இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு – 2 பின்வருமாறு உள்ளது:

“இந்தச் சட்டத்தின் ஷரத்துக்களுக்கு முரணான செய்கை அல்லது செய்யாமை என்ற குற்றத்தை பிரிட்டிஷ் இந்தியாவிற்குள் புரியும் ஒவ்வொருவரும் இந்தச் சட்டத்தின்படி தண்டனைக்குள்ளாவார்கள்; வேறு எதன்படியும் அல்ல.”

குற்றச் சட்டத்தின் வரைவைத் தயாரித்த சட்ட ஆணையர்கள் பிரிட்டிஷ் அமைச்சருக்கு எழுதிய தந்துரையில் “ஒவ்வொருவரும்” என்ற சொல்லைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டுவது அவசியம் என்று கருதினார்கள். அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளனர்:

”இந்தச் சட்டத்தின் செயல்பாட்டிலிருந்து, கம்பெனியின் நிலப்பகுதிகளில் வசிக்கும் புராதன இந்திய அரசு குடும்பங்களுக்கு விலக்களிக்க நாங்கள் யோசனை கூறவில்லை. அப்படி ஏதேனும் விலக்களிக்க வேண்டுமா என்பதை நாங்கள் தீர்மானிக்க விரும்பவில்லை. இதைத் தீர்மானிப்பதற்கு இப்போதுள்ள ஒப்பந்தங்கள், இந்த ஒப்பந்தங்கள் புரிந்து கொள்ளப்பட்டுள்ள தன்மைகள், நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் வரலாறு, அந்தந்தக் குடும்பங்களின் மனப்போக்கு, அதிகாரம், அந்தக் குடும்பங்களிடம் மக்களுக்கு உள்ள உணர்வுகள் ஆகியவற்றைப் பற்றி எங்களுக்குத் தெரிந்துள்ளதை விட மேலும் அதிக, தெளிவாக விவரங்கள் தெரிய வேண்டும் ஆனால், ஒன்று மட்டும் நாங்கள் கூற விரும்புகிறோம் – இத்தகைய விலக்கு ஒவ்வொன்றும் தீமையாகும்.

எந்த ஒரு மனிதனும் சட்டத்துக்கு மேலானவனாக இருப்பது ஓர் உயர்ந்த விரும்பத்தக்க சிறப்பு என்ற கருத்தை மக்களிடையே ஏற்படுத்துவது இதைவிடப் பெரிய தீமை. இத்தகைய உரிமைகள் எவ்வளவு அதிக காலத்துக்கு நீடிக்கின்றனவோ அந்த அளவுக்கு அவற்றை நீக்குவது கடினம். இவற்றை விலக்குவதற்குத் தகுந்த வாய்ப்பு பல்வேறு இனங்களையும் மதங்களையும் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் பொதுவான சட்டம் ஒன்றை அரசு அறிவிக்கும் சமயமே ஆகும். சம நீதியின் நன்மைகளுக்கெதிராக சீர்தூக்கிப் பார்ப்பதற்கு, பகிரங்க வாக்குறுதி ஏதேனும் அளிக்கப்பட்டிருந்தால் அதைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.”

ambedkar 297சமநீதி என்ற கோட்பாடு, நிறுவப்பட்ட முறைமைக்குச் சாவுமணி அடித்திருக்கும் என்று நினைக்கக்கூடும். உண்மையில், நிறுவப்பட்ட முறைமைக்குத் தீங்கு எதுவும் ஏற்படவில்லை என்பது மட்டுமின்றி, அது தொடர்ந்து எப்போதும் போலச் செயல்பட்டு வருகிறது. சமநீதிக் கோட்பாட்டுக்குப் பலன் ஏதும் இல்லாமற்போனது ஏன் என்று கேட்கலாம். இதற்கு விடை கூறுவது எளிது. சமநீதிக் கோட்பாட்டை அறிவித்து விடலாம்; ஆனால் அதைப் பலனுள்ளதாக்குவது வேறு விஷயம். சமநீதிக் கோட்பாடு பலனுள்ளதாக இருக்கிறதா இல்லையா என்பது, இந்தக் கோட்பாட்டைச் செயல்படுத்தும் அரசு நிர்வாக சேவையின் தன்மையைப் பொறுத்தது. சிவில் நிர்வாகம் தன்னுடைய வகுப்புப் பாரபட்ச மனப்பான்மை காரணமாக நிறுவப்பட்ட முறைமைக்கு நண்பனாகவும், புதிய முறைமைக்குப் பகைவனாகவும் இருந்தால், புதிய முறைமை உருவாகவே முடியாது.

