“ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை, 580 தமிழக மீனவர்களைக் கொன்று குவித்த கொலைகாரன் ராஜபக்சேவை, மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சியில், 21.9.2012 அன்று, பௌத்த மதக்கல்விக்கான பல்கலைக்கழகம் அமைக்கின்ற அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொள்வதற்காக அழைத்து வருகின்ற மத்தியப் பிரதேச மாநில அரசு, இந்திய அரசைக் கண்டிக்கின்றோம்; சாஞ்சிக்கு வந்து ராஜபக்சேவுக்கு கருப்புக் கொடி காட்டுவோம்; அதற்காக, சென்னையில் இருந்து ஆயிரம் பேர், பேருந்துகளில் புறப்படுவோம்; நானும் பேருந்திலேயே பயணிக்கின்றேன்; செப்டெம்பர் 17 ஆம் நாள், தந்தை பெரியாரின் பிறந்த நாளில், பேரறிஞர் அண்ணா நினைவு இடத்தில் இருந்து எங்கள் பயணம் தொடங்கும்” என அறிவித்தார், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

தமிழக அரசியலில், தில்லி தவிர்த்த வேறு எந்த ஒரு மாநிலத்திலும், எந்த ஒரு அரசியல் இயக்கமும் இப்படி ஒரு போராட்டத்தை அறிவித்தது இல்லை, நடத்தியது இல்லை என்பதால் பரபரப்பு தொற்றியது.

சாஞ்சியைப் பற்றிய எனது நினைவுகள் கிளர்ந்தன. நான் ஐந்தாம் வகுப்பு படித்தபோது, வரலாற்றுப் பாடப் புத்தகத்தில், சாஞ்சி ஸ்தூபியின் படத்தைப் பார்த்து இருக்கிறேன். அது பசுமையாக மனதில் பதிந்தது. சென்னையில் இருந்து தில்லிக்குச் செல்லும்போது, மத்தியப் பிரதேச மாநிலத்தின் மலைப் பகுதிகளைக் கடந்து செல்கையில், தொடர்வண்டியின் படிக்கட்டுகளில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்வது என் வழக்கம். அப்படியொரு பயணத்தில், 'சாஞ்சி' என்ற சிறிய தொடர்வண்டி நிலையத்தின் பெயர் கண்ணில்பட்டது. 'இதுதான், நாம் படித்த சாஞ்சியா?' என்று யோசித்துக் கொண்டு இருந்தபோதே, தொடர்வண்டித் தடத்துக்கு மிக அருகில் சுமார் 500 அடி தொலைவில், சாஞ்சி ஸ்தூபி கண்ணில்பட்டது. காணாததைக் கண்ட மகிழ்ச்சி பரவியது. அந்த ஸ்தூபி அமைந்து உள்ள இடம், ஒரு காட்டுப் பகுதி. அருகில் வேறு எந்தக் கட்டுமானங்களும் கண்ணில் படவில்லை. வெட்டவெளியில் தன்னந்தனியாக நிற்கிறது. அருகில், தேநீர்க்கடைகள் கூட இருக்குமா என்பது ஐயமே.

சாஞ்சி குறித்து மேலும் தகவல்களை அறிந்து கொள்ள இணையத்தில் துழாவினேன்.

சாஞ்சி

சாஞ்சியில் அமைந்து உள்ள ஸ்தூபி, மாமன்னர் அசோகரால் கட்டப்பட்டது. காலம், கி.மு. 300. அதாவது, இன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்பு. இந்தியாவில் இப்போது உள்ள மிகப் பழமையான கல் கட்டுமானம் இதுதான். இங்கே புத்தருடைய எலும்புகள் வைக்கப்பட்டு உள்ளன.

எனவே, இது பௌத்த மதத்தினரின் வழிபாட்டுக்கு உரிய இடமாகத் திகழ்கின்றது. உலகின் பல நாடுகளில் இருந்து பௌத்தத் துறவிகள், சுற்றுலாப் பயணிகள் நிறையப் பேர் வந்து செல்கின்றனர். ஐ.நா.வின் துணை அமைப்பான யுனெஸ்கோவால், உலகின் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

'சாஞ்சி' என்ற சிற்றூரின் மக்கள் தொகை, 6,000 பேர்கள் மட்டுமே. இவ்வூர், மத்தியப் பிரதேச மாநிலம், ரெய்சன் மாவட்டத்தில், மாநிலத்தின் தலைநகர் போபால் நகருக்கு வடகிழக்கில், சுமார் 50 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து தில்லி செல்லுகின்ற தொடர்வண்டித் தடத்தில், போபாலுக்கு அடுத்த பெரிய தொடர்வண்டி நிலையம், விதிஷா. அங்கிருந்து சாஞ்சி, 9 கிலோமீட்டர்கள். அங்கே சிறிய தொடர்வண்டி நிலையம் உள்ளது.

சென்னையில் இருந்து போபால் - 1482 கிலோமீட்டர்கள் தொலைவு. தொடர் வண்டியில் பயண நேரம் 20 முதல் 22 மணி. சென்னையில் இருந்து போபால் வழியாக, கீழ்காணும் தொடர்வண்டிகள் செல்கின்றன.

1. 12615 கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் 2. 12621 தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்
3. 12611- நிஜாமுதீன் கரீப் ரத்
4. 12522 ரப்திசாகர் எக்ஸ்பிரஸ்
5. 12433 ராஜ்தானி எக்ஸ்பிரஸ்

மேலும், 15க்கும் மேற்பட்ட தொடர் வண்டிகள் செல்கின்றன. ஆனால், சாஞ்சி தொடர்வண்டி நிலையத்தில் எந்த வண்டியும் நிற்காது. விதிஷா தொடர்வண்டி நிலையத்தில், பெரும்பாலான வண்டிகள் நிற்கும். அதிவிரைவு வண்டிகள், விதிஷாவிலும் நிற்காது.

பேருந்துப்பயணம்

சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்ல பல வழிகள் உள்ளன. சென்னை, திருப்பதி, கடப்பா, கர்னூல் வழியாக ஹைதராபாத் 626 கிலோமீட்டர்கள்.

ஹைதராபாத்-நாக்பூர்: 500 கிலோ மீட்டர். வழி: இராமையம்பேட், அடிலாபாத், ஹிங்கன்காட், சமுத்திரபூர்.

நாக்பூர்- போபால்: 355 கிலோமீட்டர்.

மத்தியப் பிரதேச அரசியல்

சாஞ்சி சட்டமன்றத் தொகுதி, விதிஷா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் இடம் பெற்று உள்ளது. 1991 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், லக்னோ, விதிஷா ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே, விதிஷா தொகுதி உறுப்பினர் பொறுப்பை விட்டு விலகினார். அந்த இடத்துக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அறிமுகப்படுத்தப் பட்ட புதிய வேட்பாளர், இளைஞரான சிவராஜ் சிங் சௌஹான் வெற்றி பெற்றார். அதற்குப்பிறகு நடைபெற்ற, 1996, 1998,1999, 2004 ஆகிய தேர்தல்களிலும் அவர் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.

2005 ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேச மாநில முதல்வராகப் பொறுப்பு வகித்த உமா பாரதி, குறுகிய காலத்திலேயே பதவியை விட்டு விலகியதால், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், புதிய முதல்வராக சிவராஜ்சிங் சௌஹான் தேர்வு செய்யப்பட்டார். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக முதல்வராகத் தொடர்கிறார்.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், விதிஷா தொகுதியில் சுஷ்மா சுவராஜ், போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர்தான் இந்தத் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் என்பது போன்ற தகவல்கள் கிடைத்தன.

பெரியார் நினைவு நாளில், புறப்பட்டது பெரும்படை

சென்னையில் இருந்து தில்லிக்கு 30க்கும் மேற்பட்ட முறை தொடர்வண்டியில் பயணித்து இருந்தாலும், சாலை வழியில் பயணித்தது இல்லை. அவ்வளவு தொலைவு சாலையில் பயணிப்பதா என அது மலைப்பாகவே இருந்தது. இருப்பினும் ஒருமுறையேனும் சாலை வழியாகப் பயணிக்க வேண்டும்; வழியில் உள்ள சாஞ்சி உள்ளிட்ட இடங்களைப் பார்க்க வேண்டும் என வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்து இருந்தேன். எனவே, சாஞ்சிக்குப் பேருந்தில் பயணிக்கின்றோம் என்ற வைகோவின் அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்து இருந்தேன். ஈருளை வண்டியில் இருந்து இடறி விழுந்ததால், வலது காலை முழுமையாக மடக்கி நடக்க இயலாத நிலையிலும், இந்தப் பயணத்தில் ஒரு மொழி பெயர்ப்பாளராகவும் நான் கடமை ஆற்ற வேண்டியது இருந்ததால், பயணக்குழுவில் இடம் பெற்றேன்.

ஞாயிறு காலையில் சென்னைக்கு வந்து, சாஞ்சி பயணத்துக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினேன். தாயகத்துக்கு உள்ளே நுழையும்போதே, ஏராளமான தொண்டர்கள் குவிந்து இருந்தனர். மறுநாள் பயணம்.

17.9.2012. சென்னை எழும்பூரில் உள்ள இம்பீரியல் அரங்க உணவகத்தில், சாஞ்சி பயணர்களுக்கான மதிய உணவு ஏற்பாடு ஆகி இருந்தது. தொண்டர்கள் சாப்பிட்டு முடித்தபின், அங்கேயே உள்ள அரங்கில், அவர்கள் இடையே உரை ஆற்றினார் வைகோ. சாஞ்சி பயணம் குறித்து விரிவாக எடுத்து உரைத்தார். பயணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளை வலியுறுத்தினார். 'மது அருந்துவோர் யாராகிலும் இருந்தால், இந்த இடத்திலேயே விலகிக் கொள்ளுங்கள்; வழியில் கண்டுபிடிக்க நேர்ந்தால், அந்த இடத்தில் இருந்தே, பயணச் செலவுத் தொகையைக் கையில் கொடுத்துத் திருப்பி அனுப்பி விடுவேன்' என்று எச்சரித்தார். தொண்டர்கள் புரிந்து கொண்டனர்.

mdmk_cadres_640

20 பேருந்துகளில், ஏறி, அங்கிருந்து நேராக, அண்ணா நினைவு இடத்துக்கு வந்தோம். நுழைவாயிலில், வைகோ முன்னிலையில், தொண்டர் படையினர் உறுதி மொழி ஏற்றனர். அங்கே திரண்டு இருந்த செய்தியாளர்களிடம் பயணத்தை நோக்கத்தை அறிவித்தார் வைகோ.

பேருந்துகளுக்கான வரிசை எண்கள் ஒட்டப்பட்டன. அனைவரும் ஏறி அமர்ந்தபிறகு, சரியாக, மாலை 5.40 மணிக்கு, பேருந்துகள் புறப்பட்டன. சென்னை நகரின் மாலை நேரப் பேருந்து நெருக்கடியில் சிக்கித் திணறி, ஒருவழியாக நகரத்தை விட்டு வெளியேறுகையில், இரவு ஏழு மணி ஆகி விட்டது. புழல், செங்குன்றம், காரனோடை என வழிநெடுகிலும், திருவள்ளூர் மாவட்டக் கழகத் தோழர்கள், விமரிசையாக வரவேற்று, வாழ்த்து முழக்கங்களை எழுப்பி, வழி அனுப்பி வைத்தனர்.

இரவு எட்டு மணி அளவில், ஆந்திர மாநிலம், சூலுருபேட்டை நெடுஞ்சாலை வரி வசூல் மையத்துக்கு அருகில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. சென்னை புகாரி உணவகத்தில் இருந்து அனைவருக்கும் உணவு ஆயத்தமாகி வரச் சற்றுத் தாமதம் ஆனது. ஆனால், நல்ல சுவையான உணவு.

காத்து இருந்த தோழர்கள் எல்லோரும் ருசித்துச் சாப்பிட்டு அங்கிருந்து புறப்படுகையில் மணி பத்து. நெல்லூர் புறவழிச்சாலைக்கு வந்தபோது, இரவு 12.00 மணி. அந்த இரவிலும், நெல்லூர் கழகத் தோழர்கள் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு நின்று, வாழ்த்து முழக்கங்களை எழுப்பி, வைகோ அவர்களுக்குத் துண்டு, மாலைகள் அணிவித்து வரவேற்றனர். அவர்கள், மாலை 5 மணி முதலே அங்கே காத்துக் கொண்டு இருந்தனர். பேருந்தில் இருந்து இறங்கிய வைகோ அவர்கள், சற்றுத் தள்ளி இருந்த விளக்குக் கம்பத்துக்கு அருகில் சென்று, சுமார் அரை மணி நேரம், நெல்லூர் தோழர்கள் இடையே உரை ஆற்றினார். அனைத்துப் பேருந்துகளுக்கும், பிஸ்கெட், பழங்கள், தண்ணீர் வழங்கினர், நெல்லூர்த் தோழர்கள்.

சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு...

சென்னையில் இருந்து போபால் செல்வதற்கான வழித்தடத்தை, இணையதளங்களில் பார்த்தபோது, பல வழிகள் தெரிந்தன. சென்னையில் இருந்து திருப்பதி, கர்னூல், கடப்பா, ஹைதராபாத், நாக்பூர் வழியாகச் செல்வது ஒரு தடம். சென்னையில் இருந்து விஜயவாடா சென்று, அங்கிருந்து, நான்கு வழிப் பாதையில் ஹைதராபாத் செல்வதே சிறந்தது என்பது ஒருசாரார் கருத்து. பர்வீன் டிராவல்ஸ் நிறுவனத்தார் தந்த பயண வழித்தடத்தில், ஓங்கோல், சிலுக்கலூர்பேட்டை, சாகர் வழியாக, ஹைதராபாத் போய்ச் சேருவது எங்கள் பயணத்திட்டம். சென்னையில் இருந்து பிற்பகல் 2.00 மணிக்குப் புறப்பட்டு, இரவு 12.00 மணிக்கு உள்ளாக, ஹைதராபாத் போய்ச் சேருவதாக எங்கள் திட்டம். ஆனால், 5.40 மணிக்குத்தான் புறப்பட முடிந்தது.

இருபது பேருந்துகளிலும் சேர்த்து, ஒரேயொரு பேருந்து ஓட்டுநருக்குத்தான், இந்தப் பயண வழித்தடத்தில் அறிமுகம் உண்டு என்பது, பயணத்தின்போதுதான் புரிந்தது. எனவே, முன்னும் பின்னுமாகச் சென்ற பல பேருந்துகள், வழித்தடத்தில் இருந்து மாறி மாறிச் சென்று வந்தன. காலை ஐந்தரை மணிவாக்கில், ஆறு பேருந்துகள், வேறு திசைகளில் சென்று கொண்டு இருப்பதை அறிந்து, எங்களது பேருந்தை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, சுமார் ஒன்றரை மணி நேரம் காத்து இருந்தோம். இதற்கு இடையில் இரவு நேரப் பயணத்தில், ஆங்காங்கே தேநீர் பருகுவதற்காக சில இடங்களில் வண்டியை நிறுத்தி இருந்தார்கள்.

எனவே, பொழுது புலர்ந்தபோது, நாங்கள் நல்கொண்டா மாவட்டம், நாகார்ஜூன சாகர் பகுதியில் இருந்தோம். இரவு உணவுக்குப் போய்ச் சேர முடியவில்லை. வழியில் தென்பட்ட ஒரு அகன்ற கால்வாயில், காலைக்கடன்களை முடித்துப் புறப்படுவது என முடிவு ஆயிற்று.

நாகர்ஜூன சாகர் அணையின் பல கால்வாய்களைக் கடந்து சென்றோம். தண்ணீர் தளும்பி ஓடுகிறது. ஒரு இடத்தில் வண்டிகளை நிறுத்தினோம். எல்லோரும் ஆனந்தமாகக் குளித்து மகிழ்ந்தனர். “தொடர்வண்டியில் போனால் இந்த இன்பம் கிடைக்காது. இடையூறுகள் இருந்தாலும், இதுதான் இனிமையான பயணம். இந்தப் பயணத்தில் இடம் பெறுவதற்குக் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்” என்று பேசிக்கொண்டார்கள். அங்கேயே, இரண்டு மணி நேரம் கழிந்தது. அருமையான குளியல்; மறக்க முடியாத இடம்.

