John Rawl என்ற அரசியல் அறிவியல் அறிஞர்தான் முதலில் இட ஒதுக்கீட்டின் நியாயத்தை கொள்கை வடிவில் எடுத்துரைத்தார். Positive Discrimination என்ற அந்த கொள்கை அவருக்கு முன்பாகவே நிறைய அறிஞர்களுக்கு தோன்றியிருந்தாலும்கூட  John Rawl-லே  அதனை முறைப்படுத்தினார்.

விஷயம் ரொம்ப எளிமையானது! அதாவது, இதுவரை அடக்கப்பட்ட, உரிமைகள் ஒடுக்கப்பட்ட மக்களையும், இதுவரை உரிமைகளை அனுபவித்து வந்த மக்களையும் ஒரே தராசுத் தட்டில் வைத்துப் பார்க்கமுடியாது என்பதுதான் அது.

"சமூகம் சீராகிவிட்டது, ஆகவே நீங்கள் எல்லோரும் சமம்" என்று அறிவித்துவிட்டால் கண்டிப்பாக சமூகம் சமமாகிவிடாது. அது மீண்டும் பழைய நிலைமையில்தான் தொடரும்! ஆக மேட்டினை வெட்டிப் பள்ளத்தில் போட்டால் தான் சமதளம் கிட்டும் என்பதுதான் இந்த கொள்கையின் அடிநாதம்.

மேலே குறிப்பிட்ட மேடு, பள்ளம் என்பதெல்லாம் சரிதான்! அதற்காக, இதுவரை உரிமை அனுபவித்தவனுக்கு, சுத்தமாக உரிமை மறுத்தலும், உரிமையை இழந்தவனுக்கு முழுமையாக உரிமையை அளிப்பதுவும் தவறானது. ஆகவே, உரிமைகளை மற்றும் பலன்களை அனுபவிக்க, மேல்தட்டுக்கு பொதுபோட்டியும், கீழ்த்தட்டுக்கு அவன் இடத்தை யாரும் கைப்பற்றி விடாவண்ணம், உறுதி செய்தலும்தான் இடஒதுக்கீட்டின் அடிப்படைக் கருத்து!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக படித்து வந்த சமூகம், அத்துணைக் காலம்  கடைநிலை ஊழியம் செய்த சமூகத்திடம் நேரடியாக போட்டி போட்டால் யார் வெற்றி பெறுவார்கள்! கண்டிப்பாக இரத்தத்திலேயே கல்வி ஊறிப்போனவன்தான் வெற்றி பெறுவான்! இது எந்தவகையிலும் நீதியாக இருக்கமுடியாது! சமூக நீதி, பலன்கள் சரியாக சென்றடையும்போதுதான், சமூக நீதி என்றே அழைக்கப்படும்!

அது போகட்டும்!

இடஒதுக்கீட்டினை ஏதோ சலுகை எனக்கருதி, அதனால்தான் எனது வாய்ப்பு பறிபோனது என அரசாங்கத்தை சபிக்கும் பலரை கண்டிருக்கிறேன்! தோழர்களே! இட ஒதுக்கீடு ஒன்றும் சலுகை அல்ல. அது காயப்பட்ட இனங்களின் மனதில் பூசவேண்டிய களிம்பு. அது உரிமை.

இட ஒதுக்கீட்டினைப் பெறாதோர், பெறத் தகுதியானோர்க்கு வழி விடுவது கடமை.

அமெரிக்காவில் கூட இடஒதுக்கீடு உண்டு! கறுப்பர்களுக்கு!

ஆப்ரிக்காவிலிருந்து கொத்தடிமைகளாக, விலங்குகளைப் போல விலைக்கு வாங்கி வரப்பட்ட கறுப்பர்கள், இன்று சலுகை பெறுவதுதான் நியாயம்!

