மதச் சம்பந்தமானது என்றால் பலர் அது ஏதோ ரொம்பப் பெரிய சங்கதி; மாற்றக்கூடாத சங்கதி என்பதாகக் கருதுகிறார்கள், மாற்றப் பயப்படுகிறார்கள். மதம் என்றால் என்ன? மக்கள் சமுதாயத்துக்கு, மக்கள் வாழ்வுக்கு, மனிதர்களோடு மனிதர்கள் கலந்து வாழுவதற்கு என்னென்ன கோட்பாடுகள், கொள்கை, திட்டங்கள், நடப்புகள் வேண்டுமோ அதை ஒரு அமைப்பாக அமைத்துக்கொள்வதுதான் மதம் ஆகும்.

ஆனால் மக்கள் இதை ரயில் தண்டவாளத்தைப்போல ஆக்கி, இதில் மாற்றங் கூடாது, சிந்திக்கக் கூடாது என்பதாக மூடத்தனத்தின் மீது ஏற்றிவிட்டதால் இப்போது மதம் என்றால் ஏதோ புரியாத பெரிய சங்கதியாகத் தோன்றுகிறது பலருக்கு. இப்படிப்பட்ட மக்கள் சமுதாயத்தின் வாழ்வு நடப்பமைக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு, அப்படிப்பட்டதான ஓர் அமைப்பு ஏற்பட்ட காலத்தில் உலகம் எப்படி எந்த உருவத்தில் இருந்ததோ அதே உருவத்திலேயே, அமைப்பிலேயே எல்லாக் காலத்துக்கும் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை, தேவையுமில்லை, அதேபடி இருக்கவும் முடியாது. மனிதனின் எண்ணமும், படிப்பும், அறிவுநிலையும் அவனது ஆசாபாசமும், பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரே தன்மையில் இருக்கவும் முடியாது.

ஆதாரத்தின் அடிப்படையில் மாற்றம் காண மனிதனுக்கு இஷ்டம் இல்லாவிட்டாலும் நடப்பில் மாறுதல் ஏற்பட்டுத்தான் தீரும். ஒரு மதத்தில் சொல்லப்பட்ட ஒரு காரியத்துக்கு ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு ஏற்ப, அவரவர்களின் வசதி, தன்மை, நன்மைக்கு, எண்ணத்திற்கு ஏற்ற மாதிரியில் வியாக்கியானம், பொருள் செய்வதன் மூலமாக இந்த மாற்றங்கள் ஏற்படலாம். எல்லா மத மக்களிடமும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. மதச்சார்பான ஏட்டில், பாட்டில், அடிப்படையில் மாற்றம் இல்லாவிட்டாலும் வியாக்கியானத்தில், அவற்றுக்கு பாஷ்யங் கூறுவதன் மூலம் நடப்பில் இன்று மாறுபாடு காணமுடிகிறது. பல மதத்திலும் நாம் பார்க்கிறோமே, ஆதாரங்கள், அடிப்படைகள் அப்படியே இருக்க வியாக்கியானத்தின்மூலம் நடப்பில் மாறுதல் காணுவதை, உதாரணம் வேண்டுமானால் பல மத வேத சாஸ்திரக் கருத்துகளையும் அந்த மத மக்கள் நடப்புகளையும் பாருங்கள்.

என்னிடம் பல பெரியவர்கள் பேசுகிறபோது பல தடவை கூறியிருக்கிறார்கள். நீ சொல்கிற கருத்துகள் சரிதான், ஆனாலும் இந்தக் கருத்துகளை நீ சொந்தமாகச் சொல்கிறாயே என்றால் மக்கள் அவ்வளவு சீக்கிரமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆதலால் நீ இப்போது சொல்கிற இதே கருத்துகளை நீயே உன் சொந்தத்தில் சொல்கிறாய் என்பதாக இல்லாமல், பழைய கருத்துகளுக்கு மெருகு கொடுத்து மதச் சார்பில், மதக் கருத்துகளில் சொல்லப்படும் கோட்பாடுகளுக்கு இதுதான் கருத்துப் பொருள், என்பதாக அர்த்தம் சொல்லிச், சொன்னால் மக்கள் ஒப்புக் கொள்வார்கள் என்பதாகக் கூறியிருக்கிறார்கள். பலர் இந்தப்படிச் சொன்னார்கள். உலகத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்றவரென்று சொல்லப்படும் காந்தியாரே என்னிடம் இந்தப்படியாகக் கூறியிருக்கிறார். ஒரு ஆதாரத்துக்கு, பல வியாக்கியானம்தான் ஒரு மதத்தில், பல கிளைகள் ஏற்பட்டதற்குக் காரணமாகும்.

