இதுவரையிலான தமிழ்சினிமாக்களின் பார்வையை முதன்முறையாக உடைத்து நொறுக்கிய சினிமா என்றளவில் பரியேறும் பெருமாள் உலகத் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பரியேறும் பெருமாள் பற்றி பலரது பார்வைகளில் பலவிதமாக விவாதிக்கப்பட்டு வரும் சூழலில் அது குறித்த எனது பார்வையை பதிவு செய்தல் சரியானதாக இருக்கும்.  ஏனென்றால் நான் 2005 ல் நெல்லை சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவந்தேன். பரியன் எனக்கு இரன்டாண்டுகள் ஜூனியர். மேலும் கல்லூரியில் அப்போது நான் தீவிர எஸ்.எப்.ஐ மாணவர் போராளி என்பதால் அனைத்து தரப்பு மாணவர்களையும் நுட்பமாக கவனித்து வந்தேன். ஒரு கல்லூரியில் எஸ்.எப்.ஐ கிளை என்பதை தாண்டி அப்போது கல்லூரியின் ஒவ்வொரு வகுப்பிலும் எஸ்.எப்.ஐ ஆக்டிவிஸ்ட்டுகளை உருவாக்கிக்கொண்டிருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் பரியனை கண்டுகொண்டதே இல்லை. அப்போதே கல்லூரி வளாகத்தில் தீண்டாத வசந்தமும், காம்ரேட்டும், தாயும் விவாதிக்கப்பட்டாலும் பரியனின் துயரங்களும், அவனது எதிர்பார்ப்புகளும் என்னை வந்தடையவில்லை. அவனது புன்னகைகள் மட்டுமே அவ்வப்போது என்னை கடந்துசெல்லும்.
 
pariyerum perumal 601பரியன் ஒரு தனிமனிதன். அதிலும் அவனொரு பட்டியல் சமூக தனிமனிதன். அவன் அவனுக்காக அழைத்தால் மாணவர் அமைப்புகளும், சக பட்டியல் சமூக அதிலும் குறிப்பாக அவனது தேவேந்திரர் சமூக மாணவர் திரளும் திரண்டுவிடும். ஆனால் அதை அவன் திரட்டுவது பற்றி அவன்தானே முடிவுசெய்ய வேண்டும். அவன் ஏன் அப்படிச் செய்யவில்லை? அவன் கோழையா? இல்லை. பரியன் அன்பினால் நிறைந்தவன். அவன் கல்லூரிக்கு பத்துநாட்கள் விடுமுறை எடுத்ததும், பதிலடி கொடுக்காததும் அவனது ஆராதனைக்குரிய ஜோ என்ற அப்பெண்ணின் நலனை மனதில்வைத்துதான். தன் மீது சிறுநீர் கழித்த ஜாதிவெறியர்களின் நோக்கம் ஜாதிவெறியும் கூடவே ஜோ மீதான பயமும்தான் என்பதை அவன் அறிவான். ஜோ அப்பாவிப் பெண்ணா இல்லை அவளொரு ஒரு தேவதை. வன்மமறியாதவள், ஜாதீயக்குரூரம் அவளை ஆட்கொள்ளாத 2k பெண். நீங்கள் கேட்கலாம் இப்போதும் பல ஜாதிவெறி பிடித்த பெண்கள் இல்லையா என்று. ஆம் 18 வயதில் என்பது வயது கிழட்டுச்சிந்தனைகளோடு சிலபல ஜென்மங்கள் உலாவத்தான் செய்கின்றன. ஆனால் அவள் அப்படி இல்லை. அவள் உண்மையாகவே பரியன்களுக்காக இரக்கப்படும், காதல் அரும்பும் 19 வயது விடலைப் பெண். எனவே ஜாதிவெறிக்காட்டச்சிகளோடு ஜோவை சமப்படுத்தாதீர். அதற்கு இன்னொரு காரணம் ஜோவின் தந்தை. அவர் பழைய மதிப்பீடுகளின் மீது ஆர்வமற்ற அவற்றை விட்டுவிட்ட முதலாளித்துவ நபர். தனது செல்ல மகள் மீது அன்பை பொழிபவர். ஆனால் பாவம் ஜாதிசமூகத்திற்கு பயப்படும் மனிதர் அவர்.
 
எங்கள் கல்லூரி பரியன்களாலும் ஜோக்களாலும் ஆனந்த்களாலும் கேலி கின்டல் என மகிழ்ச்சியான வளாகமாக இருந்தாலும் ஜோவின் பெரியப்பா மகன் மற்றும் பதிலடி குரூப்புகளால் அவ்வப்போது ரத்தம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. இவர்களால் கொண்டுவரப்படும் சைக்கிள்செயின்,பட்டாக்கத்திகளும் இருபக்கமிடமிருந்தும் போலீஸ் பறிமுதல் செய்வதும் வழக்கு பதிவு செய்வதும் வழக்கமாகவே இருக்கும். இதுதான் எதார்த்தமான கல்லூரி சூழல். ஜாதிக்கலவரங்களை கலவரமாக மட்டும் பார்ப்பது புரிதலற்ற முட்டாள்த்தனம். அதன் வேர் ஜாதீய வன்கொடுமைகளில்தான் இருக்கிறது என்ற புரிதல் முக்கியமானது.
 
