உலகம் தொடங்கிய காலம் முதல் 15-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முடிய கடலில் அதாவது அட்லாண்டிக் கடலில் மேற்கொள்ளப்பட்ட கடற் பயணங்கள் தொடர்பாக அரிதான வரலாற்று ஆவணம் ஒன்றை 15-ஆம் நூற்றாண்டுகளில் புத்தகமாக வெளியிட்டவர் Antonio Galvano. இந்த பெயரில்தான் அவரை ஆங்கிலேயர்களுக்குத் தெரியும். அவருடைய பெயர் António Galvão. அந்த புத்தகத்தின் பெயர் Treaty of Discovery.
போர்ச்சுகீசிய நாட்டைச் சேர்ந்தவர். போர்ச்சுகீசிய படை வீரராக தன் வாழ்வைத் தொடங்கி போர்ச்சுகீசிய அரசாங்கத்தின் சார்பில் Maluku தீவுகளின் அதிகாரியாக உயர்ந்தவர். சிறந்த வரலாற்று தேடல் மற்றும் அறிவு படைத்தவர். இதன் வெளிப்பாடே அன்றைய கடற் பயணங்கள் குறித்த மிக விரிவான அதே சமயத்தில் ஒரு முழுமையான வரலாற்று புத்தகத்தை இவரால் வெளியிட முடிந்தது. பின்நவீனத்துவ காலத்தின் சிறந்த வரலாற்று ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.
இவருக்கும் கொலம்பசுக்கு என்ன தொடர்பு? இருவருக்கும் நேரடித் தொடர்பு என்று எதும் இல்லை. கொலம்பஸ் புதிய உலகம் தேடி புறப்பட்ட 1492-ல் கால்வனோ இரண்டு வயது சிறுவன். விசயம் கால்வனோ எழுதிய புத்தகத்தில்தான் இருக்கிறது. கால்வானோ தன்னுடைய வரலாற்று புத்தகத்தில் உலக வரை படம் ஒன்றைப் பற்றிப் போகிற போக்கில் குறிப்பிட்டுச் செல்கிறார். போகிற போக்கில் என்று நாம் சொல்லிவிட்டாலும் உண்மை நிலவரம் அதுவல்ல.
அன்றைய மேற்குலகின் பொக்கிசம் அந்த உலக வரை படம். துருக்கியர்கள் கான்ஸ்டான்டிநோபிலை இழுத்து மூடிய பிறகு மேற்குலம் இந்தியாவிற்கான கடல் வழியைத் தேடி நாயாய் பேயாய் அடித்துக்கொண்டு திரிந்த காலகட்டங்களில் இத்தகைய ஒரு உலக வரைபடம் பொக்கிசமாகத்தானே இருக்க முடியும். அதிலும் ஆப்பிரிக்காவின் தென்கோடி முனையான Cape of Good Hope-க்கும் தென் அமெரிக்காவின் தென் கோடி முனையில் இருக்கும் Strait of Megallan-க்குமான கடல் வழிப் பயணப் பாதையை அந்த வரைபடம் துல்லியமாக கொடுத்தால் கேட்கவா வேண்டும்!
கால்வானோ குறிப்பிடும் இந்த உலக வரை படத்தின் அதி முக்கியத்துவத்தையும் கொலம்பசின் புதிய உலக கண்டுபிடிப்பு திட்டம் உண்மையில் அவருடையதுதானா என்பதைப் பற்றியும் முழுதும் புரிந்துகொள்ள நமக்கு அன்றைய மேற்குலகின் வரலாற்றைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. வரலாறு என்றால் வாயைப் பிளந்து கொட்டாவி விடும் அளவிற்கான நீண்ட நெடிய வரலாறெல்லாம் இல்லை. ஒரு சில விசயங்களைத் தெரிந்துக்கொண்டால் போதுமானது.
