காதல் என்பது ஒரு அற்புத உணர்வு. "காதலினால் மானுடர்க்கு சகல இன்பமுண்டு, ஆதலினால் காதலிப்பீர்" என்கிறான் மகாகவி பாரதி. அவ்வுணர்வை அனுபவிக்காதவர்கள் மனிதர்களாக இருப்பதிலம் சிரமமிருக்கிறது. காதலில் அன்பைப் போலவே பரஸ்பர மரியாதையும் தோன்றுகிறது. காதலில் காமம் என்பது பிரிக்க முடியாத ஒன்று. ஆனால் காமம் தாண்டியும் காதலிக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பரஸ்பர மதிப்பும், அன்பும், மரியாதையும் நீடிக்கும் போதுதான் காதல் உணர்வில் அற்புதத்தை நீடிக்க முடியும்.

காதல் என்பதன் தொடர்ச்சியாக திருமணம் என்ற உணர்வுக்குள், குடும்பம் என்ற ‍சூழலுக்குள்  போக வேண்டியது சமூகத் தேவையாகிறது. குடும்பம் என்பதே, பொருளாதார ஆதிக்கத்தையும், சாதீய ஆதிக்கத்தையும் கட்டிக் காப்பாற்றுகிற ஒரு அமைப்பாக மாற்றப்பட்டுவிட்ட தமிழ்ச் சமூகத்தில் காதல் என்பது அங்கீகரிக்கப்படாத ஒரு செயலாகவும், ஒடுக்கப்பட வேண்டியதாகவும் பார்க்கப்படுகிறது.

இளமையின் உணர்ச்சித் தூண்டலும், மனிதமனத்தின் தேடலும் இவைகளைத் தாண்டி தொடர்ந்து காதல் வயப்பட வைத்துக் கொண்டேயிருக்கிறது. அதிகார ஆதிக்க சக்திகளைப் பார்க்கும் கண் காதலுக்கு இருப்பதில்லை என்ற அங்கலாய்ப்பில்தான் காதலுக்கு கண் இல்லை என்று சொல்லப்படுகிறது. தமிழ்ச் சமூகத்தில் சாதீய உக்கிரம் அதிகமாக இருக்கிற சூழலில் சாதி ஒழிப்பிற்கு "சாதி மறுப்புத் திருமணங்கள்" முதன்மைத் தேவையாகிறது. இவ்வகை மணங்களைச் செய்வது என்ற இலக்கை உருவாக்கி அடைவது ஒரு சாரார் மட்டுமே செய்யும் லட்சியப் பணி போன்றதாகிவிட்டது. ஆனால் காதல் என்ற இயற்கையுணர்வு சாதிமறுப்பு மணங்களை தன்னிச்சியாகவே உண்டு பண்ணுகிறது. எனவே காதல் என்பதும் காதல் மணம் என்பதும் தமிழ்ச்சமூகத்தின் முக்கியத் தேவைகளில் ஒன்றாகிறது.

நமது புராணகால காவியங்கள் தொட்டு இன்றைய நவீன இலக்கியங்கள்வரை காதல் சொல்லப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. நமது தமிழ்த் திரைப்படங்கள் ஏதாவது ஒரு வகையில் காதலைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கிறது. ஆனால் நாம் மேலே சொன்னது போல சாதிமறுப்புத் திருமணங்களாக காதல் மணங்கள் மாற வேண்டும்  என்ற உணர்வோடு இப்படங்கள் சொல்வதில்லை. மாறாக, மிகுந்த மிகையுணர்சிகளோடு காதலைச் சொல்லும் காதல் வயப்பட்ட இருவரின் உணர்ச்சிவயப்பட்ட செயல்களை ரசிக்கும்படி படமாக்கி ரசிகர்களை கவர்ந்துவிடுவது தமிழ்ச் சினிமாவின் தனித்தன்மை. ஆனால் அவ்வுணர்ச்சிகள் முடிந்து இருவர் சம்பந்தப்பட்ட காதல் குடும்பம் சம்பந்தப்பட்டதாக, சமூகம் சம்பந்தப்பட்டதாக மாறும்போது ஏற்படும் விளைவுகளை மிகப் பெரும்பாலான இயக்குநர்கள் பேசுவதேயில்லை.

