தாய்த்திரு நாட்டிற்கு யாம் இதுகாறும் இயற்றிவரும் சிறு தொண்டினை ஒரு சிறு பத்திரிகை வாயிலாகவும் எம்மால் இயன்றளவு ஆற்றிவரல் வேண்டுமென இரண்டாண்டுகளுக்கு முன்னர் எம்மிடத்து எழுந்த பேரவா இன்று நிறைவேறும் பேற்றை அளித்த இறைவன் திருவடிகளில் இறைஞ்சுகின்றோம். ஒரு சிறு பத்திரிகையையேனும் செவ்வனே நடாத்தும் ஆற்றல் ஒரு சிறிதும் எமக்கில்லை என்பதை நன்குணர்வோம். பேரறிவும், பேராற்றலும், விரிந்த கல்வியும், பரந்த அனுபவமும் உடையவர்களே இத்தொண்டினை நடத்தற்குரியார். இவ்வருங் குணங்கள் எம்பால் இல்லாமல் இருந்தும் ‘என்கடன் பணிசெய்து கிடப்பதே’ என்ற பெரியார் வாக்கை கடை பிடித்தே ......................... வலிமையால் இப்பத்திரிகை நீண்டகாலம் இத்தமிழுலகில் நிலவித் தேசத்தொண்டு ஆற்றி வரும் என்னும் நம்பிக்கையும், உறுதியும் பெரிதுமுடையோம்.

இஃதோர் பத்திரிகை யுகமாகும். நமது தமிழ் நாட்டில் நாளடைவில் பத்திரிகைகளின் தொகை பெருகிக்கொண்டே வருகிறது. இதுகாறும் எத் துணையோ பத்திரிகைகள் தோன்றின ; அவைகளுள் சிறிதுகாலம் நின்று மறைந்தொழிந்தன சில; நின்று நிலவுகின்றன பல. பத்திரிகைகள் பல தோன்று வதற்குக் காரணம் தமிழ்மக்கள் உலகியலை அறிய உளங் கொண்டமையே யாகும். ‘கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்’ என்ற குறுகிய நோக்கம் அருகி வருகின்றது. ‘இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டா லென்ன’ என்று எண்ணி வாழ்நாட்களை வீண் நாட்களாக்கி வந்த காலம் கழிந்துவிட்டது. உறங்கிக் கிடந்த நமது நாட்டார் புத்துயிரும், புத்துணர்ச்சியும் பெற்று நாட்டின் விடுதலையைக் கருதிப் பல துறைகளிலும் உழைக்க முன்வந்து நிற்கிறார்கள். அவ்வுணர்ச்சி நன்றாக வேரூன்றி, மேன்மேலும் தழைத்தோங்க ஒவ்வொருவரும் பாடுபடல் வேண்டும். இக்கடனை ஆற்றப் பல வழிகள் உண்டு. அவைகளுள் பத்திரிகையும் ஒன்றாகும். மேனாட்டார் மேன்மையுற்று விளங்குவதற்குக் காரணம் அந்நாடுகளில் ஆயிரக்கணக்கான பத்திரிகைகள் வெளிவந்து உலவுவதேயாகும். அந்நாடுகளில் ஒவ்வொரு பத்திரிகைக்கும் பல்லாயிரக்கணக்கான சந்தாதாரர்கள் இருக்கின்றார்க ளென்றும், பத்திரிகை நுழையாத சிறு குடிசைகளும் இல்லையென்றும் நாம் அந்நாட்டுச் சரித்திரங்களில் காண்கிறோம். தமிழ் மக்களின் தொகையை நினைக்கின், இப்பொழுது உலவி வரும் பத்திரிகைகள் மிகக் குறைவாகவே தோன்றும். இன்னும் பல பத்திரிகைகள் காணப்படல் வேண்டும். ஆகை யினால் எமது பத்திரிகையை மிகையென்று கருதமாட்டார்களென நம்புகிறோம்.

எமது பத்திரிகையின் நோக்கத்தையறிய விரும்புவார்க்கு நமது தாய்நாடு அரசியல், பொருளியல், சமூகவியல், ஒழுக்கவியல் முதலிய எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கச் செய்வதேயாகும் எனக் கூறுவோம். நமது நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்காகவும் அறிவு வளர்ச்சிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும், கலை வளர்ச்சிக்காகவும், சமய வளர்ச்சிக்காகவும் இதன் வாயிலாக இடையறாது உழைத்து வருவோம்.

