இந்தியாவிலேயே பழம்பெருமைகள் வாய்ந்தது நமது தமிழ் மண். அதற்கு உள்ளும் பழமை வாய்ந்தது, தென் மாவட்டங்களே. குறிப்பாக, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, நாஞ்சில் நாட்டைக் குறிப்பிடலாம். இந்தப் பகுதிகளில்தான் கல்வெட்டுகளும், வரலாற்று ஆவணங்களும் கூடுதலாகக் கிடைக்கின்றன.

புதுக்கோட்டை மண்டலம், வெள்ளையர் ஆட்சியின்போதும் தனிநாடாகவே இயங்கியது என்பது வியப்புக்கு உரியது. ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திற்கு உள்ளே, புதுக்கோட்டை கிடையாது. புதுக்கோட்டை மன்னர் ஆங்கில அரசுக்கு ஆதரவாக இருந்ததால், அவரது எல்லைக்கு உள்ளே வெள்ளையர்கள் தலையிடவில்லை. இந்திய விடுதலை வரையிலும், அது தனி நாடுதான். புதுக்கோட்டையின் வரலாறு குறித்துப் பல நூல்கள் வெளியாகி இருக்கின்றன. அரசு ஆவணங்களும் உள்ளன. சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்துக்கு எதிரே உள்ள, அரசு ஆவணக் காப்பகத்தில் அந்த ஆவணங்களைப் பார்க்கலாம்.

குடுமியான்மலை குடுமிநாதர் ஆலய சிற்பங்கள்

(குடுமியான்மலை குடுமிநாதர் ஆலய சிற்பங்கள்)

நண்பர் சங்கொலி ராமுவின் மகள் சாலை இளந்தென்றல் திருமணத்துக்காக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மெய்வழிச்சாலைக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அத்துடன், புதுக்கோட்டையின் வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களுள் சிலவற்றையும் பார்க்கத் தீர்மானித்து, ஒரு நாள் முன்னதாகவே ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு, 11.9.2010 காலை 6.30 மணிக்கு, புதுக்கோட்டை போய்ச் சேர்ந்தேன். இங்கே ரயில் நிலையத்தில் இருந்து,பேருந்து நிலையம் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வெளியே வந்தவுடன் அரசுப்பேருந்து வசதி உள்ளது.5 ரூபாய் கட்டணம். பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள பிரின்ஸ் லாட்ஜில் தங்கினேன்.

மணப்பாறை வழக்கறிஞர் தமிழ்மணி, ஒரு கட்டுரையாளர். இவரது கட்டுரைகள், தினமணி, ஜனசக்தி, சங்கொலி இதழ்களில் வெளியாகி உள்ளன. எனது நூல்களை ஆர்வமாகப் படிப்பவர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் கோட்டை, குடுமியான்மலை கல்வெட்டுகள், சித்தன்னவாசல் ஓவியங்கள், நார்த்தாமலை ஆகிய இடங்களைப் பார்க்கத் திட்டமிட்டு, தமிழ்மணியிடம் தெரிவித்து இருந்தேன்.

நண்பர்கள், தீராம்பட்டி ஜேசுராஜ், சகாயராஜ், ராஜாளிப்பட்டி செல்வராஜ், விராலிமலை பெருமாள் ஆகியோரையும் ஒரு ஆம்னி வேனில் அழைத்துக்கொண்டு வந்தார். அவர்கள் எல்லோருமே ஆசிரியர்கள். பயணக் கட்டுரைகளை ஆர்வமாகப் படிப்பவர்கள். என்னுடைய புத்தகங்களையும் படித்து இருக்கின்றார்கள். தஞ்சாவூரைச் சேர்ந்த எழுத்தாளர் பாரி. இராஜேஷ்கண்ணனையும் வரச்சொல்லி இருந்தேன். எல்லோரும் புதுக்கோட்டையில் சந்தித்து, அறிமுகமாகிப் புறப்படும்போது மணி பத்து ஆகி விட்டது.

திருமயம் கோட்டைச் சுவர்

10.30மணிக்கு திருமயம் கோட்டைக்குப் போய்ச் சேர்ந்தோம். புதுக்கோட்டை-மதுரை சாலையில், புதுக்கோட்டையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த வழியாக ஐம்பதுக்கும் மேற்பட்ட முறை காரில் கடந்து இருக்கின்றேன். ஒவ்வொரு முறையும், பிரமாண்ட கோட்டை மதிலையும், உச்சியில் ஒரு பீரங்கியையும் பார்ப்பேன். இந்தமுறைதான், மேலே ஏறிப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது; வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு வந்து விட்டேன்.

தொல்பொருள் ஆய்வுத்துறையினரின் வசம் உள்ள இந்தக்கோட்டையின் சுற்றுச்சுவர்களை, அவர்களது வழக்கப்படி ஒருவித சிவப்புச் சாந்து போட்டுப் பூசி, கற்களுக்கு இடையிலான பிளவுகளைச் சரிப்படுத்தி இருக்கின்றார்கள். நாட்டின் பழம்பெருமை மிக்க இடங்களைப் பாதுகாப்பதில், தொல்பொருள் ஆய்வுத்துறையினரின் பணிகளைப் பாராட்ட வேண்டும்.

எடுத்துக்காட்டாக, தஞ்சை கோபுரத்தைப் பாருங்கள்.தொல்பொருள் ஆய்வுத்துறையினர் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு எடுக்கப்பட்ட கோவிலின் படத்தையும், பணிகளை முடித்தபின்னர் எடுத்த படத்தையும் அங்கே வைத்து இருக்கின்றார்கள்.இரண்டு படங்களையும் ஒருசேரப் பார்த்தால்தான்,எந்த அளவுக்கு அவர்கள் பணி ஆற்றி இருக்கிறார்கள் என்பதை உணர முடியும்.

அதுபோல, முன்பு தொலைவில் இருந்து நான் பார்த்த திருமயம் கோட்டைச்சுவரில் கற்கள் பெயர்ந்து கிடந்தன. இப்போது, அருகில் சென்று பார்க்கும்போது, மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.  புதிய கோட்டை போலக் காட்சி அளிக்கின்றது. சுற்றுப்புறங்களும் ஓரளவு தூய்மையாகவே பராமரிக்கப்படுகிறது. அருகில் ஊரோ, வீடுகள் அதிகமாக இல்லை என்பதும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

சுற்றிப்பார்க்க, உள்நாட்டினருக்கு ரூ 5 கட்டணம்; அயல்நாட்டவருக்கு ரூ 100 கட்டணம். நான் பார்த்தவரையில், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்று கட்டணங்களில் பாரபட்சம் இல்லைதான். ஏனெனில், அவர்களுடைய செல்வச் செழிப்பு. இந்தியாவில் ரூ 100 கட்டணம் என்பது, அவர்களுக்கு எளிய தொகைதான். எனவே, அவர்களிடம் கூடுதல் கட்டணம் பெறுவதில் தவறு இல்லை.

பேசிக்கொண்டே மேலே ஏறினோம். தொடக்கத்திலேயே இரண்டு பெரிய பாறைகள், செங்குத்தாக, தனியாக நிற்கின்றன. இதேபோன்ற ஒரு பாறை, மாமல்லபுரத்தில் இருப்பதை நீங்கள் பார்த்து இருக்கலாம். இந்தவிதமான பாறைகளில் அடிச்சுற்று மிகவும் குறைவாகவும், மேலே அகலமாகவும் இருக்கின்றது. ஆயினும், சாய்ந்து விழாமல் அப்படியே நிற்கின்றது. யாரோ இந்தப் பாறைகளைச் செய்து, அங்கே கொண்டு போய் நிற்க வைத்ததுபோல இருக்கின்றது. இயற்கையின் பேராற்றலை என்னவென்று சொல்வது?