மேற்குலகம் இந்தியாவுடன் தரைவழியாக வணிகம் செய்ய பெரிதும் நம்பியிருந்தது கான்ஸ்டாண்டி நோபிலை. இன்றைக்கு இது துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் நகரம். துருக்கியர்கள் இந்த நகரைப் பிடிப்பதற்கு முன்பு வரை அதாவது 1453-களுக்கு முன்பு வரை மேற்குலகத்தினர் இந்தியாவிற்கான கடல் வழி பற்றிப் பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. அப்படி ஒன்று இருக்கக் கூடும் என்கிற எண்ணம் கூட அவர்களைப் பொருத்தவரை வேலையத்த வேலை.
இத்தகைய ஆண்டுகளில் எந்த உலக வரை படம் எந்த நாட்டிற்கான கடல் வழியைப் பற்றி குறித்தாலும் மேற்குலகத்தினரைப் பொருத்த வரைக்கும் அது ஒப்புக்குப் பெறாத விசயம். அதை வைத்துக்கொண்டு நாக்கை கூட வழித்துக்கொள்ள முடியாது என்றே அவர்கள் பெரும்பாலும் சொல்லியிருப்பார்கள். ஆனால் துருக்கியர்கள் கான்ஸ்டாண்டிநோபிலை கைப்பற்றி மேற்குலகத்திற்கும், இந்தியாவிற்குமான வணிக வழியை அடைத்துவிட்டப் பிறகு நாக்கு வழிக்க கூட பயன்படாது என்று கருதிய சிறு சிறு கடல் வழி பயண வரை படங்களுக்கு எல்லாம் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
இந்தியாவிற்கான கடல் வழிப் போட்டியில் முதலில் காலை வைத்து வெற்றி பெற்றது போர்ச்சுகீசிய நாடு. ஸ்பெயின் நாட்டிற்குள் இருக்கும் தம்மாத்துண்டு நாடு போர்ச்சுக்கல். பெரிய பெரிய சாம்பவான் நாடுகளான இங்கிலாந்து, பிரான்சு, ஸ்பெயின், இத்தாலி போன்றவைகள் கண்ணைக் கட்டி, கடலில் விட்ட கதையாக இந்த கடல் வழி இந்தியாவுக்குப் போகுமோ, அந்தக் கடல் வழி சீனாவுக்கும் போகுமோ என்று தடவிக்கொண்டு இருக்க, போர்ச்சுகீசிய மாலுமிகள் மட்டும் கடலில் இறங்கி, இந்தியாவிற்கான கடல் வழித் தேடலில் கில்லியாக வெற்றி மேல் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார்கள்.
போர்ச்சுகீசிய மாலுமிகள் கடல் வழிப் பயணங்களில் சொல்லியடித்த கில்லி வெற்றிகளுக்குக் காரணம் கால்வானோ குறிப்பிடும் அந்த உலக வரை படம். துருக்கியர்கள் கான்ஸ்டாண்டிநோபிலை மூடுவதற்கு முன்பே அதாவது 1453-களுக்கு முன்பே இந்த உலக வரை படம் போர்ச்சுகீசியர்களின் கைகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் இந்த வரைபடத்தின் முக்கியத்துவம் நாம் மேலே பார்த்தபடி அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இந்த அதி முக்கிய உலக வரைபடத்தை போர்ச்சுக்கலுக்கு கொண்டு வந்து சேர்த்தவர் Dom Pedro. இவர் Henry the Navigator என்று மிகவும் புகழ்பெற்ற போர்ச்சுகீசிய இளவரசரின் தம்பி. Pedro ஊர் சுற்றித் திரிவதில் விருப்பம் உடையவர். அதேபோல Henry-க்கு கடலில் சுற்றுவது என்றால் விருப்பம். Pedro இப்படி இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி ரோம் என்று ஊர் சுற்றித் திரும்பும் வழியில் இந்த உலக வரைபடத்தை பார்த்திருக்கிறார். (இவைகளை கால்வானோ தன்னுடைய வரலாற்றுப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்).