அங்கே நின்றுகொண்டு இருந்தபோது, வழியில் சென்ற ஆந்திர மாநில இளைஞர்களை நிறுத்தி பேச்சுக் கொடுத்தோம். “இவர்களும், நமது ஊர்க்காரர்களைப் போலத்தானே இருக்கின்றார்கள். ஒன்றும் வேறுபாடு இல்லையே” என்றார் நண்பர் இராசேந்திரன்.

'நாம் இன்னமும், தென்னகத்துக்கு உள்ளேதானே இருக்கின்றோம்; வடக்கே செல்லச் செல்லத்தான் வேறுபாடுகள் தெரியும்; நாடு விட்டு நாடு செல்லும்போது, பெரிய அளவில் மாற்றங்களைக் காணலாம்' என்றேன்.

vaiko_cotton_640

அந்த இளைஞர்கள் மூவருக்கும் 15 வயது முதல், 18 வயதுக்குள்தான் இருக்கும். மூவருமே பள்ளிக்குச் செல்லவில்லை. விவசாய வேலைகளுக்குத்தான் போகிறோம் என்றனர்.

நுகத்தடி பூட்டிய காளைகளை, உழவுக்காக ஓட்டிச் சென்று கொண்டு இருந்தனர் உழவர்கள். ஓரிடத்தில் 100க்கும் மேற்பட்ட எருதுகள் சாலையைக் கடந்தன. 'இப்படிப்பட்ட காட்சிகளை இப்போது தமிழ்நாட்டில் பார்க்க முடியவே இல்லையே' என்று வருந்தினார் வைகோ. எங்கள் கண்ணில்பட்ட காளைகள் எல்லாம், சற்றே உயரமாக இருந்தன.

வைகோ அவர்கள், கால்வாய் ஓரமாகவே, சுமார் ஒரு மணி நேரம் நடை பழகி வந்தார்கள். வழியில் உள்ள வயல்வெளிகளில் உழவுப் பணிகளை மேற்கொண்டு இருந்த விவசாயிகளுடன் உரையாடினார். “எங்கள் பகுதியில் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறது. அதற்காக நாங்கள் ஒன்றுசேர்ந்து ஒரு போராட்டம் நடத்த முடியவில்லை; ஆனால், நீங்கள் இத்தனை பேர் திரண்டு, நீண்ட தொலைவு சென்று போராடுவது எங்களுக்கு வியப்பாக இருக்கிறது” என்றனர் அப்பகுதி விவசாயிகள்.

வயல்களில் பெரும்பாலும் பருத்தி பயிரிட்டு இருந்தார்கள்.

நாகார்ஜூன சாகர்

ஒருவழியாக எல்லோரும் குளித்து முடித்துப் புறப்படும்போது, 9.30 மணி ஆகிவிட்டது. காலை உணவு இல்லை. ஹைதராபாத் நோக்கித் தொடர்ந்து பயணம்.

ஹைதராபாத் நகருக்கு முன்பாகவே உள்ள, 'சாகர் ரோடு' என்ற இடத்தில், இரவு உணவுக்கு ஏற்பாடு செய்து இருப்பதாக அங்கு உள்ள நண்பர்கள் தெரிவித்து இருந்தனர். ஆனால், எங்களிடம் சொல்லும்போது, 'சாகர்' என்றே கூறினர். பர்வீன் டிராவல்ஸ் நிறுவனத்தார் கொடுத்த வழித்தடத்திலும், சாகர் என்றுதான் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், அவர்கள், எங்களை நாகார்ஜூன சாகர் அணைக்கட்டுப் பகுதி வழியாக அழைத்துச் சென்று விட்டனர்.

அங்கிருந்து ஹைதராபாத், சுமார் 200 கி.மீ. தொலைவு. பாதை மாறி, நாகார்ஜூன சாகர் அணைக்கட்டுப் பகுதி வழியாகச் சென்றன பேருந்துகள். அங்கே போயிருக்க வேண்டிய தேவையே இல்லை. சரி இதுவும் நல்லதாகப் போயிற்று என்றபடியே வைகோ அவர்கள், அந்த அணைக்கட்டு முன்பாக படம் எடுத்துக் கொள்ள விழைந்தார்கள். எனவே, பேருந்தை நிறுத்தி, படங்கள் எடுத்துக் கொண்டோம்.

உலகிலேயே, பெரிய இயந்திரங்களின் துணை இன்றி, மனிதர்களால் கட்டப்பட்டவற்றுள் மிகப்பெரிய கட்டுமானம், இந்த அணைக்கட்டுதானாம். கற்களையும், செங்கற்களையும் வைத்துக் கட்டி இருக்கின்றார்கள். கிருஷ்ணா நதிக்குக் குறுக்கே, நல்கொண்டா மாவட்டத்தில், நந்திகொண்டா கிராமத்தில் இந்த அணை கட்டப்பட்டு உள்ளது. 1903 ஆம் ஆண்டிலேயே, ஆங்கிலேயர்களால் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டது. ஆனால், 1955 ஆம் ஆண்டுதான் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 1967 ஆம் ஆண்டு நிறைவு பெற்றன. 11,472 மில்லியன் கியூபிக் மீட்டர் நீர் கொள்ளளவு கொண்டது இந்த அணை. 150 மீட்டர்கள்- 490 அடிகள் உயரம்; 1.6 கிலோமீட்டர் நீளம்; 42 அஅடி நீளம் உள்ள, 26 மதகுகளைக் கொண்டது. பாசனம், மின் உற்பத்தி என பல்நோக்குத் திட்டங்களைக் கொண்டது.

அணையை ஒட்டியே செல்கின்ற சாலையில் விரைந்தது எங்கள் பேருந்து. அப்படியே, பின்புறம் உள்ள நீர்பிடிப் பகுதி வழியாகச் சென்றது. அங்கே, கடல் போலத் தேங்கி இருந்தது நீர். கண்கொள்ளாக் காட்சி. பாதிக்கும் குறைவாகத்தான் நீர் இருந்தது. அதுவே, பிரமிக்கத்தக்கதாக இருந்தது. நீண்டு கொண்டே போனது அணை. சுமார் இருபது நிமிட விரைவுப் பயணத்துக்குப் பிறகுதான், அதன் வால் பகுதியைப் பார்க்க முடிந்தது. வழிதவறி வந்தாலும், காணக் கிடைக்காத ஒரு அரிய காட்சியைக் கண்ட மன நிறைவோடு தொடர்ந்தது பயணம்.

ஒரு வழியாக சுற்றிச் சுற்றி, தட்டுத் தடுமாறி, பகல் 12.30 மணி அளவில்தான், 'சாகர் ரோடு' என்ற இடத்தில் உள்ள, 'ரோக்கம் சக்தி ரெட்டி தோட்டம்' என்ற மண்டபத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்களுடைய ஏற்பாட்டின்பேரில், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சௌத்திரி, எங்களுக்கான உணவு ஏற்பாடு செய்து இருந்தார். எல்லோரும் உணவு அருந்திய பின்பு, வைகோ அவர்கள் உரை ஆற்றினார். சேலம் நகரில், விஜயராஜ் என்ற தானி ஓட்டுநர், ராஜபக்சே வருகையைக் கண்டித்து, முதல் நாள் தீக்குளித்து இருந்தார். இன்று அவர் இயற்கை எய்திய செய்தியை அறிவித்த வைகோ, எல்லோரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் இரங்கல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

எதிர்பாராத இடையூறுகள்

சென்னை-ஹைதராபாத் பயணத்தில் சில குளறுபடிகள் ஏற்பட்டன. பிற்பகல் இரண்டு மணி அளவில் சென்னையில் இருந்து புறப்படுவதாகத் திட்டம். ஆனால், ஆயிரம் பேரையும் ஒருங்கிணைத்து, பேருந்துகளில் ஏற்றி, அண்ணா நினைவு இடத்தில் இருந்து புறப்படும்போது மூன்றரை மணி நேரத் தாமதம் ஆகி விட்டது. சூலுருபேட்டையில் இரவு உணவுக்காக இரண்டு மணி நேரம் நிறுத்தம்; தமிழக எல்லையைக் கடப்பதற்கு முன்பு, புழல், செங்குன்றம், காரனோடை என பல இடங்களில் கழகத்தோழர்களின் வரவேற்பு; நெல்லூர் தோழர்களின் வரவேற்பில் ஒரு மணி நேரம்; காலையில் வழிதவறிச் சென்ற ஆறு பேருந்துகளை ஒருங்கிணைத்துக் கொண்டு வருவதில் ஒன்றரை மணி நேரத் தாமதம்; குளித்து முடித்துப் புறப்பட இரண்டு மணி நேரம் என, சுமார் ஏழு மணி நேரம் தாமதம் ஆயிற்று.

நண்பகல் உணவுக்கு, ஹைதராபாத் நகரில் இருந்து நாக்பூர் செல்லும் வழியில், சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில், கொம்பள்ளியில், சந்திரா ரெட்டி தோட்டம் என்ற இடத்தில் ஏற்பாடு ஆகி இருந்தது. ஹைதராபாத்தில் இருந்து புறப்படுகையில், மூன்று மணி ஆகி விட்டது.

போக்குவரத்து நெருக்கடியைக் கடந்து, அங்கே நாங்கள் போய்ச் சேர்ந்தபோது, மாலை ஆறு மணி ஆகி விட்டது. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், வைகோ அவர்களின் நண்பர் பாப்பிராஜூ அவர்களுடைய ஏற்பாட்டின் பேரில், உணவு ஆயத்தமாக இருந்தது. நல்ல சுவையான உணவை எல்லோரும் அருந்தியபின்னர், எங்கள் பயணம் தொடர்ந்தது. மேலும், 495 கிலோமீட்டர்கள் பயணித்து, நாக்பூர் சென்று தங்குவதாகத் திட்டம்.

24 மணி நேரமாகத் தொடர்ந்து பேருந்துகளை ஓட்டிக் கொண்டு வந்த ஓட்டுநர்கள், 'எங்களுக்குச் சற்றே ஓய்வு தேவை. மூன்று மணி நேரமாவது தூங்க வேண்டும்' என்றனர். ஏற்கனவே, திட்டமிட்டபடி வந்து சேர முடியவில்லை; இனியும் தாமதித்தால், நாளை வேறு இடையூறுகள் வந்து சேரும் என்பதை உணர்ந்த வைகோ அவர்கள், “நீங்கள் சொல்வது சரிதான். உங்களது உடல்நிலையை, ஓட்டி வந்த களைப்பை நானும் உணர்கிறேன். இருப்பினும், நாளை காலைக்குள் நாம் நாக்பூர் போய்ச் சேராவிட்டால், போபால் செல்வதில் மேலும் தாமதம் ஆகலாம்; நமது பயணத்தின் நோக்கம் நிறைவேறாது; எப்படியாவது சமாளித்துக் கொண்டு ஒத்துழைப்பு கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். அதனை ஏற்றுக்கொண்ட ஓட்டுநர்கள், ஒத்துழைப்பு நல்கினர். பயணம் தொடர்ந்தது.

தேசிய நெடுஞ்சாலை எண் 7 இல்தானே பயணிக்கின்றோம்; எனவே, விரைவாகப் போய்ச் சேர்ந்து விடலாம் என்ற எங்களது கணக்கு, தப்பாக ஆயிற்று. பல இடங்களில், அது இன்னமும், இரண்டு வழிப் பாதையாகத்தான் இருக்கின்றது. குண்டும், குழியுமாகக் கிடக்கின்றது. இடையில் ஓரிடத்தில், காவல்துறையினர் வந்து வண்டிகளை மறித்தனர். ஒவ்வொரு பேருந்தின் எண்ணையும் குறித்தனர். ஆந்திர மாநிலத்துக்கு உள்ளே வண்டிகளை இயக்குவதற்கு, அரசாங்கத்துக்கு பல ஆயிரங்களை வரியாகக் கட்டி இருக்கின்றோம்; சோதனைச் சாவடியில் அனுமதி பெற்றுக் கடந்து வந்து உள்ளோம். பின்னர் எதற்காக தேவை இல்லாமல் இவர்கள் நிறுத்துகிறார்கள் என்றபோது, அது பணம் பிடுங்குவதற்கான திட்டம் என்பது புரிந்தது. அவர்களுடன் வாக்குவாதம் ஆயிற்று.

அதைக் கேட்டுப் பேருந்தில் இறங்கி வந்த வைகோ அவர்கள், 'எதற்காக வண்டியை நிறுத்தி இருக்கின்றீர்கள்? உங்கள் மாநில முதல் அமைச்சரோடு பேச வேண்டுமா?' என்று அலைபேசியைக் கையில் எடுத்ததும், அந்தக் காவலர்களும், அவர்களுக்குத் தலைமை தாங்கி ஜீப்பில் வந்த அதிகாரியும் அதிர்ச்சி அடைந்தனர். 'நீங்கள் போகலாம்' என்று கூறிவிட்டு, விரைவாக அங்கிருந்து விலகிச் சென்று விட்டனர்.

இதற்கு இடைப்பட்ட நேரத்தில், அங்கே நின்றுகொண்டு இருந்தபோது, சாலையின் பல இடங்களில், நட்டுவாக்கலிகள் நசுங்கிக் கிடந்தது கண்ணில்பட்டது. எங்கள் பயணத்தில் வருகின்ற யாரேனும் ஒரு தோழர், இயற்கை அழைப்பை எதிர்கொள்ள, சாலையில் இருந்து சற்றே ஒதுங்கி பள்ளத்துக்கு உள்ளே இறங்கினால், நட்டுவாக்கலி, தேள்கடிக்கு உள்ளானால் என்ன செய்வது என்ற கவலை சூழ்ந்தது. அதுகுறித்த எச்சரிக்கையை அனைத்துப் பேருந்துகளுக்கும் தெரிவித்தோம்.

இதுபோன்ற இருபது பேருந்துகள் பயணத்துக்கு, வாக்கி டாக்கி இருப்பது நலம். அப்போதுதான் பயணத்தை, முறையாக ஒருங்கிணைக்க முடியும் எனத் தோன்றியது. அல்லது, ஒரு பெரிய ஒலிபெருக்கி இருக்க வேண்டும். அதில், ஆங்காங்கு அறிவிப்புகளைச் செய்து கொண்டே போகலாம்.

எல்லோருடைய கைகளிலும் அலைபேசி இருந்தாலும், சரியாக ஒருங்கிணைக்க முடியவில்லை. அடுத்த மாநிலம் என்பதால், பலருடைய அலைபேசிகள் இயங்கவில்லை; நள்ளிரவு நேரம் என்பதால், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பலர் எடுக்கவே இல்லை; வேறு சிலர், அணைத்து விட்டனர். இப்படியாக, ஒரு இணைப்பு இல்லாமல் தொடர்ந்தது பயணம். இவையெல்லாம் எதிர்பாராதவை.

பயணத்தில் பார்த்த படங்கள்

சாஞ்சி பயணத்தை, ஒரு போருக்குச் செல்வது போன்றே ஆயத்தப் பணிகள் அனைத்தையும் கணக்கிட்டுக் கச்சிதமாகச் செய்து இருந்தார் வைகோ. அந்த உணர்வைத் தொண்டர்கள் இடையே ஏற்படுத்துவதற்காக, தொடக்கத்தில் இருந்தே கடுமை காட்டினார். பயணத்தின்போது தொண்டர்கள் பார்ப்பதற்காக, வீர உணர்ச்சியை ஊட்டக்கூடிய படங்களைத் தேர்ந்து எடுத்து இருந்தார். நாடோடி மன்னன், வீரபாண்டிய கட்டபொம்மன், பென் ஹர், கிரேக்கத்தின் தெர்மாபிளை கணவாய்ப் போரில் பத்து இலட்சம் பெர்சியப் படை வீரர்களைத் தடுத்து நிறுத்திய ஸ்பார்ட்டாவின் 300 வீரர்களைப் பற்றிய படம், பத்துக் கட்டளைகள், இத்தாலியின் கிளாடியேட்டர்ஸ், ஸ்காட்லாந்து மாவீரன் வில்லியம் வாலசின் வரலாறை எடுத்து உரைக்கும் பிரேவ் ஹார்ட், லிபிய விடுதலைப் போராட்ட வரலாறை எடுத்துக் காட்டும் உமர் முக்தார், பொழுது போக்குக்காக, எங்க வீட்டுப் பிள்ளை, தாய்க்குப்பின் தாரம், பாசமலர் ஆகிய படங்களை மட்டுமே, இருபது பேருந்துகளிலும் காட்டுவதற்கு ஏற்பாடு செய்து இருந்தார். இந்தப் படங்கள் அனைத்தையும் நான் பார்த்து இருந்தாலும், மீண்டும் ஒருமுறை பார்த்து ரசிக்க முடிந்தது. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்புத் தட்டாத காவியங்கள் அல்லவா இந்தத் திரைப்படங்கள்!