திருமயத்தில், மேலே கோட்டை போன்ற அமைப்பு இருக்கும் என்று கருதிச் சென்ற எனக்குச் சற்று ஏமாற்றம்தான். அங்கே,கோட்டை எதுவும் இல்லை. மலையைச் சுற்றிலும், கோட்டைச்சுவர் போன்ற வடிவில், நீண்டதொரு சுவரைக் கட்டி இருக்கின்றார்கள். எதிரிகள் சுற்றி வளைத்துத் தாக்கும்போது, இந்த மலையில் ஒன்றாகச் சேர்ந்து, பாதுகாப்பாக இருந்து கொள்வதற்காகத்தான் இந்த ஏற்பாடு. மலையின் உச்சியில் ஒரு பெரிய பீடத்தைக் கட்டி, அதில் மேலே ஒரு பீரங்கி பொருத்தப்பட்டு உள்ளது. அந்த பீடத்தைப் பார்த்தபோது சற்று வியப்பாக இருந்தது. இதைத்தவிர, அங்கே வேறு எந்தக் கட்டுமானமும் இல்லை.

ஆனால், சற்றுத் தாழ்வான பகுதியில், வெடிமருந்து சேமிப்புக் கிடங்கு ஒன்று உள்ளது. அதில்தான், பீரங்கிக்குத் தேவையான வெடி மருந்துகளைச் சேகரித்து வைத்து இருந்தார்களாம்.

பாண்டிச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் சீனிவாசராவ், ஞானசேகரன் இருவரும், 1987 முதல் 90 வரையிலும் மூன்று ஆண்டுகள், சைக்கிளிலேயே உலகத்தைச் சுற்றிவந்த பிறகு, மேலும் 6 முறை உலகத்தைச் சுற்றி வந்து உள்ளார்கள். கம்போடிய நாட்டில் உள்ள அங்கோர்வாட் ஆலயத்தைப் பற்றி ஒரு சிறிய புத்தகத்தை, பக்கத்துக்குப் பக்கம் வண்ணப்படங்களுடன், மலேஷிய நாட்டில் அச்சிட்டு வெளியிட்டு இருக்கின்றார்கள். அதில், அங்கோர்வாட் ஆலயத்துக்கு அருகே உள்ள ஒரு பீடத்தையும், மெக்ஸிகோ நாட்டில் நிலவிய மாயன் பழங்குடி மக்கள் கட்டிய ஒரு பீடத்துக்கு அருகிலும் நின்று அவர்கள் எடுத்துக்கொண்ட படங்களை ஒரே பக்கத்தில் அச்சிட்டு இருந்தார்கள்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பல்லாயிரம் மைல்கள் இடைவெளியில் உள்ள இந்த இரு நாடுகளிலும் கட்டப்பட்ட அந்தப் பீடங்கள் ஒரே அமைப்பில் இருக்கின்றன. திருமயம் மலை உச்சியில் இருக்கின்ற பீடம், அந்த இரு பீடங்களைப் போலவே இருக்கின்றது. அந்தப் படங்கள் என் நினைவுக்கு வந்தது. இன்றைக்கு ஒவ்வொரு நாட்டிலும், வெவ்வேறு வகையான கட்டுமானங்களைக் கட்டுகின்றார்கள். ஆனால்,  பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் வெவ்வேறு பகுதிகளில், ஒரேமாதிரியாகக் கட்டி இருப்பது வியப்பாக இருக்கின்றது. அந்த பீடத்துக்கு முன்பாகவும், கோட்டைச் சுவருக்கு அருகிலும் நின்று படங்கள் எடுத்துக் கொண்டோம்.

இந்தக் கோட்டையின் தாழ்வான ஒரு பகுதியில், வெடிமருந்துக் கிடங்கு ஒன்றைக் கட்டி இருக்கின்றார்கள். அது பாழடைந்து கிடக்கிறது. அதற்குப் பின்புறம், சுமார் 30 அடி உயரத்தில், மலையைக் குடைந்து, ஒரு சிறிய கோவிலைக் கட்டி இருக்கின்றார்கள். அங்கே ஒரு சிவலிங்கம் உள்ளது. இப்போது, இந்தக் கோவிலுக்குச் செல்வதற்கு, இரும்பினால் ஆன ஏணிப்படிகளைப் பொருத்தி இருக்கின்றார்கள். அதைத் தவிர, கற்படிகள் எதுவும் இல்லை. இந்த ஏணியை அகற்றி விட்டால், அந்தக்கோவிலுக்குச் செல்ல முடியாது.

வெள்ளரி, கொய்யா

திருமயம் கோட்டையில், ஒரு மணி நேரம் இருந்தோம். அடுத்து, குடுமியான்மலை நோக்கித் தொடர்ந்தது எங்களது தேடல். வழியில் சுவையான வெள்ளரிப்பிஞ்சுகள், கொய்யாப்பழங்களைத் தட்டுகளில் வைத்து விற்றுக் கொண்டு இருந்தார்கள். சின்னஞ்சிறு வெள்ளரிப் பிஞ்சுகளாக இருந்ததால் கூடுதல் சுவை. இப்போது, தமிழ்நாட்டின் பல ஊர்களில் பேருந்து நிலையங்களில், வெள்ளரியின் தோலை நீக்கிவிட்டு, தட்டுகளிலும், பிளாஸ்டிக் பைகளிலும் போட்டுக்கொடுக்கின்றார்கள். ஆனால், அந்த வெள்ளரிகள், ஏதோ செயற்கையாகச் செய்யப்பட்டவை போல எந்தவிதச் சுவையும் இருப்பது இல்லை.

சாத்தூரில் பேருந்து நிற்கும்போது சின்னஞ்சிறு நாட்டு வெள்ளரிப் பிஞ்சுகளைத் தட்டுகளில்  வைத்துக் கொடுப்பார்கள். சுவையாக இருக்கும். திருமயத்தில், அதைவிடவும் சிறிய, சுவையான வெள்ளரிப் பிஞ்சுகள் கிடைத்தன. அத்துடன், நண்பர்கள், கொண்டு வந்த முறுக்கு,வடையையும் சேர்த்து நொறுக்கினார்கள். திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவிலில், பெரிய அளவிலான,சுவையான சீனி கொய்யாப்பழங்கள் கிடைக்கின்றன. வாங்கிச் சுவைத்துப் பாருங்கள்.

குடுமியான்மலை

புதுக்கோட்டை மன்னர்கள் முடி சூடும் இடம்.- குடுமிநாதர் ஆலயம்12.30 மணி அளவில், குடுமியான்மலைக்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கே,குடுமிநாதர் ஆலயத்தின் கதவுகள் சாத்தப்பட்டு இருந்தன. அதில் இருந்த சிறிய கதவு திறந்து இருந்தது. பொதுவாக, சிற்றூர்களில் உள்ள ஆலயங்களில் பகல் 12 மணிக்கு நடையைச் சாத்தி விடுவார்கள். மாலை நான்கு மணிக்குத்தான் மீண்டும் திறப்பார்கள். அதுபோல, இன்றைக்குக் கோவிலுக்கு உள்ளே போக முடியாதோ? என்று எண்ணிக்கொண்டு இருந்தபோது, காவலர் ஒருவர் வந்தார்.   வெளியூரில் இருந்து வந்து இருக்கின்றோம் என்று சொன்போது, நாங்கள் ஏமாற்றம் அடையக்கூடாது என்பதற்காக, வாருங்கள் திறந்து காட்டுகின்றேன் என்று அழைத்துச்சென்றார்.

குடுமிநாதர் கோவில், கி.பி. 9 ஆம் நூற்றாண்டில், சோழர்களால் கட்டப்பட்டது. கோவிலுக்கு உள்ளே நுழைந்தவுடன், இரண்டு பக்கங்களிலும் வரிசையாக அமைக்கப்பட்டு உள்ள கற்சிலைகள் நம்மை வரவேற்கின்றன. இதேபோன்று அமைக்கப்பட்டு உள்ள, பாளையங்கோட்டையில் இருந்து திருச்செந்தூர் செல்லுகின்ற வழியில் சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிருஷ்ணாபுரம் கோவில் சிலைகள், உலகப் புகழ் பெற்று விட்டன.

சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த மாதம் ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலிக்குச் சென்றபோது, கிருஷ்ணாபுரம் கோவிலுக்கும் சென்று அந்தச் சிலைகளைப் பார்த்து வந்தேன். அவை கருங்கற் சிலைகள். நன்றாக எண்ணெய் பூசி, பளபளப்பாக ஆக்கி வைத்து இருக்கிறார்கள். குடுமியான்மலை சிலைகளையும், எண்ணெய் தடவிப் பராமரித்தால், மேலும் பொலிவு பெறும்.