அவர் இந்த வரைபடத்தை எங்கு பார்த்தார் என்பதைப் பற்றிய தகவல் இல்லை. ஆனால் இந்த உலக வரை படத்தில் பல புதிய நாடுகளுக்கு அதுவரை மேற்குலகம் அறிந்திராத நாடுகளுக்கு எல்லாம் பெயரும், கடல் வழியும் குறிக்கப்பட்டிருந்ததால் தன் சகோதரனுக்கு இந்த வரை படம் மிகவும் பிடிக்கும் என்று Pedro இந்த வரை படத்தை Henry-க்காக எடுத்து வந்தார். இந்த உலக வரை படம் போர்ச்சுகலுக்கு வந்து சேர்ந்த பிறகே போர்ச்சுகீசியர்களின் கடல் பயணங்களில் புதிய மாற்றம் தொடங்கிவிட்டது. ஒருவேளை இந்த உலக வரை படமே Henry-க்கு The Navigator என்கிற பட்டத்தையும் வாங்கிக் கொடுத்திருக்கலாம்.
கான்ஸ்டாண்டி நோபில் மூடப்பட்டதும் உடனடியாக இந்த உலக வரை படத்தின் முக்கியத்துவம் போர்ச்சுகீசிய அரச பீடத்திற்கு புரிந்துவிட்டது. மிகப் பெரிய புதையல் பொக்கிசமே தங்களின் கைகளில் சர்வ சாதாரணமாக இருப்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள அவர்களுக்கு கிளி சோசியமெல்லாம் பார்க்க வேண்டியிருந்திருக்காது. போர்ச்சுகீசிய அரசு உடனடியாக இந்த வரை படத்தை அரசாங்க இரகசியங்களில் ஒன்றாக்கிவிட்டது. போர்ச்சுகீசிய அரசர்களின் இரகசிய நூலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது.
கான்ஸ்டாண்டிநோபில் மூடப்படும் காலத்திற்கு முன்பு வரை இந்த வரை படத்தை வைத்துக்கொண்டு கடலில் உல்லாசப் பயணம் போய் வந்து கொண்டிருந்த மாலுமிகளுக்கு எல்லாம் வாய்ப்பூட்டு போடப்பட்டுவிட்டது. இந்த வரை படத்தைப் பற்றி வாயைத் திறந்தால் ஒரேயடியாக வாயைப் பிளந்துக்கொண்டுவிட வேண்டியதுதான். அப்படி மீறி செய்தால் செய்பவருக்கு போர்ச்சுகீசிய அரசாங்கமே அதன் சொந்த செலவில் மூன்றாம் நாள் பாலை ஊற்றிவிடும்.
போர்ச்சுகீசிய அரசாங்கமே நம்பகமானவர்களைத் தேந்தெடுத்து இந்த வரை படத்தில் கண்டிருக்கும் நாடுகளின் வழியாக இந்தியாவிற்கான கடல் வழிப் பாதையை கண்டுபிடிக்கும் பொறுப்பை ஒப்படைத்தது. போர்ச்சுகீசிய மாலுமிகளுக்கு இருந்த வேலையெல்லாம் ஒன்றே ஒன்றுதான் அந்த வரை படம் சுட்டிக்காட்டும் வழியாக எப்படியாவது செல்வது. புதிதாக எதையும் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. இங்கேதான் கொலம்பஸ் வருகிறார். கொலம்பஸ் பிறந்தது இத்தாலியில் உள்ள ஜெனிவாவில். ஆனால் அதுவே சர்ச்சைக்குரிய விசயம் என்பது வேறு விசயம். இவர் யூத இனத்தைச் சேர்ந்தவர் என்றும் இப்பொழுது புதுசாக கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
நமக்கு கொலம்பசின் பிறப்பு குறித்த அவசியம் இந்தக் கட்டுரையில் இல்லாததால், அதைவிட்டு விட்டு கொலம்பசின் விருப்பத்தைப் பற்றிப் பார்ப்போம். கொலம்பசுக்கு கடலில் சுற்றித் திரிவது என்றால் கொள்ளை ஆசை. கடலே அவரது வீடு. கடலின் மீதிருந்த அவருடைய காதலே அவருக்கு மிக இளம் வயதிலேயே மிகச் சிறந்த கடலோடி என்கிற புகழை பெற்றுத் தந்தது. இந்தப் புகழை வைத்துக்கொண்டு எப்படி பணம் ஈட்டுவது என்பதிலும் கொலம்பசுக்கு ஒரு தெளிவு அந்த வயதிலேயே வந்துவிட்டிருந்தது. அன்றைய காலகட்டத்தில் சிறந்த கடலோடி ஆக வேண்டும் என்றால் கடலின் போக்கை மிகத் துல்லியமாக உள் உணர்வின் மூலம் கணிக்கும் இயல்பு பெற்றிருக்க வேண்டும்.