பரியன் இருபக்கமிடமும் விலகி இருக்கும் ஒரு நல்ல மாணவன். அதற்காக ஒழிந்து ஓடும் மாணவனல்ல. ஆங்கிலப் பேராசிரியரிடம் பதிலுக்கு முறுக்கி உண்மையை தேடுகிறான். ஆனால் அவனுக்கு இம்போசிஷன்தான் கிடைக்கிறது. அப்படித்தான் அவன் அன்பை தேடும் இடங்களிலும் அவனுக்கு கிடைப்பதென்னவோ இம்போசிஷன்தான். இதை படம் எதார்த்தமாக பேசிச்செல்கிறது.
 
நெல்லை மண் குரூரங்கள் நிறைந்த பூமி. தமிழ் மண் மட்டுமல்ல இந்திய மண்ணும் ஜாதீயக்குரூரங்களில் நெல்லைக்கு ஈடு குறையாததானே. படத்தில் காட்டப்படும் ஆணவக்கொலைகளே இதன் சாட்சியம். வினோத் அம்பேத்கார் இயக்கிய 'குறியீடு' என்ற குறும்படம் பரியேறும் பெருமாளை பார்க்கும்போது ஞாபகத்திற்கு வந்தது. ஏனென்றால் இரன்டிலும் நெல்லைக்கு கிழக்கேயுள்ள கிராமங்களே கதைக்களங்கள்.
 
நெல்லைக்கு கிழக்கே உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதி அழகான பச்சைப்பசேலென விரியும் தாமிரபரணி ஆற்றங்கரை சமவெளி. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிகள் நடந்த ஆதிமனிதர்கள் நாகரீகம் பெற்ற பகுதிகள் இங்குதான் உள்ளன. படத்தில் கதைநாயகனின் கிராமமான புளியங்குளமே ஆதிச்சநல்லூர் எனலாம். வயல்களும் வாழைத் தோட்டங்களும் எங்கெங்கு காணினும் பசுமையை பரப்பியிருக்கும். கருத்த மனிதர்களின் உழைப்பால் நூற்றாண்டு கடந்த செழிப்பு தவழும். நிலங்கள் பெரும்பாலும்  கோயில்நிலங்களாகவே இருக்கின்றன. நிலங்களின் குத்தகைதாரர்களாக குறிப்பிட்ட சில ஜாதியினர் இருக்கிறார்கள். ஆனால் உழவர்களோ பெரும்பாலும் பள்ளர்கள். ஒவ்வொரு குத்தகைதாரரும் ஒரு உழவனை வைத்திருப்பார். இது நில உறவில் முரன்பட்டதொரு முறை. ஏனென்றால் இங்கே குத்தகைதாரர் கிட்டத்தட்ட நிலத்தின் உரிமையாளரே. குத்தகையாளருக்கு சட்டபூர்வ உரிமைகள் உள்ளன. ஆனால் உழவர்களுக்கு அப்படிப்பட்ட சட்டபூர்வ ஏற்பாடுகள் கிடையாது. படத்தின் முதல்காட்சியில் சிறுகுட்டையில் சிறுநீர் கழிக்கும் நபர்கள் பேசும் சிறுக்கியுள்ளயோ என்ற வசனத்திற்கு பின்பு அழகானதொரு ஒளிப்பதிவில் இந்தப்பக்கம் பேசுவோரின் வசனத்தில் இது உணர்த்தப்படும். நம்ம தாத்தனும் அப்பனும் அவங்களுக்கு உழவனா போகிறவரை இப்படித்தாம்ல என்ற வசனத்தில் இது விரியும். இப்படிப்பட்ட பல காட்சிகள் சில பெருங்கதைகளை எளிதாக படத்தில் சொல்லிச் செல்வது படத்தின் சிறப்பு. ஜாதீயத்தை நிலைநிறுத்துவதில் நிலங்களின் நிலஉறவுகளுக்கும் அதன் எல்லைகளுக்கும் முக்கியபங்குண்டு. படத்தில் பரியன் வகுப்பறையில் வில்லனின் டெஸ்க்கில் அமரும்போது வில்லன் இது என் இடம் இங்கே உட்காரக்கூடாது என்பான். பரியன் நான் இங்கேதான் இருப்பேன் எனும்போது வில்லன் பரியனை அவமானப்படுத்தியதை சொல்லிக்காட்ட உடனே பரியன் வில்லனை ஏறிப்போய் தாக்குவதே 1995முதல் தென்தமிழக ஜாதிக்கலவரத்தில் நடந்தது.
 