மற்றும் நண்பர் ஆச்சாரியார் அவர்கள் ஒன்று சொன்னார், பேசுவதினால் எந்தச் சீர்திருத்தமும் செய்துவிட முடியாது; நடத்தையில் செய்யவேண்டும் என்று. அது ரொம்பவும் சரியான பேச்சு; இன்றைய நிகழ்ச்சிக்கு இது மிகவும் பொருத்தமான பேச்சு; ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் பேச்சைவிட நடத்தைதான் முக்கியம். நபி அவர்கள் தாம் சொன்ன காரியங்களைத் தாமும் நடந்து காண்பித்தார். அதுவும் தம்மைப் பின்பற்றும் மக்கள் தம்முடைய வாழ்வுச் செயலுக்கு ஒரு முன்மாதிரியாக அவர் நடப்பைக் கையாளுகிற மாதிரியான தன்மையில் நடத்திக் காண்பித்தார். அதுவேதான் இன்று அந்த மக்களைப் பெரிதும் கட்டுப்படுத்தி ஆட்சி புரிகிறது. ஆகவேதான் அது மிகவும் பொருத்தமானது என்று கூறுகிறேன். ஒவ்வொருவரும் தாங்கள் தங்கள் சங்கதிதான் பெரிது என்று மற்றவர்களை அடித்துப் பேசுவதில் பயன்இல்லை. நடத்தையில் அதைக் காண்பிக்கவேண்டும். நண்பர் ஆச்சாரியார் அவர்களும், நானும் ஒன்றாக, இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டோம். இதை நீங்கள் யாரும் தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் யாரும் மயங்கிவிடுகிறவர்கள் அல்ல. அவர், அவர் போக்கிலேயே இருப்பார்; அதே மாதிரி நானும் என் போக்கிலிருந்து மாறமாட்டேன். ஏன் இதை இவ்வளவு தூரம் சொல்கிறேன் என்றால் நீங்கள் எங்களைப்பற்றிச் சந்தேகப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். நான் சாதாரண ஜனங்களைக் கட்டிக்கொண்டு அழுகிறேன். இந்தச் சந்திப்புக்கு எவனாவது ஏதாவது ஒரு உள் கருத்து கட்டிவிட்டால் அதை எளிதில் நம்பிவிடுவார்கள். ஆனதால் இதில் உள் கருத்து ஒன்றும் இல்லை, மனிதத் தன்மை எங்களை இங்கு ஒன்று கூட்டி இருக்கிறது. உள்ளபடி இந்த நாள் என்னால் மறக்க முடியாத ஒரு முக்கியமான விசேஷ நாள் என்றே சொல்வேன். இதுமாதிரியான சந்தர்ப்பங்கள் நிறைய ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறேன். அய்யா அவர்களும், (கனம் ஆச்சாரியார் அவர்களும்) நானும், இருவரும் ஒன்றாக வேலை செய்தோம்; ஒன்றாக எவ்வளவோ கஷ்டப்பட்டோம்; பல ரகசியமான சங்கதிகள் பேசிக்கொள்ளும் அளவுக்கு அவ்வளவு தூரம் இணைந்து காரியமாற்றியிருக்கிறோம். நடுவில் அபிப்பிராய பேதம் ஏற்பட்டதால் பிரியவேண்டியதாகி இரண்டுபேரும் வெவ்வேறு முனையில் பாடுபடுகிறோம். ஆனதினால் அப்படிப்பட்டவர்களை, இங்குச் சேர்த்திருப்பது ஒரு பெரிய காரியமல்ல. அபிப்பிராய பேதத்தின் காரணமாக நாங்கள் இப்படி ஒருவருக்கொருவர் பிரிந்துவிட்டாலுங்கூட எங்களுக்குள் இருந்த நட்பு இன்றுவரை ஒரு சிறிது கூட குறைந்துவிடவில்லை.

மற்றும் தோழர்களே! நீங்கள் இந்த உதாரணத்தைப் பின்பற்ற வேண்டும். உங்கள் எதிரி இன்னார் என்று யாரையும் கருதிவிடாதீர்கள்; அப்படிச் சொல்லவும் செய்யாதீர்கள். கருத்து வேறுபாடுகள் இருந்தாலுங்கூட மனிதத்தன்மையோடு நடந்துகொள்ளுங்கள் என்று கூறிக்கொண்டு நபி அவர்களின் கருத்துகளில், கொள்கைகளில் உங்களுக்குச் சரியென்றுபட்டவற்றை மேற்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டு முடித்துக்கொள்கிறேன்.

------------------------

20.12.1953 அன்று சென்னை அய்க்கோர்ட் கடற்கரையில் நடைபெற்ற நபி பிறந்த தின விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.

Pin It