அவர் இந்தப் புகழுடன் போர்ச்சுகல் நாட்டின் தலைநகரான லிஸ்பேனில் (Lisbon) 25 வயதில் தன்னுடைய சகோதரனுடன் வந்து குடியேறினார். லிஸ்பேனில் அவருக்குக் கிடைத்த வேலை என்ன தெரியுமா? உலக வரை படங்களை படியெடுப்பது. போர்ச்சுகல் அரசாங்கம் தன் கையிருப்பில் வைத்திருக்கும் உலக வரை படங்களை படியெடுத்து மாலுமிகளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தது. அந்த வேலையில்தான் கொலம்பஸ் போய் உட்கார்ந்தார்.
ஆனால் கொலம்பஸ் இந்த வேலைக்கு வரும் காலத்திற்கு முன்பே போர்ச்சுகல் அரசாங்கம் அந்த அதி முக்கியமான உலக வரைபடத்தை இராணுவ இரகசிய ஆவணமாக பதுக்கிவிட்டிருந்தாலும், கொலம்பஸ் அதை மோப்பம் பிடித்திருக்கிறார். அந்த சமயத்தில் இள வயதும், திறமையும், அறிவும் ஒன்றாகப் பெற்றிருந்த கொலம்பஸ் போன்ற ஒருவருக்கு அதுவரையில் புழக்கத்திலிருந்து திடீரென்று பதுக்கப்பட்டுவிட்ட ஒரு வரை படத்தின் முக்கியத்துவம் குறித்து அனுமானிப்பது பெரிய விசயமாக இருந்திருக்காது. அதுவும் அந்தத் துறையிலேயே வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவருக்கு.
அந்த அதி முக்கியமான வரை படத்தின் பிரதியை கொலம்பஸ் பெற்றுக்கொண்டதில்தான் அவருடைய சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது. இது சாமர்த்தியமா, பிராடுத்தனமா என்பது வாசகரின் பொறுப்பிற்கே விடப்படுகிறது. அந்த வரை படத்தை கொலம்பஸ் எப்படி பெற்றார் என்பது இன்றைக்கும் நீடிக்கும் மர்மங்களில் ஒன்று. கால்வனோவின் வரலாற்றுப் புத்தகம் அந்த வரை படம் போர்ச்சுகீசியர்களிடம் எப்படி வந்து சேர்ந்தது என்பதை மட்டுமே சொல்கிறதே தவிர இதைப் பற்றி வாய் திறக்கவில்லை.
இதில் உச்சம் போர்ச்சுகீசிய அரசாங்கம் பதுக்கிய கடல் வழிப் பயணத்தின் வரை படத்தை பின் பக்க வழிகளில் பெற்றுக்கொண்ட கொலம்பஸ் அதில் தன்னுடைய சரக்கையும் சேர்த்துக்கொண்டு - அதாவது அட்லாண்டிக் பெருங்கடலை குறுக்காகக் கடந்தால் மலாக்கா (Malacca இன்றைய Malaysia தீவுக் கூட்டங்கள்) வழியாக இந்தியாவிற்கு சென்றுவிடலாம் என்பது – போர்ச்சுக்கீசிய அரசாங்கத்திடமே போய் நின்றதுதான்.
