வெளிநாடுகளில் மேற்படிப்பை மேற்கொள்ள அந்தந்த நாடுகளின் மொழியை நாம் அறிந்து கொள்வது எவ்வளவு முதன்மை என்றும் நம்முடைய ஆங்கிலத் திறமையை அந்தப் பல்கலைக்கழகங்கள் அறிந்து கொள்ள நாம் எழுத வேண்டிய தேர்வுகளைப் பற்றியும் சென்ற பதிவில் பார்த்தோம்.

 சரி... மொழித் தேவையை நிறைவு செய்தாயிற்று. அடுத்ததாக அந்தப் பல்கலைக்கழகங்கள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கின்றன என்பதினை அறிந்து கொள்ள ஒரு கேள்வி.

 நம்முடைய பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கைக்கு என்ன தகுதியை எதிர்பார்க்கின்றன?

 மதிப்பெண்கள்...!!!

மேற்படிப்புக்களுக்கு எனத் தனியாக தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) ,பொதுத் திறமைத் தேர்வு (CAT) மற்றும் மேலாண்மைத் திறமைத் தேர்வு (MAT) போன்ற சில நுழைவுத் தேர்வுகளில் போதுமான மதிப்பெண்கள்...

அவ்வளவு தானே...!!! நம்முடைய பல்கலைக்கழகங்களில் இருந்து இந்த விடயத்தில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும் மாறுபடுவதில்லை.

பள்ளி, கல்லூரி ஆகியவற்றில் நீங்கள் எடுத்திருக்கும் மதிப்பெண்களை அந்தப் பல்கலைக்கழகங்கள் மிகவும் கூர்மையாகக் கவனிக்கின்றன. மதிப்பெண்கள் அதிகமாக இல்லாவிடினும் பரவாயில்லை அந்தப் பல்கலைக்கழகங்கள் வைத்து இருக்கும் குறைந்த அளவு மதிப்பெண் விழுக்காட்டு அளவிற்கு உங்கள் மதிப்பெண்கள் இருந்தால் போதும். உங்களது விண்ணப்பங்களை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். பல பல்கலைக்கழகங்களில் அந்த குறைந்த அளவு மதிப்பெண் அளவானது 65% முதல் 70% வரை இருக்கும் (இது பல்கலைக்கழகத்திற்கு ஏற்ப மாறுபடும்).

ஆனால் நீங்கள் படிக்கும் காலத்தில் ஏதாவது பாடத்தில் தோற்று இருந்தாலோ அல்லது பின்னடைவு ஏற்பட்டு இருந்தாலோ (Arrears) உங்களுடைய விண்ணப்பங்கள் தள்ளப்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். அதுவும் குறிப்பாக மூன்று பாடங்களுக்கு மேல் தோற்றிருந்தால் பல பல்கலைக்கழகங்களில் உங்களுடைய விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்க மாட்டார்கள்.

இப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால், நம்முடைய மதிப்பெண்கள் அவர்கள் நம்முடைய விண்ணப்பத்தைத் தேர்வு செய்வதற்கு மட்டுமே உதவும். விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டாலே நமக்கு இடம் கிடைத்துவிட்டது என்று பொருள் கிடையாது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் நம்முடைய மதிப்பெண்களுக்கு எவ்வளவு முதன்மை தருகின்றார்களோ அதே அளவு நம்முடைய இதர செயல்களுக்கும், அதாவது விளையாட்டுச் சாதனைகள்... அறிவியல் சார்ந்த கருத்தரங்குகளில் பங்கு பெற்று கொள்வது... தலைமைப் பண்புகளை வெளிப்படுத்தும் செயல்கள் போன்றவற்றிற்கும் தருவார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், நாம் விண்ணப்பிக்கும் படிப்பிற்கு உரிய செயல்களில் நாம் ஈடுபாடு காட்டி இருக்கின்றோமா என்றும் அவர்கள் பார்ப்பார்கள். அதன் அடிப்படையிலேயும் நமது விண்ணப்பத்திற்கு அவர்கள் முதன்மை கொடுப்பார்கள்.