மாறாக சமூகத்தினால், குடும்பத்தினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஒற்றை ஆளாக கதாநாயகனின் வீரத்தால் தீர்வு தந்துவிடுவார்கள். அல்லது செத்துப் போவதாகச் சொல்லி சோகப்படவைத்துவிடுவார்கள்.

பலதாரமணத்தையும், பெண்களை வைப்பாக வைத்து சீரழிப்பதையும் இச்சமூகத்தின் சாதீயம் அங்கீரித்துள்ளது. ஆனால் காதலை மட்டும் ஒழிக்கவே கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது, மேற்சொன்ன சாதீயத்தின் பெருமைகள் ஆனால் காதலோ சாதியின் ஆணிவேரை அசைக்கும் செயல். எனவே காதலுக்கான எதிர்ப்பு மிகக் கூர்மையானது. இந்த சாதீயக் குணத்தை பெரும்பாலான இயக்குநர்கள் சொல்வதில்லை, மாறாக காதலர்களின் சோக முடிவின் மேல் படத்தை முடிக்கிற புத்திசாலித்தனத்தை மட்டுமே செய்து சிறந்த இயக்குநர்களாக பாராட்டும் பெற்றுவிடுகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக சேர்ந்துள்ளார் காதல் பட இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

தனிமனித சிக்கல்களைப் பற்றிய படைப்புகளில் (சினிமாவோ, கதையோ, கவிதையோ) கூட அதற்குக் காரணமாண சமூக சிக்கல்களைத் தேடும் படைப்பாளிகள் தொடர்ந்து  இயங்கி வருகிறார்கள்.  இவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஆனால் சமூக சிக்கல் சம்பந்தமாக. அதனால் தனி மனிதனுக்கு ஏற்படுகிற பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிற படைப்பில் கூட சமூக சிக்கல் சம்பந்தமாக. அதனால் தனி மனிதனுக்கு ஏற்படுகிற பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிற படைப்பில் கூட சமூகத்தைப் பற்றிய கூரிய விமர்சனத்தை வைக்காமலே தப்பிக்கிற படைப்பாளிகளே தமிழ் கலை, இலக்கியத் துறைகளில் மிகுந்து காணப்படுகிறார்கள். அதன் வெளிப்பாட்டின் ஒரு பகுதியே மோசமான திரைப்படங்கள். இதிலிருந்து மாறுபட்டு, யதார்த்தமான படத்தை, உண்மைக்கதையின் அடிப்படையில் சொல்லியிருப்பதாக பாலாஜிசக்திவேல் பாராட்டப்படுகிறார். குறிப்பாக இரண்டு விசயங்கள் அவரைப் பாராட்டுவதற்குக் காரணமாக அமைகிறது. ஒன்று படத்தில் வரும் யதார்த்தான காட்சிகள், நடிகர்களின் ஒப்பனை, சூழல் போன்றவை. மற்றொன்று தமிழ்ச்சினிமாவின் பிரிக்கமுடியாத அங்கமாக மாறிவிட்ட ஆபாசம், வன்முறை போன்றவை இல்லாத திரைக்கதை . அதாவது ஏற்கெனவே தமிழ் திரையுலகம் சீரழிந்து போன நிலையில் உருவாக்கும் படங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்க்கையில் "காதல்" பட இயக்குநர் கண்ணியமானவராகத் தெரிகிறார். இன்னும் சிலரின் பார்வைக்கோ உலகத் தரம்வாய்ந்த படத்தை எடுத்தவராகத் தெரிகிறார். பொருளாதாரத் துறையில் உலகமயம் போல திரைத்துறையில் உலகத் தரம் என்பது அறிவுஜீவிகளின் ஆதர்ச சொல். இப்படிப்பட்ட பாராட்டுக்கள் ஒரு ரசிகனுக்குரியது. ஆனால் ஒரு விமர்சகன் இவ்விடத்தில் நின்று போவது சரியல்ல. அந்த அடிப்படையில் இப்படத்தை பேராசிரியர் அ.ராமசாமி அவர்கள் சிறப்பாக விமரிசித்துள்ளார்.