ஒரு கதை சொல்லுகிறேன்! அது உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது! ஆஸ்திரேலியா-வின் பூர்வகுடிகளான பிண்டுபு-க்களை அழிக்கத் திட்டம்போட்ட அரசு ஒரு அறிவிப்பினை வெளியிட்டது! அது என்ன தெரியுமா?! ஒரு பூர்வகுடியை வேட்டையாடி அவன் உடலைக் கொண்டுவந்தால், கொண்டுவந்தவனுக்கு  ஒரு  டாலர் பரிசு! இது நிகழ்ந்தது 17-ம் நூற்றாண்டில். குலை நடுங்கும் இந்த அறிவிப்பினை வெளியிட்டதால் எத்தனை உயிர் மாண்டு போயினவென்று தெரியுமா மக்களே!!! அதற்கு Kevin Rudd மன்னிப்பு கேட்டார்தான்! ஆனால், மன்னிப்பு மட்டும் மருந்தில்லை! அதற்கு மேலும் தேவை இருக்கிறது! அதுவே இட ஒதுக்கீடு!

சக மனிதனை, சாதியின் பெயரால் விலங்கை விட கேவலமாக நடத்திய சமூகம்தான் இந்திய சமூகம்! குடிக்கும் தண்ணீரிலிருந்து வாழும் வீடு வரை, தாழ்த்தப்பட்ட மக்களைத் தனியே பிரித்து வைத்த சமூகம் இந்திய சமூகமே!
செருப்பணிய, மேலாடை அணியத் தடை இருந்தது! சில தெருக்களில் காலால் கூட நடந்து செல்லக் கூடாது! நெஞ்சால் ஊர்ந்தே செல்லும் கொடுமை! இவ்வாறு சக மனிதனை நடாத்திய சமூகத்தை எங்காவது கேட்டதுண்டா?  

எந்த ஒரு நாட்டிலும் நடந்திராத, கற்பனை கூட செய்யமுடியாத கொடூர சித்திரவதைகளை இந்திய தலித்து மக்கள் அனுபவித்திருக்கிறார்கள்! இன்னும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்! இதற்கான தீர்வான இட ஒதுக்கீட்டை, தங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக நினைக்கும் ஒரு சில சமூக மக்களைக் குறி வைத்துத்தான் இந்தக் கட்டுரையே எழுதப்படுகிறது!

மனு தர்மம் என்ற நச்சு, ஆரியர்கள் தவிர மற்றோர் அனைவருக்கும் உரிமைகளை மறுத்தது! இன்னும் கூட இந்திய அரசாங்கம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் தனது அரசியலமைப்பு சட்டம் மனு தர்மத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது எனக் கூறிக்கொள்கிறது! அம்பேத்கரை 'மாடர்ன் மனு' என விளிக்கும் புத்தகங்களைக் கூட உண்டு! இதைவிட மோசமாக அம்பேத்கரை யாரும் கேவலப்படுத்திவிடமுடியாது!

இந்தியாவின் இடஒதுக்கீட்டு நிலை என்ன?
குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு!

1979 வருடம் மண்டல் ஆணையம் தங்களின் அறிக்கையை அரசுக்கு சமர்பித்தது! அதன்படி இந்தியாவின் 27% (1931-census)  உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசுப் பணிகளில் 27% க்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்! நாடெங்கிலும் எழுந்த எதிர்ப்பால் அதை கிடப்பில் போட்டது அரசாங்கம்! பத்து வருடங்கள் கழித்து 1989- ல் அதை தூசி தட்டிய வி.பி.சிங் அரசு, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டு சட்டத்தைக் கொண்டுவந்தது!

பிற்படுத்தப்பட்டோர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் அது பொதுப் பட்டியலை பாதிக்கும் எனக் கருதிய பொதுப்பட்டியலை சேர்ந்தோர், ஒரு மதவாத தேசியக்கட்சியின் மறைமுக ஆதரவோடு கடுமையாக எதிர்த்தனர்.