மராட்டிய மாநிலத்துக்கு உள்ளே

இரவு 10 மணி வாக்கில், மராட்டிய மாநில எல்லைக்கு உள்ளே நுழைந்தோம். இந்தப் பயணத்தில் மராட்டிய மாநிலத்தின் வழியாக நாங்கள் பயணிக்க வேண்டிய தொலைவு, சுமார் 300 கிலோமீட்டருக்கும் குறைவுதான். ஆயினும், ஒரு பேருந்துக்கு சுமார் 11,000 ரூபாய் வரி கட்ட வேண்டுமாம். சுற்றுலாப் பேருந்துகளுக்கான வரியை ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் விருப்பம்போல உயர்த்திக் கொண்டே செல்கின்றன. அண்மையில், தமிழகத்திலும் இந்த வரியைக் கடுமையாக உயர்த்தி இருப்பதால், உள்நாட்டுச் சுற்றுலாவைக் கடுமையாகப் பாதிப்பதாக, தமிழக சுற்றுலா இயக்குநர்கள், இரண்டு மாதங்களுக்கு முன்பு தாயகத்துக்கு வந்து கூறியது நினைவுக்கு வந்தது.

கன்னியாகுமரியில் இருந்து காசி (வாரணாசி) வரை செல்லும் 7 ஆம் நெடுஞ்சாலையில் எங்கள் பயணம் தொடர்ந்தது. ஆனால், இது தேசிய நெடுஞ்சாலை என்றாலும், போக்குவரத்து மிகவும் குறைவாகவே இருந்தது. எப்போதாவது எதிரில் ஒன்றிரண்டு வண்டிகள் வந்தன. எங்களைப் பின்தொடர்ந்து வந்த வண்டிகளும் மிகக்குறைவே. தமிழகத்தில், சென்னையில் இருந்து மதுரை தேசிய நெடுஞ்சாலையில், நாள்தோறும் வாகன அணிவகுப்பையும், போக்குவரத்து நெருக்கடியையும் பார்த்துப் பழகி விட்ட நமக்கு, இது வியப்பாக இருந்தது. காரணம், வட இந்தியாவில், இரவு நேரங்களில் பயணிப்பதை மக்கள் தவிர்த்துக் கொள்கின்றனர். மேலும் இப்பகுதிகளில், பொருளாதார வளர்ச்சி குறைவு என்பதால், பொருள் போக்குவரத்தும் அதிகமாக இல்லை.

இரவெல்லாம் பயணித்து, நாக்பூர் நகரை நாங்கள் நெருங்குகையில் பொழுது புலரத் தொடங்கி இருந்தது. சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவுக்கு முன்பே, 'புட்டி போரி' என்ற இடத்தில் இருந்து, எங்களுக்கு வழிகாட்டி நாக்பூருக்கு உள்ளே அழைத்துச் செல்வதற்காக, ஒரு வண்டியை ஏற்பாடு செய்து இருந்தார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவினர் விடியவிடிய அங்கே காத்து இருந்து, எங்களை அழைத்துச் சென்றனர்.

அவர்களது வழிகாட்டுதலோடு, நாங்கள் தங்குவதற்காக ஏற்பாடு ஆகி இருந்த, நாக்பூர் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்கு உள்ளே எங்கள் பேருந்துகள் நுழையும்போது, விடிகாலை 5.00 மணி. இரண்டாவது இரவும், பேருந்திலேயே கழிந்தது.

திட்டமிட்ட ஏற்பாடுகள்

நாக்பூரில் நாங்கள் தங்குவதற்கும், உணவுக்குமான ஏற்பாடுகளைச் செய்தவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார். அவரது கட்சியைச் சேர்ந்த அனில் தேஷ்முக், நாக்பூரைச் சேர்ந்தவர். மராட்டிய மாநில, உணவு அமைச்சராக உள்ளார். அவரது ஏற்பாட்டின்பேரில், அக்கட்சியின் நாக்பூர் நகரத் தலைவர், அஜய் பாட்டீல் மற்றும் அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள், வைகோ அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அவர்களுடைய அன்பான வரவேற்பு, எங்களைத் திக்குமுக்காடச் செய்தது.

vaiko_anil_desmuk

“சற்று நேரம் நன்றாக ஓய்வு எடுங்கள். அதற்குப் பிறகு, காலையில் நீங்கள் புறப்படும்போது, தீக்ஷா பூமிக்கு அழைத்துச் செல்கிறேன்” என்றார் அஜய் பாட்டீல்.

அமைச்சர் அனில் தேஷ்முக் அவர்களுடைய உதவியாளர்களுள் ஒருவரான டாக்டர் சஞ்சய் தோட்டே, தொடர்ந்து என்னோடு தொடர்பில் இருந்தார். நான்கு ஐந்து நாள்களுக்குள், சுமார் ஐம்பது முறையாவது என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருப்பார். ஏராளமான குறுஞ்செய்திகளையும் அனுப்பிக் கொண்டே இருந்தார்.

நாங்கள் வருகின்ற பேருந்துகளின் பதிவு எண், ஒவ்வொரு பேருந்துக்கும் பொறுப்பான நமது நிர்வாகிகளின் பெயர்களை எல்லாம் என்னிடம் ஏற்கனவே கேட்டு இருந்தார். அதை நான் மின் அஞ்சலில் அவருக்கு அனுப்பி இருந்தேன். அந்தப் பட்டியலைப் படிகள் எடுத்து வைத்துக் கொண்டு, ஒவ்வொரு பேருந்துக்கும் அவர்கள் கட்சியின் சார்பில் ஒரு பொறுப்பாளரை நியமித்து இருந்தனர். அந்தப் பொறுப்பாளர்கள் அந்தந்தப் பேருந்துக்கு அருகில் வந்து நின்றுகொண்டு, பயணிகளை தனித்தனிக்குழுவாக அழைத்துச் சென்று, அறைகளை ஒதுக்கிக் கொடுத்தனர்.

ஒட்டுமொத்தமாக, 150 அறைகளை ஒதுக்கித் தந்தார்கள். ஒரு அறையில் ஆறு பேர்களுக்கான படுக்கைகள் விரிக்கப்பட்டு இருந்தன. அனைத்து அறைகளிலும், குடிதண்ணீர் பாட்டில்கள், பழங்கள், சோப்பு எல்லாம் வைத்து இருந்தார்கள். நாம் இப்படித் திட்டமிடுவோமோ என்று தெரியவில்லை.

எங்களுக்கு நான்காவது மாடியில் அறை கிடைத்தது. என்ன ஒன்று; பெருங்கூட்டத்தைப் பார்த்த உடனே, மின்தூக்கி இயக்குநர், அதைப் பூட்டி வைத்துவிட்டுப் போய்விட்டார். எல்லோரும் பெட்டிகளை எடுத்துக்கொண்டு, படிகளில் ஏறிச் செல்ல வேண்டியதாயிற்று. அதுதான் சற்றுச் சிரமமாக இருந்தது.

எங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த அறைக்கு உள்ளே சென்றவுடனே படுக்கையில் சாய்ந்தேன். சென்னையில் இருந்து புறப்பட்டது முதல், இங்கே நாக்பூர் வந்து சேருகின்றவரையிலும், பேருந்தில் உட்கார்ந்து கொண்டே வந்த சலிப்பு. நமது உடலைத் தாங்கி நிற்பது இந்த முதுகு எலும்புதான். அதற்கு ஓய்வு தேவை அல்லவா? சரியாக உறக்கம் வராவிட்டாலும், படுக்கையில் இருந்து எழுந்திருக்கவே இல்லை.

8.00 மணிக்கு எழுந்து, உடனடியாகக் குளித்து ஆயத்தமாகி, 8.30 மணிக்குக் கீழே வந்தேன். அதற்கு முன்பே நூற்றுக்கணக்கான தோழர்கள் ஆயத்தமாகி, அருமையான காலைச் சிற்றுண்டியைச் சுவைத்து முடித்து இருந்தார்கள். அங்கிருந்த புல்வெளியில், எல்லோரும் படங்கள் எடுத்துக் கொண்டு இருந்தனர். தோழர்களோடு பேசிப் பழகுவதற்குச் சற்று நேரம் கிடைத்தது.

நாக்பூரில் சட்டமன்றம்

நம்முடைய தோழர்கள் பலர், மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பைதானே? ஆனால், இந்த ஊரில் சட்டமன்றம் இருக்கிறது; சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி இருக்கின்றதே? என்று கேட்டனர். அவர்களுக்கு விளக்கம் அளித்தேன்.

இந்தியாவிலேயே, ஜம்மு-காஷ்மீர் மற்றும் மராட்டியம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும்தான் இரண்டு இடங்களில் சட்டமன்றம் அமைந்து உள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், கோடைகாலத் தலைநகர் ஜம்மு, குளிர்காலத் தலைநகர் ஸ்ரீநகர் என அழைக்கப்படுகிறது. மற்றொரு காரணம், ஜம்மு பகுதியில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், காஷ்மீர் பள்ளத்தாக்கில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் உள்ளனர். எனவே, அங்கே அப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது.

மராட்டிய மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களைப் பிரித்து, 'விதர்பா' என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பது, இந்திய விடுதலைக்கு முன்பு இருந்தே, இப்பகுதி மக்களின் கோரிக்கை. அதனால், அவர்களை அமைதிப்படுத்துவதற்காக, ஆண்டுதோறும், டிசம்பர் மாதம், மராட்டியச் சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் நாக்பூரில் நடைபெறுகின்றது; அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்குவதற்காகத்தான் இந்த விடுதி என்ற விளக்கத்தை அளித்தேன். நாக்பூர் நகரம்தான், இந்தியாவின் மையப்பகுதி ஆகும்.

எனவே, இந்த நகரை, இந்தியாவின் தலைநகராக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஒருகாலத்தில் எழுந்தது. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் அனைத்து இந்தியத் தலைமையகம் இங்கேதான் இருக்கின்றது. 'கட்சிகள் உருவான கதை' என்ற எனது நூலில், தேசியவாத காங்கிரஸ் கட்சி குறித்தும், மராட்டிய மாநில அரசியல் குறித்தும் சற்று விரிவாக எழுதி உள்ளேன்.

அமைச்சர் அனில் தேஷ்முக் அவர்களுடைய மகன், வைகோ அவர்களைச் சந்தித்து வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தார். 9.30 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு, பத்துப் பதினைந்து நிமிடப் பயணத்தில் தீக்ஷா பூமிக்கு வந்து சேர்ந்தோம்.

தீக்ஷா பூமி

பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், இந்திய விடுதலையை விட, தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக விடுதலையையே முதன்மையாகக் கொண்டு, தம் வாழ்நாள் முழுமையும் பாடுபட்டார். 1935 ஆம் ஆண்டு, “சமுதாய இழிவுகளில் இருந்து தம் இன மக்கள் விடுதலை பெற வேண்டும்; எனவே, இந்துவாகப் பிறந்த நான், இந்துவாக சாக மாட்டேன்” என்று, அறிவித்தார். அதன்படி, 1956 ஆம் ஆண்டு, அக்டோபர் 14 ஆம் நாள், மூன்று இலட்சத்து 85,000 மக்களுடன், பௌத்த சமயத்தைத் தழுவிய இடம்தான், இந்த தீக்ஷா பூமி. ஒவ்வோராண்டும், அதே நாளில், இலட்சக்கணக்கான மக்கள் இங்கே வருகின்றனர்.

vaiko_nagpur_ambedkar_640

பௌத்த சமயத்தைத் தழுவிய ஒன்றரை மாதங்களுக்குள், டிசம்பர் 6 ஆம் நாள் அம்பேத்கர் இயற்கை எய்தினார். அவரது நினைவாக, இந்த இடத்தில் ஒரு ஸ்தூபா கட்டுவது எனத் தீர்மானித்தனர். 1978 ஆம் ஆண்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் நாள், அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன், திறந்து வைத்தார்.

இந்த இடத்துக்கு வந்து இறங்கியபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி என்னவென்றால், எந்த சாஞ்சி ஸ்தூபாவை நோக்கி நாங்கள் சென்று கொண்டு இருக்கின்றோமோ, அதே வடிவத்தில் இருந்தது, இந்த நாக்பூர் ஸ்தூபா. சாஞ்சிக்கு உள்ளே நுழைவதற்கு முன்பே, மத்தியப் பிரதேச காவல்துறையினரால் நாங்கள் தடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு விடுவோம் என்பதை உணர்ந்து இருந்ததால், அதற்கு உள்ளே நுழைய முடியாத குறையை, இந்த தீக்ஷா பூமி ஸ்தூபா தீர்த்து வைத்தது. இது எதிர்பாராத நிகழ்வு.

அங்கே இருந்த பிரமாண்டமான அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த வைகோ, அம்பேத்கர் புகழ் பரப்பும் முழக்கங்களை எழுப்பினார். கழகத் தோழர்கள் வழிமொழிந்தனர். எல்லோரும் ஸ்தூபாவுக்கு உள்ளே சென்றோம். அங்கு மையமான இடத்தில் ஒரு புத்தரின் சிலை உள்ளது.

சாஞ்சி ஸ்தூபாவின் சிறிய மாதிரி ஒன்றும் உள்ளது. அங்கே மையத்தில், ஓரிடத்தில், ஒரு கலசத்தில், அண்ணல் அம்பேத்கருடைய சாம்பல் வைக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த இடம், 'அம்பேத்கர் நினைவு இடம்' என்றே அழைக்கப்படுகிறது. இந்தியில் இதை 'ஸ்மாரக்' என்கிறார்கள்.

vaiko_nagpur_370அதைச் சுற்றிலும், அமைதியாக அமர்ந்து தியானம் செய்வதற்கு இடம் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது.

ஸ்தூபாவுக்கு முன்பு நின்று தோழர்கள் படங்கள் எடுத்துக் கொண்டனர். அங்கே இருந்த முகப்படக் கலைஞர், படம் எடுத்தவுடன், அச்சுக் கருவியில் படி எடுத்துக் கொடுத்தார். ஒரு படம், 20 ரூபாய்தான். எனவே, தோழர்கள் போட்டி போட்டுக்கொண்டு படங்களை எடுத்துக் கொண்டனர். பல தோழர்களோடு படங்கள் எடுத்துக் கொண்டேன். படம் அச்சாகி கைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதால், பேருந்துக்கு வந்து விட்டேன். மதுரை மகபூப் ஜான் என்னுடைய படத்தை வாங்கிக் கொண்டு வருவதாகச் சொன்னார். ஆனால், அச்சாகி வந்த உடனேயே மற்றொரு நண்பர் அந்தப் படத்தைப் பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டதாகச் சொன்னார். என்னுடைய கேமராவிலும் நான் படங்கள் எடுத்து வைத்து இருந்ததால், அதைக் கேட்டு வருத்தப்படவில்லை. வளாகத்துக்கு வெளியே இருந்த நடைமேடையில், கலைப்பொருள்களை விற்றுக் கொண்டு இருந்தார்கள். புத்தரின் சிலை ஒன்றை வாங்கினேன்.

