விழிப்பு நிலையில் இருக்கும்போது உண்டாகும் பொறுப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் தம்முடலையும் உள்ளத்தையும் சோர்வு நிலையிலிருந்து தளர்த்திக் கொள்ளவும், இயல்பான உள் உந்துணர்ச்சியான (Instinct) உறக்கம் உடம்பிற்கும் உள்ளத்திற்கும் அடிப்படைத் தேவையாகிறது என்று அறிவியலார்கள் கருதுகிறார்கள். நாம் தூங்காவிடில் உடலும் உள்ளமும் களைப்பும் சோர்வும் அடைகின்றன. மூளையின் மின்னாற்றல் செய்கை, நாம் உறங்கும்போது தன் வேகத்தைக் குறைத்து மெல்லச் செயல்படுகிறது என்றும், ஆயினும் நாம் கனாக் காணும்போது அந்தச் செய்கை கிளரப்படலாம் என்றும் அறிவியலார்கள் நிறுவியுள்ளனர்.

விழிப்பு நிலையில் இருக்க வைப்பதற்குத் தேவையான ஒரு பொருள், செலவாகிவிடுகிறது என்றும் உறங்கும்போது அப்பொருள் மீண்டும் நிரப்பப்படுகிறதென்றும் ஒரு வேதியியல் கொள்கை உள்ளது. அந்தக் கோட்பாட்டிற்கு எதிர்மறையாக நாம் உறங்கும்போது நினைவு நிலையில் தோன்றிய நச்சுப் பொருள்கள் அழிக்கப்படுகின்றன என்ற கருத்தும் உண்டு.

sleep_400மூளையில் நடைமுறை அறிவுப்பகுதி விரிந்து வளரும்போது விழிப்பு நிலைக் கால அளவு அதிகமாகத் தேவையாகின்றது என்பது இன்னொரு கோட்பாடு. பகுத்தறிவாற்றல் வளராநிலையில் உள்ள புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் நீண்ட நேரம் (பெரும்பான் மையான நேரம்) உறங்கியே கழிப்பதற்கான காரணத்தை இந்தக் கோட்பாடு விளக்கக் கூடும். மூளையில் ஒரு குறிப்பிட்ட வலைப் பின்னல் போன்றுள்ள பகுதியைத் துண்டித்து எடுத்து விட்டால் இடைவிடாமல் தொடர்ந்து உறங்கிக் கொண்டே இருக்கும் நிலை ஏற்படும் என்பதைச் செயல் விளக்கத்தின் மூலம் அறிவியலார்கள் காட்டியுள்ளனர்.

நாம் ஏன் தூங்குகிறோம் என்பதற்குத் திட்டவட்டமான காரணம் உறுதியாகக் கூறமுடிய வில்லையானாலும் நாம் உறக்கம் கொள்ள வேண்டிய இன்றியமையாமை உண்டு என்பதில் சிறிதும் ஐயப்பட வேண்டியதில்லை. நம்மைப் போலவே பிற விலங்குகளும் பெரும்பாலும் உறங்கி விழிக்கின்றன என்பதில் இரண்டுபட்ட கருத்தில்லை. தூக்கப்பாங்கும் விழிப்பு நிலைப்பாங்கும் நம்முடைய பழக்க வழக்கங்களோடும் புலனுணர்வுகளோடும் மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. உணவு, உறையுள், தற்காப்பு ஆகியவற்றிற்குத் தம் காட்சி அறிவைப் பொறுத்தே வாழும் விலங்குகள், மனிதனைப் போல பகலில் இயங்குவனவாம். அவை பெரும்பாலும் பகலில் செயலாற்றி இரவில் தூங்குபவை என்பது புலனாகும்.

முழு உடல் நலத்துடன் ஒருவன் வாழ்வதற்குத் தேவையான தூக்க கால அளவு, வயதுக்கேற்பவும் ஆளுக்குரிய வேறுபாட்டிற்கேற்பவும் ஒருவேளை சில நேரங்களில் இனங்களுக்கேற்பவும் மாறுபட்டு அமையும். பொதுவாகப் புகுமுகப் பள்ளிக் குழந்தைகட்குப் பத்து முதல் பன்னிரண்டு மணி உறக்கம் தேவை. பள்ளிக் குழந்தைகட்கு ஒன்பது முதல் பதினோரு மணி நேரமும் வாலிபர்கட்கு ஏழு முதல் ஒன்பது மணி நேரமும் ஒரு நாளைக்குத் தூக்கம் வேண்டி உள்ளது. வாலிபரின் வயது வளர வளர உறக்கத் தேவைக்கால அளவு குறைந்து கொண்டே செல்லும். இதற்கு விதி விலக்காகச் சில மூத்தோர் இரவில் இரண்டு அல்லது மூன்று மணிநேரமே தூங்கினாலும் நல்ல உடல் வளத்துடன் இருப்பதும் உண்டு. ஜப்பானியக் குழந்தைகளும் வாலிபர்களும் மூத்தோர்களும் ஐரோப்பியரைவிட குறைந்த கால அளவே உறங்குகின்றனர். இந்த வேறுபாட்டிற்குக் காரணம் அவர்கள் வேறுபட்ட இனத்தவர்கள் என்பதைவிட அவரவர்களுடைய பழக்க முறையே எனக் கூறலாம்.

(உடலும் மருந்தும் நூலிலிருந்து)

Pin It