“மதுரை மேலூர் பக்கத்துல ஒரு சினிமா ஆபரேட்டர் பையனுக்கு சினிமா ஆசை வந்துடுச்சு. சினிமாவுல சேந்து எப்பிடியும் பெரிய ஆளா, ஒரு பெரிய டைரக்டரா ஆயிடணும்னு துடியா துடிச்சான் அந்தப் பையன். ஆனா அதுக்காக அவன் கோடம்பாக்கம் பொறப்பட்டுப் போயி நாயா பேயா அலையல. தன் அப்பா வேலை பாத்த கொட்டாயிலேயே அவருக்கு கீழ எடுபிடியா வேல செஞ்சான். இடவேளை உட்டா முறுக்கு, சுண்டல் வித்து மேலும் தன்னோட திறமையை வளத்துக்கிட்டான். அசராத இந்த உழைப்பால சீக்கிரம் அந்தத் தியேட்டருக்கே ஓனர் ஆயிட்டான். அப்புறம் ஏ.வி.எம். மாதிரி ஸ்டுடியோ ஒண்ணு கட்டி, தான் கனவு கண்ட மாதிரி ஒரு டைரக்டரா ‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘ஆட்டோ கிராப்’... இப்போது கடைசியா ‘மாயக்கண்ணாடி’ன்னு தமிழ்ச் சினிமாவையே கழுத்துச் சுழுக்கிக்கிற அளவுக்குத் திரும்பிப் பார்க்கிற மாதிரி படங்களா எடுத்துக்கிட்டிருக்காம்பா.”

“அந்த மேதையோட பேரு சேரனுங்களா?”

“அட, எப்படி இவ்வளவு கரெக்டா சொன்னீங்க?”

“டேய் மடையா... பெத்த புள்ள என்ன படிக்குதுன்னு தெரியாதவன்கூட சினிமாக்காரன் என்னைக்கு பொறந்தான், யாருக்குப் பொறந்தான்கற கதையெல்லாம் நல்லாவே தெரிஞ்சு வச்சுருக்கான். நீ சொன்னதுல ஊரு, பேரு எல்லாம் ரொம்பச் சரியாத்தான் இருக்குது. ஆனா இந்த குமுதம் கடைசி பக்கத்துல போடுவானே ‘இந்தக் கதைகள்ல வர்ற சம்பவங்களெல்லாம் சுத்தக் கற்பனை, பொய்யின்னு...’ அந்த மாதிரி இருக்குது சேரனுக்கு நீ சொல்ற வரலாறு.”

“சரி, வரலாறை உடு சாமி. சினிமா ஆசையில கெட்டுச் சீரழியாம, சொந்தமா அவனவன் தொழிலைப் பாத்தா குடும்பத்துக்காகுமேன்னு ஒரு மனுசன் சொல்றது எப்படி தப்பாவும்?”

“தப்பில்லைதான். ஆனா சொல்றவன் அத்தனை பேரும் அவனவன் அப்பன் தொழில்லேந்து தப்பிச்சு ஓடியாந்து, சம்பந்தமில்லாத வேற ஒண்ணுல போய் பூந்துக்கிட்டு இதைச் சொல்றதல்லவா வேடிக்கை யாயிருக்கு. செத்த மாட்டைத் தூக்குறவனும், மலம் அள்றவனும், காடு கழனியில வேல செய்யுறவனும் தன்னோட பிள்ளைங்களுக்கு தான் செய்யுற தொழிலை தினமும் காலையில கத்துக் குடுத்துட்டு அப்புறமா பள்ளிக்கு அனுப்புங்கடான்னு அந்தக் காலத்து அக்கிரகாரத்து ராஜாஜி குலக்கல்வி திட்டம் கொண்டு வந்தாரு. சீப் மினிஸ்டரா இருந்த அவரை ‘உம்ம குலத்தொழில பார்க்கப் போய்யா’ன்னு தமிழ்நாட்டே தொரத்தியடிச்சது. ‘அவா அவாளுக்கு விதிக்கப் பட்டதைச் செய்தால்தான் இந்த லோகம் ரொம்பத் திவ்யமா, ஷேமமாயிருக்கும்’னு செத்துப்போன சங்கராச்சாரி முதற்கொண்டு, இப்ப உயிரோட இருந்து மத்தவாளைச் சாகடிக்கிற சங்கராச்சாரி வரைக்கும் சொல்ற அருளுரையை சமூக அக்கறை என்ற பெயரில் மூணு மணி நேர படமா எடுத்து நம் தலையில் கட்டியிருக்கும் சேரனை, ராஜாஜியை அனுப்பியதுபோல் பழையபடி சினிமா ஆபரேட்டர் வேலைக்குத்தான் அனுப்ப வேண்டும்.

ஆனா அதுகூட அவங்கப்பாவோட குலத்தொழிலா இருக்க வாய்ப்பில்லையே!

ஒரு பேச்சுக்கு இந்த அப்பன் தொழில் சமாச்சாரத்தை ஒத்துக்கிட்டே ஒரு கேள்வி கேட்கலாம். நம்ம அப்பன், ஆத்தா செய்யுற எந்தத் தொழிலு இன்னைக்கு லாபமா இருக்கு? ரிலையன்சும், வால்மார்ட்டும் வந்து தமிழ்நாட்டுல பாதி சில்லறை வியாபாரிகளை காலி பண்ணி தெருவுக்கு தொரத்திட்டான். நாளையே டாடாவும், இன்போசிஸ் நாராயணமூர்த்தியும் வந்து சேரன் வேலை செய்யச் சொல்லும் பார்பர் ஷாப்பிலும் கால் வைத்து கையில் கத்திரியை பிடிக்கமாட்டார்கள் என்று உத்தரவாதம் கொடுக்க முடியுமா? அப்பனே பொழப்பத்துப் போய் சோத்துக்கு சிங்கியடிக்கும்போது புள்ள போய் யார் மயிரைப் புடுங்க முடியும்?