இங்கே உள்ள இடம் அதன் நிலை அதற்கான மறியாதை யாருக்கு? என்பதை கேள்விகளுக்குட்படுத்தியதால் அப்போது தென்தமிழகம் ரத்தபூமியாக பத்தாண்டுகளுக்கு தொடர்ந்தது. பரியனை தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் தூக்கிச்சென்று கொலைவெறித்தாக்குதல் நடக்கும்போது பரியன் அதிலிருந்து தப்பி தனது எல்லைக்குள் வந்தவுடன் ஒத்தையாக இருந்தாலும் திரும்பி நிற்கிறான். ஆனால் எதிரிகள் பதருகிறார்கள். அதிலும் போராடடா ஒரு வாளேந்தடா பாடல் எங்கோ எதிரொலிக்க அதன்பின்பு பரியனிடம் மரபனுவிலிருந்து எழும்பும் கிளர்ச்சியில் எத்தனை பேர்னாலும் வாங்கடா என்ற ஆக்ரோஷம் கிளம்புவதும் அதேபாடலுக்கு எதிரிகள் பயப்படுவதும் இங்கே எதார்த்தமான சூழல்.
 
ஜாதி ஆதிக்க சமூகத்தில் பிறந்தாலும் நட்பை ஜாதிபார்த்து ஏற்படுத்தாத ஆனந்த்களைப்பற்றி இங்கே ஆயிரம் புரானங்கள் உருவாக வேண்டும்.  அதுவே தமிழ்ச்சமூகத்தில் அன்பை பரிமாறும் உன்னதமான வேலையாகும். பெரியாருக்கும் ஆனந்த்களுக்கும் ஜோக்களுக்கும் பெரியதொரு வேறுபாடுகளில்லை. 
 
பரியேறும் பெருமாள் நாயகனின் தந்தையை எளிய சம்படி ஆட்டக்காரராக உள்ளூர் மொழியில் சிக்கான்டி ஆட்டக்காரராக காட்சிப்படுத்தியது முதல் பல புது முயற்சிகளில் இயக்குநர் மாரி செல்வராஜ் ஈடுபட்டு இருக்கிறார். ஆனால் அவைதான் இங்கே எதார்த்தமானதாக இருந்ததை இவ்வளவு நாட்களும் தமிழ்சினிமா கண்டுகொள்ளாமல் இருந்துள்ளது. பா.ரஞ்சித் போன்ற தயாரிப்பாளர்கள் இல்லையேல் பரியேறும் பெருமாள் பெருஞ்சாதனை படைக்க வாய்ப்பே இல்லை.  ஏனென்றால் இங்கே வாய்ப்புகள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வாய்ப்பு பெறும் உரிமைகள் கூட சலுகைகளாக பெயர் மாற்றம் பெற்று இழிவு செய்யப்படும் துயர்மிகு மண்ணே நமது சூழலாயிருக்கிறது.
 
படத்தில் வரும் கருப்பி நாய் முதல் போகிறவருவோர்களைக் கூட தனது திரைக்கதையின்படியாக நடிக்க வைத்துள்ள மாரிசெல்வராஜ் திறமையான கற்பனைவளமிக்கவராக இருக்க வேண்டும்.  பல காட்சிகளில் மங்கலாக தெரிபவர்கள் கூட எதார்த்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். கதிரும் ஆனந்தியும் யோகிபாபுவும் கொலைகாரதாத்தாவும் அசலென வாழ்ந்திருக்கிறார்கள். பரியனின் அப்பாவாக பரியனாலும் ஆனந்தாலும்  கல்லூரியில் நடிக்க இரன்டு புல் பாட்டிலுக்கு அழைத்துவரப்படும் சம்பள அப்பாவாக ஒரு காட்சியில் வந்தாலும் பின்னிப்பெடலெடுத்திருப்பார் நடிகர் சண்முகராஜ். அதே போல ஜோவின் அப்பாவாக வரும் இயக்குநர் மாரிமுத்துவும் இன்னொரு வில்லன் லிஜிசும் நம்பியாருக்கு பின்னர் தியேட்டர்களில் வசவு வாங்குகிறார்கள். 
 
கருப்பி, நான் யார் என அனைத்து பாடல்களிலும் திறமையை காண்பித்த சந்தோஷ்நாராயணன் பிஜிஎம்மில் அவ்வளவு தூரம் ஈர்க்கவில்லை. இவ்விடத்தில் யுவன் இருந்தால் என யோசிக்கவைக்கிறது. ஒளிப்பதிவு அட்டகாசங்கள் செய்திருக்கின்றன.
 
பரியேறும் பெருமாள் - ஈரானிய சினிமா போன்ற அசல் தமிழ் சினிமா. வாழ்த்துக்கள் மாரிசெல்வராஜ்!
 
 - பிரபு ஜீவன் (வழக்கறிஞர்)
Pin It