புதிய முறைமை வெற்றி பெறுவதற்கு அதற்கு இசைவான சிவில் நிர்வாகம் தேவை என்பதை 1871-இல் பாரிஸ் கம்யூன் உருவானபோது கார்ல் மார்க்ஸ் உணர்ந்திருந்தார். லெனின், சோவியத் கம்பூனிசத்தை உருவாக்கியபோது அதையே பின்பற்றினார். துரதிர்ஷ்டவசமாக, பிரிட்டிஷ் அரசாங்கம் அரசுப் பணி அதிகாரிகளைப் பற்றிக் கவலைப்படவேயில்லை. உண்மையில் சமத்துவக் கோட்பாட்டுக்கு இடமேயில்லாத பழைய முறைமையில் நம்பிக்கை கொண்ட வகுப்பினருக்கு நிர்வாகத்தின் கதவுகள் திறந்துவிடப்பட்டன. இதன் விளைவாக, இந்தியாவின் ஆட்சி, பிரிட்டிஷாரிடம் இருந்தாலும் நிர்வாகம் இந்துக்களால் நடத்தப்பட்டது. அரசுப் பணியில் உள்ளவர்கள் பற்றிய சில புள்ளி விவரங்களைப் பார்த்தால் இந்த உண்மை தெளிவாகப் புலனாகும்.

இந்தியாவின் தலைநகர் முதல், கிராமம் வரை நிர்வாகம் முழுவதுமே இந்துக்களின் பிடியில் உள்ளது. நிர்வாகத்தின் எல்லாப் பிரிவுகளிலும் எல்லாம் வல்ல இறைவனைப்போல பரவி நிறைந்து, அதன் எல்லா மூலை முடுக்குகளிலும் அதிகாரம் பெற்றுள்ளவர்கள் இந்துக்கள். பழைய முறைமைக்கு எதிர்ப்பாக உள்ளவர்கள் எவரும் தப்பிக்க வழியே கிடையாது. எந்தத் துறையாக இருந்தாலும், வருவாய்த் துறை, காவல் துறை அல்லது நீதித்துறை என்ற எதுவானாலும், எல்லாவற்றிலும் இந்துக்களே பணியில் உள்ளனர். அரசின் இந்து அலுவலர்கள் தவறாமல் அளிக்கின்ற ஆதரவினால் தான், நிறுவப்பட்ட முறைமை தொடர்ந்து நிலைபெற்றுள்ளது. இந்து அதிகாரிகள், விஷயங்களின் தன்மையை மட்டும் பார்த்து நிர்வாகத்தை நடத்தவில்லை. அவர்கள், சம்பந்தப்பட்ட தரப்புகளைக் கருத்தில் கொண்டு நிர்வாகத்தை நடத்துகிறார்கள். அவர்களின் கோட்பாடு எல்லோருக்கும் சமநீதி என்பதல்ல. நீதி அளிப்பதில் அவர்களின் கோட்பாடு நிறுவப்பட்ட முறைமைக்கு இணக்கமாக உள்ளது. நிர்வாகத் துறையில் தீண்டப்படாதவர்களிடம் அரசு அலுவலர்கள் காட்டும் மனப்பான்மை இதைத் தெளிவாகக் காட்டுகிறது.

தீண்டப்படாதவர் ஒவ்வொருவரும் அறிந்துள்ள உண்மை இது. தீண்டப்படாதவர் ஒருவர் காவல் துறை அதிகாரி ஒருவரிடம் புகார் கொடுக்கச் சென்றால், அவர் பாதுகாப்பு பெறுவதற்குப் பதிலாக வசைமொழி தான் பெறுவார். அவருடைய புகார் பதிவுசெய்யப்பட மாட்டாது; அல்லது தீங்கிழைத்த தீண்டத்தக்கவர் தப்பித்துக் கொள்ள வழி இருக்குமாறு பொய்யான முறையில் பதிவு செய்யப்படும். அவர், தமக்குத் தீங்கு செய்தவர்கள் மீது மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் வழக்கு என்னவாகும் என்பதை முன்கூட்டியே சொல்லிவிட முடியும்.