குடுமியான் மலைப் பாறைகள், சிவப்பு வண்ணத்தில் உள்ளதால், சிலைகளும் சிவப்பு வண்ணத்திலேயே இருக்கின்றன. கலை வேலைப்பாடுகளுக்குக் குறைவு இல்லை.ஏராளமான வளைவு நெளிவுகளுடன், செதுக்கி இருக்கின்றார்கள். ஏறத்தாழ, எல்லாச்சிலைகளிலும் சில துண்டுகள் உடைந்து விழுந்து இருக்கின்றன.

சிலைகளுக்கு அருகில் சென்று,அவற்றைத் தடவிப் பார்ப்பதால், சிலைகள் சேதம் அடைகின்றன. கிருஷ்ணாபுரத்தில், சில சிலைகளுக்குக் கம்பி வேலி அமைத்து இருக்கின்றார்கள். அதுபோல, தமிழகம் முழுவதும் உள்ள கோவில் சிலைகளைத் தொட்டுப் பார்ப்பதைத் தடை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பது போல, சிலைகளைத் தடவித் தடவி, தேய்த்துத் தேய்த்து, அடுத்த நூற்றாண்டில் இல்லாமல் செய்து விடுவார்கள். தொல்பொருள் துறை, இதில் கவனம் செலுத்த வேண்டும்.

எங்களுக்கு உதவிய அந்தக் காவலருக்குச் சிற்பங்களைப் பற்றி அவ்வளவாக விளக்கிச் சொல்லத் தெரியவில்லை. தொல்பொருள் துறையினர் ஒவ்வொரு சிலைக்கும் அருகில், விளக்கங்களை எழுதி வைத்தால் நன்றாக இருக்கும்.

இடதுபுறம், ஆயிரங்கால் மண்டபம் என்று அழைக்கப்படுகின்ற ஒரு கல் மண்டபம் உள்ளது. ஏராளமான கல் தூண்கள் உள்ளன. ஆனால், எண்ணிக்கை ஆயிரம் இல்லை என்றார்கள். கோவிலின் இடதுபுறமாகச் சுற்றிக்கொண்டு  குடுமிநாதர் ஆலயத்துக்குப் பின்புறம் சென்றோம். செல்லும்போது தலையைச் சற்று அண்ணாந்து பார்த்தால், ஓங்கி உயர்ந்து நின்கின்ற பாறையில், சுமார் 200 அடி உயரத்தில், அறுபத்து மூன்று நாயன்மார்கள் சிலை செதுக்கப்பட்டு இருப்பது தெரிகின்றது. இருபுறமும் நாயன்மார்கள் புடைசூழ, நடுவில் காளை வாகனத்தல் பரமசிவன், பார்வதி அமர்ந்து உள்ள காட்சி, சித்தரிக்கப்பட்டு உள்ளது.

அந்ததப் பாறையின் அடித்தளத்தில்தான் கல்வெட்டுகள் உள்ளன. ஆனால், அவற்றுக்கு அருகே செல்ல முடியவில்லை. சுமார் பதினைந்து பிரமாண்டமான, ஆள் உயர தேன்கூடுகள் இருந்தன. அதைச் சுற்றிலும் தேனீக்கள் பறந்துகொண்டு இருந்தன. எனவே,அருகில் சென்று பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டோம். அங்கே இரண்டு சிறிய ஆலயங்கள் உள்ளன. அதன் கருவறைகள்தான், குடைவரைகள் ஆகும். மலையைக் குடைந்து, கருவறையை அமைத்து இருக்கிறார்கள். இந்தக் கோவிலுக்கு அருகிலேயே தாசி மண்டபமும் உள்ளது.

அகிலாண்டேஸ்வரி ஆலயத்தின் முன்பகுதியில், அருங்கோண முக்கோண வடிவிலான ஒரு பெரிய கல் உள்ளது. அதன் உச்சியும்,அதேபோல அருங்கோண வடிவத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்தக் கல்லில் அமர்ந்துதான், புதுக்கோட்டை மன்னர்கள் பட்டம் சூடிக்கொள்வது மரபு. இப்போது, அதே இடத்தில்தான் திருமணங்கள் நடைபெறுகின்றன. நாங்கள் சென்ற நாளுக்கு மறுநாள்,அங்கே ஆறு திருமணங்கள் நடைபெற இருப்பதாகச் சொன்னார்கள்.

அந்தக் கல்லுக்கு அடிகள் இடைவெளியில், மண்டபத்தின் மேலே பாவப்பட்டு உள்ள ஒரு பெரிய சதுர வடிவிலான கல்லில், அதில், 12 ராசிகள், 27 நட்சத்திரங்களைச் செதுக்கி இருக்கின்றார்கள்.  அருமையான வேலைப்பாடு. இப்படி ஒரு சிற்பம், தமிழகத்தில் இங்கேதான் உள்ளது.

படிப்பு அறிவு இல்லாத காவலர், தனக்குத் தெரிந்த தகவல்களைக் கரிசனத்தோடு நம்மிடம் சொன்னார். அவருக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றுக்கொண்டு வந்தோம்.

சித்தன்னவாசல்

‘மதிய உணவைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்; வந்த வேலையை முடிப்போம்’ என்று தீர்மானித்துக்கொண்டு, நேராக, சித்தன்னவாசலை நோக்கி விரைந்தோம். இரண்டு மணி அளவில் அங்கே சென்று சேர்ந்தோம்.1996 ஆம் ஆண்டு, சில நண்பர்களுடன் ஒரு ஜீப்பில் இங்கே நான் வந்தபோது, ஓவியங்கள் இருக்கின்ற குடைவரை பூட்டிக் கிடந்தது. எனவே, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றேன். ஆனால், இப்போது,தொல்பொருள் துறையினர், முழுநேரப் பணிக் காவலர்களை நியமித்து இருப்பதால் திறந்து இருந்தது. ஓவியங்கள் இருக்கின்ற பகுதியில் ஒரு பெரிய சதுர வடிவிலான பீடம் கட்டி, அங்கே நிற்பதற்கு வசதி செய்து இருக்கின்றார்கள்.

சித்தன்னவாசல்

(சித்தன்னவாசல்)

இங்கே இருந்த காவலர், எங்களை வெளியிலேயே தடுத்து நிறுத்தினார். உள்ளே ஏற்கனவே, ஒரு குடும்பத்தினர் இருக்கின்றார்கள். அவர்கள் பார்த்துவிட்டு வந்தபிறகு உங்களைஅழைத்துச் செல்கிறேன் என்றார். முதலில் சற்று எரிச்சலாக இருந்தது. ஆனால், அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பது பின்னர்தான் புரிந்தது. பலநூற்றாண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட அந்தக்குகை ஓவியங்களைப் பராமரிப்பதில் அவர் எடுத்துக்கொண்டு உள்ள அக்கறையைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும்.

ஒரே சமயத்தில் பலர் நின்றுகொண்டு பார்க்கும்போது, எல்லோரையும் கவனிக்க அவரால் முடியாமல் போகும். ஏனெனில், ஓவியங்களின் பெருமை அறியாத சிறுவர்கள், இளைஞர்கள், ஓவியங்களைச் சிதைக்க முயற்சிக்கின்றார்கள். எங்கே சென்றாலும், அங்கே தன் பெயரைப் பொறித்து விட வேண்டும் என்பது, இன்றைய இளைஞர்களின் விருப்பமாக இருக்கின்றது.

சில நாள்களுக்கு முன்பு, தொலைக்காட்சியில், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், குடவாயில் பாலசுப்பிரமணியம் பேட்டி அளித்துக் கொண்டு இருந்தார். தமிழகத்தில் ஒரு வரலாற்று நினைவு இடத்தில், கல்தச்சர்கள் கையில் உளியோடு அமர்ந்து இருப்பார்களாம். ஐந்து ரூபாய் கொடுத்தால், அங்கே உள்ள பாறையில் உங்கள் பெயரையும் செதுக்கி விடுவாராம். எண்ணிப் பாருங்கள். எத்தகைய வரலாற்றுத் திரிபு? என்று. ஐந்து ரூபாய்க்குப் பெயரைப் பொறிக்கின்றாரே, அந்தப் பெயருக்கு உரியவர் செய்த சாதனை என்ன? தச்சருக்கு ஐந்து ரூபாய் கொடுத்ததுதான். இப்படியெல்லாமா பெருமை பெற நினைப்பது?

