ஆதிகாலத்தில் சீனத்தில் வெறும் விளையாட்டுப் பொருட்களாக இருந்த பட்டங்கள் பயன்படுத்தப்பட்ட துறைகளைப் பற்றி குறிப்புகள் மிகவும் சுவாரஸ்யமானது. விளையாட்டுக்குப் பின்பாக முதன்முதலில் இராணுவப் பயன்பாடுகளுக்குள் பட்டங்கள் வந்தன. சில பட்டங்கள் எதிரிகளின் நடவடிக்கைகளை நோட்டம் பார்க்கவென்று மனிதர்களை ஏற்றிச் செல்லக்கூடிய அளவில் பெரிதாக இருந்தன என்று வரலாறு சொல்கிறது. சில வேளைகளில் எதிரிகள் பகுதியில் துண்டுப் பிரசுரங்களை வீசியெறியவும் பட்டங்கள் பயன்பட்டிருக்கின்றன. 

chinese_kitesஇன்று நாம் இ -மெயிலிலும் SMSலும் எளிதாக பரிமாறிக்கொள்ளும் செய்திகளை ஒரு காலத்தில் பட்டத்தில் கட்டி பறக்க விட்டு இருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா? ஒருமுறை லியாங் முடியாட்சியில் வூதியின் பேரரசர் ஸியாவ் யான் (கி.பி 464-549) நான்ஜிங்கின் தாய்ச்செங்கில் ஹோவ் ஜிங்கின் கீழிருந்த கலகக்காரர்களால் சுற்றி வளைக்கப் பட்டார். அப்போது பேரரசர் ஒரு பட்டத்தில் தான் அவசர உதவி கேட்டு செய்தி அனுப்பியிருக்கிறார். உதவியும் வந்திருக்கிறது! 

தூரத்தைக் கணக்கிடவும், காற்றின் வேகத்தைக் கண்டறியவும், மனிதனை உயரப் பறந்து கூட்டிப்போக, செய்திகள் அனுப்ப, தொலைத் தொடர்புக்கு, இராணுவப் பயன்பாடுகளுக்கு என்றும் பல்வேறு விஷயங்களுக்குப் பட்டங்கள் பயன்பட்டிருக்கின்றன. மிகப்பழைய சீனப்பட்டம் தட்டையாக இறக்கைகளில்லாமல் தான் இருந்தது. பிறகு, வாலில்லாமல் இறக்கைகளுடன் உருவாகின. அதன் பிறகு, ஊதல்கள் மற்றும் நூல்களை இணைத்துச் செய்தார்கள். இவ்வகைப் பட்டங்கள் பறக்கும் போது இனிய இசையை உருவாக்கின. 

இப்பொழுதெல்லாம் ஏற்படும் சண்டைகளை கட்டுக்குள் கொண்டு வர பல ஆயுதங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கி.பி 600ல் ஒரு முறை கொரியாவின் ஒரு கலகத்தைக் கட்டுக்குள் கொண்டு வர தளபதி கிம் யுன்-ஸின்னுக்கு கட்டளையிடப்பட்டது. ஆனால், அவரது படைகள் சண்டையிட மறுத்தன. அப்போது வானில் ஒரு எரிநட்சத்திரம் விழுவதைக் கண்டனர். முதலில் அதை துர்சகுனம் என்று கருதினர். அவர்களை அவ்வாறு நம்ப வைக்க தளபதி தான் ஒரு பட்டத்தில் நெருப்புப் பந்தை இணைத்துப் பறக்கவிட்டார். படை வீரர்கள் விழுந்த நட்சத்திரம் மேலேறிச் சென்றதைக் கண்டது நல்ல சகுனமாகக் கருதி உற்சாகமாகப் போரிட்டு கலகக்காரர்களை வீழ்த்தியிருக்கிறார்கள். 

ஐரோப்பாவிற்குப் பட்டத்தை அறிமுகம் செய்து வைத்த பெருமை முதன் முதலில் மார்கோ போலோவிற்கே சேரும் 13ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் பட்டத்தை மார்கோ போலோ இத்தாலிக்குக் கொண்டு போனார். பின்னர், 1500களில் ஐரோப்பாவிற்குப் பரவியது. அதன் பிறகு, ஐரோப்பியர்களின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கும் ஆய்வுகளுக்கும் பட்டம் பல்வேறு வழிகளில் உதவிற்று. கடல் வணிகத்தின் போது வேண்டாதவருக்குத் தண்டனையளிக்க, மீன்பிடித்துறையில் மீன்பிடிக்க, மதக் கொண்டாட்டங்களில் அலங்கரிக்க, வானிலையைக் கணிக்க, காற்றின் வேகத்தை அறிய என்று ஏராளமான பயன்பாடுகள் பட்டத்திற்கு இருந்திருக்கின்றன. 

