என்ன இது? சென்னை பெருநகரமாயிற்றே? அதைப் போய் கிராமம் என்கிறாரே என யோசிக்கின்றீர்களா?

ஆங்கிலம் என்ற மொழியைப் பேசுபவர்கள் எல்லோருமே அறிவாளிகள் அல்ல. அது, அவர்களது தாய்மொழி. அவ்வளவுதான். அதுபோல, சென்னை என்ற நகரத்தில் வசிப்பதாலேயே, அவர்கள் நகரவாசிகள் ஆகிவிட முடியாது. அவர்களுடைய பழக்கவழக்கங்களும், சென்னைக்கு உள்ளே ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உள்ளேதான் இருக்கின்றது.

சென்னையில் சைதாப்பேட்டையில் பிறந்து வளர்ந்த 19 வயது இளைஞன் ஒருவன், ‘சென்ட்ரல் ரயில் நிலையத்தையே நான் பார்த்தது இல்லை’ என்று என்னிடம் சொன்னார். சைதாப்பேட்டை, மாம்பலம், தியாகராய நகர் பகுதிகளில் மட்டும்தான் அவர் சுற்றி இருக்கிறார். திருப்பதிக்குப் பேருந்தில் சென்று வந்து இருக்கிறார். வேறு வெளியூர்களுக்குப் போனதே இல்லை; எனவே, சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்துக்குப் போக வேண்டிய தேவையே அவருக்கு ஏற்படவில்லை.

அவரைப்போல, சென்னையிலேயே பிறந்து வளர்ந்த இலட்சக்கணக்கானவர்கள், தமிழகத்தின் உட்பகுதிகளில் எந்த ஊருக்கும் வந்ததே இல்லை என்பதை, என்னைச் சந்திக்க வந்த பலரிடம் நான் கேட்டுத் தெரிந்து கொண்டு இருக்கிறேன். நீங்களும், உங்கள் சென்னை நண்பர்களை விசாரித்துப் பாருங்கள் தெரியும்.

சென்னையிலேயே பிறந்து வளர்ந்த எனது அண்ணன், மாமா ஆகியோர், சங்கரன்கோவிலுக்கு வந்தபோது, பம்ப் செட்டில் குளிப்பதற்காக அழைத்துச் சென்றேன். முதல்முறையாக  கிணறையும், பம்ப் செட்டையும் அவர்கள் அங்கேதான் பார்த்தார்கள். அதற்குப்பிறகு, அங்கே தங்கி இருந்த நாள்களில், நாள் தவறாமல் பம்ப் செட்டில் குளித்து மகிழ்ந்தார்கள்.

பாலு என்ற ஒரு நண்பர் சொன்னார்: “சார் பருத்தி வீரன் படம் பார்த்தேன். வசனங்களைக் கேட்டுப் பலர் சிரிக்கின்றார்கள். ஆனால், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எல்லாமே மதுரைத் தமிழாக இருக்கின்றது. ஊமைப் படம் பார்த்ததுபோல, உட்கார்ந்துவிட்டு வந்தேன்" என்றார் வேதனையோடு. இப்படி இலட்சக்கணக்கான சென்னைவாசிகளுக்கு, உள்நாட்டுத் தமிழ் ஒன்றுமே புரியாது. 

சிவகுமார் என்ற மற்றொரு நண்பர் சொன்னது: ‘என்னுடைய நண்பர்கள் எல்லோரும் பொங்கல், தீபாவளி என்றால், சொந்த ஊருக்குப் போகிறோம் என்று புறப்பட்டுப் போய்க் கொண்டாடி விட்டு வருகிறார்கள். அவர்களை எல்லாம் பார்க்க எனக்குப் பொறாமையாக இருக்கிறது. ஏனெனில், நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். என்னுடைய உறவினர்கள், சுற்றம் எல்லாம் இங்கேதான். தமிழ்நாட்டுக்கு உள்ளே, சொல்லிக் கொள்வதற்கு என்று எனக்கும் ஓர் சொந்த ஊர் இல்லையே என்றுதான் கவலையாக இருக்கிறது’ என்றார்.

வடசென்னைக்காரர்களாவது, தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்துவிட்டு, தியாகராய நகர் கடைகளுக்கு வந்து துணிமணிகள், நகை நட்டுகளை வாங்குகிறார்கள்.
ஆனால், தென்சென்னை பகுதிகளில் வசிக்கின்ற இலட்சக்கணக்கானவர்களுக்கு, வடசென்னையைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அங்கே போக வேண்டிய தேவையும் அவர்களுக்கு இல்லை.

இப்படிப்பட்டவர்களை, சென்னை நகரில் வசிப்பவர்கள் என்று கருதாமல், சைதாப்பேட்டை கிராமவாசி, புரசைவாக்கம் கிராமவாசி என்றே சொல்லலாம்.

- அருணகிரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It