அப்படியே பெயரைப் பொறித்து விட்டாலும், சில ஆண்டுகள் கழித்து அதை வாசிப்பவருக்கு, அந்தப் பெயருக்கு உரியவரைப் பற்றி என்ன தெரியும்? என்ன குறிப்புகள் கிடைக்கும்? இத்தகைய கேள்விகள் என் மனதில் ஓடின.

எனவேதான், ஓவியங்களைப் பார்வையிடுகின்றவர்களைக் கண்காணிக்க வேண்டும் என்பதற்காக, சித்தன்னவாசல் குகைக் காவலர் ஒருவர்பின் ஒருவராக அழைத்துச் செல்கி;னறார் என்பது புரிந்தது.  ஓவியங்களைப் பற்றி அவருக்குத் தெரிந்த தகவல்களை விளக்கமாகச் சொன்னார். இதுவும் ஒரு குடைவரைதான். பிரமாண்டமான மலைப்பாறையின் ஒரு பகுதி, ஈரடுக்காக இருக்கிறது. அந்தப் பாறையைப் பற்றி நன்கு அறிந்த சமணர்கள், குறிப்பிட்ட அந்த இடத்தைத் தேர்வு செய்து, கோவிலை அமைத்து இருக்கின்றார்கள். அதற்கான விளக்கங்களைச் சொன்னார்.

கல்வெட்டு எழுத்துகளைப் படிப்பது எப்படி?

இங்கே உள்ள சமணர் குடைவரைக் கோவில், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. அங்கே உள்ள அர்த்தமண்டபத்தில், 7 ஆம் நூற்றாண்டில், ஓவியங்கள் தீட்டப்பட்டன. 9, 10 ஆம் நூற்றாண்டுகளில், பாண்டிய மன்னர்களின் எழுத்துகள் காணப்படுகின்றன.

கல்வெட்டு எழுத்துகளைப் படிப்பது எப்படி? என்று சொல்லித் தருகின்ற புத்தகங்கள் உள்ளன. அவற்றைப் படித்து விட்டு, கல்வெட்டுகளில் எழுதி இருக்கின்ற செய்திகளை வாசித்து அறிந்து கொள்ள முயற்சியுங்கள். தஞ்சை பெரியகோவிலில், நீண்ட வரிசையில் கல்வெட்டு எழுத்துகள் உள்ளன. தற்போது, நாம் படிக்கின்ற புத்தகங்களில் உள்ளதுபோல, ஒரு வரியை மடக்கி, அடுத்த வரிக்குச் சென்று படிப்பதுபோல, கல்வெட்டுகளைப் படிக்க முடியாது. கல்வெட்டுகளில் ஒரு வரி என்பது, நீண்டு செல்லும். எனவே, ஒரு வரியைப் படிப்பதற்கு, நீங்கள் கோவிலை ஒருமுறை சுற்றி வரவேண்டும். இப்படி சுமார் 15 முதல் இருபது வரிகள் உள்ளன. அவற்றை முழுமையாகப் படிப்பதற்கு, கோவிலை நீங்கள் பதினைந்து முறை சுற்றி வரவேண்டும் என்று, தஞ்சாவூர் கோவில் வழிகாட்டி சொன்ன தகவல் நினைவுக்கு வந்தது. தஞ்சாவூர் கோவிலிலும், சில ஓவியங்கள் உள்ளன. அதில், ராஜராஜ சோழனுடைய உருவம் வரையப்பட்டு இருக்கின்றது.

சித்தன்னவாசல் ஓவியங்கள் இருக்கின்ற கூரையில், அருமையான வேலைப்பாட்டுடன் கூடிய ஓவியங்களை வரைந்து இருக்கின்றார்கள். வெறுமனே பார்த்தால் ஒன்றும் விளங்காது. குகைக் காவலர் எளிமையாக விளக்கினார். அந்த ஓவியங்களில், ஒரு தடாகத்தின் காட்சியை வரைந்து உள்ளனர். அதில், அன்றில் பறவைகள் வரையப்பட்டு உள்ளன. அன்றில் பறவைகள் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல், இணைந்தே இருக்கும் என்பார்கள்.

குடுமியான் மலை கல்வெட்டுக்கள்அவ்விதம் இரண்டு அன்றில் பறவைகள், அன்னப் பறவை, அரசர்-அரசி, தாமரை மலர், தாமரை மொட்டு, குளம், யானை, மீன், காட்டு எருமை ஆகியவற்றின் படங்கள் அதில் வரையப்பட்டு உள்ளன. எதற்காக அவற்றை வரைந்து இருக்கின்றார்கள் என்று, ஒவ்வொன்றாக அவர் விளக்கிச் சொல்லும்போதுதான் நமக்குப் புரிகின்றது. ‘அடடா’ என்று நாமும் தலையாட்டுகின்றோம். ஓவியங்களில் உள்ள மன்னர், ஸ்ரீ அவனிபாத சேகரர் என்று அறிய முடிகின்றது.

இங்கு, தொல்பொருள் துறையினர் வைத்து உள்ள அறிவிப்புப் பலகையில்,

‘அறிவர் கோவில் என்னும் இச்சமணர் குடைவரை, முற்பாண்டியர் காலத்தில் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டில்) குடையப்பட்டது ஆகும். மேற்கு நோக்கிய இக்குடைவரைக் கோவில், கருவறை மற்றும் முக மண்டபத்தை உள்ளடக்கியது. கருவறையின் பின்புறச் சுவரில், மூன்று சமணத் துறவிகளின் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. முகமண்டபத்தின் பக்கவாட்டுச் சுவர்களில், பார்சுவநாதர் மற்றும் சமண ஆசான்களின் சிலைகளும் செதுக்கப்பட்டு உள்ளன.

முகமண்டபத்தில், விதானம் மற்றும் தூண்களின் மேற்பகுதி ஆகியவற்றில், தாவர வண்ணங்களினால் ஆன ஓவியங்கள் அழகுறத் தீட்டப்பட்டு உள்ளன. சமண மதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள, ஸமவஸரனத்தை எடுத்துக்காட்டுவது போன்று, தாமரைக் குளத்தில் மலர் சேகரிக்கும் ஆண்கள், விலங்குகள், அன்னம் போன்ற பறவைகள், மீன்கள் மற்றும் தாமரை, அல்லி மலர்களும், விதானத்தில் சித்தரிக்கப்பட்டு உள்ளன. மேலும், அரசன், அரசி, நடன மகளிர் உருவங்களும் தூண்களின் மேற்பகுதியில் செதுக்கப்பட்டு உள்ளன. அஜந்தா கலை ஓவியங்களை ஒத்த இவை, தென்னக ஓவியக்கலை வளர்ச்சிக்கு முன்னோடி எனலாம்.

இங்குள்ள முற்காலப் பாண்டிய மன்னன் அவனிபாத சேகரன் ஸ்ரீ வல்லபனுடைய (கி.பி.815-862) கல்வெட்டு மூலம், இளங்கௌதமன் என்னும் மதுரை ஆசிரியரால், இக்கோயில் கருவறை செப்பனிப்பட்டமை மற்றும் முகப்பு மண்டபத்தைக் கட்டியமை ஆகிய திருப்பணிகளை அறிய முடிகின்றது.

என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

சமணமா? ஆசீவகமா?

சமணர்கள் ஆடை அணிவது இல்லை. ஆனால், இந்த ஓவியத்தில் காணப்படுகின்ற உருவங்களில், கோவணம் அணிந்து உள்ளனர். மேலும், சமணர்கள், தங்கள் தலையில் உள்ள முடியை, தங்கள் கைகளாலேயே ஒவ்வொன்றாகப் பிய்த்து எறிந்து, மொட்டைத் தலையர்களாகவே இருப்பர். ஆனால், இங்கே உள்ள ஓவியங்களில் காணப்படுகின்ற உருவங்களின் தலையில் முடி உள்ளது.

