‘‘பூங்கா’ என்னும் குறும்படம் மூலம் குறும்படத் துறைக்குள் நுழைந்தவர் தாண்டவக் கோன். இப்படம் குழந்தைகளை மையப்படுத்தியது. குழந்தைகளை வைத்து மீண்டும் அவர் உருவாக்கியுள்ள படம் ‘‘இப்படிக்கு பேராண்டி’.

ஒரு பேரன் தன் தாத்தாவைப் பார்க்க விரும்புகிறான். தன் தாத்தாவோடு உறவாட நினைக்கிறான். தன் தாத்தாவோடு விளையாட எண்ணுகிறான். தன் தாத்தாவைத் தொட்டுப் பார்க்க ஆசைப்படுகிறான். தன் தாத்தாவின் பேச்சுக்கும் பாசத்துக்கும் ஏங்குகிறான். அவனின் ஏக்கத்துக்குத் தடையாயிருப்பது,இடைஞ்சலாயிருப்பது,மறுப்பது அவனின் தாய். முடிவில் அவன் எண்ணம் ஈடேறுகிறது. ஆசை நிறைவேறுகிறது. இதுவே ‘இப்படிக்கு பேராண்டி’யின் கதை.

ஒரு கதையை எவ்வாறு அழகாக சொல்ல முடியும், எங்’னம் அருமையாகக் காட்ட முடியும் என்னும் கலையை நன்கு கை வரப் பெற்றுள்ளார் தாண்டவக் கோன். தெளிவாக திரைக் கதையாக்கி கூற வேண்டிய கருத்தை மென்மையாக மனத்தில் பதியச் செய்துள்ளார்.

ஒரு சிறுவனின் உணர்வுகளை மிக நுட்பமாக படம் பிடித்துக் காட்டியுள்ளார். இயல்பாக எடுத்துச் சொல்லியுள்ளார். உடன் அண்ணனின் ஆர்வமும் இணைந்து வெளிப்பட்டுள்ளது. ’டே நம்ம தாத்தாவ பார்க்கவே முடியாதா’ என சின்னக் குரலில் சன்னமாக கேட்கும் போது பார்வையாளர்களின் உள்ளம் அதிர்வதை உணர முடிகிறது. தாத்தாவைக் சந்தித்து விட வேண்டும் என்னும் அவனின் ஓவ்வொரு முயற்சியிலும் ஒரு குழந்தைத் தனமும் ஒரு புத்திசாலித்தனமும் வெளிப்படுகிறது. இரண்டையும் விட ஏக்கமே மிகுதி.

உலகமயமாக்கும் முயற்சியில் உலகில் மனிதர்கள் பொருள்களாகி வருகின்றனர். பொருள் ஈட்டுபவர்களாக மாறி வருகின்றனனர். பாசம் அற்று வருகிறது. அன்பு இழந்து வருகிறது. கூட்டுக் குடும்பம் சிதைந்து தனிக் குடும்பங்கள் பெருகி வருகின்றன. தாத்தா பாட்டிகள் உபரிகளாகி வேண்டாதவர்களாகி விடுகிறார்கள். ’இபபடிக்கு பேராண்டி’ கூட்டுக் குடும்பத்தை வரவேற்கிறது. வலியுறுத்துகிறது. குழந்தைகளுக்குப் படிப்பை விட பாசமும் அன்பும் அவசியம் என்கிறது. பெற்றோர்களை விட தாத்தா, பாட்டிகளிடமே அவை அடர்த்தியாக கிடைக்கும் என்கிறது. மிக முக்கியமாக தாத்தா பேரணுக்கிடையே பெற்றோர்கள் குறுக்கே நிற்கக் கூடாது என்கிறது. மேலும் பெற்றோர்கள் பிடிவாதத்தைத் தளர்த்தி பெரியோர்களை விட்டு கொடுத்து கூட்டுக் குடும்பமாக வசிக்க வேண்டும் என்றும் அறிவுரைக்கிறது. பேரன்களை விட்டு தனித்திருப்பதும் தாத்தா பாட்டிகளுக்கும் இயலாத ஒன்று.

இக்குறும்படத்தில் நடிப்பில் முன்னணியில் இருப்பது சிறுவனே. பாத்திரத்தின் தன்மையைத் தன் நடிப்பின் மூலம் அருமையாக பிரதிபலித்துள்ளான். பல் இல்லாதது பலமாகவே இருக்கிறது. சிறுவனுக்கு பக்கபலமாக உள்ளது அண்ணின் நடிப்பு. இரண்டாவதாக நடிப்பில் குறிப்பிடத்தக்கவர் சிறுவனின் தாய். முரண்பாடான பாத்திரம் எனினும் முகபாவம் நன்று. கொங்கு மொழி கவனத்தை ஈர்க்கிறது.

‘‘இப்படிக்கு பேராண்டி’க்கு கதை உருவாக்கி திரைக்கதையாக்கி வசனம் எழுதி இசை அமைத்து படத்தையும் தொகுத்து இயக்கி இருப்பவர் தாண்டவக்கோன். நல்ல கதை. அருமையான திரைக்கதை. இயக்கத்தில் முழுமையான வெற்றிப் பெறவில்லை. இவரின் இம்முயற்சிக்கு அவரின் குடும்பமே ஒத்துழைத்துள்ளது. பங்கெடுத்துள்ளது. சிறுவர்கள் இவரின் குழந்தைகள். சிறுவர்களின் தாய் இவரின் மனைவி. ஒரு காட்சியில் இவர் மகளும் நடித்துள்ளார். ஒரு கலைஞனின் படைப்புக்கு அவர் குடும்பமே உதவியாயிருப்பது தாண்டவக்கோன் பெற்ற பேறு.

திரைத்துறைக்கு மாற்றாகவே குறும்படம், ஆவணப்படம் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. விளம்பர வலையிலிருந்து விடுபட்டு வருகிறது. இச்சுழலில் ‘இப்படிக்கு பேராண்டி’ சிக்கியுள்ளது கவலையளிக்கிறது. தொடக்மே விளம்பரம். இடையிலும் விளம்பரம். ஒரு திரைப்படம் பார்க்கும் எண்ணத்தையே ஏற்படுத்தியது. இப்படத்தை ‘பாசம் வளர்க்கும் 42 நிமிடங்கள்’ என்கிறார். 42 நிமிடங்கள் குறும்பட எல்லையைத் தாண்டியதாகவே உள்ளது. இவைகளிலிருந்து வெளிப்பட்டு தாண்டவக்கோன் செயல்படுவது குறும்படத்துறைக்கும் நன்மை. அவருக்கும் சிறப்பு.

‘‘தாத்தா வேணும் பாட்டி வேணும். குழந்தைக்கெல்லாம் செல்லம் வேணும் ‘என்னும் கோரிக்கையின் வடிவமாக உள்ளது ‘இப்படிக்கு பேராண்டி’. இப்படம் குழந்தைகளுக்குப் பிடிக்கும். பெற்றோர்களுக்கு பாடம். அனைவரும் பார்க்க வேண்டும்.

வெளியீடு: கே. ஏ. ஆர்ட்க்ரைன்ஸ், திருவள்ளுவர் நகர் வடக்கு விரிவு சிறுபுலுவப்பட்டி(அ) திருப்பூர்-641 603.

Pin It