ஒரு கல்லூரி மாணவன் தன்னையே எரித்துக் கொண்டு மாய்ந்தான்! இட ஒதுக்கீடு-வழக்காயிற்று! அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிகபட்சம்  ஐம்பது சதவீதத்திற்குள்ளாக நாட்டின் மொத்த இட ஒதுக்கீட்டையும் அடக்கிவிடவேண்டும் என்றும் மீதமுள்ள ஐம்பது சதவீதம் பொதுப்போட்டிக்கு விடப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதாவது 27% பதவிகள்/இடங்கள் OBC இனத்தவருக்கும் 15% பதவிகள்/இடங்கள் SC இனத்தவருக்கும் 7.5% ST இனத்தவருக்கும் ஆக மொத்தம் 49.5% க்குள், இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. மீதமுள்ள 50% பதவிகள்/காலியிடங்கள் பொதுப்போட்டிக்கு விடப்பட்டது! இந்த சதவிகிதங்கள் எல்லாம் நாட்டில் உள்ள அந்தந்த சாதியினரின் விகிதாச்சாரத்தின்படியே (1931-census)வழங்கப்பட்டது! நாட்டில் உள்ள OBC இனத்தவர்களின் விகிதம் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாயிருக்கலாம் என்பதாலும், அவ்வினத்தவர்க்குள்ளாகவே சமூக அங்கீகாரம், மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றுள் மிகுந்த வேறுபாடு இருப்பதாலும், Creamy Layer என்ற வடிகட்டும் உத்தியை பயன்படுத்தியது அரசாங்கம்!
அதாவது, பொருளாதார ரீதியாக பிரியாத ஒரு OBC குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு குறைந்திருந்தால் மட்டும் இட ஒதுக்கீட்டை அவர்கள் அனுபவித்துக் கொள்ளலாம். ஆகவே இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு OBC மாணவர்கள், வருடத்திற்கு ஒரு முறை தங்களின் ஆண்டு வருமானச் சான்றிதழை, வட்ட அலுவலரிடம் சமர்ப்பித்து அதற்கேற்ப புதிய சாதிச்சான்றிதழைப் பெறவேண்டும்.

கொஞ்ச நாட்களாக Creamy Layer என்ற வருமானம் உயர்ந்த பிரிவினை, OBC-க்களுக்கு இருப்பது போல SC/ST பிரிவினருக்கும் அறிமுகப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

SC/ST பிரிவினரில் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி பணியில் இருப்போர், பொருளாதாரத்தில் உயர்ந்திருப்பதாகவும், ஆகவே அவ்வாறு முதல் தலைமுறையில் இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தியவர்கள் இரண்டாவது தடவையாக பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் அல்லது, SC/ST பிரிவினருக்கிடையே  Creamy Layer என்ற ஒன்றை அறிமுகப்படுத்தவேண்டும் என்றும் குரல்கள் ஒலிக்கின்றன! இது குறித்து உச்ச நீதிமன்றம் கூட ஒரு முறை தன் குரலை எழுப்பியிருக்கிறது.

இதில் சில கேள்விகள் எழுகின்றன.

1. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சமூக அந்தஸ்தினை/அங்கீகாரத்தினை வழங்கிவிடுமா?
2.பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட Creamy Layer  என்ற கோடு OBCக்களுக்கு இருப்பது போல SC/ST பிரிவினருக்கும் அறிமுகப்படுத்துவதில் என்ன பிழை?

ஏழை மக்களுக்கு, அவர்கள் உயர்ந்த சாதியினராகவே இருந்தாலும் கூட பத்து சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற நரசிம்மராவ் ஆட்சிகால சட்டத்தினை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஆக உச்சநீதிமன்றம், பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்பது தெளிவாகிறது. அதாவது, பொருளாதார ரீதியாக குறைந்திருந்தாலும் சமூக அங்கீகாரத்திற்கு குறைவில்லை என உச்ச நீதிமன்றம் ஒத்துக் கொண்டதாகத்தான் பொருளாகிறது. இந்த உத்தரவை அரசும் ஒப்புக்கொண்டது.