எனவே, இது சமணர்கள் வரைந்த ஓவியங்கள் அல்ல. தமிழகத்தில் ஆசீவகம் என்ற ஒரு மதம் இருந்தது. அந்தப் பிரிவைச் சேர்ந்த துறவியர்தாம், இந்த ஓவியத்தை வரைந்து உள்ளனர் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இது தொடர்பாக, பேராசிரியர் நெடுஞ்செழியன், ஆசீவகத் தத்துவம்’ என்று ஒரு நூலை எழுதி உள்ளதாக, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரியும் மனோகரன் (98943-44783) தெரிவித்தார். இவர், தமது மனைவி, பிள்ளைகள், பெற்றோரையும் உடன் அழைத்து வந்து இருந்தார்.

அவர்களுக்கு, அந்த ஓவியங்களைப் பற்றிய குறிப்புகளை விளக்கிக் கொண்டு இருந்தார். நாங்கள் அறிமுகம் ஆகிக்கொண்டபோது, நான் எழுதிய, கட்சிகள் உருவான கதை நூலை, கடந்த ஆண்டு, மதுரை புத்தகக் காட்சியில் வாங்கி முழுமையாகப் படித்து விட்டதாகக் கூறியதுடன், நல்ல புத்தகம் என்றும் பாராட்டுத் தெரிவித்தார். நீங்கள் வேறு என்ன புத்தகங்கள் எழுதி இருக்கின்றீர்கள்? என்று  கேட்டு, என் கையில் இருந்த யானைமலையைக் காப்போம், அந்தமானில் அருணகிரி’ நூல்களை விலைகொடுத்து வாங்கிக் கொண்டார்.

நுழைவாயிலில், பாண்டிய மன்னர்களின் மீன் சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த ஓவியங்கள், கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வரையப்பட்டு இருக்கலாம்.

குடைவரைக்கு உள்ளே நுழைகையில், வலப்புறம் பார்சுவநாதர், இடது புறம் மகாவீரர் சிலைகள் உள்ளன. 24 தீர்த்தங்கரர்களுள் கடைசித் தீர்த்தங்கரர்தான், மகாவீரர் ஆவார். அவரது சிலையில், தலைக்கு மேலே முக்குடை என்ற அமைப்பு காணப்படும். பார்சுவநாதரின் தலைக்கு மேலே, பாம்பு காணப்படும்.

அதற்கு அடுத்து இருக்கின்ற ஒரு அறையில், மூன்று சிலைகள் உள்ளன. சாந்திநாத், குந்துநாத், அரண்நாத். நடுவில் இருக்கின்ற குந்துநாத், இங்கே வாழ்ந்த சமணர்கள் குழுவின் தலைவராகக் கருதப்படுகின்றார்.

அவரது தலைக்கு மேலே மூன்று பட்டைகள் உள்ளன. வலது புறம் இருப்பவருக்கு இரண்டு பட்டைகளும், இடது புறம் இருப்பவருக்கு, ஒரேயொரு பட்டையும் உள்ளது. இந்தப் பட்டைகளின் மூலம், அவர்களது தகுதி வரிசையை அறிந்து கொள்ளலாம்.தலைவருக்கு மஞ்சள் நிறமும், மற்ற இருவருக்கும் சிவப்பு நிறமும் அளிக்கப்பட்டு உள்ளது. சீனா, ஜப்பானில், கராத்தே விளையாட்டில், தகுதி நிலையை அறிய பட்டைகள் வழங்கப்படுவது நினைவுக்கு வந்தது. அதுபோலவே, தலைவரது கையில் உள்ள தாமரை மலர், முழுமையாக விரிந்து உள்ளது. மற்ற இருவரும், தாமரை மொட்டுகளைக் கையில் ஏந்தி உள்ளனர்.

அந்த அறையின் கூரையில் ஒரு இரத்தினக் கம்பள ஓவியம் உள்ளது. இன்று நாம் நெய்கின்ற கம்பளங்களில் உள்ளது போன்ற காட்சிகள் அந்த ஓவியத்தில் காணப்படுகின்றன. அதில், தர்ம சக்கரம் காணப்படுகிறது. இரண்டு முனிவர்கள், இரண்டு யானைகளின் உருவங்கள் அந்தக் கம்பளத்தில் வரையப்பட்டு உள்ளன. மிகுந்த பின்னல் வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு இரத்தினக் கம்பளத்தில் உள்ளதுபோல, இந்த ஓவியமும், பலவித வண்ணங்களில் பின்னப்பட்டு உள்ளது.

இந்த அறை தியான அறையாக உள்ளது. நடுவே நின்றுகொண்டு, மூச்சை அடக்கினால், ஒலி எழும்புகின்றது.   அதைச் செய்து காட்டினார் காவலர் பரமசிவம். அவர் கொடுக்கின்ற சத்தம், அதிர்வு அலைகளைப் பரப்புகின்றது. சத்தம், பன்மடங்கு உயருகிறது. அந்த அறையைவிட்டு வெளியில் வந்து, அங்கு உள்ள தூண் அருகில் நின்று கொண்டு, ஒலி எழுப்பினார். அதேபோல சத்தம் உயர்ந்தது. அந்த அறைக்கு உள்ளே இருந்து காற்று வெளியே போகாது என்றார்.

சித்தன்னவாசல் ஓவியங்களைப் பற்றிப் பல ஆய்வு நூல்கள் வெளியாகி உள்ளன. அங்கே போவதற்கு முன்பு, அந்த நூல்களுள் எதையாவது படித்து விட்டுச் சென்றால், நமக்கு எளிதில் விளங்கும். எழுத்தாளர் கோணங்கி, திருச்சி பல் மருத்துவர் ஒருவர் என பலர், அடிக்கடி இங்கே வந்து செல்வதாக, பரமசிவம் சொன்னார். பயனுள்ள பல தகவல்களை, நாம் கேட்காமலேயே சொன்ன அவருக்கு நன்றி தெரிவித்தோம். இவர், 13 ஆண்டுகளாக, இங்கே பணிபுரிந்து வருகின்றார். நான் சொன்ன செய்திகள் அனைத்தும், இங்கே வருகின்ற ஆராய்ச்சியாளர்கள் சொன்னதைக் கேட்டதுதான் என்கிறார்.

ஓவியங்களைப் பார்த்துவிட்டுத் திரும்புகிற வழியில், அதே மலையின் உச்சியில் ஏறிச் செல்வதற்கு ஒரு பாதை உள்ளது. அதன் வழியாக ஏறி, மறுபுறத்தில் இறங்கினால், அங்கே சமணர்கள் படுகை உள்ளது. செல்லும் வழியில், தொல்பொருள் துறையினர் வைத்து உள்ள அறிவிப்புப் பலகையில்,

ஏழடிப்பாட்டம் சமணர் படுக்கைகளும், கல்வெட்டுக்களும்

மலையின் கீழ்த்திசைப் பாறையில் அமைந்து உள்ள ஏழடிப்பாட்டம் என்னும் இயற்கைக் குகையில்,  வழுவழுப்பான தலையணை போன்ற அமைப்புடன் கூடிய 17 கற்படுக்கைகளைக் காணலாம்.

இவற்றுள் மிகப்பெரியதும், பழமையானதுமான கல்படுக்கையில், தமிழ்க் கல்வெட்டு ஒன்று, தமிழ் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. கி.மு.3-2 நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு, எவுமி நாட்டு குமட்டூர் பிறந்த காவிதி ஈதன்கு, சிறுபோசில் இளையான் செய்த அதிட்டானம் என்று கூறுகின்றது.

இதைத்தவிர கி.பி. 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு ஒன்றில், கடுந்தவம் புரிந்த சமணத்துறவிகளைப் பற்றியும் அறிய முடிகின்றது’

எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரை யானைமலையில் உள்ள சமணர் படுகைகளை விட, இங்கு கல் படுக்கைகள் அமைந்து இருக்கின்ற இடம் சற்று அகலமாக உள்ளது. வசதியான,அமைதியான, காற்றோட்டமான இடமாக இருக்கிறது. படுத்தால், எழுந்திருக்க மனம் வராது.

வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தப் படுகைகளின் மேலே எத்தனையோ பெயர்களைப் பொறித்துச் சிதைத்து விட்டார்கள். எனவே, இப்போது, கம்பித் தடுப்பு அமைத்துப் பூட்டுப் போட்டு உள்ளார். ஆனால், அதற்கும் மேலே உள்ள இடைவெளி வழியாக மெலிந்த உடல் கொண்ட ஒருவர் ஏறிச்சென்று, கல் படுகைகளில் படுத்துக் கிடந்தார். அந்த இடத்துக்குச் சென்றவுடன், எங்களுக்கும் அங்கே சிறிது நேரம் படுக்க வேண்டும் என்று தோன்றியது. எல்லோரும் படுத்து விட்டோம். சுமார் ஒரு மணி நேரம் அங்கேயே இருந்தோம். ஆனந்தமாக இருந்தது. கீழே இறங்குகையில், அங்கே அமைக்கப்பட்டு உள்ள புல்வெளியில் சிறிது நேரம் அமர்ந்தோம். இந்தப் புல்வெளியை நன்றாகப் பராமரிக்கின்றார்கள். பச்சைப்பசேல் என, ஊட்டி தாவரவியல் பூங்கா தோட்டத்துப் புல்வெளியை நினைவுபடுத்துகின்றது.

ஆனால், பெருத்த அதிர்ச்சி என்னவென்றால், மலையில் இருந்து சற்றுத் தொலைவிலேயே, வெடிவைத்துப் பாறைகளைத் தகர்த்துக் கொண்டு இருந்தார்கள். மலை மீது நின்றுகொண்டு இருந்த எங்களால், அந்த அதிர்ச்சியை நன்றாக உணர முடிந்தது. கல் உடைக்கும் சுரங்கங்கள் பல, சுற்றுப் புறச் சூழலைக் கெடுத்துக் கொண்டு இருக்கின்றன. அது மட்டும் அல்ல, மேற்கூரையில் இருக்கின்ற ஓவியங்கள், பெயர்ந்து விழுவதற்கும் ஏதுவாகி விடும். சுற்றுலாத்துறையினர் இதில் கவனம் செலுத்தி, அந்தப் பகுதியில், பாறைகளை உடைத்து நொறுக்குவதைத் தடை செய்ய வேண்டும்.

சித்தன்னவாசல் மலையின் ஒருபகுதியில், முதுமக்கள் தாழிகளும் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன. அவை, கிடைத்த இடங்களில், தூண்களை நட்டு, குறிப்புகளை எழுதி உள்ளார்கள். நார்த்தாமலை செல்வதாக முதலில் திட்டம் வகுத்து இருந்த நாங்கள், மாலை 4 மணி ஆகிவிட்டதால், மதிய உணவுக்காக புதுக்கோட்டை திரும்பினோம். எனவே, ஒரு நாள் சுற்றுலா வருபவர்கள், கையில் உணவோடு வருவது நலம்.

ஞானாலயா நூல் நிலையம்

புதுக்கோட்டை என்றாலே, பழம்பெருமைகள் நினைவுக்கு வருவது போல, ஆய்வாளர்களுக்கு புதுக்கோட்டை என்றாலே நினைவுக்கு வருவது, ஞானாலயா நூல் நிலையம்தான். ஆம்; புதுக்கோட்டையின் நுழைவாயிலில், திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள பழனியப்பா நகரில்தான், இந்த அறிவுத் திருக்கோயில் அமைந்து உள்ளது.

கல்வித்துறையில் பணி ஆற்றி ஓய்வு பெற்ற கிருஷ்ணமூர்த்தி-டோரதி தம்பதியினர், இந்த நூல் நிலையத்தை அமைத்து உள்ளனர். 70,000 நூல்களைச் சேகரித்து வைத்து உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு, இவர்களைப் பற்றியும், நூலகத்தைப் பற்றியும் செய்தித்தாள்களில் வந்த செய்திகளைப் படித்து இருக்கின்றேன். புதுக்கோட்டைக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தால், இந்த நூல் நிலையத்தைப் பார்க்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன்.

புதுக்கோட்டை ஞானாலயா நூலகம் கிருஷ்ணமூர்த்தி - அருணகிரி

சென்னையில் இருந்து ரயிலில் புறப்படுகையில்தான், முகவரி இல்லை என்பது நினைவுக்கு வந்தது. எப்படியும் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு சென்றேன். காலையில் புதுக்கோட்டையில் ஆனந்த விகடன் புத்தகத்தை வாங்கினேன். அதில் எழுத்தாளர் சாரு நிவேதிதா, ஏ.கே. செட்டியாரது பயண நூல்களைப் பற்றியும், புதுக்கோட்டை ஞானாலயாவில் செட்டியாரது நூல்கள் அனைத்தும் உள்ளதாகவும் எழுதி இருந்தார். ஆப்பிள் தேசம் என்ற அமெரிக்கப் பயணக் கட்டுரைத் தொடரைத் தற்போது தினமணி கதிரில் எழுதி வருகின்ற எழுத்தாளர் ஞானியும், செட்டியாரது நூல்களைப் பற்றிக் கிருஷ்ணமூர்த்தி சொன்ன தகவலை எழுதி இருந்தார்.

புதுக்கோட்டையில் அந்த நூலகத்தைப் பற்றி விசாரித்த உடனேயே தகவல்கள் கிடைத்தன. நண்பர் தமிழ்மணியும், இந்த நூலகத்தைப் பற்றி அறிந்து இருந்தார். எனவே, எல்லோரும் அங்கே சென்றோம். ஐயா கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்தோம். ஏ.கே. செட்டியாரின் நூல்களைக் காண்பித்தார். அவற்றைப் படங்கள் எடுத்துக் கொண்டேன். நான் எழுதிய, உலகம் சுற்றும் வாலிபன், கொடிவழி ஆகிய நூல்களை, நூலகத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்தேன். இந்த நூலகத்துக்கு, தமிழகத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், அரசியல் தலைவர்கள் வருகை தந்து உள்ளனர். தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்து உள்ளனர்.

நூலகத்தைப் பற்றிய குறிப்புகளை மட்டுமே தொகுத்து, ஞானாலயா என்ற ஒரு புத்தகத்தையும் வெளியிட்டு உள்ளனர்.விலை ரூ.35. கிடைக்கும் இடம்: 6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை-622 002. தொலைபேசி. 99656-33140

மெய்வழிச்சாலை

1970 களில், நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது, சங்கரன்கோவிலில் என் வீட்டுக்கு அருகில், நட்சத்திரச் சின்னம் பொறித்த சிவப்புத் தலைப்பாக கட்டிய ஒருவர், சைக்கிள் கடை வைத்து இருந்தார். அவர்கள் மெய்வழிச்சாலை அனந்தர்கள் என்று கேள்விப்பட்டேன். அதைப்பற்றி அவரிடம் பலமுறை கேட்டு இருக்கிறேன். 1976 ஆம் ஆண்டு, தமிழகத்தில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு இருந்தது. அரசு அலுவலகங்கள் கெடுபிடியாக இயங்கிக்கொண்டு இருந்தன.

அப்போது, நாள்தோறும் செய்தித்தாள்களில் மெய்வழிச்சாலையைப் பற்றிய செய்திகள் பரபரப்பாக வெளியாகிக் கொண்டு இருந்தன.

மெய்வழி ஆண்டவருடைய குடிசையில் சுங்கத்துறையினர் சோதனை; ஏராளமான தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன என்று செய்திகள் வந்தன. இப்போது தொலைக்காட்சிகளில் வாசிக்கப்படுகின்ற தலைப்புச் செய்திகள், அரை மணி நேரத்துக்கு உள்ளாக பழைய செய்தி ஆகிவிடுகின்றது. அப்போது, தொலைக்காட்சி கிடையாது. செய்தி இதழ்களும் மிகக் குறைவே. எனவே, மெய்வழிச்சாலை பற்றிய செய்திகள், ஒருவாரத்துக்கு மேல் பரபரப்புச் செய்திகளாக வெளியாகிக் கொண்டு இருந்தன.

மெய்வழிச்சாலை என்பது ஒரு தனி மதம் என்று கேள்விப்பட்டு அதைப்பற்றி அறிந்து கொள்ள விருப்பம் கொண்டு இருந்தேன். ஆனால், வாய்ப்புக் கிட்டவில்லை. நண்பர் சங்கொலி ராமு, மெய்வழிச்சாலை பற்றி அடிக்கடி பேசுவார். ‘அங்கே பல மதங்கள், சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வசிக்கின்றார்கள். இன்னமும் பழமை மாறாமல் உள்ளது; இந்த 21 ஆம் நூற்றாண்டிலும், மெய்வழிச்சாலையில் மின்சாரம் கிடையாது. ஹரிக்கேன் விளக்குகளைத்தான் பயன்படுத்துகின்றார்கள்; குடிசைகளில்தான் வசிக்கின்றனர்; வீடுகளில் மண்தரைதான்.