தீண்டப்படாதவர் ஒருபோதும் இந்துக்களை சாட்சிகளாகப் பெறமுடியாது. அவருடைய வழக்கு எவ்வளவு நியாயமானதாயிருந்தாலும் அதற்கு ஆதரவளிக்கக்கூடாது என்று இந்துக்கள் சதி செய்து விடுவதுதான் இதற்குக் காரணம். அவர் தீண்டப்படாதவர்களை சாட்சியாகக் கொண்டு வந்தால் மாஜிஸ்ட்ரேட் அவர்களின் சாட்சியத்தை ஏற்கமாட்டார். அவர்கள் சொந்த அக்கறையுள்ளவர்கள் என்றும், சுயேச்சையான சாட்சிகள் அல்ல என்றும் அவர் எளிதாகக் கூறிவிடமுடியும். அல்லது, அவர்கள் சுயேச்சையான சாட்சிகளாயிருந்தாலும், தீண்டப்படாதவர்களின் சாட்சியம் தமக்கு உண்மையாகத் தோன்றவில்லை என்று கூறி அவர், குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்துவிட முடியும். உயர் நீதிமன்றம், தமது தீர்ப்பை மாற்றிவிடாது என்று அவருக்கு நிச்சயமாகத் தெரியும். ஆதலால் அச்சமின்றி இவ்வாறு விடுவிக்க முடியும். தாம் நேரில் பார்த்து அவரது நடத்தையை மதிப்பிடுவதற்கு வாய்ப்பு இல்லாத ஒரு சாட்சியின் சாட்சியத்தை வைத்து மேல்நிலை நீதிபதி, விசாரணை நீதிபதியின் தீர்ப்பை மாற்றக்கூடாது என்பது நன்கு நிலைபெற்ற விதியாக உள்ளதால் தமது தீர்ப்பு மாற்றப்படாது என்று அவருக்கு நிச்சயமாகத் தெரியும்.

இத்தகைய பாரபட்சம் இருக்கிறது என்பதை இப்போது காங்கிரஸ்காரர்கள் கூட ஒப்புக்கொண்டுள்ளனர். தமிழ்நாடு ஹரிஜன சேவக் சங்கத்தின் 1937 செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான ஆண்டறிக்கை பின்வருமாறு கூறுகிறது:(1938 மார்ச் 7-ஆம் “ஹிந்து” பார்க்கவும்.)

“காவல் துறையினரின் ஆட்சியே நடைபெறும் தொலைதூரமான கிராமங்களிலும் ஹரிஜனங்களிடம் தங்கள் உரிமைகள் பற்றி அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றாலும், ஹரிஜன், இதைச் செய்வது எப்போதுமே சாத்தியமாகிவிடுவதில்லை. ஹரிஜன் தமது உரிமையை வலியுறுத்துவதென்றால் அவருக்கும், மேல் சாதியினருக்கும் இடையே மோதல் என்று ஆகிவிடுகிறது. இதில் பின்னவருடைய கைதான் எப்போதும் ஓங்கியிருக்கிறது. இந்த மோதலின் விளைவாகக் காவல் துறையிடம் அல்லது மாஜிஸ்ட்ரேட்டிடம் புகார் செய்ய வேண்டியாதாகிறது. மாஜிஸ்ட்ரேட்டிடம் புகார் செய்வது ஹரிஜனின் சக்தி அப்பாற்பட்டது. காவல் துறையினரிடம் புகார் செய்வது ஒன்றுக்கும் உதவாததாக உள்ளது.

பல வழக்குகளில் புகார்கள் பற்றிப் புலன் விசாரணையே நடத்தப்படுவதில்லை; மற்றும் பலவற்றில், மேல் சாதியினருக்குச் சாதகமான முடிவு எழுதப்படுகிறது. காவல் துறையினரிடம் நாங்கள் கொடுக்கும் புகார்களுக்கும் இதே கதிதான் ஏற்படுகிறது. கீழ்நிலையில் உள்ள காவல் துறையினரின் மனப்பான்மையில் மாற்றம் ஏற்படாததுதான் இந்த நிலைமைக்குக் காரணம். ஹரிஜனின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அவர், அந்த உரிமைகள் இருப்பதையே அறியாதவராக உள்ளார், அல்லது அவர், மேல் சாதியினரின் செல்வாக்குக்கு உட்பட்டு நடக்கிறார். அல்லது அவர் முற்றிலும் அலட்சியமாக இருக்கவும் கூடும். வேறு சந்தர்ப்பங்களில் அவர் லஞ்சம் பெற்றுக் கொண்டு பணக்காரர்களான மேல் சாதியினருக்குச் சாதகமாக நடக்கிறார்.”

இந்து அரசு அலுவலர் எவ்வாறு தீண்டப்படாதவருக்கு விரோதமாகவும், இந்துவுக்குச் சாதகமாகவும் உள்ளார் எனபதை இது காட்டுகிறது. அவருக்கு எப்போது அதிகாரம் இருந்தாலும், அது, தீண்டப்படாதவருக்கு எதிராகவே செயல்படுத்தப்படுகிறது.