தீக்ஷா பூமியின் முன்பகுதியில் பிரமாண்டமான போதி மரம் ஒன்று உள்ளது. அதாவது, அரச மரம். அதற்கு எதிரே உள்ள ஒரு பெரிய கல் தூணில், அம்பேத்கருடைய 22 உறுதிமொழிகளைச் செதுக்கி வைத்து இருக்கின்றார்கள்.

எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்தபின்னர், நாக்பூர் நகர செய்தியாளர்கள் இடையே வைகோ அவர்கள், எங்களது பயண நோக்கத்தை எடுத்து உரைத்தார்.

“பௌத்த சமய புனிதத்தலமான சாஞ்சியில் போராடச் செல்லுவதால், நாங்கள் பௌத்த சமயத்துக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், மதத்தின் பெயரால் ஆட்சி செய்து கொண்டு, புத்தர் காட்டிய அன்பு, அகிம்சையை காலில் போட்டு மிதித்துவிட்டு, இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து ஆலயங்களை உடைத்துத் தள்ளி, விவேகானந்தரையும் தாக்கிய சிங்கள பௌத்த வெறியன் ராஜபக்சேவிற்கு எதிராக, கருப்பு கொடி காட்டவே மத்தியப் பிரதேசம் சாஞ்சி நோக்கிச் செல்கின்றோம்' என்றார். அங்கிருந்து புறப்பட்டோம்.

நாங்கள் பயணித்த இருபது பேருந்துகளும், ஒன்றுபோல நாக்பூர் வீதிகளில் வரிசையாக அணிவகுத்தது கண்கொள்ளாக் காட்சி. வழியில் செல்லுகின்ற மக்கள் எல்லாம் நின்று கவனித்தனர்.

மத்தியப் பிரதேச எல்லையில்...

இதற்கு இடையில், மத்தியப் பிரதேச மாநில எல்லைக்கு உள்ளே, சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே, சுமார் 2000 காவலர்களைக் கொண்ட காவற் படை குவிக்கப்பட்டு உள்ளது என்ற தகவல் கிடைத்தது. எனவே, அவர்கள் கைது செய்ய ஆயத்தங்களைச் செய்து விட்டனர் என்பது புரிந்தது. வைகோ அவர்கள், அதற்கான வியூகங்களை அமைத்தார். என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து ஒவ்வொரு பேருந்துக்கும் வைகோ அவர்களின் ஆணைகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. அலைபேசி எண்களின் இணைப்புப் பட்டியல், உடனுக்குடன் தட்டச்சு செய்து வழங்கப்பட்டது. அலைபேசிகள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தன. தோழர்களுக்கு இடையே கருத்துப் பரிமாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருந்தன.

mp_police_force_640

நாக்பூரில் இருந்து, போபால் செல்வதற்கு மூன்று வழிகள் உள்ளன. அதில் முதன்மையான வழி என்பது, தேசிய நெடுஞ்சாலை எண். 69. அதில்தான் எங்களுடைய பயணம் திட்டமிடப்பட்டு இருந்தது. சிலர், சிந்த்வாரா வழியாகச் செல்லும் மற்றொரு பாதையில் பயணிக்கலாம் என்றபோது, வைகோ அவர்கள் அதை மறுத்தார்கள். நாம் அந்த வழியில் பயணித்தாலும், அங்கேயும் காவலர்களைக் கொண்டு வந்து குவிப்பது, மத்தியப் பிரதேச அரசுக்கு ஒன்றும் கடினம் அல்ல. எனவே, நாம் திட்டமிட்ட பாதையிலேயே செல்வோம் என்று முடிவு எடுத்தார். அதன்படி, எங்கள் பயணம் தொடர்ந்தது.

வழியில், அனைத்துப் பேருந்துகளுக்கும், பெட்ரோல், டீசல் நிரப்பப்பட்டது. தோழர்கள் மதிய உணவை முடித்துக் கொண்டார்கள். தொண்டர் படையினர் கருப்புச் சீருடைகளை அணிந்து கொண்டார்கள். மற்றவர்களுக்கு, வைகோ படம் பொறித்த வெள்ளை பனியன் வழங்கப்பட்டது.

மத்தியப் பிரதேச மாநில எல்லைக்கு உள்ளே, எங்கள் அணிவகுப்பு நுழைந்தது. சுமார் பத்து கிலோ மீட்டர்கள் சென்று இருப்போம்.

பட் சிசோலி என்ற கிராமத்துக்கு உள்ளே நுழைகையிலேயே, சாலையின் இருபுறங்களிலும் மக்கள் திரண்டு இருந்தார்கள். அதைப் பார்த்தபோதே, அங்கேதான் காவலர் படை குவிக்கப்பட்டு இருக்கின்றது என்பதை ஊகித்தோம். எதிர்பார்த்தது போலவே, சற்றுத் தொலைவில் காவலர் படை ஒன்று சாலையை மறித்துக் கொண்டு நின்று இருந்தது. அந்த இடத்துக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு முன்பாகவே, அனைத்து வாகனங்களையும் நிறுத்திவிட்டு, வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் மட்டும் காவலர்களை நோக்கிச் சென்றனர்.

காவலர்கள் படையின் முன்னணியில், சிந்த்வாரா மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள் கையில் பூங்கொத்துகளுடன் நின்றுகொண்டு இருந்தனர். ஒவ்வொருவராகத் வைகோ அவர்களிடம் வழங்கினர். மொழிபெயர்ப்பாளராக, இளையராஜா என்ற தமிழ் இளைஞர் நின்றுகொண்டு இருந்தார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கந்தப்ப கவுண்டன் வலசு கிராமத்தைச் சேர்ந்த அவர் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. பக்கத்தில் உள்ள மாண்ட்லா என்ற மாவட்டத்தின் துணை ஆட்சியராக (எஸ்டிஎம்) உள்ளார். தமிழ்நாட்டில் நாம் மாவட்ட ஆட்சியர் என்று அழைப்பதை, வட இந்தியாவில் “மாவட்ட நீதிபதி - மாஜிஸ்ட்ரேட்” என்று அழைக்கின்றார்கள்.

அவர்கள் பிடித்துக் கொண்டு இருந்த பதாகையில், “உங்களை அன்போடு வரவேற்கின்றோம்; காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குங்கள்” என இந்தியில் எழுதப்பட்டு இருந்தது. அருகில் நெருங்கும்போதுதான், தனித்தனி எழுத்துகளாக, தமிழிலும் எழுதப்பட்டு இருப்பதைப் பார்க்க முடிந்தது.

அனைத்து காவல்படை பிரிவினரும், துணை இராணுவம், கவச உடை அணிந்து இந்திய பாதுகாப்புப் படையில் உள்ள கை துப்பாக்கி, 303 ஏகே47, எஸ்எல்ஆர், ஸ்டன்கன், கண்ணீர்புகை வீச்சும் துப்பாக்கி என்று அனைத்து நவீன ரக ஆயுதங்களுடனும், நீர்பாய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனம், மாவட்ட ஆட்சியர், சார்பு ஆட்சியர் போன்ற ஐஏ.எஸ். அதிகாரிகள், வருவாய் துறையினர், காவல்துறை சரக கண்காணிப்பாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் போன்ற IPS அதிகாரிகளும் மத்திய அரசு உளவுப்பிரிவு, மத்தியப் பிரதேச உளவுப் பிரிவினர், சிங்கள அரசின் உளவுப் பிரிவினர், தமிழக அரசின் உளவுப் பிரிவினர், கண்ணி வெடி, பாம் ஸ்குவாட் போன்றவற்றுடன் தயார் நிலையில் இருந்தனர்.

வைகோவின் கேள்வி

அவர்களிடம் வைகோ, “நாங்கள் சாஞ்சிக்குச் செல்கிறோம்” என்றார்.

'இதற்கு மேல் செல்ல, உங்களுக்கு அனுமதி இல்லை' என்றார் மாவட்ட ஆட்சியர்.

vaiko_mp_collector_640

'கருப்புக் கொடி காட்டுவது என்பது, எங்களது எதிர்ப்பு உணர்வைக் காட்டுவது; மக்கள் ஆட்சி நடைபெறுகின்ற நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறை இது; உங்களுடைய போபால் நகர காவல்துறை ஆணையர், இரண்டு நாள்களுக்கு முன்பு என்னோடு பேசும்போது, ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு, போபால் நகரத்திலேயே ஒரு இடத்தை ஒதுக்கித் தருகிறோம்; சாஞ்சிக்குச் செல்ல அனுமதிக்க முடியாது என்றார். ஆனால், இப்போது நீங்கள், மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு உள்ளேயே, 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்பாகவே எங்களைத் தடுத்து நிறுத்துகின்றீர்கள். இங்கே மக்கள் ஆட்சி நடக்கின்றதா? எங்கள் சொந்தங்களை, இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரனுக்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில், சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கின்றீர்கள். எங்களை மத்தியப் பிரதேச மாநில எல்லையிலேயே தடுத்து நிறுத்துகின்றீர்கள். அப்படியானால், நாங்கள் இந்தியக் குடிமக்களா? இல்லையா?” என்று வைகோ கேட்டார்.

அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. “அடுத்து என்ன செய்வது என்பது குறித்து, நான் எனது தோழர்களிடம் கலந்து ஆலோசித்து விட்டு வருகிறேன்” என்றார் வைகோ.

இந்தக் கட்டத்தில் எல்லாம், இந்த வரலாற்று நிகழ்வில் நாமும் இடம் பெற்று இருக்கின்றோமே என்ற பெருமித உணர்வு, எங்கள் எல்லோரையும் மகிழ்ச்சி அடையச் செய்தது.

குலோத்துங்கச் சோழன் படையின் வடதிசை அணிவகுப்பை நாம் பார்க்காத குறையை, கலிங்கத்துப் பரணியில் ஜெயங்கொண்டார் பாடித் தீர்த்து வைத்தார். அதை இலக்கியத்தில் படித்து மகிழ்கிறோம். அந்தக் காட்சியை, நேரில் பார்க்காத குறையைப் போக்கியது, வைகோவின் தலைமையில் சாஞ்சி நோக்கி அணிவகுத்த தொண்டர்படையின் காட்சி.

அங்கிருந்து திரும்பி நமது எல்லைக்கு வந்து, எல்லோரையும் அழைத்துக்கொண்டு, மீண்டும் காவல்துறையினரின் தடுப்பை நோக்கி நடந்தார் வைகோ. காவல்துறையினர் பரபரப்பாயினர். அவர்கள் நின்றுகொண்டு இருந்த இடத்துக்கு ஐம்பது அடிகள் முன்பாக, திடீரென சாலையில் நடுவே அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து அணிவகுத்துச் சென்ற அனைவரும், அந்தச் சாலையிலேயே அமர்ந்தோம். அப்போது, சரியாக மாலை 4.00 மணி.

“நாங்கள் இங்கேயேதான் அமர்ந்து இருப்போம்; எங்கள் மீது கை வைத்தால், நிலைமை எல்லை மீறிப்போவதைத் தடுக்க முடியாது; அதற்குப் பிறகு நடக்கின்ற விளைவுகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு; எனவே, உங்கள் அரசிடம் கேட்டு முடிவு செய்யுங்கள்” என்று அறிவித்தார் வைகோ.

vaiko_mp_640

வைகோவின் படை நேராக நம்மை நோக்கி வரும்; அவர்களைக் கைது செய்து, வேறுஇடத்துக்குக் கொண்டு போய் விடலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்த, மத்தியப் பிரதேச அரசு நிர்வாகம் அதிர்ந்து போனது.

மாவட்ட ஆட்சியர் வைகோவிடம் வந்தார். 'ஐயா, அருகிலேயே எங்கள் அரசு விருந்தினர் விடுதி உள்ளது. அங்கே நீங்களும், உங்களுடைய தோழர்களும் அமர்ந்து கொள்ளலாம்' என்றார்.

'நாங்கள் போராட்டம் நடத்துவதற்காக வந்து இருக்கின்றோம்; உங்களுடைய விருந்தினராகத் தங்குவதற்கு அல்ல' என்றார் வைகோ. அதற்கு மேல் ஒன்றும் பேச முடியாமல் அவர் அகன்றார்.

தேசிய நெடுஞ்சாலையில் வைகோவும், ம.தி.மு.க.வினரும் அமர்ந்த செய்தி, ஊடகங்களின் வழியாகப் பரவியது. இதற்கு இடையில், போபால் நகரத்துக்கு வரத் தொடங்கிய ம.தி.மு.க.வினரை, தொடர்வண்டி மற்றும் விமான நிலையத்திலேயே தடுத்துக் கைது செய்கின்றனர் என்ற தகவல்கள் கிடைத்தன.

அங்கே அமர்ந்த தோழர்கள் இடையே உரை ஆற்றிய வைகோ, நமது பயணத்தின் நோக்கம், மத்தியப் பிரதேச அரசின் அணுகுமுறை ஆகியவற்றை எடுத்து உரைத்தார். 'நமது போராட்டம், அறவழியிலானது; நாம் கட்டுப்பாடு காப்போம்' என்றார்.

மறியலுக்கு எதிர் மறியல்

இதற்குப்பிறகு, காவலர்களும், எதிரே அமர்ந்தார்கள். அதாவது, மறியலுக்கு எதிர் மறியல் என்பது போல இருந்தது அந்தக் காட்சி. அவர்களுக்குப் பின்னால், நடுச்சாலையில், ரோடு ரோலர், டிராக்டர் வண்டிகளை நிறுத்தி, சாலையை மறித்து இருந்தார்கள்.

mp_village_people_640

வைகோ அவர்கள், மத்தியப் பிரதேச மாநில முதல் அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை, இந்தியில் மொழிபெயர்த்து, துண்டு அறிக்கையாக எடுத்துச் சென்று இருந்தோம். அதை, அங்கே திரண்டு இருந்த மக்களிடமும், காவலர்களிடமும் வழங்கினோம். அவர்கள் அனைவரும் பொறுமையாகப் படித்து, நமது போராட்டத்தின் நோக்கத்தை அறிந்து கொண்டார்கள். அந்தத் துண்டு அறிக்கையை நான் அப்படியே வாசித்தேன். வைகோ அவர்களின் அறிவிப்புகளை அவ்வப்போது, இந்தியில் மொழிபெயர்த்துச் சொன்னேன். படிக்காத பாமர மக்களும் புரிந்து கொண்டனர்.  போராட்டத்துக்கு ஆதரவு தரத் தொடங்கினர்.

mp_police_640

இரவானதும், காவலர்கள், மின்துறை ஊழியர்களை அழைத்து வந்து, அருகில் இருந்த கம்பங்களில் விளக்குகளைப் பொருத்தினார்கள். நேரடியாகக் கொக்கிகளைப் போட்டு மின்சாரத்தை எடுத்தார்கள். காவல்துறையினரே இதைச் செய்தார்கள். எனவே, உடனடியாக எங்களை, அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றும் எண்ணம் அவர்களிடம் இல்லை என்பது உறுதியானது. தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை, 15 கிலோ மீட்டர் தொலைவிலேயே வேறு வழியில் திருப்பி விட்டு விட்டார்கள் என்பதையும் அறிந்தோம்.

சென்னையில் இருந்து புறப்படும்போதே, ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், வெட்டவெளியிலேயே தங்குவதற்கும், உணவு சமைப்பதற்குமான ஏற்பாடுகளை, வைகோ அவர்கள் செய்து இருந்தார்கள். அதன்படி, தேவையான உணவுப் பொருள்கள், கூடாரத் துணிகள் அனைத்தும் ஒரு லாரியில் ஏற்றப்பட்டு, நம்முடைய அணிவகுப்பில் இடம் பெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் இருந்து, சமையல் கலைஞர்களும் வந்து இருந்தனர். பட் சிசோலா கிராமத்தில், காலியாக இருந்த ஒரு இடத்தில், உணவு சமைக்கும் பணிகள் தொடங்கின. இரவு 11 மணி வாக்கில், எல்லோருக்கும் ரவை உப்புமா வழங்கப்பட்டது. அதன்பிறகு, அந்தச் சாலையிலேயே சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு நமது தோழர்கள் படுத்து உறங்கினர். பட் சிசோலா கிராமவாசி ஒருவர் என்னிடம் பேசும்போது, 'எனக்கு 60 வயது ஆகிறது. இப்படி ஒரு காட்சியை, கட்டுப்பாடான ஒரு கூட்டத்தை நான் பார்த்ததே இல்லை' என்றார். எங்கள் வருகையை எதிர்பார்த்து, முதல் நாளில் இருந்தே, காவலர் படை அந்த கிராமத்தில் குவிக்கப்பட்டு இருக்கின்றது என்றும் சொன்னார்.

