"இலக்கியம் படைக்க வேண்டும் என்பதற்காக நான் எழுதவில்லை. எழுத்தாளனாக வேண்டும் என்பதற்காகவும் நான் எழுதவில்லை. இலக்கியம் எப்போதும் எனது முழு கவனத்துக்கு உரியதாக இருக்கவில்லை. என்னைச் சுற்றியுள்ள வாழ்க்கைதான் எனது அக்கறையுள்ள பிரச்சனையாக நெடுகிலும் இருந்து வந்துள்ளது. நான் வாழ்க்கையை விமர்சிப்பவன்; வாழ்க்கைக்கு விளக்கம் தருபவன்; அந்த வேலையை நான் செய்யும்போது, அது சிறிதும் எதிர்பாராத விதமாக, ஒர் இலக்கியப் படைப்பாக மாறிவிடுகிறது. எனது அனைத்து இலக்கிய படைப்புகளும் இவ்வாறு உருவானவையே; யாராவது விமர்சகர் ஒருவர் எனது படைப்புக்களில் 'இலக்கியப் படைப்பு' ஒன்று இல்லை என்று கூறுகிறார் என்றால், அது என்னைச் சிரமப்படுத்தாது; நிச்சயமாக அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன்" – என அறிவித்தவர் மலையாள இலக்கிய முன்னோடி கேசவதேவ்!

kesavadevமுன்னாளில் 'கொச்சின்' மாநிலம் என்றழைக்கப்பட்ட மாநிலத்தில், கேட்ட மங்கலம் என்னும் மிகவும் சிறிய கிராமத்தில் 1904 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதியன்று கேசவதேவ் பிறந்தார். அவரது தாயாரின் பெயர் 'நல்லேட்டத்து கார்த்தியாயினி அம்மா' என்பதாகும். தந்தையார் பெயர் ‘கொச்சு வீட்டில் அப்புபிள்ளை' என்பதாகும்.

கேசவதேவ் பள்ளியில் ஆறு ஆண்டுகள் மட்டுமே பயின்றார். பள்ளியில் பயிலும் போது நியாயத்திற்காக ஆசிரியருடன் சண்டை போட்டு விட்டு வகுப்பறையை விட்டு வெளியேறினார். பின்னர், வேலை தேடி பல இடங்களுக்குச் சென்றார். வட்டிக் கடையில் கணக்கு எழுதுபவராக சில காலம் பணியாற்றினார். பின்னர், குழந்தைகளுக்கு 'டியூசன்' சொல்லித் தரும் பணியில் ஈடுபட்டார். ஆனாலும், புத்தகங்களையும், இதழ்களையும் தேடித் தேடி படித்தார். மலையாள நாவல்களையும், சிறுகதைகளையும் சேகரித்து படித்தார்.

சுவாமி விவேகானந்தரின், 'என் குருநாதர்' என்னும் ஆங்கில நூலைப் படித்து, அகராதியின் துணையோடு மலையாளத்தில் மொழிபெயர்த்தார்.

ஆரியசமாஜக் கொள்கையின் மீது ஈடுபாடு கொண்டு, திருவனந்தபுரம் சென்று ஆரிய சமாஐத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த அமைப்பில் புத்தக நிலையத்தின் பொறுப்பாளராகச் செயல்பட்டார்.

பாலக்காட்டு நகரத்திற்குள், பார்ப்பனர்கள் வசிக்கும் தெருக்களில், தாழ்த்தப்பட்ட மக்கள் பிரவேசிக்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த பார்ப்பன சாதிய ஆதிக்கத்தை எதிர்த்து, கேசவதேவ் குத்துவாள் ஆயுதம் தாங்கி, ஆரிய சமாஜத்துத் தொண்டர்களுக்குத் தலைமையேற்று, ஓர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அப்போது, பார்ப்பன ஆதரவாளர்கள், ஆயுதம் கொண்டு சமாஜத் தொண்டர்களை கடுமையாகத் தாக்கினார்கள். ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று நடத்திய இளைஞர் கேசவதேவையும் கடுமையாகத் தாக்கினர். தாக்குதலைக் கண்டு அஞ்சாமல், கேசவதேவ் தமது பார்ப்பன சாதி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார்.

