தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழ்த் திரையுலகில் ஒரு புயலாய் உருவெடுத்தவர் ஏ.ஆர்.ரகுமான். இப்படி ஒரு புயல் உருவாகத் தேவையான காலநிலை அப்போது இருந்தது. ‘ரோஜா’ படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பரவலாய் ஒலித்தபோதும் கூட இளையராஜாவின் இசைத் தாலாட்டில் சொக்கிப் போயிருந்த பலரும் அந்தப் படத்தின் இசையை எப்போதாவது ஒரு படத்தில் நிகழ்ந்து மறையும் அதிசயம் என்றே கூறினர். ஆனால் அந்த அதிசயம் தொடர்ந்தது. ‘ரோஜா’ படத்தின் இசை, தமிழ் மட்டுமின்றி இந்தியத் திரையிசையே அடுத்த சில ஆண்டுகளுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

ரோஜாவில் நடந்த அதே போன்ற சம்பவம் எழுபதுகளின் தொடக்கத்தில் நடந்தது. ‘அன்னக்கிளி’ எனும் திரைப்படத்தில் பண்ணைப் புரத்தில் இருந்து வந்த ராசைய்யா எனும் இளைஞனின் இசையைக் கேட்ட ரசிகர்களுக்கு அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. தன்னுடைய அடுத்தடுத்த சில படங்களின் மூலம் அன்னக்கிளியில் நடந்தது ஒருபட அதிசயம் இல்லை என்பதைப் புரிய வைத்தான் அந்த இளைஞன். ஒரு புதிய திரையிசை வரலாற்றின் தொடக்கமாகவே ‘அன்னக்கிளி’ அமைந்தது. ஆனால் ‘அன்னக்கிளி’யில் தொடங்கிய இசைப்பயணத்துக்கும் ‘ரோஜா’வில் தொடங்கிய இசைப்பயணத்துக்கும் வேறுபாடுகள் உண்டு. இளையராஜா தன்னுடைய இலக்காகக் கொண்டிருந்தது தமிழ்த் திரையிசையை மட்டும்தான். பின்னாளில் அவருடைய பாடல்கள் இந்தி உட்பட இந்தியாவின் பிற மொழிப்படங்கள் பலவற்றில் நகலெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இளையராஜாவுக்கும் இந்தியத் திரையிசை மீதான ஆர்வம் உண்டானது. ஆனால் அது அவருடைய குருதியில் ஊறிய இசை மரபுக்கும், அவருடைய மனநிலைக்கும் ஒத்திசைவானதாக இல்லாமற் போனதால் அந்த முயற்சிகளைக் கைவிட்டார். அது தமிழ் சினிமா ரசிகர்களின் பெரும்பாக்கியமாக அமைந்தது.

எண்பதுகளில் இருந்து தொண்ணூறுகளின் தொடக்கம் வரை ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகள் இளையராஜாவின் இசை மழையில் தமிழ் மக்கள் திகட்டத் திகட்ட நனைந்தனர். இக்கால கட்டத்தில் திரையுலகமே இளையராஜாவின் காலடியில் கிடந்தது என்பதே உண்மை. படத்துக்கு அவருடைய இசை கிடைத்துவிட்டாலே படத்தின் வெற்றி உறுதி செய்யப்படும் அளவுக்கு உயர்ந்த நிலையில் அவர் இருந்தார். ஒரு ஆண்டின் பிரபலமான பாடல்களைப் பட்டியலிட்டால் அதில் எண்பது சதவீதம் அவருடைய பாடல்களாகவே இருந்தன. இக்காலத்தில் சக இசையமைப்பாளர்களாயிருந்த சங்கர்கணேஷ், டி.ராஜேந்தர், சந்திரபோஸ், தேவேந்திரன், அம்சலேகா, எஸ்.ஏ.ராஜ்குமார், தேவா போன்றவர்களால் இவருடைய உயரத்தை நினைத்துப் பார்க்கக் கூட முடியாத தூரத்தில் இருந்தார். மோகன், ராமராஜன், பிரபு போன்ற நடிகர்கள் சினிமாவில் நீடித்திருந்ததே ராஜாவின் இசையால்தான். ஆர்.சுந்தரராஜன், ஆர்.வி.உதயகுமார், கஸ்தூரிராஜா, பி.வாசு போன்ற இயக்குனர்களும் ராஜாவின் இசையால் உருவானவர்கள்தான். பாரதிராஜா, கே.பாலச்சந்தர், மணிரத்னம், பாலு மகேந்திரா, மகேந்திரன், பாக்கியராஜ் போன்றவர்களை இந்த வரிசையில் சேர்க்க முடியாது என்றாலும், அவர்களின் வெற்றிகளுக்குப் பக்கபலமாக ராஜாவின் இசை இருந்ததை மறுக்க முடியாது.