நள்ளிரவு பஜனை

மாலையில், மத்தியப் பிரதேச காவல்துறையினர் விரித்து வைத்து இருந்த கித்தான் துணியில் படுத்து சற்று நேரம் கண் அயர்ந்ததால், இரவில் எனக்குத் தூக்கம் வரவில்லை. இராசேந்திரன், கல்லத்தியான் உள்ளிட்ட பல தோழர்களோடு பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. நள்ளிரவு 12 மணி. சற்றுத்தொலைவில் இருந்த ஒரு ஒலிபெருக்கியில் இருந்து, பஜனைப் பாடல்கள் கேட்டுக் கொண்டே இருந்தன.

mdmk_mp_640

அந்த கிராமத்தைச் சேர்ந்த அஷ்வின் என்ற இளைஞன் எங்களோடு உட்கார்ந்து நிறையப் பேசினார். அவரிடம்தான், அந்த ஊரின் பெயர்க் காரணத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

நாங்கள் அமர்ந்து இருந்த இடத்துக்குச் சற்றுத் தள்ளி, சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில், ஒரு பெரிய ஆலமரம் பரந்து விரிந்து இருந்தது. சுமார் ஐந்து ஏக்கர் சுற்றளவு இருக்கும். ஆலமரத்துக்கு, இந்தியில் 'பட் கா பேடு' என்று பெயர். 'சிசோலா' என்றால், 'பரந்து விரிந்த' என்று பொருள்; எனவே, இந்த ஊரின் பெயர், 'பட் சிசோலா' ஆயிற்று என்றார். இந்தியில், நான்கு 'ட' எழுத்துகள் உள்ளதால், பட் என்பதில் உள்ள 'ட்' என்ற எழுத்தை, அழுத்தி ஒலிக்கக் கூடாது; பாதியாகத்தான் ஒலிக்க வேண்டும். 'பாட்டுச் சத்தம் எங்கிருந்து வருகிறது? அங்கே சென்று பார்க்க முடியுமா?' எனக் கேட்டேன். 'வாருங்கள்' எனக்கூறினார். தம்பி தமிழ் பிரபாகரன், மானூர் சந்திரன், பேராச்சி ஆகியோரையும் உடன் அழைத்துச் சென்றேன்.

விளக்கு வெளிச்சம் இல்லாத, இருண்டு கிடந்த வழியாக எங்களை அழைத்துச் சென்றார். தட்டுத் தடுமாறிச் சென்றோம். வழியில் ஓரிடத்தில் வளர்ந்து ஓங்கி பரந்து விரிந்து கிடந்த ஆலமரத்தைக் காட்டினார். 'இதுதான், நான் சொன்ன பட் கா பேட் என்றார்' என்றார்.

அதைக் கடந்து நடந்தோம். அங்கே ஒரு சிறிய கோவில் இருந்தது. சுமார் 25 பேர் உட்கார்ந்து தேநீர் பருகிக்கொண்டு இருந்தார்கள். எங்களுக்கும் தேநீர் கொடுத்தார்கள். அவர்களோடு பேசினேன்:

'இது ஷ்ராவன் மாஸ்; அதாவது சிரவண மாதம். ஆங்கில நாள்காட்டியில் பிப்ரவரி மாதத்துக்கு, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 29 நாள்கள் வருவது போல, எங்களுடைய நாள்காட்டியில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான், இப்படிப்பட்ட நாள் வரும். இந்த நாளை, 'ரிஷி பஞ்சமி' என்றும் அழைப்போம். இது ஒரு சிறப்பான நாள். இதே நாளில், பிள்ளையார் சதுர்த்தியும் சேர்ந்து வருவதால், மேலும் சிறப்பானது. எனவே, இன்று முழு இரவு பஜனைப் பாடல்களுடன் இதைக் கொண்டாடுகிறோம்' என்று விளக்கம் அளித்தனர்.

கோவிலின் பெயரைக் கேட்டேன். அச்சிடப்பட்ட நன்கொடைச் சீட்டை எடுத்துக் கொண்டு வந்தனர். படித்துப் பார்த்தேன். ஏதாவது நன்கொடை எழுதுமாறு கேட்டுக் கொண்டனர். 100 ரூபாய் எழுதினேன். தம்பி பிரபாகரன், 50 ரூபாய் எழுதினார்.

மீண்டும் பஜனை தொடங்கியது. அருகில் இருந்த சிறிய அறைக்கு உள்ளே சென்றோம். அங்கே பத்துப் பதினைந்து இளைஞர்கள், இசைக்கருவிகளை வேகமாக, சத்தமாக இசைத்துக் கொண்டு இருந்தனர். ஒவ்வொருவர் கையிலும், உடுக்கை போன்ற வடிவில் இருந்த ஒரு சிறிய கொட்டு, கஞ்சிரா, வைத்து இசைத்தனர். ஒருவர் பாடினார்; பின் பாட்டாக, அதே வரிகளைத் தொண்டை நரம்புகள் வெடிக்க அனைவரும் சேர்ந்து ஓங்கிப் பாடினர்; வெறித்தனமாகப் பாடினர்.

vaiko_mp_night_640

பொதுவாகவே வட இந்தியர்கள் அனைவரும் கூட்டு வழிபாட்டில் இன்றைக்கும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்கள். வட இந்தியத் தொலைக்காட்சிகளைப் பாருங்கள். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நிரம்பக் காணலாம்.

அங்கிருந்து நாங்கள் திரும்பி வந்தபோது, மணி 1.30. சாலையிலேயே படுத்தோம். பெரிய வியப்பு என்னவென்றால், இந்த ஊரில் கொசுக்கடித் தொல்லையே இல்லை. ஆனால் கொசுக்கள் இருந்தன. தமிழ்நாட்டில் இருந்து, 1200 கிலோ மீட்டர் பயணித்து வந்து, இங்கே சாலையில் படுத்துக் கிடக்கின்றார்களே என்று, மத்தியப் பிரதேசத்துக் கொசுக்கள் இரக்கம் காட்டியதோ என்னவோ தெரியவில்லை. மேலும் ஒரு வியப்பு: பனியின் தாக்குதலும் குறைவாகவே இருந்தது. சாலையில் புதிதாகப் பொருத்தப்பட்ட விளக்குகளாலோ என்னவோ, அந்த இரவுப் பொழுது ஓரளவு இதமாகவே கழிந்தது.

பட் சிசோலா

மறுநாள் பொழுது புலர்ந்தது. தோழர்கள் பலரும் இரவுத் தூக்கத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருந்தார்கள். எல்லோருக்குமே, தேசிய நெடுஞ்சாலையில் படுத்துக் கிடந்தது புது அனுபவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இன்றுதான் சற்றுப் பொறுமையாக இந்த ஊரின் இயற்கைக் காட்சிகளை ரசித்துப் பார்க்க முடிந்தது. இது ஒரு அருமையான கிராமம். சுமார் 30 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக கிராமங்களின் காட்சியை, இந்த ஊர் நினைவுபடுத்தியது. அருகில், சிறுசிறு ஓடைகள் ஓடுவதை அறிந்து, தொண்டர்கள் அங்கே சென்றனர்.

தூக்கணாங்குருவிகள்

நானும், நண்பர்களும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு நடந்து போனோம். அங்கே ஒரு சிற்றோடை. தெளிந்த தண்ணீர். குளிர்ச்சியாகவும் இருந்தது. வழிநெடுகிலும் இருந்த பல மரங்களில், எண்ணற்ற தூக்கணாங்குருவிக் கூடுகள் தென்பட்டன. அப்படிப்பட்ட காட்சியை, தமிழகத்தில் இப்போது பார்க்க முடியாது. எல்லா மரங்களிலும் கிளிகள். சிட்டுக்குருவிகள் நன்கு வளர்ந்து செழுமையாக இருந்தன. நமது ஊர்க்குருவியைப் போல இரண்டு மடங்கு வளர்ச்சி.

தூக்கணாங்குருவிக் கூடுகளுள் பெரிதாக இருந்த ஒரு கூட்டைப் பார்த்த திருப்பூர் சந்திரமூர்த்தி, 'இது பணக்காரக் குருவி' என்றார்.

'இல்லை; அது உழைப்பாளர் குருவி. ஏனென்றால், அந்த அளவுக்குப் பெரிய கூட்டைக் கட்டுவதற்கு, அது கூடுதலாக உழைத்து இருக்கிறது' என்றேன் நான். இப்படியாக, அந்த ஊரின் இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசித்துக்கொண்டே குளித்து முடித்தோம்.

arunagiri_mp_640

இது சற்றே பெரிய கிராமம்தான். சிறியசிறிய வீடுகளாக இருக்கின்றன. பெரும்பாலும், மண் மற்றும் காரைச் சுவர்கள்தாம். எப்போது இடிந்து விழும் என்ற நிலையில், இற்றுப்போய் இருந்தன பல வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும், ஐந்து, பத்து மாடுகள் கட்டப்பட்டு இருந்தன. ஒருசில வீடுகள்தாம், சற்றே பெரிதாக, புதிதாக இடித்துக் கட்டப்பட்டு உள்ளன. தெருக்கள் நெருக்கமாக அமைந்து உள்ளன. ஆனால், காங்கிரிட் சாலைகள் போட்டு இருக்கின்றார்கள். தெருவில் செல்லுகின்றபோது உற்றுக் கவனித்ததில், வீடுகளுக்கு உள்ளே இடவசதி மிகக் குறைவாக இருப்பது தெரிந்தது. அதற்குள், ஐந்தாறு பேர் நெருக்கியடித்து உட்கார்ந்துகொண்டு தொலைக்காட்சி பார்க்கின்றார்கள்.

ஊருக்கு வெளிப்புறத்தில் சேரி போன்ற பகுதி உள்ளது. அங்கே இருக்கின்ற வீடுகள், மரக்கட்டைகளாலும், குச்சிகளாலும் தடுக்கப்பட்டு மண் சுவர்களாகவே உள்ளன.

மாட்டு வண்டிகள் உயரம் குறைவாக உள்ளன. மாடுகளின் கழுத்தில் கட்டி இருக்கின்ற மணிகள், தகரத்தால் ஆனவை. எனவே, நம்மூர் வெண்கல மணி போன்ற ஒலி இல்லை. ஏதோ கரகரத்த குரலில் பாடுவது போல உள்ளது. வண்டிச் சக்கரங்கள் சிறியவை. கொடுமை என்னவென்றால், அதில் இரும்புப் பட்டைகள் மட்டுமே உள்ளன. தமிழகத்து மாட்டு வண்டிகளில் உள்ளதுபோல, அதிர்வைத் தாங்குவதற்கு மரக்கட்டைகள் கிடையாது. அந்த இரும்புபட்டை வண்டியில் எப்படித்தான் உட்கார்ந்து பயணிக்கின்றார்களோ தெரியவில்லை. எலும்புகள் நொறுங்கி விடும். இடமும் குறைவு.

இந்த ஊர் மக்கள், வயல்களில் மலம் கழிப்பது இல்லை போலும். ஊருக்குச் சற்றே வெளியில் உள்ள சாலைகளில், இருபுறங்களிலும் அதைக் கவனித்துப் பார்த்துக் கடக்க வேண்டி இருந்தது; அதுதான் சற்றுச் சிரமமாக இருந்தது. ஆந்திரா வழியாக பேருந்தில் வரும்போதே கவனித்தேன்.

காலைக்கடன்களைக் கழிப்பதற்காக, எல்லோருமே பிஸ்லரி தண்ணீர் பாட்டில்கள், சிறிய சொம்புகளில் தண்ணீர் எடுத்துக் கொண்டுதான், வயல்வெளிகளில் ஒதுங்குகிறார்கள். அதுபோலத்தான் இங்கும். பட் சிசோலா கிராமத்தின் நெருக்கமான வீடுகளுக்கு உள்ளே, ஒண்டிக்கொண்டு உட்கார்ந்து இருப்பதற்கே இடம் இல்லாதபோது, பத்து அடிகள் நடப்பதற்கே வழி இல்லாதபோது, கழிப்பு அறைகள் கட்டுவதைப் பற்றி நினைத்தே பார்க்க முடியாது.

இங்கே உள்ள வயல்களில் பெரும்பாலும் பருத்தி மற்றும் காலி ஃபிளவர் செடிகள் பயிரிட்டு இருக்கின்றார்கள். நடுநடுவே, ஊடுபயிராக ஆரஞ்சு மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. வீடுகளின் முற்றத்தில் உட்கார்ந்து கொண்டு இருந்த பெண்கள், காலி ஃபிளவர் பூக்களை, சமையலுக்காக நறுக்கிக் கொண்டு இருந்தார்கள். ஒரு சில வீடுகளில் மட்டும், வீட்டு வாசலில் சிறிய கோலமிட்டு இருந்தார்கள். ஆங்காங்கு இருந்த சிறு கடைகளில், ஆண்கள் கூட்டம் உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டு இருந்தனர். சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். சற்றே உயரமான சிறுவர்கள் பலரிடம் பேசியபோது, அவர்கள் பள்ளிக்குப் போகவில்லை என்பது தெரிந்தது. பெரும்பாலும் விவசாய வேலைகளிலேயே தங்கள் வாழ்க்கையை வகுத்துக் கொள்கின்றார்கள். ஒரு சிலர்தான் உயர்கல்விக்காக வெளியே செல்கிறார்கள்.

தேசிய பானம் தேநீர்

நெடுஞ்சாலைக்கு வந்தோம். எல்லாத் தேநீர்க்கடைகளிலும் நமது தோழர்களே நிறைந்து இருந்தார்கள். இந்தியாவின் தேசிய பானம் என்ற தகுதியைப் பெற இருக்கின்ற தேநீர், தமிழகத்தைப் போலவேதான் இருந்தது. வேறுபாடு ஒன்றும் இல்லை. விலையும் ஐந்து ரூபாய்தான்.

vaiko_mp_shaving_640

இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், விரிவாகப் பயணிக்கக்கூடியவர். பல ஆண்டுகளுக்கு முன்பு, வட இந்தியாவின் குக்கிராமம் ஒன்றில், ஒரு தேநீர்க்கடையில் தேநீர் பருகினார். இவருக்கு முன்பு தேநீர் பருகியவரிடம் இரண்டு ரூபாய் வாங்கிய கடைக்காரர், இவரிடம் ஒரு ரூபாய்தான் வாங்கினாராம். ஏன்? என்று கேட்டபோது, நீங்கள் சர்க்கரை வேண்டாம் என்று சொன்னீர்கள் அல்லவா? அதனால், ஒரு ரூபாய்தான் என்றாராம். ஆனால், இப்போது, நிலைமை மாறிவிட்டது. பட் சிசோலா, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள ஊர்; தொலைக்காட்சிகளின் வருகையால், ஓரளவு விழிப்பு உணர்வு பெற்ற ஊர் என்பதால், தமிழகத்தைப் போலவே தேநீருக்கு ஐந்து ரூபாய்தான் கட்டணம் வாங்கினார்கள்.

முடி வெட்டும் கடைகள் வரிசையாக இருந்தன. வட இந்திய கிராமங்களில், தாங்களாகவே முடி மழித்துக் கொள்ளும் வழக்கம் இன்னும் வளரவில்லை. நமது தோழர்களுக்கும் அந்தக் கடைகள் வசதியாகப் போயிற்று. கடைகளில் பிளேடு கேட்டால், அந்தக் காலத்து பழைய பிளேடுதான் தருகிறார்கள். ஒரு பக்க பிளேடுகளை, 'பாவ்டா' என்கிறார்கள். அது ஒரு சில கடைகளில்தான் இருந்தது.

