த உத்தியோகஸ்தர்கள் “சைத்தான்” கவர்ன்மெண்டில் வேலைபார்க்கிறார்களாம். ஆனால் அதே கவர்ன்மெண்டில் பூணூல் தரித்துள்ள தங்கள் இனத்தானொருவன் உத்தியோகத்திலிருந் தால், முன் கூறிய ஞானம் போய்விடுகிறது. ஜாதி அபிமானம் வந்து ஒன்று சேர்ந்துவிடச் செய்கிறது. பூணூல் தரித்துள்ள ஐயங்கார்கள், ஐயர்கள் மற்றும் எந்த பிராமணனான போதிலும் சரியே, அவர் மிதவாதியோ, காங்கிரஸ் வாதியோ, கவர்ன்மெண்ட் உத்தியோகஸ்தரோ அதைப்பற்றிக் கவலையில்லை, வேண்டியது பூனூல் கோஷ்டிதான். இந்த யோக்கியதையை அநுசரித்தே, தபால் இலாகா அதிகாரி ஸ்ரீமான். ராய்க்கு நடந்த விருந்தில் இந்த பிராமணர்கள் ஆஜராயிருந்தார்கள் போலும். சபாஷ்! இத்தகைய பெயர் வழிகளையா “சுயராஜ்யக்” கட்சியினரென்று கூறுவது? இவர்களில் இங்ஙனம், யார் எந்த கொள்கையைக் கொண்டிருந்தபோதிலும், பிராமணன் என்றதும் ஒன்றுகூடிக் கொள்வதற்கெல்லாம் காரணம் உத்தியோக வேட்டையேயாகும். ஐயங்கார் மகன், ஐயர் மருமகன், ஆச்சாரியார் தம்பி என்று இப்படியே அவர்கள் உற்றார் உறவினர் யாவரும் சம்பிரமமாக உத்தியோகங்கள் யாவையும் பெற்று சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வதை பிராமணரல்லாதார் ஊன்றி கவனிக்க வேண்டும்.

ஜஸ்டிஸ் கட்சியர் செய்துள்ள நன்மைகள்

ஸ்ரீமான். எம்.கே. ஆச்சாரியார் தனது பிரசங்கத்தில் ஜஸ்டிஸ் கட்சி ஜனங்களுக்கு என்ன நன்மையைச் செய்துவிட்டது? அதனுடைய திட்டங்களெவை? எனக் கேட்டார். இவர் இங்ஙனம் கேட்டது, இக் கட்சியின் மீதுள்ள துவேஷத்தினால் ஏற்பட்டதே என்று ஒரு வார்த்தையில் பதில் கூறிவிடலாம். ஆனால், அக்கட்சியானது என்னென்ன நன்மைகளைச் செய்திருக்கின்றது என்பதை மீண்டும் பொது ஜனங்களுக்குக் கூறுவதால் நன்மையுண்டு என எண்ணுகிறேன். இக்கட்சி தோன்றுவதற்கு முன் கவர்ன்மெண்டு ஆபீஸ்களெல்லாம் பிராமண அக்ராகரமாகவும், பூனூல் கோஷ்டியாகவும், சுக்லாம்பாதரக் கூட்டமாகவும் நிறைந்து இலங்கிக் கொண்டிருந்தது.