மெய்வழி பொன்னரங்க தேவாலயம் உள்ளது, அங்கே வழிபாட்டு முறைகள் தனி என்றும் அவர் சொல்லக் கேட்டு இருக்கின்றேன். ஆண்டுதோறும், பொங்கல் விழாவுக்குத் தமது குடும்பத்துடன் அங்கே சென்று, மூன்று நாள்கள் தங்கிவிட்டுத் திரும்புவார். அங்கே பொங்கல் பண்டிகை மட்டுமே சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்; நீங்களும் ஒருமுறை வாருங்கள் என்று அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார்.

அவருடைய மகள், சாலை இளந்தென்றல் திருமணம், 12.9.2010 அன்று மெய்வழிச்சாலையில் நடைபெற்றது. அதற்காகச் சென்று இருந்தேன். புதுக்கோட்டை மாவட்டத்தில், அன்னவாசல் அருகே, முதன்மைச் சாலையில் இருந்து விலகிச் செல்லும் உட்புறச் சாலை ஒன்றில் அமைந்து இருக்கின்றது மெய்வழிச்சாலை. தலைவர் வைகோ அவர்களும் திருமணத்துக்கு வருகை தந்தபோது, அனந்தர்கள் அனைவரும் கூடி நின்று, மகிழ்ச்சியோடு, சால்வை அணிவித்து வரவேற்று அழைத்துச் சென்றனர்.

மெய்வழிச்சாலைஇங்கே, ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல், காலணிகள் கூட அணிவது இல்லை. மெய்வழி ஆண்டவருடைய குடிசைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே, மெய்வழி ஆண்டவருடைய மகன், சாலை வர்க்கவான்,  தலைவரை வரவேற்று, மெய்வழி பற்றிய தகவல்களைச் சொன்னார். கூடிநின்ற அனந்தர்களை அறிமுகப்படுத்தினார்.

69 சாதிகளைச் சேர்ந்தவர்கள் அங்கே வசிப்பதாகவும், இந்து-முஸ்லிம்-கிறித்துவம் என பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும், மெய்வழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டு, இங்கே வசிப்பதாகவும் சொன்னார். திருமண உறவுகள், இவர்களுக்கு உள்ளேயேதான் நடைபெறுகின்றன. சிறிய சமுதாயம் என்பதால், ராமு, தனது மகளுக்குப் பொருத்தமான மணமகனைத் தேர்ந்து எடுப்பதற்கு, மிகுந்த சிரமப்பட்டார். ராமு, அனந்தர் அல்ல. அவரது மாமனார் ஒரு அனந்தர். அந்த வழியில், மனைவியோடு மெய்வழியில் ஒன்றிணைந்தவர். இவர்கள் தங்களது பெயருக்கு முன்னால், சாலை என்று இணைத்துக் கொள்கின்றார்கள்.

பொன்னரங்க தேவாலயத்தில் உள்ள கருவறைக்கு முன்பாக திருமண நிகழ்வுகள் தொடங்கின.  கருவறை என்பது மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. அங்கேதான், மெய்வழி ஆண்டவர் அடக்கமாகி இருக்கின்றார். ஒரு வெண்ணிறத் திரை தொங்க விடப்பட்டு உள்ளது. அதற்கு முன்பாக, சாலை வர்க்கவான், ஒரு வாளைக் கையில் ஏந்தியவாறு வந்து அமர்ந்தார். சபைக்கு அரசராக வீற்று இருக்கின்றார்.

ஆலயத்துக்கு உள்ளே மணல் தரைதான். நல்ல சுத்தமான ஆற்று மணலைப் பாவி இருக்கின்றார்கள். மின்விசிறிகள் கிடையாது. அங்கே உள்ள ஒரு அறிவிப்புப் பலகையில்,

ஆதியே துணை

எமனையும் எமபலத்தையும் அடக்கி ஆளுகின்ற சிவராஜர் எங்ஙள் தந்நை

தலையில் பொல்லாத விதி எழுத்தைப் போக்கி

னல்ல மதி எழுத்தை அழுத்திப் பதிக்கின்ற சிவராஜர் எங்ஙள் தந்நை

மூக்குக்கு வெளியே மூச்சு ஓடாத தவத்தை உடையவர்கள் எங்ஙள் தந்நை

ஊண் உறக்கம் அற்றவர்கள் எங்ஙளுடைய தந்நை

குற்றம் அற்ற னூற்றிருபத் தொன்று வயதினையுடையவர்கள்

எங்ஙளுடைய தந்நை

அறுபத்து ஒன்பது ஜாதிகளையுடைய பல்லாயிரக்கணக்கான பிரம்மாண்டமான கூட்டத்தை

ஈன்றெடுத்த எங்ஙள் தந்நை

மெய்வழிச்சாலை ஆண்டவர்கள்

என்ற அறிவிப்பு காணப்படுகின்றது. இவர்கள், க,த ஆகிய எழுத்துகளை ங என்று எழுதுகின்றார்கள்.

வைகோ ஆலயத்துக்கு உள்ளே நுழைந்தபோது, முரசு அறைந்து வரவேற்றார்கள்.  திருமணத்தை நடத்தி வைப்பவர், மகரந்தர் என்று அழைக்கப்படுகின்றார். அவர், ஒலிபெருக்கியில் திருமண நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். சீக்கியர்களின் பொற்கோவிலில், கிரந்த சாகிப் பாடல்கள் ஒலிபெருக்கியில் பாடுவதுபோல, மெய்வழி ஆண்டவர் இயற்றிய பாடல்களைக் குழுவினர் பாடினர். பின்னணியில் சிங்கி மட்டுமே ஒலித்தது. வேறு எந்த இசைக்கருவியும் இல்லை.

மணமக்களை அழைத்து இருவருடைய சம்மதத்தையும் கேட்டார். அதற்குப்பின்னர், அவர்களுக்குத் திருமணத் துகில் வழங்கினார்கள். அதை அணிந்து வந்தபின்பு, சாலை வர்க்கவான் தாலி எடுத்துக் கொடுக்க, மணமகள் கழுத்தில் மணமகன் கட்டினார். மேளதாளங்கள் எதுவும் இல்லை. கங்கணை ஏற்றல், நிறைநீர்க்குட வேண்டுகோள் தியானம், ஜீவ மரபு நீர் வழங்குதல் உள்பட வரிசையாக சில சடங்குகளைச் செய்தார்கள். திருமணம் இனிதே நிறைவேறியது. சுமார், ஒரு மணி நேரம், இந்த நிகழ்வுகள் நடைபெற்றன. தாலி கட்டும்போது முரசு அறையவில்லை.  ஆனால், கங்கணை ஏற்றலின்போது, முரசு அறைந்தார்கள்.

மெய்வழி ஆண்டவர்

மெய்வழி ஆண்டவர், ஈரோடு மாவட்டம் காசுக்காரன்பாளையத்தில், ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவனாக இருந்தபோது, இயல்பாகவே, ஞானத்தைப் பற்றி நிறையப் பேசிக்கொண்டு இருப்பாராம். தங்களது வீட்டுக்கு வருகின்ற துறவியர்க்கு விருந்து அளிப்பது வழக்கம். அவ்விதம் உணவு அருந்த வந்த ஒரு துறவி கேட்ட கேள்வியைப் பற்றிச் சிந்தித்த ஆண்டவர், துறவறம் பூண்டு, மனைவியையும், மகளையும் விட்டுவிட்டுப் புறப்பட்டார். சுமார் 12 ஆண்டுகள் புனிதப் பயணங்களை மேற்கொண்ட பின்னர், மதுரை திருப்பரங்குன்றம் அருகே வந்து, ஆலயம் ஒன்றைக் கட்டினார். புதிய வழிபாட்டுக் கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். சீடர்கள் உருவானார்கள். சுற்றிலும் குடிசைகளை அமைத்துக்கொண்டு, அங்கேயே வாழத் தொடங்கினர்.

