நமது ஆத்மார்த்தத்திற்கென்றும், பரமார்த்திகத்திற்கென்றும் இந்து மதம் என்பதாக ஒரு கற்பனையை, இப்பார்ப்பனர்கள் நமது தலையில் சுமத்தியிருக்கிறார்கள். இந்து மதம் என்னும் வார்த்தைக்குப் பொருளே காண இயலவில்லை. இந்து என்பதே தமிழ் வார்த்தை இல்லை என்பதை நீங்கள் முதலில் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இது, பார்ப்பன பாஷை. பார்ப்பன பாஷையிலாவது இந்து என்பதற்குப் பொருளுண்டா என்று பார்த்தால், மதத்திற்குப் பொருத்தமானதாக ஒரு பொருளும் இல்லை. வேறு ஏதாவது பாஷையில் இருக்கிறதா என்று பார்த்தால், பார்சி பாஷையிலோ, அரபி பாஷையிலோ இந்து என்பதற்கு திருடன் என்கிற பொருள்தான் இருக்கிறது. சிலர் சிந்து நதிக்கரையில் இருந்ததால் சிந்து என்பது இந்து என்பதாக மருவி, அது ஒரு கூட்டத்தினருக்குப் பெயராகிப் பிறகு மதமாகிவிட்டதாகவும் சொல்லுகிறார்கள். அது எப்படியோ இருக்கட்டும். இந்து மதம் என்றால் என்ன என்பதையாவது கவனிப்போம்.

periyar_368கிறித்துவ மதம் என்றால், கிறிஸ்து மகான் கட்டளையை அடிப்படையாகக் கொண்டது. முகமதிய மதம் என்றால், முகமது நபியின் கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டது. புத்தமதம் என்றால் புத்தருடைய கட்டளையை அடிப்படையாகக் கொண்டது. இதுபோல், "மதம்' என்று சொல்லக்கூடியவை ஒவ்வொன்றுக்கும், மத கர்த்தா இன்னார்; அவரது கொள்கை - கட்டளை இன்னது; இன்ன காலத்தில் ஏற்பட்டது என்கிற உண்மைகள் உண்டு. அப்படி இந்து மதத்திற்கு யார் கர்த்தா? என்ன கொள்கை? எந்த காலம்? என்று சொல்வதற்கு என்ன ஆதாரமிருக்கிறது?

“அனாதிகாலம் (தொடக்கம் எது என்று தெரியாத காலம்) தொட்டு இருப்பது வேதம்; அது கடவுள் சொன்னது'' என்று சொல்லி ஏய்த்து விடுவதாயிருந்தால், அது பொருத்தமாயிருக்க வேண்டாமா? "அனாதியாயும்' "கடவுள் சொன்னதுமாயுமிருந்தால்' கடவுளால் உண்டாக்கப்பட்ட எல்லா தேசங்களுக்கும், எல்லா கண்டங்களுக்கும் - இதுவே வேதமும் மதமுமாய் அல்லவா இருக்க வேண்டும்? பல்வேறு மதங்கள் இருப்பானேன்? இந்து மதஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்குள்ளாகவே, சிலர் இவ்வேதத்தைப் படித்தால் கண்ணைக் குத்த வேண்டியதும், சிலர் காதினால் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டியதும் எதற்காக? கிறித்துவருக்கும், முகமதியருக்கும் முறையே ஞாயிற்றுக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் மத சம்பந்தமான விசேஷ நாள்களாயிருக்கும்போது, இந்துக்கள் என்பவர்களுக்குள்ளாகவே ஒருவருக்கு திங்கட்கிழமை, ஒருவருக்கு சனிக்கிழமை, ஒருவருக்கு வெள்ளிக்கிழமை - இப்படியாக ஒரு வாரத்திலுள்ள ஏழு நாள்களும் வெவ்வேறு மனிதர்களுக்காகவும், இன்னும் சிலருக்கு நாள்கள் போதாமலும் போவானேன்?