பெரும்பான்மையாக, டபேதார் வேலையொன்றில் தவிர, மற்ற ஹைகோர்ட்டு ஜட்ஜ், டிஸ்டிரிக் முன்சீப், டெப்டிக் கலெக்டர், தாசில்தார், சிரஸ்தார், குமாஸ்தாக்கள் முதலிய சகல உத்தியோகங்களும் இவர்கள் காணியாக ஏகபோகமாகயிருந்தன. ஜஸ்டிஸ் கட்சி தோன்றவே இந்த விஷயத்தில் இவர்களின் செல்வாக்கு குறைய ஆரம்பித்தது. பிராமணரல்லாதாரும், ஆதிதிராவிடர்களும் படிப்படியாக மேலேறி இந்த ஸ்தானங்களைக் கைப்பற்றி வருகின்றனர். பிராமணரல்லாத ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகளின் ஆக்ஷியில் அநேக ஸ்தல ஸ்தாபனங்களில் கட்டாய இலவசக் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. பிராமணரல்லாத ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகளின் காலத்திலேயே இந்து தேவஸ்தான சட்டம், சர்வகலாசாலை சட்டம், தொழிலாளரின் அனுகூலச் சட்டம், இன்னும் பல அரிய நன்மைகள் செய்யப் பட்டிருக்கின்றது. ஜஸ்டிஸ் கட்சிதான் இந்தியாவில் உருவகமானதும், நியாய மானதுமான காரியங்களைச் செய்திருக்கிறது. இதற்கு ஒரு முக்கிய உதாரணம், இந்துமத தேவஸ்தான சட்டமேயாகும். இன்னும் என்னென்ன நன்மைகளை “ஜஸ்டிஸ்” கட்சி செய்திருக்கிறது என்பது ஸ்ரீமான்.எம்.கே. ஆச்சாரியாருக்குத் தெரியவேண்டுமானால், “ஜஸ்டிஸ்” பத்திரிகை ஆரம்பமானது முதற்கொண்டு இதுவரை உள்ள பிரதிகளைப் பார்வையிடும்படி கேட்டுக்கொள்கிறேன். அக்கிரமமாயும், அனாவசியமாகவும் ஓர் உண்மை யான கட்சியைப் பற்றி மாறுபாடாகப் பேசுகிற இவர்கள்தானா சுயராஜ்யக் காரர்!

மரியாதை தெரியாத சத்தியமூர்த்தி

ஸ்ரீமான். சத்தியமூர்த்தி பேசியதில் சிலவற்றையும் கவனிக்க வேண்டும். இவர் எத்தகைய மனப்பான்மையுடையவர் என்பது இந்த வியாசத்தின் துவக்கத்திலேயே கூறப்பட்டிருக்கிறது. இவர், கனம் பனகல் ராஜா, ஸர். பாத்ரோ, ஸ்ரீமான் எ. இராமசாமி முதலியார் முதலியவர்களைப் பற்றிக் கூறும்போது, கொஞ்சமும் மரியாதையின்றி பனகல், பாத்ரோ, ராமசாமி முதலியார் என்று கூறினார். ஒவ்வொருவருக்கும் கௌரவமாக உள்ள ராஜா, ஸர், ஸ்ரீமான் என்பன போன்றவைகளிருக்க இவர் இப்படிப் பேசியது தான் ஒரு சுயராஜ்யக் கட்சிக்காரர் என்ற எண்ணத்தினாலேயா? அல்லது இவருக் குத் தெரிந்த வித்தை இவ்வளவு தானாவென்பது நமக்கு விளங்கவில்லை. ஸ்ரீமான். சத்தியமூர்த்தி, பலதடவை இங்கிலாந்துக்குப் போயிருக்கிறார். அங்கு “மரியாதை” இன்னது தானென்பதை இவர் கற்றிருந்திருக்கவேண்டும். இங்கிலாந்தில், மரியாதையாகப் பேசுவது, ஜனங்களுக்குரிய விசேஷ இலக்ஷணம். இந்தியாவிலும் இப்பான்மை உண்டு. ஆனால் இம்மூர்த்தியினிடம் தான் அந்தக்கலம் சூன்யமாய் இருக்கிறது. ஜஸ்டிஸ் கட்சியின் தலைவராகிய பனகல் ராஜா இந்த நாட்டிற்கு எத்தகைய உருவகமான வேலைகளைச் செய்திருக்கின்றாரென்பதை பொது ஜனங்கள் அறிவார்கள். ஆனால், சுயராஜ்யக் கட்சி தேசாபிமானியாகிய மரியாதையற்ற சத்தியமூர்த்தியோ ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களின் பாதரட்சையின் வாரையும் அவிழ்க்க யோக்கியதையுடையவரல்ல. இனியேனும் மூர்த்தியும் அவர் கோஷ்டியினரும் மரியாதை இன்னதென்பதைக் கற்றுக்கொள்ளுவார்களாக. மரியாதை தெரியாதவரும் உண்மையற்றவருமான இவர்கள்தானா சுயராஜ்யக்காரர்!