காவல் துறையினரும் மாஜிஸ்ட்ரேட்டும் சில சமயம் லஞ்சப் பேர்வழிகளாக உள்ளனர். லஞ்சம் வாங்குவோராக மட்டும் இருந்தால் நிலைமைகள் ஒருவேளை இவ்வளவு மோசமாக இல்லாமலிருக்கக்கூடும்; ஏனென்றால், இருதரப்பினரில் யார் வேண்டுமானாலும் அவரை விலைக்கு வாங்கிவிட முடியும். ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால், காவல் துறையினரும் மாஜிஸ்ட்ரேட்டுகளும் லஞ்சப் பேர்வழிகள் என்பதைவிட, அதிகமாக பாரபட்சக்காரர்களாக உள்ளனர். அவர்கள் இவ்வாறு இந்துக்களிடம் பாரபட்சமாகவும் தீண்டப்படாதவர்களிடம் பகைமை உணர்வுடனும் நடப்பதால் தான் தீண்டப்படாதவர்களுக்குப் பாதுகாப்பும் நீதியும் மறுக்கப்படுகின்றன. இந்தப் பாரபட்சத்தையும் பகைமை உணர்வையும் மாற்றுவதற்கு வழியே இல்லை. ஏனென்றால், ஒவ்வொரு இந்துவிடமும் பிறப்பிலேயே உள்ளமைந்துள்ள சமூக, சமய வெறுப்புணர்வு அதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. காவல் துறையினரும் மாஜிஸ்ட்ரேட்டுகளும் தங்களுடைய நோக்கங்கள், அக்கறைகள், வளர்க்கப்பட்ட முறை ஆகியவை காரணமாகத் தீண்டப்படாதவர்களிடையே செயல்படும் உயிர்ச் சக்தியிடம் அனுதாபம் கொள்வதில்லை. தீண்டப்படாதவர்களை இயக்கி வைக்கின்ற தேவைகள், வேதனைகள், ஆசைகள், விருப்பங்கள் ஆகியவை, அவர்களின் உள்ளங்களில் ஊடுருவி நிற்கவில்லை.

இதன் விளைவாக, அவர்கள் தீண்டப்படாதவர்களின் நாட்டங்களுக்கு பகிரங்கமாக எதிர்ப்பும் விரோதமும் காட்டுகிறார்கள்; அவர்களின் நன்மைக்கு உதவாமல் பாதகமாக நடந்து கொள்கிறார்கள்; அவர்களிடம் பெருமை உணர்வையும் சுயமரியாதையையும் காட்டுவது போலத் தோன்றும் எதையும் சினந்து பேசுகிறார்கள். மறு புறத்தில், அவர்கள் இந்துக்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்; தீண்டப்படாதவர்கள் மீது தங்களுடைய அதிகாரத்தையும், பெருமையையும் கௌரவத்தையும் நிலைநிறுத்துவதற்கு அவர்கள் செய்யும் முயற்சிகளில் அனுதாபம் காட்டுகிறார்கள். இவ்விரண்டு பிரிவினருக்கும் இடையே போராட்டம் எதுவும் ஏற்படும்போது அவர்கள் இந்துக்களின் ஏஜெண்டுகளாக நடந்துகொண்டு தீண்டப்படாதவர்களின் கிளர்ச்சியை ஒடுக்குகிறார்கள். தீண்டப்படாதவர்களுக்குப் பாடம் கற்பித்து அவர்களை அவர்களுடைய இடங்களிலேயே தாழ்த்திவைப்பதற்கு எல்லா இந்துக்களும் நேர் வழிகளிலும் மோசடி வழிகளிலும் செய்யும் முயற்சிகளில் அவர்கள் பகிரங்கமாகவும் சிறிதும் வெட்கமில்லாமலும் கலந்து கொள்கிறார்கள்.