இந்தக் கருமாந்திரம் புடுச்ச கதைக்கு மாயக் கண்ணாடின்னு பேரு வச்சதுக்குப் பதிலா வெறுமனே கண்ணாடின்னு அவரு பேரு வச்சிருக்கலாம். என்னதான் கண்ணாடி மூஞ்சியக் காட்டுனாலும் அது வலத்தை இடமாவும், இடத்தை வலமாவும்தானே காட்டும்?

சேரன் சொல்வதுபோல் இன்னைக்கு சம்பாதிக்க அலைகிற இளைஞர்களின் கனவு நாயகன் யாரும் கோடம்பாக்கத்தில் இல்லை. அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் பில்கேட்ஸ் என்ற பெயரில் இருக்கிறான். அரைகுறை படிப்பாளிகளும் (அல்லது அறிவாளிகளும்) படிக்க வக்கத்துப் போனவர்களுக்குமே கோடம்பாக்கத்தை குறி வைக்கிறார்கள். அவர்களின் முதல் கனவு கூட பணமல்ல, புகழ் பெறும் ஆசைதான்.”

“குலத்தொழிலு கதைய வுடுங்கண்ணே. சினிமா ஆசையில கெட்டுச் சீரழியாதீங்க, மொதல்ல அதுக்குண்டான தெறமைய நல்லா வளர்த்துக்கங்கன்னு சொல்றாரே... அதுவும் வேணாங்கிறீங்களா?”

“ஏம்பா ஒன் நெஞ்சுல கை வச்சி சொல்லு... இப்ப இருக்குற விஜயகாந்து, நெப்போலியன், சரத்குமாரு மாதிரி நடிப்புச் செம்மலுங்க எல்லாம் தன்னோட தெறமையாலதான் சினிமாவுக்கு வந்தாங்களா, இல்ல வந்த பிறகுதான் அந்தத் தெறமைய வளத்துக்கிட்டாங்களா? அப்படியில்லாதபோது மத்தவங்களுக்கு மட்டும் ஏன் தகுதி, திறமை அளவுகோலை சொல்றாரு சேரன். இது சுத்தப் பார்ப்பனியச் சிந்தனையா ஒனக்குத் தெரியலையா? இளைஞர்களுக்கு நல்வழிகாட்டுறேன்னு படமெடுக்கிறவன், தான் எந்த ரூட்டுல உள்ளே போனானோ அந்த ரகசியத்தை மத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறதுதானே நியாயம். அத உட்டுப்புட்டு எப்படியோ இவுங்க உள்ள போய் நல்லா செட்டிலாயிட்டு, புதுசா வர்றவனுக்கு ‘வராதே’ன்னு கதவடைக்குறது அயோக்கியத்தனம் இல்லையா?”

“ஒருவேளை அவுங்க போன ரூட்டு நாலு பேருக்குச் சொல்ற மாதிரி கௌரவமா இல்லாமலும் இருக்கலாமில்லையா? அப்படி ஒரு அசிங்கமான சமாச்சாரத்தை எப்படிச் சொல்ல முடியும்?”

“இளைஞர்களுக்கான தீப்பந்தம், தீவட்டின்னு விளம்பரத்துல சொன்னா போதுமா? உண்மையைச் சொல்லும் துணிச்சல் கொஞ்சமாவது வேண்டாமா? கள்ளப்பணம், விபச்சாரம், கந்துவட்டி, உழைப்புச் சுரண்டல் இல்லாமல் ஒரு தமிழ் சினிமாவை எடுத்துவிட முடியுமா? தன் துறையில் மலிந்திருக்கும் இத்தகைய கேடுகளை பற்றிய சுய விமர்சனம் செய்ய வக்கற்றவன் பிற, ஒட்டுமொத்த சமூகத்தின் கேடுகளைச் சாட உரிமை பெறுவது எப்படி? சாக்கடையாப் போச்சுன்னு சொல்ற அரசியல்வாதிங்ககூட ஒருத்தர இன்னொருத்தவர் விமர்சனம் பண்றாங்க. இன்னும் ஒருபடி மேல போய் தங்களையேகூட சுயவிமர்சனத்துக்கு உட்படுத்திக்கிறாங்க. பாபர் மசூதியை இடிச்சதுக்காக அத்வானி நெறய தடவை அழுதிருக்காரு (!). பா.ச.க.வோடு சேர்ந்த தப்புக்காக ஜெயலலிதா கேட்ட மன்னிப்பில் காம்ரேடுகளே கதிகலங்கி போனார்கள்.

இந்தக் குறைந்தபட்ச ‘நேர்மை’கூட இல்லாம சமூக அவலங்களைச் சாட தொடை தட்டி கிளம்புவது ஏன்?

இந்த மாயக்கண்ணாடி கதையை கொஞ்சம் மாற்றி, சேரனுக்குப் பதில் கதாநாயகி நவ்யா சினிமா வாய்ப்புக்காக அலைவதாகக் கதை பண்ணியிருந்தால்...?

ஒட்டுமொத்த தமிழ்ச் சினிமாக்காரர்களின் லட்சணத்தையும் ஒரே வரியில் போட்டுடைக்கிற மாதிரி ஒரே வரியில் படத்தின் கதையை இப்படிச் சொல்லலாம்:

சேரனை கேட்டுக்கு வெளியே நிறுத்திய கோடம்பாக்கம், நவ்யாவை படுக்கையறை வரை அழைத்துச் சென்றிருக்கும்.

- தீஸ்மாஸ் டி செல்வா

Pin It