இதற்குக் காரணம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்துக்கள் 16 ன் படி  State may discriminate the socially and educationally backward classes for public employments (Positive dicrimination) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Economically backward classes என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் அதே நீதிமன்றம் 1992 ல் நடந்த மண்டல் வழக்கில் OBCக்களுக்கு Creamy Layer என்ற கோட்டினை வரையறுத்தது. அது ஏனென்ற காரணம் தெளிவாகப் புரியவில்லை!

OBCக்களுக்கு creamy Layer விதித்ததற்கு, கீழ்க்காணும் விஷயங்கள் காரணங்களாகக் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கலாம.

1.  பொருளாதார ரீதியான முன்னேற்றம் OBC பிரிவினரிடையே, வாழ்வதற்குப் போதுமான சமூக அங்கீகாரத்தை வழங்கமுடியும் என நீதிமன்றம் கருதியிருக்கலாம்.

2. OBC பிரிவில் சாதிகளின் எண்ணிக்கை அதிகம். பொருளாதார வேறுபாடுகளும் அதிகம். ஆகவே அவர்களுக்குள்ளாக பொதுவான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் பிற்காலத்தில் உள் ஒதுக்கீடு வழங்க நேரிடலாம். எனவே இட ஒதுக்கீட்டுக்கு தகுதியான வட்டத்தைச் சுருக்க பொருளாதார நிலையை ஒரு நியாயமான காரணமாக நீதிமன்றம் கருதியிருக்கலாம்.

ஆக மேற்கூறிய காரணங்களின் மூலமாக, அரசியல் சட்டத்தில் இல்லாத 'பொருளாதார நிலையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு' என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது தெளிவாகிறது.  

SC/ST பிரிவில் creamy layer முறையை அறிமுகப்படுத்துவதற்கு மேலே கூறியவை போன்ற நியாயங்கள் வேண்டும். மேலே கூறிய நியாயங்கள் SC/ST பிரிவினருக்குப் பொருந்துமா?

சில உதாரணங்களைப் பார்ப்போம்.

1. கொஞ்ச நாளைக்கு முன்னர் The Hindu நாளிதழில் matrimonial பகுதியில் ஒரு விளம்பரம் வெளிவந்திருந்தது. அழகிய குணவதியான பெண்ணுக்கு வரன் கேட்டிருந்தார்கள்.  No Caste bar என்றும் போட்டிருந்தார்கள். கூடவே  SC/STs Please excuse என்றும் போட்டிருந்தார்கள். அவன் எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும் சரி.

2. திண்ணியம் என்ற இடத்தில் ஒரு தலித்தின் வாயில் மலத்தைத் திணித்து வேடிக்கைப் பார்த்தார்கள்.

3. பாப்பாப்பட்டி மற்றும் கீரிப்பட்டி ஆகிய பஞ்சாயத்துகளுக்கு எத்தனை வருடங்கள் தேர்தலே நடைபெறாமல் இருந்தது என உலகத்துக்கே தெரியும்.

4. உத்தபுரம் என்ற கிராமத்தில் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டபோது எழுந்த எதிர்ப்பலைகளை நாடறியும்.

5. மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை நிகழ்ந்து வருகிறது. அதனை நாடெங்கிலும் இன்னும் செய்து வருவது தலித்துக்களே!

6.குப்பை அகற்றும் தொழிலாளர்கள் (தோட்டிகள்) எனப்படும் அரசாங்க வேலைக்கு தலித்துக்களைத் தவிர எத்தனை பிற சாதியினர் செல்கிறார்கள்?

6. இன்றும் இந்தியாவில் ஒரு மணிநேரத்திற்கு இரண்டு தலித் வீடுகள் எரிக்கப்பட்டு வருகின்றன.

7. பாலியல் வன்கொடுமைகள் இன்றும் பல தலித் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து வருகின்றன.

பொருளாதார வளர்ச்சி தலித்துகளுக்கு சமூக அங்கீகாரத்தை அளித்துவிடப்போவதில்லை.

இதற்கு சில உதாரணங்கள்.