காலைக் கடன்களை முடித்துக் கொண்ட தோழர்கள், ஒன்பது மணிக்கெல்லாம் புத்துணர்ச்சியோடு மீண்டும் சாலையில் வந்து அமர்ந்தனர். காலை உணவு, அவர்கள் அமர்ந்து இருந்த இடங்களிலேயே, தொண்டர் படையினரால் கொண்டு வந்து தரப்பட்டது. சூரியன் மேலே உயர உயர, வெயில் சுட்டு எரிக்கத் தொடங்கியது.

mdmk_mp_food_640

அருகில் இருந்த மரக்கிளைகளில், சென்னையில் இருந்து கொண்டு வந்து இருந்த கூம்பு ஒலிபெருக்கிகளைக் கட்டினார்கள். தேசிய நெடுஞ்சாலை 69 இல் கழகத்தின் வலிய சொற்பொழிவாளர்களின் உரை வீச்சுகள் தொடங்கிற்று. அழகுசுந்தரம் தொடங்கி வைத்தார்.

'நாம் நேரடியாக போபால் சென்று இருந்தால் அது செய்தி அல்ல. நேற்று இவர்கள் நம்மைத் தடுத்ததுதான் செய்தி. இல்லை என்றால், அவர்கள் வந்தார்கள்; சென்றார்கள் என்றுதான் ஆகி இருக்கும். ஆனால், இன்றைக்கு வந்தார்கள்-வென்றார்கள் என்று ஆகிவிட்டது' என்றார்.

கணேசமூர்த்தி சில நிமிடங்கள் உரை ஆற்றினார். அதற்குப் பிறகு, வைகோ அவர்கள் உரை ஆற்றினார்.

“பட் சிசோலா என்பது இந்த கிராமத்தின் பெயர் என்றாலும், பட்சி சோலை என்ற பெயரே பொருத்தமானது. ஆம்; அந்த அளவுக்கு இங்கே பறவைகள் நிறைந்து இருக்கின்றன. நமது தமிழகத்துக் கிராமங்களில், எனது இளமைப் பருவத்தில் நான் கண்ட காட்சிகளை, நெடுநாள்களுக்குப் பிறகு, இந்த ஊரில்தான் பார்த்தேன். தூக்கணாங்கருவியைப் பார்த்தேன். எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. குற்றால அருவிகளில் குளிப்பது எனக்குப் பிடித்தமானது. ஆனால், அங்கே நான் குளித்து 18 ஆண்டுகள் ஆகி விட்டன. கடைசியாக நான், 2004 ஆம் ஆண்டு, மறுமலர்ச்சி நடைபயணத்தை நெல்லையில் தொடங்கிய நாளில்தான், தாமிரவருணி ஆற்றில் குளித்தேன். அதற்குப்பிறகு, இந்த ஊரில்தான் குளித்தேன். என்னை ஆற்றில் குளிக்க வைத்த சிவராஜ் சிங் சௌஹானுக்கு நன்றி” என்றார்.

முதல் நாளைப் போல அல்லாமல், இன்று கொளுத்தியது வெயில். ஆனால், "துணிப்பந்தலைக் கட்டப் போவது இல்லை; அப்படிக் கட்டினால், அதை மத்தியப் பிரதேச அரசு ஏற்பாடு செய்து கொடுத்ததாகக் கதை பரப்பி விடுவார்கள்" என்றார் வைகோ. எனவே, அவரோடு, தொண்டர்கள் அனைவருமே கொளுத்தும் வெயிலில்தான் அமர்ந்து இருந்தனர். அது கடுமையான சோதனையாக ஆயிற்று.

mdmk_mp_women_640

சென்னையில் இருந்து புறப்பட்டபோது, சூலுருபேட்டையில் இரவு உணவாக எல்லோருக்கும் புகாரி ஓட்டல் பிரியாணி வழங்கப்பட்டது. அப்போது, தோழர்களிடம் உரையாடிய வைகோ, இப்போது பிரியாணி கிடைக்கிறது; எனவே, பயணம் இனிமையாக இருக்கும் என்று கருதி விடாதீர்கள்.

மத்தியப் பிரதேசத்தில் நமக்குத் தங்குவதற்கு இடம் கிடைக்காவிட்டால், வெட்டவெளியில்தான் தங்க வேண்டி இருக்கும் என்று எச்சரித்து இருந்தார். அதன்படியே ஆயிற்று.

'ம.தி.மு.க. தொண்டர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கிடையாது, வெயிலில் உட்கார்ந்து இருக்கின்றார்கள். அவர்களுடைய கட்டுப்பாடு பிரமிக்க வைக்கின்றது; உணவு அருந்தியபின்பு சேர்ந்த குப்பைகளை அவர்களே பைகளில் சேகரித்து அகற்றுகின்றார்கள்; சாலையின் இருபுறங்களிலும் இருந்த மலக்கழிவுகளை அகற்றினார்கள்; சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறார்கள்; அவர்களுக்கு மத்தியப் பிரதேச அரசு ஒரு வசதியும் செய்து தரவில்லை;' என, இந்தி ஏடுகளில், முதல் பக்கத்தில், முழுப்பக்க அளவில் செய்திகள் வெளியாகி இருந்தன. எத்தனை போலீசார் அங்கே குவிக்கப்பட்டு இருக்கின்றனர் என்ற கணக்கும் வெளியாகி இருந்தது. அதை உள்ளூர்வாசிகள் படித்துக் காட்டினார்கள்.

மாவட்ட ஆட்சியர் வைகோவிடம் வந்தார். கூடவே, செய்தியாளர்களும், ஊடகங்களின் ஒளிப்பதிவாளர்களும் வந்து இருந்தனர்.

இங்கே அமரலாமா? என்று கேட்டார். நீங்கள் எங்களைத் தடுத்தது போல, நாங்கள் உங்களைத் தடுக்கப் போவது இல்லை. இது பொது இடம். நீங்கள் தாராளமாக அமரலாம் என்றார் வைகோ.

'உங்களுடைய அமைதியான அறவழிப் போராட்டத்தை மக்கள் மதிக்கின்றார்கள். வேறு எதுவும் வசதிகள் செய்து தர வேண்டுமா?' என்று கேட்டார் மாவட்ட ஆட்சியர்.

"எங்களுக்கு எந்தச் சலுகையும் வேண்டாம். நாங்கள் அமைதியாக அமர்ந்து இருக்கின்றோம். உங்களுக்கும், எங்களுக்கும் இடையில் இருப்பது லட்சுமண் கோடு. இதைத் தாண்டி நீங்கள் வராதீர்கள். நாங்களும் உங்கள் இடத்துக்கு வர மாட்டோம்" என்றார் வைகோ. அவர்கள் திரும்பிச் சென்றனர்.

தொடர்ந்து மல்லை சத்யா உரை ஆற்றினார்:

"நாம் இந்தச் சாலையில் அமர்ந்து 17 மணி நேரங்கள் கடந்து விட்டன. குற்ற உணர்வோடும், அச்ச உணர்வோடும், நம்மை அணுகுவதற்கு அஞ்சி, அந்தப் பக்கம் அவர்கள் அமர்ந்து இருக்கின்றார்கள். இந்திய அரசும், ம.பி. மாநில அரசும், நிராதயுதபாணியாக வந்து இருக்கின்ற வைகோவைக் கண்டு அஞ்சுகின்றன என்றால், நமது தலைவர் வைகோ அவர்களின் வல்லமையை நாம் அறிந்து கொள்ள முடியும். இங்கே ஒரு வார காலம் பயிற்சி பெற்றால், அடுத்து நாம் நேரடியாக வன்னிக்காட்டுக்குப் போய்விடலாம். அந்த அளவுக்கு நமது தலைவர் அவர்கள், நம்மை வார்ப்பித்து விடுவார்கள். தலைவரின் விஸ்வரூபத்தைப் பார்க்கும் வயதானவர்கள் இளமை திரும்பி விட்டது போன்ற உணர்வு இங்கே இருப்பவர்களுக்கு ஏற்பட்டது.

இங்கே நமக்கு முன்னர் ஒரு ரோடு ரோலரைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றார்கள். அதை நம்மால் அகற்ற முடியாதா என்ன? ஆனால், தலைவர் வைகோ அவர்களுடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டு இருக்கின்றோம்.

நாம் இங்கே தேசிய நெடுஞ்சாலை 69 இல் அமர்ந்து இருக்கின்றோம். இந்த எண்ணுக்கு ஒரு சிறப்பு உண்டு. அது என்ன தெரியுமா?

69 என்ற எண்ணை எப்படித் திருப்பிப் போட்டாலும், அது 69 ஆகவே தெரியும். அதுபோலவே, தலைவர் வைகோ அவர்களையும், பிரபாகரன் அவர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது; எப்படிப் பார்த்தாலும், ஒன்றுபோலவே தெரியும்" என்றார். (பலத்த கைதட்டல்)

அப்போது வைகோ அவர்கள் குறுக்கிட்டுப் பேசினார்.

"நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரைகளைத் தொகுத்து, இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 'இரத்தம் கசியும் இதயத்தின் குரல்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டபோது, அதற்கு அணிந்துரை வழங்கிய பேராசிரியர் அன்பழகன் அவர்கள், ஈழத்தில் வைகோ இருந்தால், அவர்தான் பிரபாகரன்; தமிழகத்தில் பிரபாகரன் இருந்தால், அவர்தான் வைகோ' என்று எழுதி இருந்தார். அந்த வரிகள், அந்த நூலின் பின் அட்டையிலும் இடம் பெற்று உள்ளன. அன்றைக்கு பேராசிரியரின் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து பேசிய பேச்சு அது. அதுமட்டும் அல்ல, அண்ணாவோடு கூட ஒப்பிட்டு என்னைப் பற்றிப் பேசினார்.

இங்கே நாம் ஆயிரம் பேர் கொதிக்கும் வெயிலில் சாலையில் அமர்ந்து இருக்கின்றோம். இந்தியாவுக்கு உள்ளேயே நடமாட நமக்கு அனுமதி இல்லை. ஆனால், கொலைகாரன் ராஜபக்சேவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று விருந்து நடக்கின்றது. அது குடியரசுத் தலைவர் மாளிகை அல்ல; கொலையாளிகளின் இருப்பிடமாக ஆகிவிட்டது. அந்தக் கொலைகாரனை அழைத்து வந்து நீ வைத்துக் கொள். எங்களுக்காக நாங்கள் ஒரு குடியரசுத்தலைவர் மாளிகையை உருவாக்குவோம். தில்லியில் இருக்கின்ற தமிழ்நாடு அரசு இல்லம், தமிழ்நாட்டின் தூதரகமாக மாறும் நாள் வரும்' என்று குறிப்பிட்டார்.

காவலர்களின் கருத்து

முதல் நாள் இரவு கடுமை காட்டிய மத்தியப் பிரதேச காவலர்கள், மறுநாள் நண்பர்களாக ஆகி விட்டார்கள். காக்கிச் சீருடையில் பார்க்கும்போதுதான் அச்சமாக இருக்கிறதே ஒழிய, நெருங்கிப் பழகினால்தான் அவர்களது மனிதநேயத்தை உணர முடிகின்றது.

அமெரிக்கத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டு இருக்கின்ற, 'Genocide of Tamils in Sri Lanka' என்ற படங்கள் நிறைந்த புத்தகத்தை, காவல்துறை உயர் அதிகாரிகளிடம் காண்பித்தேன். ஒவ்வொருவராக முழுமையும் புரட்டிப் பார்த்தார்கள். 'ராஜபக்சேவை இங்கே அழைத்து இருக்கக்கூடாது' என்றே அவர்களும் கருத்துத் தெரிவித்தார்கள்.

பகல் முழுவதும் உரைகள் தொடர்ந்தன. மாலையில், கிராமத்து மக்களின் எண்ணிக்கை பெருகியது. சுற்று வட்டாரங்களில் இருந்தெல்லாம் மக்கள், எங்களைப் பார்க்கத் திரண்டு வந்து விட்டார்கள். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் வந்து உள்ளனர்.

vaiko_mp_women_640

ஆனால், இது அவர்களது அரசுக்கு எதிரான போராட்டம் என்பதால், முன்வரிசைக்கு வந்து வைகோ அவர்களைப் பார்க்கவில்லை. ஒரு கிலோ மீட்டர் தள்ளி நின்று கொண்டு, கடைசி வரிசையில் அமர்ந்து இருந்த நம்முடைய தோழர்களோடு உரையாடி உள்ளனர். அவர்களுடைய கருத்துகளும், நமது போராட்டத்துக்கு ஆதரவாகவே இருந்தது என்று, தோழர்கள் என்னிடம் தெரிவித்தனர். அது மட்டும் அல்ல, மராட்டிய மாநிலத்தின் சான்சர் நகரத்தில் இருந்தும் பல அரசியல்வாதிகள் வந்து பார்த்தனராம்.

கிராமத்து மக்களின் அன்பு

நமது தோழர்களுக்கு, பட் சிசோலா ஊரும் பிடித்துப் போய்விட்டது; மக்களும் நண்பர்களாகி விட்டனர். கிராமத்து மக்களுடைய அழைப்பை ஏற்று, நமது தோழர்களும் அவர்களது வீடுகளுக்கு விருந்தினராகச் சென்று வரத் தொடங்கி விட்டார்கள்.

உணவு சமைப்பதற்கான எல்லாப் பொருள்களையும் இங்கிருந்து எடுத்துக் கொண்டு போயிருந்தாலும், எரிவாயு உருளைகளை எடுத்துக் கொண்டு போக முடியாது அல்லவா? அதற்கும் பட் சிசோலா கிராமத்து மக்கள் உதவினார்கள். முதல் நாள் ஒரு உருளை கிடைத்தது. மறுநாள், மேலும் தேவைப்பட்டபோது, நாக்பூர் அஜய் பாட்டீல் அவர்கள் ஏற்பாடு செய்தார்கள். கூடவே, தண்ணீர்க் குடுவைகளும் வேனில் வந்து சேர்ந்தன. சமையல் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது, அருகில் உள்ள வீட்டுக்காரர்கள், மிக்சி, கிரைண்டருக்கு மின்சாரம் கொடுத்து உதவினார்கள். சற்றும் முகம் சுழிக்கவே இல்லை. புறப்படும்போது, மின்சாரத்துக்காகப் பணம் கொடுக்க முனைந்தபோது, வாங்க மறுத்து விட்டார்கள்.

கொதிக்கும் வெயிலில் வைகோ அவர்களும், தோழர்களும், நாள் முழுவதும் நடுச்சாலையிலேயே அமர்ந்து இருந்தார்கள். மாலையில், தலைநகர் போபாலில் செய்தியாளர்களைச் சந்தித்த, மத்தியப் பிரதேச மாநில முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், 'வைகோ, ராஜபக்சே இருவருமே, மத்தியப் பிரதேச மாநிலத்து விருந்தாளிகள்தாம்; அறப்போரைக் கைவிடுங்கள்' என்று வைகோவைக் கேட்டுக்கொண்டதாகச் செய்தியாளர்கள் தெரிவித்தார்கள்.

அதைக் கேட்டுக் கொதித்துப் போன வைகோ,

“கொலைகாரனோடு எங்களை ஒப்பிட வேண்டாம்; காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டு கட்சிகளுமே, தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை; ஈழத்தமிழர் படுகொலைக்கு உடந்தையாக, உதவிகள் அனைத்தும் புரிந்த காங்கிரஸ் கட்சி, ஒரு கூட்டுக் குற்றவாளி என்றால், அந்தக் கொலைகாரனுக்கு வரவேற்பு அளித்துப் பெருமைப்படுத்த முனையும் பாரதிய ஜனதா கட்சியும் குற்றவாளியே; கொலைகாரன் ராஜபக்சே வருகையால், சாஞ்சி ஸ்தூபி களங்கப்பட்டு விட்டது” என்று குறிப்பிட்டார்கள்.

வட இந்திய ஊடகங்களின் செய்தியாளர்கள், வரிசையாக சூழ்ந்து நின்று, நிகழ்வுகளைப் பதிவு செய்தார்கள். வைகோவிடம் பேட்டி காண விழைந்தபோது, தனித்தனியாகப் பேட்டி தர இயலாது; நாளை காலை 11 மணிக்கு வாருங்கள். சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிடப் போகிறேன் என்று தெரிவித்தார்கள். இரண்டாம் நாள் கழிந்தது.

