தேவையானவை:

சேப்பங்கிழங்கு.........................1/2 கிலோ
கடலை மாவு........................ 1/2 டம்ளர்
இட்லி மாவு இருந்தால்........2 தேக்கரண்டி
மிளகாய் பொடி.......................3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி..........................கொஞ்சம்
சோம்பு....................................1 /2  தேக்கரண்டி
பூண்டு......................................6
எண்ணெய்.............................50 மில்லி
உப்பு........................................தேவையான அளவு
கறிவேப்பிலை.....................அலங்கரிக்க

செய்முறை:

சேப்பங்கிழங்கை குக்கரில் போட்டு வேகவைத்து எடுக்கவும். அதன் அளவைப் பொறுத்து, இரண்டாகவோ, அன்றி நான்காகவோ நீள வாக்கில் நறுக்கவும். சோம்பை பொடி செய்து கொள்ளவும். பூண்டை நன்றாக தட்டி வைக்கவும்.

cheppakizhangu_370நறுக்கிய கிழங்கின் மேல், கடலை மாவு, இட்லி மாவு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி,சோம்பு பொடி, தட்டிய பூண்டு, உப்பு போட்டு நீர் ஊற்றாமல் கிளறி, பிசறி வைக்கவும். இது பொதுவாகவே கொழ கொழ என்றிருக்கும். எனவே, உடைத்து விடாமல் கவனமாகப் பிசையவும். இதனை குளிர் பதனப் பெட்டியில் சுமார் 1 மணி நேரம் வைக்க வும். குளிர் பெட்டி இல்லை என்றால் வெளியே வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் மசாலா தடவிய கிழங்கை ஒவ்வொன்றாகப் போடவும். தீயை மெதுவாக எரியவிடவும். கிழங்கு ஒரு பக்கம் நன்றாகச் சிவந்ததும், அதனை மறு பக்கம் திருப்பி விடவும். அடுத்த பக்கமும் வெந்ததும், கிழங்கு வறுவலை எடுத்து விடவும். தேவையானால் இதில் கறிவேப்பிலையை வறுத்துப் போட்டு அலங்கரிக்கலாம்.

இதனை சூடாகச் சாப்பிட்டால் சுவை தூள் டக்கராய் இருக்கும்...சேப்பங்கிழங்கு மசால் வறுவலை, சாம்பார் சாதம், புளிகுழம்பு, புளி சாதம், தக்காளி சாதம், புதினா சாதம், தயிர் சாதம் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டு சாப்பிடலாம். அவ்வளவு ருசியாய் இருக்கும்...! குழந்தைகள் பார்த்தால், அப்படியே வெறும் வாயிலேயே கபளீகரம் செய்துவிடுவார்கள்..!

Pin It