மதச் சின்னங்கள் விஷயத்தில் ஒருவர் நாமம், ஒருவர் விபூதி, ஒருவர் கருப்புப் பொட்டு, ஒருவர் சந்தனக்கீறல், ஒருவர் முத்திரை, ஒருவர் நெடுக்கு, ஒருவர் குறுக்கு - இப்படியாகப் பல மாறுதல்கள் ஏற்படுவானேன்? இந்த மாறுதல்களோடு இதற்குக் காரணங்கள், ஆளுக்கு ஒரு விதமாய்ச் சொல்லுவானேன்? இந்த வித்தியாசங்களை சுவாமிகளுக்கும் புகுத்துவானேன்? நாமம் என்பது என்ன என்று கேட்டால், சிலர் சுவாமியின் பாதம் என்கிறார்கள். வெள்ளை நாமம் இரண்டும் பாதமானால், நடுவில் இருக்கும் சிவப்பு நாமத்திற்குப் பெயர் என்ன? அப்படியே சுவாமியின் பாதம் என்பதாகவே ஒப்புக் கொள்ளுவோமேயானால், சுவாமியின் பாதத்தையே சுவாமியின் நெற்றியில் கொண்டு போய் வைப்பானேன்?

இந்த நாமத்திற்கும், பாதம் வைத்த நாமம் - பாதமில்லாத நாமம் என்பதாக - "வடகலை', "தென்கலை' - என்று ஒருவருக்கொருவர் உதை போட்டுக் கொள்வானேன்? இவைகளில் ஒரு நாமம், மூன்று நாமம், பதினொரு நாமம் என்கிற கணக்குச் சண்டை எதற்கு? இந்துக்களிலேயே ஒரு சாரார், இந்த நாமத்தைப் பற்றிக் கேவலமாகப் பேசுவானேன்? இதுபோலவே, விபூதி, பொட்டு, முத்திரை இவைகளுக்குப் பலப்பல மாதிரி வியாக்கியானங்கள் இருப்பானேன்? இதை மற்ற தேசத்தாரும் ஒப்புக் கொள்ளாததேன்?

லிங்கத்தையும், ஆவுடையாரைப் பற்றியும் பல விதமாகப் பேசுவானேன்? நமது சுவாமிகளுடைய பெயரெல்லாம் - குறிகளெல்லாம் நமது தமிழ்ப் பாஷையில் இல்லாமல், அந்நிய பாஷையாகிய ஆரிய பாஷையில் இருப்பானேன்? சுவாமியைப் பூசிப்பதற்கு நமக்கும் சுவாமிக்கும் மத்தியில் ஒரு அந்நியன் இருப்பானேன்? அந்நிய பாஷையில் தோத்திரங்களும், மந்திரங்களும் இருப்பானேன்? ஆளுக்கொருவிதமாகப் பூசை செய்வானேன்? அதற்காக நாம் பணம் கொடுப்பானேன்? ஒவ்வொரு சுவாமிக்கும் ஒவ்வொரு வித வாகனங்கள் ஏற்படுத்துவானேன்? சுவாமிக்குப் பெண்டு பிள்ளைகள், வைப்பாட்டிகள், தாசிகள், விபச்சாரத் தன்மைகள் ஆகியவைகளைக் கற்பிப்பானேன்? சிலர் சுவாமியைப் பார்த்தால், சுவாமி சக்தி ஓடிப்போவானேன்? சிலர் கோவிலுக்கு வந்தால் கோவிலும் சுவாமியும் தீட்டாய்ப் போவானேன்? சிலர் சுவாமியைத் தொட்டால் சுவாமி இறந்து போவானேன்? ஒரே பெயரும், ரூபமும் உள்ள சுவாமிகளுக்கு ஊருக்கு ஒருவிதமாய் சக்திகள் ஏற்பட்டிருப்பானேன்?

குடி அரசு- 9.1.1927

Pin It