ஒரு உயர் நீதிமன்றத்தில் புதிதாகப் பதவியேற்ற ஒரு நீதிபதி, அதற்கு முன்பாக அந்த நாற்காலியில் அமர்ந்திருந்த தலித் நீதிபதியால் தீட்டுப்பட்டதாகக் கருதி அதற்கு கோமியம் தெளித்து தீட்டுக் கழித்திருக்கிறான். நீதி நிலைத்துவிடும்தானே?! நீதி தேவதையே மூர்ச்சையாகியிருப்பாள்

கடந்த மார்ச் மாதம் ஒய்வு பெற்ற  A.K.ராமகிருஷ்ணன் என்ற தலித்,  Inspector General of Posts ஆக இருந்தவர். அவர் ஒய்வு பெற்ற அன்று, அவரின் அறைக்கு கோமியம், பசுவின் சாணம் ஆகியவை தெளிக்கப்பட்டு தீட்டு கழிக்கப்பட்டுள்ளது. விஷயம் வெளியே தெரிந்துவிட்டதால் அடுத்தநாள் அலுவலகம் முழுவதும் அதே சடங்கு செய்யப்பட்டு மூடிமறைக்கப்பட்டது. இது நடந்தது, நாட்டிலேயே அதிகமாக கற்றோர் வாழும் மாநிலமான கேரளத்தில். (http://scstemployees.blogspot.com/2011/04/sc-officer-room-cleansed-by-cow-dung.html)

தணிக்கை செய்யும் ஒரு மத்திய அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரிடம் சென்று சற்று நேரம் பேசிப்பாருங்கள். உங்களிடம் நட்பைத் தொடரும் அளவுக்கு நீங்கள் ஒரு சுவாரஸ்யமான ஆளாக இருந்தால், உங்களிடம் நட்பைத் தொடர வேண்டும் அவர் எண்ணினால், அடுத்த கேள்வி உங்கள் சாதி பற்றியதாகத்தான் இருக்கும். இந்தியா முழுக்க இருக்கும் அந்த அலுவலகங்களில் இது தான் நிலை.  

இந்த நிலையில், பொருளாதார நிலையின் அடிப்படையில் SC/ST பிரிவில் creamy layer முறையை அறிமுகப்படுத்துவது என்பதும் அது குறித்து பேசுவது என்பதுவுமே சமூக நீதியை மறுதலிப்பது போலாகும். அதையும் மீறி SC/ST பிரிவில் இட ஒதுக்கீட்டுக்கு creamy layer முறை வேண்டும் என்று கேட்போருக்கு அந்த இனத்தவருக்குள்ளாகவே கலகம் மூட்டி விடும் எண்ணத்தைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?

SC/ST மக்களுக்குள்ளாகவே, ஒரு மெல்லிய கீறல் இது போன்ற பேச்சுக்களால் உருவாகியுள்ளது. நீங்களெல்லாம் வழிவிடுங்களேன், நீங்கள்தான் முன்னேறிவிட்டீர்களே, என்ற குரல்கள் உள்ளுக்குள்ளேயே ஒலிக்கிறது.

முன்னேறினால்கூட சமூக அங்கீகாரம் மற்றும் மரியாதை கிடைப்பதில்லை என்ற உண்மை வெற்றிகரமாக அவர்களிடமிருந்து மறைக்கப்படுகிறது. பொருளாதார ரீதியாக முன்னேறிய SC/ST மக்கள் தங்கள் சமூகத்தை முன்னேற்றப்பாடுபட்டாலும்கூட அது அச்சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மட்டுமேதான் முடிகிறதே  ஒழிய சமூக அங்கீகாரத்தைப் பெற்றுத் தரமுடியவில்லை. முடியவும் போவதில்லை.  ஏனெனில் அது அவர்களின் கையில் இல்லை.

ஆகவே!  

மாற வேண்டியது சமூகமும், மக்களின் மனங்களும், சமூக நீதியின் இயல்பான வெற்றியான அதிகாரப்பரவலும்தான்.

அது முதலில் நிகழட்டும்.
Pin It