எடுத்துக்காட்டிற்கு, ஒரு பல்கலைக்கழகத்திற்கு இரண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  முதல் மாணவர் படிப்பில் சுட்டி. 80% மதிப்பெண் வைத்து இருக்கின்றார். ஆனால் வேறு இதர செயல்கள் என்று அவர் எதுவும் செய்யவில்லை.

இரண்டாம் மாணவரோ 70% மதிப்பெண்கள் வைத்து இருக்கின்றார். அதனுடன் பல நிகழ்ச்சிகளை முன்னின்று கல்லூரியில் நடத்தி இருக்கின்றார். பல கருத்தரங்குகளில் பங்கு பெற்று வென்று இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது, இவர்கள் இருவரின் விண்ணப்பங்களுமே ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் அந்த இரண்டாம் மாணவருக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படும்.

அதேப் போல, ஒரு சில படிப்புகளுக்குச் சிறப்பாகப் பொறியியல், மேலாண்மை ஆகிய படிப்புக்களில் சேர ஒரு சில தேர்வுகளை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டி இருக்கின்றது. பட்டதாரிகளுக்கான மேலாண்மை நுழைவுத் தேர்வுகள் (GMAT) மற்றும் பட்டதாரிகளுக்கான சான்றுத் தேர்வுகள் (GRE) போன்ற தேர்வுகளில் ஒரு மாணவர் எடுக்கும் மதிப்பெண்களை வைத்தே உலகில் உள்ள தலை சிறந்த பல்கலைக்கழகங்கள் அவரைத் தேர்வு செய்யலாமா அல்லது வேண்டாமா என்று முடிவு செய்கின்றன.

இந்தத் தேர்வுகள் முதன்மையான தேர்வுகள் தாம், ஆனால் இந்தத் தேர்வுகள் எழுதாத மாணவர்களையும் தேர்வு செய்யும் நல்ல பல்கலைக்கழகங்களும் இருக்கத் தான் செய்கின்றன. எனவே இந்தத் தேர்வுகளை எழுதினால் தான் வெளிநாட்டில் படிக்க முடியும் என்ற நெருக்கடி இல்லை. அதுவும் குறிப்பாக மாணவர்களைச் சேர்க்க இந்தத் தேர்வுகள் கட்டாயம் வேண்டுமா? என்ற கேள்வி பல பல்கலைக்கழகங்களுக்கு எழுந்து உள்ளது. எனவே இந்தத் தேர்வுகளை நீங்கள் எழுத வேண்டுமா என்று முடிவு செய்வதற்கு நீங்கள் படிக்க விரும்பும் பாடத்திற்கான அடிப்படைத் தகுதிகளில் அந்தத் தேர்வுகள் குறியிடப்பட்டுள்ளனவா என்று அந்தப் பல்கலைக்கழக இணையத்தளத்தில் சரி பார்த்துக் கொள்வது நல்லது.

ஆனால் இந்தத் தேர்வுகளில் வாங்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் நீங்கள் அந்தப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில உதவித் தொகையைப் பெற முடியும் என்பதினால் இந்தத் தேர்வுகளை எழுதுவது நல்லது.

இந்தத் தேர்வுகளுக்கும் நமது நாட்டின் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) மற்றும் பொதுத் திறமைத் தேர்வு (CAT) ஆகிய தேர்வுகளுக்கும் மிகப் பெரிய வேறுபாடு கிடையாது. இந்தத் தேர்வுகளைப் பற்றி நாம் விரிவாக மற்றொரு பதிவில் பார்க்கலாம்.

சரி... வேண்டிய தேர்வுகளை எல்லாம் அறிந்தாயிற்று, போதிய மதிப்பெண்களும் கைவசம் உள்ளன, இதற்கு மேலும் அந்தப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க நாம் வேறு ஏதாவது அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றதா? என்றால் ... ஆம் என்பதே விடையாகும்.

ஒரு சில கடிதங்களை அந்தப் பல்கலைக்கழகங்கள் நம்மிடம் இருந்து விண்ணப்பிக்கும் பொழுது எதிர்பார்க்கின்றன. அந்தக் கோப்புக்களைப் பற்றியும் விண்ணப்பிக்கும் முறையினைப் பற்றியும் நாம் அடுத்த பதிவினில் பார்ப்போம்.

தொடரும்...

Pin It