‘அன்னக்கிளி’யில் இளையராஜா கொண்டு வந்தது மிகப்பெரிய மாற்றம். அதற்கு முன் இருந்த திரை இசை மரபுகளை உடைத்தெறிந்து பட்டி தொட்டியெங்கும் பரவிய புதுவிதமான இசையை அந்தப் படத்தில் இசை ரசிகர்கள் அனுபவித்தனர். அப்படத்தில் ராஜாவின் இசையில் தனித்தன்மையாக விளங்கியது மன உணர்வுகளை மீட்டக்கூடிய தரமான இசைக் கோர்ப்பு. ‘ரோஜா’வில் ரகுமான் செய்ததும் மிகப்பெரிய மாற்றம்தான். ரசிகர்களுக்கு அந்தப் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் புதுமையான விருந்தாக அமைந்தது. ஆனால் ‘அன்னக்கிளி’யின் இசையைக் கடந்து செல்லக்கூடிய, அதை விடவும் தரமான இசையைத் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் இளையராஜாவால் கொடுக்க முடிந்தது. ரகுமானால் அது முடியாமல் போனது. இதில்தான் ராஜாவுக்கும் ரகுமானுக்குமிடையிலான வேறுபாடு அடங்கியிருக்கிறது. இன்னமும் ‘ரோஜா’ படத்தின் இசையைக் கடந்து செல்லக் கூடிய தரமான இசையை ரகுமான் தரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ரகுமானின் இசையில் குறிப்பிடத்தகுந்த அம்சமே ஒலி ஆளுகைதான். அவருடைய பல பாடல்களின் வெற்றிக்குக் காரணமாய் அமைந்தது சத்தங்களில் அவர் நிகழ்த்திய அற்புதங்கள்தான். அந்த வகையில் பார்த்தால் ‘புது வெள்ளை மழை’ பாடலுக்கு இணையான உயர்ந்த ஒலி ஆளுகை உள்ள ஒரு பாடலை அதற்குப் பின் அவருடைய இசையில் கேட்க வாய்ப்பில்லாமலே போய்விட்டது. ரகுமானின் இசை வரலாறு பதினாறு ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இந்தப் பதினாறு ஆண்டுகளை முற்பாதி, பிற்பாதி என்று பிரித்தால் முதல் எட்டாண்டுகளை விட, அடுத்த எட்டாண்டுகளில் அவருடைய புகழ் உச்சத்தை தொட்டது. இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை யாரும் போகாத உயரங்களுக்கு அவர் சென்றார். தேசிய அளவிலும், உலக அளவிலும் உயர்ந்த பல விருதுகள் அவர் முன் குவிந்தன. ஆனால் தமிழ் சினிமாவில் அவருடைய இசையின் தரமும், தாக்கமும் இதற்கு நேரெதிர் நிலையில் இருந்தன.

முதல் எட்டாண்டுகளில் ரகுமான் இசையமைத்த தமிழ்ப் பாடல்களுடன் ஒப்பிட்டால் அடுத்த எட்டாண்டுகளில் அவர் தந்த பாடல்கள் புகழ் பெறவில்லை என்றே சொல்லலாம். ஒலித் தொழில் நுட்பத்தில் உலகத்தரமான இசையை அவரால் பின் பாதியில் தர முடிந்தாலும், அந்த ஒலிகளை நிர்வகிப்பதிலும், இசையைக் கோர்ப்பதிலும் அவர் பெருமளவு சறுக்கியிருக்கிறார். அதே சமயம் பாடல்கள்தான் புகழ் அடையவில்லையே தவிர, அவருடைய புகழ் வளர்ந்துள்ளது. அவர் இசையமைக்கும் ஒவ்வொரு படத்துக்கும் எதிர்பார்ப்பு கூடிக் கொண்டேதான் வந்துள்ளது. ஏமாற்றமும்தான். இந்தக் கட்டுரைக்காக ரகுமான் இசையமைத்த பாடல்களில் பிடித்த பாடல்களை வரிசைப்படுத்தும் படி ஏறத்தாழ நூறு பேரிடம் கேள்வி நிரல் தயாரித்துக் கொடுத்து அவற்றை நிரப்பி வாங்கினேன். (படித்தவர், படிக்காதவர், இளைஞர், முதியோர், ஆண், பெண், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர் என்று பலதரப்பட்ட மனிதர்களையும் இதில் உள்ளடக்கியிருந்தேன்.) அவர்களால் அதிகம் குறிப்பிடப்பட்ட பாடல்களில் பெரும்பாலானவை சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் ரகுமான் இசையமைத்தவை. (மிக அதிகமாக குறிப்பிடப்பட்டிருந்த பாடல் ‘புது வெள்ளை மழை.’)