இப்படத்தின் திரைக்கதை, காட்சியமைப்புகள் எல்லாவற்றிலும் இரண்டு முக்கிய அம்சங்களை மையப்படுத்தியே கதை நகர்கிறது. ஒன்று நாயக, நாயகியின் காதல் செயல்பாடுகள். மற்றொன்று சாதீயச் செயல்பாடுகள். இவ்விரண்டிலும் காதல் சம்பவங்களைவிட சாதீய சம்பவங்கள் ரசிகர்களை கவருகிற விதத்தில் சிரத்‍தையோடு படமாக்கப்பட்டுள்ளது. (உ-ம்) கதாநாயகியின் சடங்குக்கான பாடல் காட்சி. இவ்விரண்டு பாதைகளில் பயணப்பட்ட திரைக்கதை முடிவில் சாதீயக் கொடுமையால் காதல் சிதைந்தது என்பதை ஆணித்தரமாக சொல்வதில்லை. மாறாக காதல் பிரிவின் சோகத்தை முதன்மைப்படுத்துகிறார். சாதீயத்தை, அதைக் காக்கிற அமைப்புகளைத் தோலுக்கிற வாய்ப்பிருந்தும் அதைத் தவறவிடுகிறார். மாறாக ஒரு தனி நபரின் கருணையை முன் நிறுத்துகிறார். பைத்தியக்கார நாயகனைப் பராமரிக்கும் நாயகியின் கணவன் பாத்திரத்தின் மூலம் தனிநபர் சாகசத்தையே மீண்டும் முன் வைக்கிறார்.

இக்கதையில் இதையிதை, இப்படியிப்படி சொல்லியிருக்க வேண்டும் என நாம் ஒரு படைப்பாளியை நிர்பந்திக்க முடியாது. ஆனால் சாதீயக் கொடுமையை, அதற்குத் துணை போகிற அமைப்புகளை அம்பலப்படுத்த படைப்புத் தளத்தில் வாயப்பிருந்தும் தவறவிடுகிற போது அதை கறாராக விமர்சிக்க வேண்டியது ஒரு விமர்சகனின் கடமை.

தற்போதைய தமிழ்ச்சூழலில், காதல்  மணங்கள் ஒடுக்கப்பட்டவர்களின் ஒற்றுமையாலோ, காவல்துறையாலோ காப்பாற்றப்படுவது ஆங்காங்கே நடைபெறுகிறது. அவ்வாறின்றி சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்படும் போது அதற்கெதிராக கலகக் குரல்கள் எழுவதும் ஆங்காங்கே நடைபெறுகிறது. இதுபோன்ற சூழலில் இதையெல்லாம் பிரச்சாரம் செய்து காதலை வாழவைக்குமாறு நாம் படைப்பாளிகளை நிர்பந்திக்கவில்லை. ஆனால் இதற்கு மாறாக சாதி தாண்டிக் காதலித்தால் சாவு நிச்சயம் என்ற தொனியில் மிரட்டுகிற படங்களை தமிழின் சிறந்த விமரிசகர்களும் படைப்பாளிகளும் விமரிசிக்காததோடு பாராட்டுவது வேதனைக்குரியது.