ஆயிரக்கணக்காக பொருள் செலவிட்டு கட்டிய.........அஸ்திவாரம் பலமில்லாவிடில் இடிந்து விழுந்து அழிந்து போவதேபோல், ஒரு தேசத்தின் அடிப்படைகளாகிய தனி மனிதன், குடும்பம், பல குடும்பங்கள் சேர்ந்த ஒரு வகுப்பு, பல வகுப்புக்களாலாகிய கிராமம் ஆகிய இவைகள் எல்லாத் துறைகளிலும் மேன்மையுறாவிடின் அத்தேசம் ஒருநாளும் முன்னேற்றமடையாது. ஆகையினால், நமது தேசம் சுதந்திரம் பெற்று எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கவேண்டுமாயின் நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் தனது அறிவையும், ஆற்றலையும் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும்; ஒவ்வொரு தனிக் குடும்பமும் நந்நிலையடைய வேண்டும்; ஒவ்வொரு வகுப்பினரும் முன்னேற்றமடைதல் வேண்டும்; ஒவ் வொரு கிராமமும் பிற கிராமங்களினுடையவோ, நகரங்களினுடையவோ, நாடுகளினுடையவோ உதவியை எந்நாளும் எதிர்பார்த்து நிற்காத வண்ணம் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றமெய்தி தனித்தியங்கும் பெருமையை அடைதல் வேண்டும். அடிப்படைகளான இவைகளை அறவேவிடுத்து வெறும் தேசம், தேசம் என்று கூக்குரல் இடுவது எமது பத்திரிகையின் நோக்க மன்று. ஆகவே, இவ்வடிப்படைகளின் வளர்ச்சிக்கான முறைகளில் இடையறாது உழைத்து வருவதே எமது கொள்கையாகும்.

மக்களுக்குள் தன்மதிப்பும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளரல் வேண்டும் ; மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும். உயர்வு, தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்துவரும் சாதிச்சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால், இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிரும் ஒன்றென்று எண்ணும் உண்மையறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும். சமயச்சண்டைகள் ஒழியவேண்டும்; கடவுளர்களை நீதிமன்றங்களுக்கு இழுத்துச் செல்லும் இழிதகைமை தொலையவேண்டும். இன்னோரன்ன பிற நறுங்குணங்கள் நம்மக்கள் அடையப் பாடுபடுவதும் எமது நோக்கமாகும்.

இதுகாறும் விதந்தோதிய நோக்கங்கள் நிறைவேற உண்மை நெறி பற்றியே ஒழுகுவோம். அன்பு நெறியே எமக்கு ஆதாரம். பொய்ம்மை நெறியையும், புலையொழுக்கத்தையும் எமது அன்பு நெறியால் தகர்த்தெறிவோம். இவர் எமக்கு இனியர், இவர் எமக்கு இன்னார் என்ற விருப்பு வெறுப்புக்கள் இன்றிச் செம்மை நெறி பற்றி ஒழுகி எம்மாலியன்ற தேசத் தொண்டாற்றி வருவோம். “நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற் சென்றிடித்தற் பொருட்டு” எனும் தெய்வப் புலமை திருவள்ளுவரின் வாக்கைக் கடைபிடித்து, நண்பரேயாயினுமாகுக ! அவர்தம் சொல்லும், செயலும் தேசவிடுதலைக்குக் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித் தொதுக்கப்படும்.

மேற்கூறிய உயரிய நோக்கங்களைத் தாங்கித் தாய்த்திருநாட்டிற்குத் தொண்டியற்ற வெளிவந்துள்ள எமதருங்குழவியைத் தமிழ்மக்கள் அனை வரும் முழுமனதுடன் ஆதரிப்பார்கள் என்ற முழு நம்பிக்கையுடையோம். இப் பத்திரிகையின் வருடச் சந்தா ரூபா மூன்றே தான். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையன்று வெளிவரும். இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்குப் போதிய அறிவையும், ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்தருள் பாலிப்பானாக.

(குடி அரசு - தலையங்கம் - 02.05.1925)

Pin It