அத்துடன் நின்று போகவில்லை இந்த பட்டத்தின் சாதனைகள் இன்று உலக மக்கள் தொகையையும் பின்னுக்குத் தள்ளும் அளவில் அதிவேகமாக வளர்ந்துவரும் போக்குவரத்துதுறையிலும் பட்டம் உதவியிருக்கிறதென்றால் சிலரால் நம்ப முடியாமலிருக்கலாம். பட்டத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற சக்தியை ஆய்ந்தறிந்தவர் ஜியார்ஜ் பொக்கோக். 1822ல், இவர் ஒரு ஜோடி பட்டங்களைக் கொண்டு ஒரு வண்டியை ஒரு மணி நேரத்தில் 20 மைலுக்குச் செலுத்தியிருக்கிறார். அவரின் சில பயணங்கள் ஒருமணி நேரத்தில் 100 மைல் வரையிலும் கூட இருந்திருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் ஒரு வண்டியில் பூட்டியிருக்கும் குதிரைகளின் எண்ணிக்கையைப் பொருத்தே சாலைவரி விதிக்கப்பட்டது. ஆகவே, இவரின் இப்பயணங்களுக்கு வரி விதிக்கப்படவில்லை! 

இன்று வானிலையை ஆராய்வதற்கு அறிவியலால் ஆயிரம் கண்டுபிடிப்புகள் உருவாகி இருக்கிறது . ஆனால் நமது முன்னோர்கள் இதே வானிலையை ஆராய்வதற்கு பட்டங்களைப் பயன்படுத்தினார்கள் என்றால் நம்புவீர்களா ? 1782ல், பென்ஜமின் ஃப்ராங்க்ளின் எனும் அமெரிக்க விஞ்ஞானி மின்னலையும் இடியையும் ஆராய்ந்தறிய பட்டங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். இவர் பட்டங்களைக் கொண்டு செய்த ஆய்வுகளின் மூலம் காற்றுவெளியில் இருந்த மின்சாரத்தை ஆராய்ந்தார். அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் மற்றும் ரைட் சகோதரர்கள் ஆகியோரும் பட்டங்களைக் கொண்டு பல ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். பெட்டி வடிவிலான பட்டங்களைக் கொண்டு 1890களில் துவங்கி 40 ஆண்டுகளுக்கு காற்றின் வேகம், வெப்பம், அழுத்தம் மற்றும் ஈரப்பதத்தைக் கண்டறிந்திருக்கிறார்கள். இன்றும் மீனவர்கள் தூண்டிலைக் கடலுக்குள் விட பட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள். புகைப்படக்கலைஞர்கள் பட்டத்தின் உதவியுடன் மேலிருந்து பருந்துப் பார்வையில் புகைப்படங்களைச் சுட்டுத் தள்ளுகிறார்கள். 

இன்று நம்மை எல்லாம் ஆகாயத்தில் பறக்க செய்து பல ஆயிரம் கிமீ தொலைவுகளை எளிதாக கடக்க செய்யும் இந்த விமானங்கள் உருவாவதற்கு ஒரு உந்துதலாக பயன்பட்ட முக்கியக் காரணிகளில் பறக்கும் பட்டமும் ஒன்று என்றால் நம்புவீர்களா? .1894 நவம்பர் 12ல், லாரென்ஸ் ஹார்கிரேவ் என்பவர் தனது பட்டத்திலேறி நிலத்திலிருந்து எம்பிச் சிறிது தூரம் பறந்தார். அன்றே அவர் விமானத்தைக் கிட்டத்தட்ட கண்டுபிடித்தார் என்று சொல்லலாம். மேலும் நுட்பமாக ஆராய்ந்து வளைந்த இறக்கைகள் கொண்டதும் விசையுடனானதும் என்று பல்வேறு வகைப் பட்டங்களை உருவாக்கினார். அத்துடன் வானிலைக் கருவிகளும் புகைப்படக் கருவிகளையும் பட்டங்களை வைத்து மேற்கொண்ட ஆய்வுகளில் கண்டுபிடித்தார். தன் கண்டுபிடிப்புகளுக்கு அவர் காப்புரிமை பெறத் தவறி விட்டார். மனிதகுல மேன்மைக்குப் பயன்படட்டும் என்று கருதிவிட்டார். ஆகவே, அவரது ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வில் இறங்கி இலாபம் ஈட்டியோரைத் தாக்கிப் பேசினார். 

நமக்குத் தெரிந்ததெல்லாம் விமானங்கள் மட்டும்தான் மனிதர்களை தாங்கிக்கொண்டு விண்ணில் பறக்கும் என்பதுதானே ஆனால் எந்த அறிவியல் வளர்ச்சிகளும் இல்லாத பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இன்று நாம் பறக்கவிட்டு பரவசப்படும் இந்த பட்டத்தில் மனிதர்கள் பரந்திருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா ?? உண்மைதான் இதை பற்றிய தகவல்களுடன் எனது அடுத்தப் பதிவில் பட்டம் மீண்டும் உங்களின் இதயங்களை சுமந்து மகிழ்ச்சியில் விண்ணில் பறக்கும் எதிர்பாருங்கள். 

- பனித்துளி சங்கர் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It