தமிழ் நாட்டில் ஏற்கெனவே சினிமா சீரழிந்து போய்விட்டது. அதை ஒப்பிடுகையில் இது ஒருபடி மேல் எனும் சிந்தனையில் பாராட்டுவிடுவது ஒரு விமரிசகன் தான் வைக்கும் நம்பிக்கையில் இருந்து விரக்தியை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதையே காட்டுகிறது. இதுபோன்ற சமரசங்கள் அரசியல் துறையில் வந்ததுதான்இன்றைகிக்கிருகிற நமது அரசியல் சீரழிவின் அஸ்திவாரம்.

இப்படிப்பட்ட விமரிசனங்கள் சாதாரணமாகப் பார்க்கிற ரசிகனுக்கு உருவாகாத வண்ணம் படமெடுத்திருக்கிற திறமையில் பாலாஜி சக்திவேலுக்கு முன்னோடி மணிரத்னம்தான். இவர்களின் திறமை என்னவென்றால் பழைய சினிமாக்களிலிருந்த பாமர ‍ெசன்டிமெண்ட்களுக்குப் பதிலாக அறிவுஜீவித்தனமான சென்டிமெண்டுகளோடு படமெடுப்பதுதான். அதாவது சமூக அக்கறை என்பதைவிட வெற்றிபெற வைப்பதே இவர்களது நோக்கம். குழந்தைகளை வயதுக்கு மீறிய பேச்சுகளைப் பேச வைப்பது. திரைக்கு வெளியே முஸ்லீமாகவும், இந்துக்களாகவும் இருப்பவர்களை, திரையில் மதம் மாற்றிக் காண்பிப்பது போன்ற அறிவு நுட்பங்களைத் தொடங்கி வைத்தவர் மணிரத்னம். இதே போன்ற நுட்பங்ளை கமலஹாசன், செல்வராகவன், ஷங்கர் போன்றோரிடமும் காணலாம்.

இவர்களெல்லோரும் நேர்மைக்கு பதிலாக, எளிமைக்குப் பதிலாக, புத்திசாலித்தனத்தை அறிவு நுட்பத்தை அங்கீகரிப்பவர்கள். அதாவது நேர்மையற்றவற்றை அறிவுநுட்பத்தைப் பயன்படுத்தி, புத்திசாலித்தனமாகக் கூறி மக்களை ஏமாற்றுபவர்கள் இதை நுணுக்கமாகக் கண்டு உணர்ந்து விமரிசிக்க வேண்டிய இலக்கியவாதிகள் தமிழ் இலக்கிய சூழலில் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் இலக்கியத் துறையிலம் அறிவுநுட்பமும், புத்திசாலித்தனமுமே ஆராதிக்கப்படுகிறது. இதனால்தான் தமிழ் இலக்கியச் சூழலிருந்து பெரும்பான்மை மக்களை பாதிக்கிற மாற்றுச் சினிமாக்கள் பெருமளவில் உருவாகவில்லை. குடிசை, கருவேலம்பூக்கள் போன்ற ஒன்றிரண்டு தவிர.

பெரும்பான்மை மக்களுக்கும் புரிகிற வகையிலம், அங்கீகாரத்தை மறந்துவிட்டு, அறிவு நுட்பங்களை ஒதுக்கிவிட்டு எளிமையின் மூலம் சமூக அக்கறையோடு கூடிய படைப்புகளை தமிழின் இலக்கியச் சூழலும், திரைத்துறையும் தருமானால் அதுவே தமிழ்ச்சமூகத்தின் தரத்தை உலகளவிற்கு உயர்த்தும். மாறாக நமது பலவீனங்களை, குறைகளை அறிவு மற்றும் தொழில் நுட்பங்களைக் கொண்டு மூடிமறைத்து பயாஸ்கோப் காண்பித்தால் சமூகம் புழுத்து நாறிப் போகும். எதிர்காலத்திலாவது இது தவிர்க்கப்படுமென சமூகத்தின் மேல் கொண்ட காதலின் காரணமாக நம்புவோம்.

 

Pin It