போர்ச்சுகீசிய அரசு குழம்பிப் போய்விட்டது. கொலம்பஸ் சொல்லும் இந்தியாவிற்கான கடல் வழிப் பயணம் ஏறத்தாழ தாங்கள் பதுக்கி வைத்திருக்கும் வரை படத்தை ஒத்திருந்தாலும் கொலம்பஸ் தன்னுடைய திட்டத்திற்குள்ளே சேர்த்திருந்த அவருடைய கைச் சரக்கு அவர்களை தலை சுற்றவிட்டது. அவர் தங்களுடைய வரை படத்தை திருடிவிட்டார் என்று தண்டிக்கவும் முடியாதபடி இருந்தது கொலம்பசின் கடல் வழிப் பயணத் திட்டம்.
இதில் மேலும் நோண்டினால் மேற்குலகின் மற்ற நாடுகளின் கவனத்தையும் அது ஈர்த்துவிடும் என்பதால் கொல்பசின் திட்டத்திற்கு ஆதரவு தர முடியாது என்று சொல்லி கொலம்பசை அனுப்பிவைத்துவிட்டது போர்ச்சுகீசிய அரசு. கொலம்பசின் அடுத்த சாமர்த்தியம் அவர் ஸ்பெயின் நாட்டை அணுகியதில் இருக்கிறது. ஸ்பெயின் அன்றைய நாட்களில் போர்ச்சுகலின் கடல் பயண வெற்றிகளைக் கண்டு லேசான வயிற்றெரிச்சலில் இருந்தது.
கொலம்பஸ்தான் சூழ்நிலைகளை மோப்பம் பிடிப்பதில் வல்லவராயிற்றே! ஸ்பெயினின் பொறாமை புகைச்சல் வாடையை மோப்பம் பிடித்து ஸ்பெயின் நாட்டு இளவரசர் (Ferdinand) மற்றும் இளவரசிக்கு (Isabella) முன்பு போய் நின்றுவிட்டார். இளவரசரைவிட இளவரசி Isabella-விற்கு கொலம்பசின் கடல் வழிப் பயணத் திட்டம் பிடித்துப் போய்விட்டது. கொலம்பசின் பயணத்திற்கு ஆகும் செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது.
கொலம்பஸ் தர்மத்திற்காக இந்த காரியத்தை ஸ்பெயினுக்கு பண்ணித்தர ஒப்புக்கொள்ளவில்லை. பெரும் பணத்திற்குத்தான். தான் கண்டுபிடிக்கும் நாடுகளில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்குப் பெறப்படும் தங்கம், வெள்ளி மற்றும் இதரப் பொருட்களின் வருவாயில் பத்தில் ஒரு பங்கை அவருக்குக் கொடுத்துவிட வேண்டும், அவர் கண்டுபிடிக்கும் நாடுகளுக்கு ஆளுநர் என்கிற வகையில் அவருடைய பெயரைச் சூட்ட வேண்டும், இனி வரும் காலங்களில் அவர் கண்டுபிடித்த கடல் வழிப் பயணத்தை உபயோகப்படுத்தி ஸ்பெயின் எந்த வகையில் பொருள் ஈட்டினாலும் அதிலும் பத்தில் ஒரு பங்கை ராயல்டியாக அவருக்கும், அவருடைய சந்ததிகளுக்கும் தந்துவிட வேண்டும். இவைகள் அவர் கடல் வழிப் பயணத்திற்கு புறப்படுவதற்கு ஸ்பெயின் நாட்டுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள்.