அடுத்து வரும் சட்டசபை தேர்தல்

அடுத்து நடைபெறப்போகும் சட்டசபைத் தேர்தல்களுக்கு சுயராஜ்யக் கட்சியினர் பெரும்பான்மையான ஸ்தானங்களுக்கு பிராமணரல்லாதாரையே நிறுத்தபோவதாகத் தங்கள் கட்சிக் கூட்டத்தில் பேசியிருக்கின்றதெனக் கூறுகிறார். இவர் கூறுவது பெறும் பித்தலாட்டமேயன்றி வேறல்ல. இம்மாதிரி கூறுவதால் பிராமணரல்லாதார் ஏமாந்து போவார்களென்பது ஐயருடைய எண்ணமானால், அவருடைய புத்திப் போக்குக்காக நாம் இரங்காது வேறென்ன செய்வது? பிராமணர்களே சுயராஜ்யக்கட்சியின் சார்பாக சகல ஸ்தானங்களுக்கும் நிற்கட்டுமென நான் கூறுகிறேன். அப்போதுதான், பொது ஜனங்கள் யார் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களென்பது தெரியவரும். பிராமணர்கள் அடியோடே தோல்வியடைவார்களென்பது அப்போது தெளிவாகும். மற்றும் எங்கெங்கு தங்களுக்கு ஜெயம் கிடைக்காதோ, அங்கங்கே வேண்டாமென்றும், எந்த இடங்களில் சுலபமாக ஜனங்களை ஏமாற்றிவிடலாமோ அந்த இடங்களில் தங்கள் கக்ஷியினரை நிறுத்தி வெற்றி கொள்வதும் இவர்கள் வழக்கமென்பது வாசகர்கள் அறிந்ததேயாகும்.

சுத்தப் பொய்

ஸ்ரீமான் சத்தியமூர்த்தி எலெக்ஷன் காலத்தில் ஜஸ்டிஸ் கக்ஷியாவது அல்லது அதைச் சேர்ந்த மந்திரிகளாவது தேர்தல் ஸ்தானங்களுக்கு அபேக்ஷகர்களை நிறுத்தவில்லையென்றும் ஜெயமடைந்த பிரதிநிதிகளைத் தங்கள் கக்ஷிக்குள் இழுத்துக் கொண்டார்களென்றும் கூறினார். இது சுத்தப் பொய்யான வார்த்தைகளேயாகும். தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சியினர் தகுந்த அபேக்ஷகர்களை நிறுத்தி பெரும்பான்மையான வோட்டுகளைக் கொண்டு வெற்றி பெற்றிருக்கின்றனர். உண்மையைத் திரித்துக் கூறுவதினால்தான் இவருக்கு அசத்தியமூர்த்தி எனச் சிலர் பெயர் வைத்துவிட்டனர் போலும். மற்றும் மந்திரிகள் சுற்றுப் பிரயாணம் செய்வதிலேயே பொது ஜனங்களின் பணத்தைப் பெருமிதமாகச் செலவழித்துவிட்டனரென்று கூறுகிறார். இதுவும் அசட்டு வார்த்தையென்றே கூறுவோம். மந்திரிகள், தங்கள் இலாகாவைச் சேர்ந்த பல ஜோலிகளைக் கவனிக்கப் பல இடங்களுக்கும் போகாமலிருக்க முடியுமா? அங்ஙனம் போகும் போது, பிரயாணத்திற்கெனப் பணம் செலவழிக்காமலிருக்க முடியுமா? இதெல்லாம் சத்தியமூர்த்திகளுக்குத் தெரியாமல், மந்திரிகள் எலக்ஷன் பிரசாரம் செய்கின்றார்களென்றால் இதுவும் அவர்களுடைய பிதற்றல்களிலொன்று எனத் தள்ளிவிடுதலே உசிதம்.