2004 ஆம் ஆண்டு, வைகோ மேற்கொண்ட மறுமலர்ச்சிப் பயணத்தின்போது, சென்னை நகருக்கு உள்ளே நுழைவதற்கு காவல்துறை விதித்து இருந்த தடையை மீறி, நள்ளிரவில் புறப்பட்டுச் சென்றார்; எனவே, கவனமாக இருங்கள் என்று மத்திய அரசின் உளவுத்துறை, மத்தியப் பிரதேச மாநிலக் காவல் துறைக்குத் தகவல் கொடுத்து இருந்ததாம். எனவே, நள்ளிரவிலும் காவலர்கள் மிகுந்த விழிப்போடு இருந்தனர்.

காலையில் வைகோ அவர்கள், குளிப்பதற்காகக் காட்டுக்கு உள்ளே சென்றபோதும், பத்துப் பதினைந்து காவலர்கள் உடன் அணிவகுத்தனர். தொண்டர் படையினர் அவர்களைத் தடுத்தபோது, இங்கே சில அமைப்புகள், உங்களுடைய இந்த அறப்போராட்டத்தை எதிர்த்து அறிக்கை விட்டு உள்ளனர். நீங்கள் இங்கே வந்தால், தடுத்து நிறுத்தப் போவதாகக் கூறி உள்ளனர். எனவே, அவர்களால் வைகோ அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் உடன் வருகின்றோம் என்று கூறி உள்ளனர்.

அறப்போர்க்களம் 21.09.2012

இன்று எல்லோரும் விரைந்து ஆயத்தமாகி விட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தபடி, 8.30 மணிக்கு உள்ளாக, எல்லோருமே ஆயத்தமாகி, சாலையில் வந்து அமர்ந்து விட்டனர். இன்றுதான் கொலைகாரன் ராஜபக்சே, சாஞ்சிக்கு வருகிறான்.

vaiko_mp_agitation_640

காலையில் நாங்கள் குளிக்கச் சென்றபோது, ஒரு செடியில் பூத்து இருந்த மலர், அழகாகத் தெரிந்தது. அதை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தேன். “அண்ணா, அதுதான் செங்காந்தள் மலர்; எங்கள் ஊரில் நிறையப் பூக்கும்” என்றார் திருப்பூர் சந்திரமூர்த்தி. இதைத்தான், தமிழ் ஈழத்தின் தேசிய மலராக பிரபாகரன் அறிவித்து இருக்கின்றார். காலைச்சூரியனின் ஒளியில் அவ்வளவு அழகாக இருந்தது. இந்த மலரை, வைகோ அவர்களிடம் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்து, இரண்டு மூன்று மலர்களைப் பறித்துக் கொண்டு வந்தோம்.

காலை 11.00 மணிக்கு, நமது படை, வரிசைக்கு மூவர் என, சீராக அணிவகுத்தது. எல்லோரது கைகளிலும், ராஜபக்சே படம் அச்சிடப்பட்ட தாளும், தீப்பெட்டிகளும் கொடுக்கப்பட்டன. இன்றைக்கு மேலும் கூடுதலாக, நூற்றுக்கணக்கான புதிய காவலர் படையும் வந்து குவிந்து இருந்தது.

நேற்று வரையிலும் நமக்கு எதிரில் நின்று கொண்டு இருந்தவர்கள், இன்றைக்கு நமது தோழர்கள் அமர்ந்து இருந்த ஒட்டுமொத்தத் தொலைவுக்கும், இருபுறங்களிலும் வரிசையாக அணிவகுத்து நின்றனர். எல்லோரது கைகளிலும் நீண்ட தடிகள். தற்காப்புக் கவசங்கள். புதிதாக, தீயணைப்பு வண்டியும், வஜ்ரா என்ற கண்ணீர்ப்புகை குண்டு வீசும் வண்டியும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருந்தது. காவல்துறை உயர் அதிகாரிகள், முன்னும்பின்னுமாக நடந்து பார்த்தனர். மோப்ப நாய்களும், அணிவகுப்பின் கடைசிவரையிலும் சென்று வந்தது. ஏதோ ஒரு தாக்குதலுக்கு அவர்கள் ஆயத்தமாவது போலத் தெரிந்தது. வட இந்திய ஊடகங்கள் வந்து குவிந்து இருந்தனர்.

வைகோவின் அறிவிப்புகள்

நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியும், மல்லை சத்யாவும், பட் சிசோலாவில் பூத்துக் குலுங்கிய செங்காந்தள் மலரை வைகோ அவர்களிடம் அளித்தனர். சரியாக, காலை 11.00 மணிக்கு, வைகோ அவர்கள் தமது உரையைத் தொடங்கினார்கள்.

“2008 ஆம் ஆண்டு, இலண்டன் மாநகரில், 40000 ஈழத்தமிழர்கள் இடையே, நான் மாவீரர் நாள் உரை ஆற்றத் தொடங்கியபோதும், இதே செங்காந்தள் மலரை, கார்த்திகைப் பூவை என் கையில் கொடுத்தார்கள். அதே பூ, இந்த மத்தியப் பிரதேசத்திலும் பூக்கிறது; இந்த வேளையில் என்னிடம் கொண்டு வந்து தரப்படுவதை எண்ணி நான் மகிழ்கிறேன்.

vaiko_sathya_ganesalingam_640

ஈழத்தமிழர் படுகொலை நிகழ்வுகள், வட இந்திய மக்களைச் சென்று அடையவில்லை; எனவே, நாம் ஏற்கனவே தயாரித்து வெளியிட்ட, 'ஈழத்தில் இனக்கொலை; இதயத்தில் இரத்தம்' என்ற குறுவட்டினை, பெங்காலி, பஞ்சாபி, மராட்டி, இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் மொழிபெயர்த்து, அந்தந்த மாநிலத் தலைநகரங்களில் வெளியிடுவோம்;

இனி ராஜபக்சேயை இந்தியாவுக்கு உள்ளே எங்கே அழைத்து வந்தாலும், இந்தியப் பிரதமரின் வீட்டைத்தான் முற்றுகை இடுவோம்; இலட்சக்கணக்கில் அணிதிரள்வோம்.

இந்திய அரசு, பிஜேபி அரசு, தமிழர்களின் உணர்வுகளை, மாநில மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை என்றால், இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும்போது, இந்திய வரைபடம் எல்லைக்கோடுகள் மாறிவிடும்; தமிழகம், வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் பகுதிகளாக இருக்காது' என எச்சரித்தார்.

அனைத்து இந்திய ஊடகங்களின் செய்தியாளர்களுக்குப் புரிகின்ற வகையில், தமிழில் பேசிய கருத்துகளை, ஆங்கிலத்திலும் எடுத்து உரைத்தார். சமய நல்லிணக்கத்துக்காக இராஜபக்சேவை அழைத்து வந்தோம் என்கிறீர்களே, இலங்கையில் 2076 இந்துக் கோவில்களை உடைத்து விட்டார்களே? இதை நாங்கள் சொல்லவில்லை. இலங்கை நாடாளுமன்றத்தில் அவர்களே கொடுத்த தகவல் இது. அப்படிப்பட்டவனை அழைத்துக் கொண்டு வந்து, சமய நல்லிணக்கம் என்கிறீர்களே, புத்தர் உங்களை மன்னிக்க மாட்டார் என்றார்.

இடையில் ஒரு செய்தி: நாக்பூரில் எங்கள் பேருந்துகள் நின்று கொண்டு இருந்தபோது, அதில் ஒட்டப்பட்டு இருந்த இந்துக் கோவில்கள் உடைத்து நொறுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த ஒரு இளைஞன், காளி மாதா சிலையை உடைத்தது யார்? என்று கேட்டுக்கொண்டு ஆவேசமாக வந்தார். அவருக்கு விளக்கம் அளித்துச் சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று. இல்லை என்றால், அவர் நாம்தான் உடைத்தோம் என்று தவறாகக் கருதி, நமது பேருந்துகளில் கல் எறிவதற்கும் வாய்ப்புகள் உண்டு. நல்லவேளையாக, அவர்கள் புரிந்து கொண்டார்கள். தந்தை பெரியார் வழியில் வந்த பகுத்தறிவாளர்கள் நாம் என்றாலும், வட இந்தியாவில், கோவில்களை உடைத்ததைத்தான் எடுத்துச் சொல்ல வேண்டி இருக்கின்றது. அதைக் கேட்டுத்தான் அவர்கள் உணர்ச்சிவயப்படுகின்றார்கள். அதைத்தான் வைகோ அவர்கள் தமது பிரச்சாரத்திலும் குறிப்பிட்டுப் பேசினார்கள்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக சமயங்களின் மகாநாட்டில் உரை ஆற்றிய விவேகானந்தர், இந்தியா திரும்பும் வழியில், இலங்கையின் கதிர்காமம் சென்று, வடக்கு நோக்கி யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது, வழியில், அநுராதபுரத்தில், சிங்களவர்கள் அவரைக் கல்லால் அடித்து விரட்டியதையும் குறிப்பிட்டு, இத்தகைய சிங்கள பௌத்த மதவெறிக் கும்பலைத்தான், இந்துத்துவ பாரதிய ஜனதா கட்சி வரவேற்றுச் சிறப்பிக்கிறது என்றார்.

வைகோவின் உரையைப் பதிவு செய்து கொண்டு இருந்த என்னிடம், காவல்துறை உயர் அதிகாரிகள் இருவர் வந்து, உங்கள் தொண்டர்கள் ஏதோ பொம்மைகளை வைத்து இருக்கின்றார்களே? என்று கேட்டனர். அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பது எனக்குப் புரிந்தது என்றாலும், 'நீங்கள் சொல்லுவது எனக்குப் புரியவில்லையே' என்றேன். அவர்கள் திரும்பிச் சென்றார்கள். பின்னால் சென்று, உருவ பொம்மையை தொண்டர்களிடம் பறித்தால், பிரச்சினை வெடித்து விடுமே? என்ற கவலையோடு நின்றுகொண்டு இருந்தேன். இதற்குள், வைகோ அவர்கள் உரை நிறைவுக் கட்டத்தை எட்டியது.

'கொலைகாரன் ராஜபக்சே உருவப்படத்தைக் கையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்' என்றார். அனைவரும் கைகளில் எடுத்து வைத்துக்கொண்டனர். எல்லோரும் அமர்ந்து இருந்த ஜமுக்காளங்களை எடுத்துச் சுருட்டி வையுங்கள் என்றார். சுருட்டி அகற்றினர். 'கொலைகாரன் படத்தைக் கொளுத்துங்கள்' என்றார். எல்லோரும் கொளுத்தினர். தரையில் போட்டு அடித்தனர். உருவ பொம்மையைக் கொண்டு வந்து, தடியால் அடித்துத் தீ வைத்துக் கொளுத்தினர்.

கைது

“நாம் இப்போது, சாஞ்சியை நோக்கி அணிவகுத்துச் செல்வோம்; முதலாவது குழுவுக்கு, நமது நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்கள் தலைமை ஏற்றுச் செல்வார். நான் கடைசியாக வருவேன்" என்று அறிவித்தார் வைகோ. உடனே அந்த இடத்தில் பரபரப்புத் தொற்றிக்கொண்டது. காவலர் பெரும்படை நெருங்கி வந்தது.

கணேசமூர்த்தி தலைமையில் ஒரு குழு முன்னோக்கிப் புறப்பட்டது. சற்றுத் தொலைவில் அவர்களைத் தடுத்து நிறுத்திய காவலர்கள், 'நீங்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளீர்கள்' என்று தமிழில் ஒலிபெருக்கியில் அறிவித்தனர்.

vaiko_mp_arrest_640

“காவல்துறையினரோடு மோதல் வேண்டாம்; அறவழியில் கைதாகிச் செல்லுங்கள்” என்று வைகோ அவர்கள் அறிவித்தார்கள். அதன்படி, தோழர்கள் வரிசையாக அணிவகுத்து வந்து கைதாகினர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும், 40க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஏற்றினர்.

சுமார் 30 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள சான்சர் என்ற நகரத்துக்கு கொண்டு செல்வதாகக் கூறினர்.

நானும் ஒரு பேருந்தில் ஏறினேன். எனக்கு அருகில், மருத்துவர் சுப்புராஜ், ரோவர் வரதராஜன், சுதா பாலசுப்பிரமணியம் ஆகியோர் வந்து அமர்ந்தனர். கடைசி வரிசையில் நாங்கள் அமர்ந்து இருந்தோம். புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அந்தப் பேருந்தில் ஷாக் அப்சார்பர் பட்டைகளே இல்லை என்பதைப் புரிந்து கொண்டோம். பேருந்துகள் எல்லாம் பழையவை. ஓரளவு தரமாக இருந்த அந்தச் சாலையிலேயே தூக்கித்தூக்கிப் போட்டது. முதுகு எலும்பே கழன்று விடுவது போல இருந்தது. போபால் சாலையில் சில கிலோமீட்டர்கள் சென்றபின்பு, வலது புறமாகத் திரும்பிய பேருந்துகள், சாத்பூரா மலைத் தொடர் வழியாகப் பயணித்தன. சாலையின் இருமருங்கிலும், பச்சைப்பசேல் என்ற காட்சி. பெரும்பாலும் தேக்குமரங்கள். குன்றுகளின் வளைவு நெளிவுகளில் பேருந்து பயணித்தபோது, இனிமையான காட்சியைக் கண்டு மகிழ்ந்து கொண்டே சென்றோம். சுமார் ஒரு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு, சான்சர் என்ற நகரத்தில், கஜானன் திருமண மண்டபத்துக்கு உள்ளே கொண்டு போய் இறக்கினார்கள். கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களைப் பதிவு செய்கின்ற பணி நடைபெற்றது. எல்லோரும் பெயர்களைப் பதிவு செய்தார்கள்.

சான்சர் நகரில்..

மாவட்ட நிர்வாகத்தினர், தேநீர் கொடுத்தார்கள். எங்களுக்கு மதிய உணவும் ஏற்பாடு செய்து இருந்தார்கள். ஆனால், நமது தோழர்களும் உணவு சமைத்து எடுத்து வந்து இருந்தனர். மத்தியப் பிரதேச காவலர்கள், நமது உணவை விரும்பி, போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் வந்து வாங்கிச் சாப்பிட்டனர்.

mdmk_mp_police_641

பிற்பகலில், இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பொழிந்தது. சான்சர் நகரின் பெரிய மனிதர்கள் பலரும், தங்கள் குடும்பத்தினருடன் மண்டபத்துக்கு வந்து, வைகோ அவர்களைச் சந்தித்து, வாழ்த்துகளைத் தெரிவித்து, மாலைகள் அணிவித்துக்கொண்டே இருந்தனர். படங்கள் எடுத்தனர். கைதான தோழர்கள் இடையே, கழக முன்னணியினர் உரை ஆற்றினர்.

இந்திய தண்டனைச் சட்டம் 151-107-116(3) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் நம்மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பபட்டு, அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளோம் என்ற தகவலை, மாநில இளைஞர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் அழகுசுந்தரம் அறிவித்தார்.

கடைசியாக, வைகோ அவர்கள் நன்றி உரை ஆற்றினார்கள். இந்த அறப்போரின் வெற்றிக்கு உழைத்திட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ஒரு போராட்டத்துக்குச் செல்லுகின்றபோது, பழைய பேருந்துகளைத் தருவதற்கே யாரும் முன்வராத நிலையில், புத்தம் புதிய, விலை அதிகம் உள்ள சொகுசுப் பேருந்துகளை வழங்கிய பர்வீன் டிராவல்ஸ், பயண ஏற்பாடுகளில் பேருதவி புரிந்து, பயணத்திலும் பங்கு ஏற்று, வழிநெடுகிலும் பேருந்துகளை வழிநடத்தி வந்த, புகாரி உணவக உரிமையாளர் முராத், பயணத்தில் கட்டுப்பாடு காத்த தொண்டர்கள், சிந்த்வாரா மாவட்ட நிர்வாகம், காவல்துறை, செய்திகளை உடனுக்குடன் உலகுக்கு அறிவித்த மின்னல் முகமது அலி உள்ளிட்ட பலருக்கும் நன்றி தெரிவித்தார்.

vaiko_mp_arrest_641

சிந்த்வாரா ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகள் அனைவரும், வைகோ அவர்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்தினர். ஈழத்தமிழர் படுகொலையை, வட இந்திய மக்கள் இடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற நமது நோக்கம் நிறைவேறியது! வைகோவின் சாஞ்சி அறப்போர் வாகை சூடியது.