இரண்டாம் உலகப் போரின்போது, 1942 ஆம் ஆண்டு, அந்த இடத்தில், போர் வானூர்திகள் வந்து இறங்குவதற்காக ஒரு விமான நிலையத்தைக் கட்டப்போவதாக அறிவித்த வெள்ளை அரசு, மெய்வழி ஆண்டவரிடம் அந்த இடத்தைக் கேட்டது. அவரும் அதைக் கொடுத்தார். அதற்கு இழப்பீடாக, வெள்ளை அரசு, 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தது.

இனி, வெள்ளையர்களுடைய தொல்லை இல்லாத இடத்துக்குச் செல்வது என்று தீர்மானித்த ஆண்டகை, புதுக்கோட்டை சிற்றரசுப் பகுதிக்குக் குடி பெயர்ந்தார். அங்கே, 100 ஏக்கர் நிலத்தை, வெறும் 6000 ரூபாய்க்கு வாங்கி, அங்கே தமது சீடர்களுடன் குடியேறினார். படிப்படியாக, அவரது பக்தர்களின் எண்ணிக்கை பெருகிற்று. நாடு முழுவதும் அவருக்குச் சீடர்கள் உருவானார்கள். ஆனால், அவர் தமது வாழ்நாளில், திருச்சிக்கு ஒருமுறையும், வேலூருக்கு ஒருமுறையும் மட்டுமே வந்தாராம். தமது பக்தர்களின் அழைப்பின் பேரில் வேலூர் வந்த அவர், அங்கே ஆற்றிய உரை, ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது.

மரணம் இலாப் பெருவாழ்வு என்பதே அவரது தத்துவம். பெயர் என்பது, உடலுக்கு அல்ல, ஆன்மாவுக்குத்தான். மனித ஆன்மாவுக்கு மரணம் இல்லை.  எனவே, இறந்தவர்களுடைய உடல்களை எரிப்பது இல்லை. கணவன் இறந்தால், மனைவி தாலியை அகற்றுவது இல்லை. சட்டத்தின் கட்டுப்பாடுகள் இங்கே இல்லை. ஆயினும், சட்டத்தால் உருவாக்க முடியாத கட்டுப்பாடு இங்கே நிலவுகின்றது. பணத்தை ஒரு பொருட்டாகக் கருதுவது இல்லை.

பாதசாரி என்பவன், பாதையில் நடந்து செல்கிறவன். அதுபோல, பிரம்மத்தை நோக்கி நடப்பவன், பிரம்மசாரி;

பிரம்மத்துடன் இரண்டறக் கலக்க வேண்டும்;

அரியாசனத்தில், சரியாசனம்;

மெய் என்பது, பார்த்தது, கேட்டதைச் சொல்வது.

தமிழ் மொழி, மாறாதது, அழியாதது, நிலையானது என்பவை,

இவர்களுடைய கோட்பாடுகளுள் சில.

எனவே, வழிபாடுகள் அனைத்தும் தமிழில்தான் நடைபெறுகின்றன. ஆண்டவருடைய உரையைக் கேட்டவர்கள், அவரால் ஈர்க்கப்பட்டார்கள். இங்கேயே வந்து, அவருடனேயே வசிக்கத் தொடங்கினர்.

ஆண்டவர் இயற்றிய பாடல்களை, எமன் படர் அடிபடு, மெய்வழி ஆண்டவர் மான்மியம், கோடாயிதக்கூர் என பல புத்தகங்களாக வெளியிட்டு இருக்கின்றார்கள். அந்தப் பாடல்களைத்தான் பாடுகின்றார்கள். மெய்வழிச்சாலையில், மத வேறுபாடுகள் இல்லை. இஸ்லாமியரும் பஞ்சகச்சம் கட்டி, பூணூல் அணிந்து உள்ளார். அரசாங்கத்தின் உயர் பொறுப்புகளிலும், அனந்தர்கள் பதவி வகித்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பரலவலாக, மெய்வழி பக்தர்கள் உள்ளனர். தமிழ்நாடு மின்வாரியத் தலைமைப் பொறியாளர் ஹாலிம், ஒரு மெய்வழி அனந்தர்.

முதிய அனந்தர்கள், சிவப்பு வண்ணக் காவி உடையையும், இளையவர்கள், வெண்ணிற உடைகளையும் அணிகின்றார்கள். இவர்கள் வணக்கம் தெரிவிக்கின்ற முறை மாறுபடுகின்றது. இரண்டு கைகளையும் பின்னந்தலையில் சேர்த்து வைத்துக்கொண்டு, தலையைச் சற்றே முன்புறமாக அழுத்திச் சாய்த்து, வணக்கம் தெரிவிக்கின்றனர். மது, சிகரெட் போன்ற பழக்கங்கள் இல்லை.

மெய்வழிக் குடியிருப்பில், அண்மையில்தான், சூரிய ஒளி மின்சாரம் மூலம் மின் இணைப்புக் கொடுக்கப்பட்டு, சிறிய விளக்குகளைப் பொருத்தி இருக்கின்றார்கள். எல்லா வீடுகளிலும் ஹரிக்கேன் விளக்குகளைத்தான் பயன்படுத்துகின்றார்கள். கேஸ் சிலிண்டர்களையும் பயன்படுத்துவது இல்லை.

மெய்வழி ஆண்டவருக்கு இறப்பு இல்லை; அவர் சாக மாட்டார் என்று மெய்வழித் தொண்டர்கள் கருதினார்கள். ஆனால், 1976 ஆம் ஆண்டு, உடல்நலக்குறைவுற்ற ஆண்டவர் இயற்கை எய்தினார். அவரது உடல், அங்கேயே அடக்கம் செய்து உள்ளனர்.

நெருக்கடி நிலை காலத்தின்போது, மெய்வழியில் கைப்பற்றப்பட்ட தங்கம் அனைத்தும் பக்தர்களால் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டவையே; அவற்றைக் கைப்பற்றியது செல்லாது; மீண்டும் அவர்களிடமே திருப்பி அளிக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

ஆண்டவருடைய காலத்துக்குப்பிறகு, அவரது மகன்கள், சாலை யுகவான், சாலை வர்க்கவான்  இருவருக்கும் இடையே, மெய்வழி சொத்துகள் தொடர்பாக பிரச்சினை எழுந்தது. சாலை யுகவான் இயற்கை எய்தி விட்டார். அவருக்கும் சீடர்கள் உள்ளனர். அவர்கள் தனியாக இயங்கி வருகின்றார்கள். தற்போது மெய்வழியின் தலைவராக, சாலை வர்க்கவான் உள்ளார். இவ்வாறான பிரச்சினைகளால், மெய்வழி வழிபாடு, ஒரு தேக்க நிலையை அடைந்தது. இன்று குறிப்பிட்ட அளவிலேயே அனந்தர்கள் உள்ளனர். சென்னையிலும் உள்ளனர்.

மெய்வழியில் இருந்து திரும்பி வருகின்ற வழியில், ஒருவர் மோட்டார் சைக்கிளைத் தள்ளிக்கொண்ட வந்தார். மெய்வழிக் குடியிருப்புப் பகுதியில், இருசக்கர மோட்டார் வண்டிகள் ஓட்டக் கூடாது. ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் வண்டியைவிட்டு இறங்கி தள்ளிக்கொண்டுதான் வர வேண்டுமாம். அருகே இருந்த திடலில், மெய்வழிச் சிறுவர்கள் அனைவரும், தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தது ஒரு மாறுபட்ட காட்சியாக இருந்தது. ஏதோ பஞ்சாப் சீக்கியர்கள் கிராமத்துக்கு உள்ளே வந்ததுபோல இருந்தது.

பரபரப்பான சென்னையில், நாள்தோறும் பல இலட்சக்கணக்கான வண்டிகளின் கரிப்புகையை உள்வாங்கிக் கொண்டு, இரைச்சல்களுக்கு நடுவே வாழ்ந்து பழகிவிட்ட நமக்கு, பதினெட்டாம் நூற்றாண்டுக் காலத்துக்குப் பின்னோக்கிச் சென்று வந்ததுபோல இருந்தது மெய்வழிப் பயணம்!

- அருணகிரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It