இந்த மாற்றத்துக்கு காரணம் தமிழ் சினிமாவிலிருந்து அவர் படிப்படியாக விலகிச் சென்றிருப்பதுதான். அவரைப் பொறுத்தவரை வளர்ச்சி என்பதை மாநில அளவிலிருந்து தேசிய அளவுக்கும், தேசிய அளவிலிருந்து உலக அளவுக்குமானதாகப் புரிந்து கொண்டு அவ்வாறான திசையில்தான் பயணித்துள்ளார். முற்பாதிக் காலத்தில் தன்னுடைய இசைத் திறனையும் உழைப்பையும் தமிழ் சினிமாவுக்காக வழங்கிய அவர் பிற்பாதியில் அதிலிருந்து தவறியுள்ளார். ‘ரங்கீலா’, ‘லகான்’ போன்ற படங்களின் வெற்றிக்குப் பின்னர் அவருடைய பார்வை இந்தி சினிமாவின் மீது திரும்பியது. இந்தி சினிமாவிலும் உச்சநிலையை அடைந்த பின்னர் அவருடைய பார்வை உலக சினிமாவின் (உலக சினிமா என்று இங்கு சுட்டுவது ஹாலிவுட் சினிமா என்று புரிந்து கொள்ளவும்.) பக்கம் பாய்ந்தது. அதன் பலனாக இந்தியர்களைக் கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப் படமான ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்துக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைக் கையில் பிடித்துக் கொண்டு வந்தார். தமிழனாக அவருடைய சாதனைக்காக பெருமைப்படுவதா, இல்லை தமிழ் சினிமாவில் இருந்து அவருடைய இசை இன்னும் விலகிப் போய் விடுமே என்று வருத்தப்படுவதா என்று குழப்பமாயிருந்தது.

முதலில் வடக்கு நோக்கி நகர்ந்த அவருடைய இசை, தற்போது மேற்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் இளையராஜாவுக்குப் பின் மிகப்பெரும் இசை ஆளுமையாக உருவெடுத்திருக்க வேண்டிய ரகுமான், தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறார். இளையராஜாவின் சிறந்த பாடல்களாக குறைந்தது ஆயிரம் பாடல்களையாவது பட்டியலிட முடியும். ஆனால் பதினாறு ஆண்டுகளில் ரகுமான் இசையமைத்தவற்றில் சிறந்த பாடல்களைப் பட்டியலிட்டால் அதிகபட்சம் நூறைத் தாண்டாது. குறைந்த அளவு படங்களுக்கு மட்டுமே இசையமைத்து ஏமாற்றம் தந்தவர், பிற்பாதிக் காலத்தில் குறைந்த அளவே உழைப்பையும், அக்கறையையும் தந்து மேலும் ஏமாற்றமளித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில் ரகுமானின் இசை எந்த அளவுக்கு நீர்த்துப் போயுள்ளது என்பதற்கு அவருடைய சமீபத்திய படங்களே நல்ல உதாரணம். அவர் இசையமைத்த ‘பாபா’, ‘தெனாலி’, ‘சிவாஜி’, ‘உதயா’, ‘கண்களால் கைது செய்’, ‘எந்திரன்’, ‘சக்கரக்கட்டி’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘ராவணன்’ போன்ற படங்களின் இசையுடன் ‘ரோஜா’, ‘திருடா திருடா’, ‘டூயட்’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘இருவர்’, ‘காதலன்’, ‘காதல் தேசம்’, ‘இந்தியன்’, ‘காதலர் தினம்’ போன்ற படங்களின் இசையை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை புரியும்.

படித்த மேல்தட்டு வர்க்கத்தினரால் கொண்டாடப்பட்ட ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் பாடல்கள் பெரும்பான்மைப் பிரிவைச் சேர்ந்த மக்களிடம் சென்று சேரவே இல்லை. கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டு மக்களைப் பெரிதும் கவர்ந்த பாடல்களில் பெரும்பாலானவை ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார், பரத்வாஜ் போன்றவர்கள் இசையமைத்தவை. இவற்றில் ரகுமான் இசையமைத்த பாடல்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இது போன்ற ஏமாற்றங்களை ஏ.ஆர்.ரகுமான் இனியும் தரக்கூடாது. திசைமாறிச் சென்றுவிட்ட இசைப் புயல், மீண்டும் திரும்பி தமிழ்நாட்டில் ஒரு தென்றலாகவாவது தவழ வேண்டும்.

Pin It