யாரோ உயிரைப் பணயம் வைத்து உழைப்பைக் கொட்டிக் கண்டுபிடித்த இந்தியாவிற்கான கடல் வழிப் பயண வரை படத்தை வைத்துக்கொண்டு, போர்ச்சுகீசியர்களும், கொலம்பசும் பணம் பார்த்ததும், புகழைத் தேடிக் கொண்டதும் சமார்த்தியமா, பிராடுத்தனமா என்கிற தார்மீக விவாதங்கள் மறைக்கப்பட்டு, சாதனைகளாக பொது சனப் புத்தியில் பதியவைக்கப்பட்டிருக்கிறது. இந்த அழகில் தன்னம்பிக்கை கட்டுரைகளிலெல்லாம் கொலம்பஸ் போன்றவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் உதாரணங்களாக வேறு எடுத்தாளப்படுகிறது.
அது சரி, இந்தத் தகவல்களையெல்லாம் கால்வனோ எங்கிருந்து பெற்று தன்னுடைய வரலாற்று நூலில் எழுதினார் என்றால், கால்வினோ இந்த தகவல்களை Francis de Sousa Tavares என்பவரிடமிருந்து 1528-ல் பெற்றதாக சொல்கிறார். Tavares 1520-களில் போர்ச்சுகீசிய அரசரின் வாரிசான Dom Fernando-வின் நெருங்கிய நண்பராக இருந்தவர். Dom Fernando-வே இரகசிய நூலகத்திருந்து அந்த உலக வரைபடத்தை தன்னிடம் எடுத்துகாட்டியதாக Tavares கால்வினோவிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் Fernando, Tavares-க்கு அந்த இரகசிய வரை படத்தை காட்டிய 1520-களில், அந்த வரை படம் தன்னுடைய சிறப்பை இழந்துவிட்டிருந்தது. காரணம் 1498-ல் அந்த வரை படத்தின் துணை கொண்டு வாஸ்கோடகாமா இந்தியாவிற்கான கடல் வழியைக் கண்டுபிடித்ததும் அந்த இரகசியம் மேற்குலகத்திற்கு வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இந்தியாவிற்கான கடல் வழி பொது சொத்தாகிப் போனது.
நாம் இந்த கட்டுரையின் தொடக்கத்தில் ஒன்றை குறிப்பிட்டிருந்தோம், Dom Pedro போர்ச்சுகலுக்கு கொண்டுவந்த கடல் வழி வரை படத்தில் Cape of Good Hope மற்றும் Strait of Megallen ஆகிய பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்ததாக. வரலாற்று விழிப்புணர்வு உள்ளவர்களுக்கு அங்கேயே ஒரு சந்தேகம் தட்டியிருக்கும். இந்தப் பெயர்கள் அந்த இடங்களுக்கு அந்த வரை படம் வரையப்பட்ட (1420-களில்) அடுத்த நூறாண்டுகள் கழித்துத்தான் சூட்டப்பட்டப் பெயர்கள்.
அந்த வரை படம் வரையப்பட்டு நூறு ஆண்டுகள் கழித்து 1520-களில்தான் அந்த இடங்களுக்கு அந்தப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. அப்படியானால் அந்தப் பெயர்கள் எப்படி நூறு ஆண்டுகளுக்கு முந்திய ஒரு வரை படத்தில் இடம் பெற்றிருக்க முடியும்? சிறந்த கேள்விதானே!
ஆனால் அந்த வரை படத்தில் இருந்த பெயர்கள் Boa Esperança மற்றும் Dragon’s Taile. ஆப்பிரிக்க தென் கோடியாக இன்றைக்கு அழைக்கப்படும் Cape of Good Hope அந்த வரை படத்தில் Boa Esperança என்று குறிக்கப்பட்டிருந்தது. தென் அமெரிக்காவின் தென் கோடியாக இன்றைக்கு அழைக்கப்படும் Strait of Megallen அந்த வரை படத்தில் Dragon’s Taile என்று குறிக்கப்பட்டிருந்தது.
எல்லாம் சரிதான்... அந்த உலக வரை படத்தை வரைந்தவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாக இருந்தால் என்னுடைய அடுத்த புத்தகமான ‘அமெரிக்காவை முதன் முதலில் கண்டுபிடுத்தவர் ஒரு இஸ்லாமியரா?’ புத்தகத்தைப் படிக்கவும்.