சத்தியமூர்த்தியின் வீண் பேச்சு

இந்து தேவஸ்தான பரிபாலன மசோதாவைப் பற்றி நமது சத்தியமூர்த்தி பேசும்போது பேசிய பேச்சுக்கள் ஒவ்வொன்றும் அழுத்தமாகக் கண்டிக்கத் தக்கதேயாகும். இந்து தேவஸ்தான மசோதா அடுத்த வரும் தேர்தலுக்கென்று செய்யப்பட்ட சூழ்ச்சி என்கிறார். ஒருவர் ஒரு காரியத்தைச் செய்தால் அதற்கு அர்த்தம் இப்படிச் செய்கிறார். அவர் வேறொன்றும் உருவகமான வேலை செய்திராவிட்டால், இந்த மந்திரிகளால் பிரயோஜனமே கிடையாதென்கிறார். மந்திரிகள் தங்கள் தேசத்திற்குச் செய்யவேண்டிய நன்மைகள் எதுவோ, அவைகளை நன்கு கவனித்து அதற்கென்று, திட்டங்களும் சட்டங்களும் சாதனங்களும் ஏற்படுத்தினால் மூர்த்தி கோஷ்டியார் இவையெல்லாம் எலெக்ஷன் தந்திரமென்கிறார்கள். இவ்விஷயங்கள் யாவையும் ஊன்றிக் கவனிக்கும்போது இவர்களின் பித்தலாட்டம் இன்னதென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகின்றது.

விஷம பிரசாரம்

ஸ்ரீமான் சத்தியமூர்த்தி இன்னொரு விஷயத்திலும் பொருந்தாத வார்த்தைகள் சில கூறியிருக்கிறார். அதாவது “டாக்டர் வரதராஜுலுவும், ஸ்ரீமான் வாசுதேவையாவும் ஜெயிலில் கேழ்வரகு அரைக்கும்படி நேரிட்டது இந்த மந்திரிகளின் காலத்திலேயே” என்கிறார். இவர் சில தினங்களுக்கு முன்பாக, டாக்டர் வரதராஜுலுவை முதற்தடவையாக பிராசிகியூஷன் செய்ததற்கு அட்வோகேட் ஜெனரலாக அப்போதிருந்தவர் காரணமில்லையெனக் கூறினார். சட்டரீதியான விஷயங்களுக்கு அட்வோகேட் ஜெனரல்தான், காரணஸ்தரென்பதை யாவரும் அறிவார்கள். இம்மாதிரி விஷயங்களுக்கும், மந்திரிகளின் ஆட்சிக்கும் எவ்வித தொந்தமுமேயில்லை. அப்படியிருக்க முன் பின் யோசியாமல், வாய்க்கு வந்தபடி பேசிவிடுவது யோக்கியமா வென்று கேட்கிறேன். எந்த மந்திரியாவது, “டாக்டர் வரதராஜுலுவும், ஸ்ரீமான் வாசு தேவையாவும் தினம் இவ்வளவுதான் கேழ்வரகு அரைக்கவேண்டுமென எங்கேயாவது குறிப்பிட்டிருக்கிறார்களா”வென்பதை ஸ்ரீமான் மூர்த்தி ருசுச் செய்ய முடியுமா? இவையெல்லாம் வேண்டுமென்று ஒருவர் பேரில் கெட்ட எண்ணம் கற்பிப்பதற்கு செய்யும் பொய் பிரசாரமேயாகும்.

நமது தீர்மானம்

இந்த ஆச்சாரியார்கள், மூர்த்திகள், ஐயங்கார்கள் போன்ற பூனூல் கோஷ்டியினர் என்ன கூச்சல் செய்யினும் பிராமணரல்லாதாராகிய நாம் அவைகளை லக்ஷியம் செய்ய வேண்டியதில்லை. அடுத்த எலெக்ஷனில் நம் கக்ஷிக்கு வெற்றியேற்பட்ட போதிலும், தோல்வி நேரிட்டபோதிலும் சரியே நாம் யாரும் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. நமது கக்ஷியின் நோக்கமெதுவோ, நமது லக்ஷியம் என்னவோ, அவற்றைமட்டும் குறியாகக் கொண்டு உழைப்போம். அப்போது சமுதாய சீர்திருத்தம் மேலோங்க நாட்டிற்கு விடுதலையும் ஏற்படும்.

(குடி அரசு - கட்டுரை - 01.11.1925 )

Pin It