எங்கேயெல்லாம் மனிதனுக்கு, சாதியை அடிப்படையாகக் கொண்டு அவமானம் இழைக்கப்படுகிறதோ, அங்கேயெல்லாம் தமது எதிர்ப்பைப் காட்டினார். தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில், மிகக் கூடுதலான, துடிப்பு மிகுந்த தமது பங்களிப்பைச் செய்தார்.

'கேசவன்' என்னும் தமது பெயரை 'கேசவதேவ்' என மாற்றிக் கொண்டார். ஆரிய சமாஜத்தில் தோத்திரப் பாடல்கள் இசைப்பது, மதச் சடங்குகளை நிறைவேற்றுவது முதலியவைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவைகளையும் தாண்டி, பொருளாதாரக் கோட்பாடுகள், அரசியல் நடைமுறை பற்றிய கோட்பாடுகள் முதலியவைகள் மிகவும் முக்கியமானவை எனச் சிந்தித்த கேசவதேவ் ஆரிய சமாஜத்திலிருந்து வெளியேறினார்.

பின்னர், தமது கிராமத்திற்குத் திரும்பினார். 'சகோதரன்’ என்னும் வார இதழில் 1926 ஆம் ஆண்டு, கேசவதேவின் முதல் சிறுகதை வெளியானது. ‘மகிழமந்திரம்', 'சுதேசாபிமானி' முதலிய இதழ்களிலும் அவரது சிறுகதைகள் வெளியானது. 'பஜே பாரதம் ’, ‘பிரதி தினம்' முதலிய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

காந்தியடிகளின் கொள்கைகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு விளங்கியவர் கேசவதேவ். தேசத்தின் இளைஞர்களின் வீரநாயகன் பகத்சிங்கிற்குத் தூக்குத் தண்டனை! அதை அறிந்த காந்தியடிகள், வைஸ்ராய் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தைப் புறக்கணித்து, தமது எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கலாம். அதைச் செய்ய காந்தியடிகள் முன்வரவில்லை. அதனால், மிகவும் கோபமடைந்த கேசவதேவ், தமது கரங்களில் இருந்த 'யங் இந்தியா' இதழைத் தூக்கி வீசி எறிந்தார். காந்தியடிகளின் கொள்கையிலிருந்து விலகினார்.

தமது கிராமத்தில் தங்கிக் கொண்டு மக்களிடம் புரட்சி குறித்து பிரச்சாரம் செய்தார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு எதிராகவும் கிளர்ந்து எழுந்து போராடுமாறு தொழிலாளர்களையும், இளைஞர்களையும் அறைகூவி அழைத்தார்.

ஆலப்பே தொழிலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு, சுரண்டிக் கொண்டிருக்கும் முதலாளிகளுக்கு எதிராகவும், அடக்குமுறை செய்து கொண்டிருக்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் பேராட வேண்டும் என்பதை வலியுறுத்தி உரை நிகழ்த்தினார். அம்மாநாட்டில், தொழிலாளர்கள் கேசவதேவை, தமது சங்கத்தின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தனர்.

கேசவ‌தேவின் தீவரமான பேச்சைக் கேட்ட சமஸ்தானத்துக் திவானின் கைப்பொம்மையாக இருந்த நீதிபதி, ஆலப்பே மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில், எந்த இடத்திலும் பதினைந்து நாட்களுக்கு அரசுக்கு எதிரான, முதலாளிகளுக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபடக்கூடாது என கேசவதேவுக்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

கேசவதேவ், நீதிபதியின் தடை உத்தரவைக் கண்டு அஞ்சிவிடவில்லை. மேலும், தீவிரமாகத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி, ஒற்றுமைப் படுத்தினார்; சங்கமாக்கினார். இது தான் கேரள மாநிலத்தின் முதல் தொழிற்சங்கப் பணியின் தொடக்கம் ஆகும்.

மேலும், ஏழைத் தொழிலாளர்களின் உழைப்பையும், கூலியையும் சுரண்டித் திருடும் தொழிற்சாலை முதலாளிகளுக்கு எதிராகவும், ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், நியாயமான, சரியான கூலி நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதற்காகவும், தொழிற்சாலைகள் முன்பு பல வேலை நிறுத்தப் போராட்டங்களை தலைமையேற்று நடத்தினார்.