இதில் மிகவும் மோசமான அம்சம் என்னவென்றால், இந்த அநியாயங்கள், கொடுமைகள் எல்லாவற்றையும் சட்டத்தின் வரம்புக்குள்ளேயே செய்ய முடிகிறது என்பதுதான். ஒரு இந்து, தாம் தீண்டப்படாதவரை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியாது என்றும், அவருடைய கால்நடைகளைத் தமது வயல் வழியாக இட்டுச் செல்ல அனுமதிக்க முடியாது என்றும், அவரைத் தமது நிலத்திலிருந்து வெளியேற்றி விடுவேன் என்றும் தாராளமாகக் கூறமுடியும். இவற்றில் ஒன்றுமே சட்டத்துக்குச் சற்றுகூட முரணானதல்ல. இவ்வாறெல்லாம் அவர் கூறும்போது தமது உரிமையைத்தான் கூறுகிறார். அவர் என்ன நோக்கத்துடன் இவ்வாறு கூறுகிறார் என்பது பற்றி சட்டத்திற்குக் கவலை இல்லை. தீண்டப்படாதவருக்கு அதனால் என்ன தீங்கு ஏற்படுகிறது என்பதை சட்டம் பார்ப்பதில்லை.

காவல் துறையினர் தங்களுடைய சக்தியையும் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தலாம். ஆவணத்தில் பதிவு செய்யும்போது, சொல்லப்படாத ஒன்றை வேண்டுமென்றே எழுதிக்கொண்டு, அல்லது சொல்லப்பட்டதற்கு முற்றிலும் வேறான ஒன்றை எழுதிக் கொண்டு, பொய்யான ஆவணத்தை அவர்கள் தயாரித்துவிட முடியும்; தமக்கு அக்கறையுள்ள தரப்பினரிடம் சாட்சியத்தை வெளிப்படுத்த முடியும்; கைது செய்ய மறுக்க முடியும். வழக்கைக் கெடுப்பதற்கு அவருக்கு நூற்றொரு வழிகள் உள்ளன. இதையெல்லாம் அவர், தாம் பிடிபட்டுவிடுவோம் என்ற அச்சம் சிறிதும் இல்லாமல் செய்யலாம். சட்டத்தின் ஓட்டைகள் ஏராளம்; அவற்றையெல்லாம் அவர் அறிவார். அவர் தமது உசிதப்படி செயல்படுவதற்கு மிகப் பெருமளவு அதிகாரத்தை மாஜிஸ்ட்ரேட் அவருக்குக் கொடுத்திருக்கிறார். அதை அவர் தாராளமாகப் பயன்படுத்தலாம். ஒரு வழக்கின் முடிவு, சாட்சியம் அளிக்கக் கூடிய சாட்சியைப் பொறுத்தே உள்ளது. ஆனால், சாட்சிகள் நம்பத்தக்கவர்களா அல்லவா என்பதைப் பொறுத்தே அந்த முடிவு அமையும். மாஜிஸ்ட்ரேட் தமது விருப்பப்படி ஒரு தரப்பை நம்பலாம், மறு தரப்பை நம்பாமலிருக்கலாம். அவர் தமது மனம் போன போக்கில் ஒரு தரப்பை நம்பலாம்; யாரும் அதில் குறுக்கிடமுடியாது. மாஜிஸ்ட்ரேட் இவ்வாறு தமது விருப்பப்படி செயல்படுவதற்கு உள்ள அதிகாரம், தீண்டப்படாதவர்களுக்குப் பாதகமாகவே பயன்படுத்தப்பட்ட வழக்குகள் கணக்கற்றவை.

தீண்டப்படாதவரின் சாட்சியம் எவ்வளவு உண்மையானதாக இருந்தாலும், மாஜிஸ்ட்ரேட்டுகள், பொதுவாக ஒரே மாதிரி ‘நான் இந்தச் சாட்சிகளை நம்பவில்லை’ என்று கூறிவிடுகிறார்கள். இதை யாரும் கேள்வி கேட்பதில்லை. என்ன தண்டனை விதிப்பது என்பதும் மாஜிஸ்ட்ரேட்டின் விருப்பமே. மேல் முறையீடு செய்யமுடியாத தண்டனைகளும் உள்ளன. தவறான தீர்ப்பை மாற்றச் செய்து நீதி பெறுவதற்கான வழியே மேல் முறையீடு. ஆனால் மாஜிஸ்ட்ரேட், மேல் முறையீடு செய்யக்கூடிய தண்டனையை வழங்க மறுப்பதன் மூலம், இந்த வழியை அடைந்துவிடமுடியும்.

நிறுவப்பட்ட முறைமையைப் பாதுகாப்பதில் இந்துச் சமூகம் தன் பங்கைச் செய்கிறது; அதேபோல, அரசாங்கத்தில் உள்ள இந்து அதிகாரிகளும் தங்கள் பங்கைச் செய்கிறார்கள். இருவருமாகச் சேர்ந்து நிறுவப்பட்ட முறைமையை அசைக்க முடியாததாகச் செய்துள்ளனர்.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்  நூல் தொகுப்பு - தொகுதி 9)

Pin It