இரவு ஏழு மணி அளவில், சான்சர் நகரில் இருந்து நாங்கள் புறப்படுகையில், பலத்த மழை கொட்டிக் கொண்டே இருந்தது. மத்தியப் பிரதேச மாநில காவல்துறையின் வாகனம் ஒன்று, அந்த மாநில எல்லைவரையிலும் எங்களுக்கு முன்பாக வழிகாட்டியாக வந்து, விடைபெற்றுச் சென்றது. அங்கே எங்களுக்காகக் காத்து இருந்த மராட்டிய மாநில காவல்துறை வண்டி, அங்கிருந்து எங்களுக்கு வழிகாட்டிக் கொண்டே வந்தது. இரவு 9.00 மணிக்கு, மீண்டும் நாக்பூர் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். இரண்டு நாள்கள் சாலையில் படுத்துக் கிடந்த எங்களுக்கு, இன்று கட்டில் மெத்தையில் நல்ல ஓய்வு. 9.30 மணிக்கெல்லாம் படுத்து உறங்கி விட்டேன்.

நாக்பூரில் இருந்து சென்னைக்கு... 22.9.2012

இன்று அதிகாலை 4.00 மணிக்கெல்லாம் விழித்துக் கொண்டேன். நண்பர்கள் இராசேந்திரன், கல்லத்தியானும் விழித்துக்கொண்டார்கள். விளக்கைப் போடாமல், இருட்டுக்கு உள்ளேயே ஊர்க்கதைகளை எல்லாம் பேசிக்கொண்டே இருந்தோம். ஐந்து மணி ஆனவுடன், வெளியே சென்று ஒரு தேநீர் பருகி வரலாம் என்று கருதிப் புறப்பட்டோம்.

புதுதில்லியைப் போல, தெருக்கள் அனைத்தும் திட்டமிட்டுக் கட்டுப்பட்டு உள்ள அந்தப் பகுதியில், நான் பார்த்தவரையில் தேநீர்க்கடைகள் எதுவும் கண்ணில்படவில்லை. அந்தத் தயக்கத்துடனேயே வெளியே வந்தபோது, சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி வளாகத்தின் நுழைவாயிலிலேயே ஒரு சிறிய தேநீர்க்கடை இருந்தது. அங்கே நமது தோழர்கள் சிலர் தேநீர் பருகிக் கொண்டு இருந்தனர். தேநீர் அருந்திவிட்டு, அப்படியே சற்று உலாவி வரலாம் எனக் கருதி நடந்தோம். மொத்தமாக ஐந்து கிலோமீட்டர்கள் தொலைவு நடந்துவிட்டு அறைக்குத் திரும்பி வந்தபோது மணி 6.40 நேரம் மிகவும் மெதுவாக நகர்வதுபோலத் தோன்றியது.

மீண்டும் ஒரு தேநீர் பருகி விட்டு நான்காவது மாடிக்கு வந்தால், அங்கே ஒவ்வொரு அறைக்கும் தேநீர் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

“சென்னையில் இருந்து புறப்பட்டு, நாம் சென்று வந்த வழிநெடுகிலும், என்னுடைய பார்வையில், எங்கேயும் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாகக் காட்சி அளிக்கவில்லை” என்றார் இராசேந்திரன். இது, தமிழகத்துக்கே தேவையான செய்தி.

vaiko_mp_police_640

8.30 மணிக்கெல்லாம் ஆயத்தமாகிக் கீழே இறங்கி வந்தோம். தோழர்கள் ஒருவரோடொருவர் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டும், படங்கள் எடுத்துக் கொண்டும் இருந்தார்கள். காலை உணவு அருமை. இட்லி, உப்புமா, ஆம்லெட், தேநீர் என அமர்க்களமாக இருந்தது. இவர்களுடைய சாம்பார் சற்றே தண்ணீர் கலந்ததாக இருந்தாலும், அதில் போட்டு இருந்த தடியங்காய் நல்ல சுவையாக இருந்தது. சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தேன். நாக்பூர் பதிப்பு இந்தி, ஆங்கில நாளிதழ்களில், எங்களது பயணம் குறித்து வெளிவந்து இருந்த செய்திகளைச் சில தோழர்கள் கொண்டு வந்து காண்பித்து மகிழ்ந்தார்கள்.

இந்த வேளையில், மராட்டிய மாநில அமைச்சர் அனில் தேஷ்முக், வைகோவைச் சந்திப்பதற்காக வந்து இறங்கினார். ஆரவாரத்தோடு அவரை வரவேற்றனர் தோழர்கள். வட இந்திய வழக்கப்படி, தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள் அனைவரும், அவரது காலைத் தொட்டு ஆசிகள் பெற்றனர். வைகோ அவர்களும், அனில் தேஷ்முக் அவர்களும் சந்தித்துப் பேசி மகிழ்ந்தனர். சுமார் அரை மணி நேரம் அந்தச் சந்திப்பு நீடித்தது. வைகோ அவர்கள், அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

சரியாக பத்து மணிக்கு எங்கள் பயணம் தொடங்கியது. மராட்டிய மாநில காவல்துறை வண்டி, வழிகாட்டிக் கொண்டே சென்றது. இருபது பேருந்துகளும் அணிவகுத்தன. நாக்பூருக்கு வெளியே கொண்டு வந்து விட்டுவிட்டு விடைபெற்றுக் கொண்டனர். இந்தமுறை, ஹைதராபாத் செல்லாமல், நாக்பூரில் இருந்து நேரடியாக விஜயவாடா வழியாக சென்னை திரும்புவது எனத் திட்டம். அதாவது, சென்னையில் இருந்து தொடர்வண்டிகள் தில்லி செல்லும் பாதை இது. வழியில், ஜாம், சந்திரபூர், ராமகுண்டம் அனல் மின் நிலையம், பல்லார்பூர், வாரங்கல், ஹனம் கொண்டா, கரீம் நகர் வழியாக, விஜயவாடாவுக்கு 710 கிலோ மீட்டர்கள். நாக்பூரில் இருந்து ஹைதராபாத் வழியாக, விஜயவாடா வருகின்ற வழி, 790 கிலோமீட்டர்கள். நூறு கிலோமீட்டர்கள் குறைவு என்பதால், முதலில் குறிப்பிட்ட வழியாகச் செல்வது என்று முடிவானது.

அந்த வேளையில், ஒரு மாநிலத்துக்கு உள்ளே பயணிக்கையில், எந்த வழியாகச் சென்று திரும்புவதற்கு நீங்கள் உரிமம் பெற்று இருக்கின்றீர்களோ, அதே வழியில்தான் திரும்பி வர வேண்டும் என்று ஓட்டுநர்கள் சொன்னார்கள். வைகோ அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினரான ஆந்திர நண்பர் ஒருவருடன் பேசியபோது, போக்குவரத்து அமைச்சகத்தின் மூலமாக, சோதனைச் சாவடிக்கு நான் தகவல் கொடுக்கச் சொல்லுகிறேன். நீங்கள் விஜயவாடா வழியாகவே செல்லலாம் என்றார். அந்த வழியிலேயே பயணம் தொடர்ந்தது. இந்தச் சாலையை ஒட்டிய பகுதிகள், நக்சல்பாரிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதி ஆகும். சாலைகள் குண்டும்,குழியுமாக இருந்தன; பலத்த மழையும் பொழிந்ததால், நினைத்ததுபோல விரைந்து செல்ல முடியவில்லை. இதற்குப் பதிலாக, கூடுதல் தொலைவாக இருந்தாலும், ஹைதராபாத் நகரை ஒட்டிய வழியிலேயே சென்று இருக்கலாம் என்று ஓட்டுநர்கள் சொன்னார்கள்.

வழியில் அனைத்து ஊர்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், கட்சிக் கொடிகளுடன் திரண்டு நின்று வரவேற்றனர். செவ்வந்தி மாலைகளை அணிவித்தனர். 'வைகோ சாப் ஆகே படோ; ஹம் தும்ஹாரே சாத் ஹைம்' என முழக்கங்களை எழுப்பினர். அதாவது, “வைகோ அவர்களே முன்னேறிச் செல்லுங்கள்; நாங்கள் உங்களோடு இருக்கின்றோம்” என்பது இதன் பொருள்.

ஒவ்வொரு இடத்திலும், அவர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய வைகோ அவர்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். “இந்தியப் பிரதமர் ஆகின்ற தகுதி வாய்ந்த தலைவர் சரத் பவார்; அவருக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு” எனக் குறிப்பிட்டபோதெல்லாம், அக்கட்சியின் தொண்டர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

பல்லார்பூரில் அம்பேத்கர் சிலைக்கும், சத்ரபதி வீர சிவாஜி சிலைக்கும் மாலை அணிவிக்க அழைத்துச் சென்றனர். வைகோ அவர்கள், செவ்வந்தி மாலைகளை அணிவித்தார்.

பிற்பகல் 2.30 மணி அளவில், சாலை அகன்று விரிந்து இருந்த ஓரிடத்தில் பேருந்துகளை நிறுத்தினோம், மதிய உணவுக்காக. அந்த இடத்தில் இரண்டு புறங்களிலும், அடர்த்தியான காடு. ஐந்து அடிக்கு அப்பால் என்ன இருக்கின்றது என்பதே தெரியவில்லை. திடீரென இதற்கு உள்ளே இருந்து யானைக்கூட்டம் கிளம்பி வந்தால் என்ன செய்ய முடியும் என ஒருவர் பீதியைக் கிளப்பினார். மதிய உணவுக்காக தொண்டர்கள், சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு அணிவகுத்தனர். வைகோ அவர்கள், அந்த வரிசையை ஒழுங்குபடுத்திக்கொண்டே சென்று, கடைசியாகத் தாம் நின்றுகொண்டார். எல்லோரும் உணவு அருந்தியபின்பு, வைகோ அவர்களுடன் படங்கள் எடுத்துக் கொண்டனர். ஒவ்வொரு பேருந்து ஓட்டுநருக்கும், வைகோ படம் போட்ட பேனாவும், பனியனும் வழங்கப்பட்டது. இந்த இடத்தில் இருந்து புறப்படும்போது, மணி நான்கு ஆகி விட்டது.

6.01 மணிக்கு ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்கு வருகை தந்து உள்ள தங்களை, பிஎஸ்என்எல் வரவேற்கிறது என்ற குறுஞ்செய்தி, எனது அலைபேசியில் பதிவானது. ஆந்திர மாநிலத்துக்கு உள்ளே நுழைந்து விட்டோம்.

நள்ளிரவு ஒரு மணி அளவில், ஹனம்கொண்டா நகருக்கு உள்ளே சிக்கிக்கொண்டோம். அங்கிருந்து விஜயவாடாவுக்குப் போகின்ற வழி தெரியாமல் திணறினோம். பேருந்துகள் திசை மாறிச் சென்றன. எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, வழியைக் கண்டுபிடித்து, அங்கிருந்து வெளியே வருவதற்குள் ஒன்றரை மணி நேரம் கடந்து விட்டது.

விஜயவாடாவுக்கு உள்ளே நுழைகையில், பொழுது புலர்ந்து விட்டது. கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தடுப்பு அணையில், கடல் போல நீர் பெருகி இருந்தது. அதற்கு அருகில் எங்காவது ஓரிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு குளிக்கலாம் என்று பார்த்தால், சரியான இடம் அமையவில்லை. அப்படியே மங்களகிரிக்கு வந்து விட்டோம். அங்கேதான், இரவு உணவு ஏற்பாடு செய்து இருந்தார்கள். பேருந்துகளை விட்டு இறங்கி, அருகே உள்ள வாய்க்காலில் குளிப்பதற்காகச் சென்றோம்.

முகப்படக் கலைஞர் இராஜா உடனே தன் வழக்கப்படி, ஒரு ஆட்டோவைப் பிடித்து, சற்றுத் தொலைவில் உள்ள மற்றொரு இடத்துக்கு அழைத்துச் சென்றார். குளிப்பதற்கு ஏற்ற இடமாக இருந்தது. நல்ல குளியல். மங்களகிரிக்குத் திரும்பி வந்து, அரங்கத்தில் உணவு அருந்தினோம்.

பத்தேகால் மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டோம். தொடர்ந்தது பயணம்.

விஜயவாடா சென்னை வழியில் தடங்கல் எதுவும் இன்றி வண்டிகள் பறந்து வந்தன. இந்தப் பயணத்தில், மத்தியப் பிரதேசத்துக்குச் செல்லும்போது, ஒரு பேருந்து பிரேக்-டவுண் ஆனது; திரும்பி வரும்போது, ஒரு பேருந்தில் டயர் பஞ்சர் ஆனது. இருபது பேருந்துகளுக்கும் சேர்த்து, 7 மாற்று ஓட்டுநர்கள் மட்டுமே வந்தனர். எனவே, ஒருசில இடங்களில் ஓட்டுநர்கள் பேருந்தை நிறுத்தி சற்று ஓய்வு எடுக்க வேண்டியதாயிற்று. இதைத்தவிர வேறு பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை. குறிப்பாக, யாருக்கும் உடல்நலத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. சிறுசிறு பிரச்சினைகளை, மருத்துவர்கள் சுப்புராஜ், ரகுநாதன் மருத்துவம் செய்து தீர்த்து வைத்தனர்.

மாலை 4.00 மணிக்கு, மாதரபாக்கம் என்ற தமிழகக் கிராமத்துக்கு அருகில், ஒரு மாந்தோப்புக்கு அருகில் வண்டிகள் நிறுத்தப்பட்டன. சென்னை புகாரி ஓட்டலில் இருந்து மட்டன் பிரியாணி, லட்டு வந்தது. எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டு முடித்தனர். 19 பேருந்துகளையும் முன்னால் போகும்படி கூறிவிட்டு, வைகோ அவர்கள் வந்த ஒன்றாம் எண் பேருந்து, கடைசியாக சென்னை மாநகருக்கு உள்ளே நுழைந்தது.

அண்ணா நினைவு இடத்தை நெருங்கியபோது, அங்கே திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான தோழர்கள், வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர். வரவேற்பு வைபவம் சிறப்பாக அமைந்தது. வைகோ அவர்கள் நன்றி உரை ஆற்றினார்கள்.

இந்தப் பயணம் குறித்து, பயணத்தில் வந்த தோழர்களிடையே பேசியபோது, பயணத்தின்போது, ஸ்பார்ட்டாவின் 300 வீரர்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தைப் பார்த்தேன்; வைகோவின் சாஞ்சி அணிவகுப்பில் இடம் பெற்ற 1000 பேர்களும், அத்தகைய மன உறுதி மிக்கவர்களே;

தமிழனின் போராட்டக் குணத்தைப் பாருக்குப் பறைசாற்றிய இந்தப் படையில் இடம் பெறவில்லையே என, வர இயலாத தோழர்கள் வருந்துகின்றனர், அழுகின்றனர் என்றனர் தோழர்கள். தமிழகத்தின் அரசியல் செய்தி ஏடுகள் அனைத்துமே, வைகோவின் சாஞ்சி அறப்போரை, வெகுவாகப் புகழ்ந்து கட்டுரைகள் எழுதி உள்ளன. தமிழனின் வீரத்தை வடபுலத்தில் நிலைநாட்டிய வைகோதான், 21 ஆம் நூற்றாண்டின் சேரன் செங்குட்டுவன் என, பாவலர் ஏறு பெருஞ்சித்திரனாரின் தென்மொழி ஏடு புகழ்ந்து உள்ளது.

- அருணகிரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It