கேசவதேவின் வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டக்கள வாழ்க்கையாகவே அமைந்தது. அவரது போராட்டம் அனைத்துத் தீய சக்திகளுக்கு எதிராக, முதலாளிகளுக்கு எதிராக, சமஸ்தான ராஜா-ராணிகளுக்கு எதிராக, 'ரஸ்புட்டீன்’ மாதிரி இருந்த திவான்களுக்கு எதிராக, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக, தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் அமர்ந்த தகுதியில்லாத, லஞ்ச லாவண்யத்தில் ஈடுபட்ட ஆட்சியாளர்களுக்கு எதிராக- என அவரது போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

மலையாள மொழியில் புரட்சிகர இலக்கியம் என்னும் இயக்கத்தின் தொடக்கம் 1930 ஆகும். அந்தக் காலகட்டத்தின் முதலாவது வெற்றிப் படைப்பு, திசையெங்கும் எதிரொலித்த படைப்பு, கேசவதேவ் எழுதிய ‘சாக்கடையிலிருந்து’ என்னும் நாவலாகும். இந்த நாவல் 1942 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த நாவல் மலையாள இலக்கியத்தின் மிகச் சிறந்த சாதனைப் படைப்பு என்னும் சிறப்பையும், பாராட்டையும் பெற்றது.

‘நடிகை' என்னும் நாவல் 1945 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்நாவலில் நடிகைகளின் உலகம் பற்றியும், நாடக மேலாளர்கள் குறித்தும், நாடகத்துறையில் காணப்படும் தீய ஒழுக்கங்களையும், ஊழைலையும் மிகக் கடுமையாகக் கண்டனம் செய்தார். ‘உலக்கை' நாவல், இதயமற்ற நிலப்பிரபுத்துவத்தின் மீது, மிகச்சரியாகப் படைக்கப்பட்ட சமுதாய விமர்சனம் மற்றும் கண்டனம் ஆகும்.

உலக்கை, விற்பனையாளன், யாருக்காக, அதிகாரம், நடிகை, கனவு, கண்ணாடி, பக்கத்து வீட்டுக்காரர்கள், சாக்கடையிலிருந்து முதலிய 27 நாவல்களை படைத்துள்ளார்.

கேசவதேவ், ‘பக்கத்து வீட்டுக்காரர்கள்' என்னும் நாவலுக்காக இந்திய அரசின் சாகித்ய அகாதெமியின் விருதினை 1964 ஆம் ஆண்டு பெற்றார். மேலும், சோவியத் நாட்டின், 'நேரு விருதையும்' 1970 ஆம் ஆண்டு பெற்றார்.

கேசவதேவ், வாழ்க்கைச் சக்கரம், துப்புரவுத் தொழிலாளி, காதலிக்க நேரமில்லை, எதிர்கால மாப்பிள்ளை முதலிய 17 சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டார்.

மேலும், பிரதம மந்திரி, கொள்ளைக் கூட்டம், மந்திரக்கோல், மூதாதையர் வீடு முதலிய 11 நாடகங்களையும், புரட்சிக் கவி, காதல் பிச்சை, மழை அங்கே குடை இங்கே முதலிய 7 ஓரங்க நாடகங்களையும், நெருப்பும் பொறியும், சித்திரக் கூடம், வாழ்க்கைப் பரப்பு முதலிய 7 கட்டுரை நூல்களையும் மலையாள இலக்கிய உலகிற்கு படைத்தளித்துள்ளார்.

கேசவதேவ், 'பிசாசுக்கும் கடலுக்கும் இடையில்’ என்னும் நாடகத்தில், “ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும், பணம் படைத்த வர்க்கமும், திருட்டுக் கூட்டமும் எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளுகிறார்கள். ஏழைகளை ஏமாற்றுகிறார்கள்; அவர்கள் அனைவரும் கடைசியில் ஒன்றாகி விடுகிறார்கள்; மக்களாகிய நாம் தான் வெளியில் நிற்கிறோம்” – என நாட்டு நடப்பின் நிலைமையை படம் பிடித்துக் காட்டுகிறார்.

"சனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் பத்திரிக்கை என்பது, கலை, இலக்கியத்தைப் படுகொலை செய்யும் ஒரு அசலான கசாப்புக் கடையாகி விட்டது. இனவாதிகளின் தனிப்பட்ட ஆசாபாசங்களுக்கு இரையாகி, இச்சை மொழி பேசும் நிறுவனமாகிவிட்டது"- என தமது 'கொள்ளைக் கூட்டம்' என்னும் நாடகத்தில் சாடுகிறார்.

கேசவதேவ், புரட்சிகர இலக்கியம் படைத்தார். அந்த இலக்கியம், அவமானப்படுத்தப்பட்டவர்கள், காயம்பட்டுப் போனவர்கள், நசுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், அடக்கப்பட்டவர்கள் ஆகியோர் சார்பாக போராடும் இலக்கியம் ஆகும். மனிதன் மீது விசுவாசம் வைத்து, மனிதனின் அளப்பறிய ஆற்றல் மீது நம்பிக்கை கொள்ளும் இலக்கியம். "இந்த மனிதன் என்பவன் தான் எத்தகைய படைப்பு! அவன் வாழும் வாழ்க்கை எவ்வளவு வெறுக்கத்தக்கதாய் இருக்கிறது" என்று பேசும் இலக்கியம். சுதந்திர இந்தியாவின், துணிவு மிக்க இந்தியாவின் மானுடத்தை, மறுபடியும் விழித்து எழச் செய்ய வல்லதாக இந்த இலக்கியம் இருக்கும். கேசவதேவும், தகழியும் மலையாள இலக்கியத்தில், இந்தப் புதிய இயக்கத்திற்கு தலைமையேற்று முன்னெடுத்துச் சென்றார்கள் என மலையாள இலக்கிய ஆய்வாளர்கள் கருத்துரைத்து உள்ளனர்.

கேரளா மாநிலத்தின் கம்யூனிஸ்டு அரசாங்கத்தின் முதல்வராக இருந்த சி.அச்சுதமேனன் 1974 ஆம் ஆண்டு, கேசவதேவை, கேரள மாநில சாகித்திய அகாதெமியின் தலைவராக நியமித்தார். இப்பதவியில் அவர் மூன்றாண்டுகள் இருந்து சிறப்பாகச் செயல்பட்டார்.

‘கட்டுக்கல்யாணம்' என்பது கேசவதேவ் சார்ந்திருந்த இனத்தில் அன்று வழங்கி வந்த வெறுக்கத்தக்க ஒரு வழக்கம்! அந்த வழக்கத்தின்படி, அந்த இனத்தின் சம்பிரதாயத்தின்படி, மிகவும் இளைய பருவத்துப் பெண்களைச் சடங்கு நியமனங்களோடு மணப் பெண்ணாகக் கருதி, எண்பதுக்கும், தொண்ணூறுக்கும் இடைப்பட்ட வயதுள்ள முதிய நம்பூதிரிகளுக்கு வழங்குவார்கள். இந்த கொடிய வழக்கத்தை கேசவதேவ் தமது இறுதி மூச்சுள்ளவரை தீவரமாக எதிர்த்துப் போராடினார்.

"நவீன காலத்து எழுத்தாளன் ஒருவனது கடமை தன்னைச் சுற்றியுள்ள ஆண்-பெண்- குழந்தைகள் ஆகியோரது முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு, யதார்த்தத்தைத் தவறுதல் இல்லாமல் பிரதி செய்து எழுத்தாக்குவது தான்.” என்னும் ஜான் ரஸ்கின் கூற்றின் அடிப்படையில் கேசவதேவ், இலக்கியத்தின் நோக்கம் மனித உலகத்தை மானுடப்படுத்துவதே என்பதை தமது உயர்ந்த லட்சியமாகக் கொண்டு இலக்கியம் படைத்தார். கேசவதேவ் 1-07-1983 ஆம் நாள் இவ்வுலகைவிட்டு மறைந்தார். அவர் மறைந்தாலும், அவரது பெயர் மலையாள இலக்கியத்தில் என்றும் நிலைத்து நிற்கும்.

Pin It