மௌலானா ஹஸ்ரத் மஹானி 1878 ஆம் ஆண்டு லக்னோ அருகில் உன்னனோ மாவட்டத்தில் மஹன் என்னும் நகரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சையத் பஜூல் ஹஸன் என்பதாகும். இளமையில் கல்வியில் சிறந்து விளங்கினார். ஆங்கிலம், உருது, பாரசீகம், அரபி முதலிய மொழிகளில் பாண்டியத்தியம் பெற்றவர்.

 Moulana-Hasarath-Mahaniகல்லூரி வாழ்க்கையில் ‘இன்குலாப் ஜிந்தாபாத்' என்ற முழக்கத்தை எழுப்பி மாணவர்களிடையே புரட்சிகர எண்ணத்தை உருவாக்கினார். மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் காங்கிரஸின் பால் ஈர்க்கப்பட்டு அதன் உறுப்பினராகச் சேர்ந்தார். காங்கிரஸின் தீவிரவாத முகாமாக கருதப்பட்ட பாலகங்காதர திலகரோடு தன்னை இனங்காட்டிக் கொண்டார். திலகர் காங்கிரஸிலிருந்து விலகிய போது தானும் விலகினார்.

 காங்கிரஸ் மாநாட்டிலும், முஸ்லீம் லீக் மாநாட்டிலும், கிலாபத் இயக்க மாநாட்டிலும் இந்தியாவுக்கு ‘பூரண சுதந்திரம்' வேண்டுமெனத் தீர்மானங்களை முன்மொழிந்து வரலாற்றில் இடம் பெற்றார்.

 இவர் கவிஞர், இதழாளர், எழுத்தாளர் எனப் பன்முகத் திறன் பெற்றவர். இவரது எழுதுகோல் இந்திய விடுதலைக்காக எழுதியது. இதனால் பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறைக்கு உள்ளானார். சிறைத்தண்டனை பெற்றார்.

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு 1925 ஆம் ஆண்டு கான்பூரில் நடைபெற்றது. அம்மாநாட்டின் வரவேற்புக் குழுச் செயலாளராக இருந்து பணியாற்றினார்.

 இவர் காங்கிரஸில் இருந்த போதும், கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த போதும் சுதந்திரச் சிந்தனையாளராக விளங்கினார். மேலும், மிகுந்த மதப்பற்று கொண்டவராக இருந்தமையால், இவரது பேச்சும் செயலும் கட்சி அமைப்புகளில் சிக்கல்களை ஏற்படுத்தியது. அதனால் 1929 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினாலும், கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும், பிரிட்டிஷாருக்கு எதிரான தமது போராட்டத்தை ஒரு போதும் கைவிடவில்லை. சர்வதேச அரசியல் நிகழ்வுகளையும் ஊன்றிக் கவனித்து வந்தார். எகிப்து நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் செய்த அட்டூழியங்களை கண்டித்து தமது இதழான ‘உருது முல்லா’வில் எழுதினார். அதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் அவரைக் கைது செய்து சிறைத் தண்டனை அளித்தது.

  தமது இதழ்களில், இந்திய முஸ்லிம்கள் கல்வியில், வேலை வாய்ப்புகளில் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதை கண்டித்து எழுதினார். மேலும், மத நம்பிக்கைகள் காயப்படுத்தப்படுவதையும், மத வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்படுவதையும் வன்மையாக கண்டித்து எழுதினார். இதனால், ஆத்திரமடைந்த பிரிட்டிஷ் அரசு இவரை மீண்டும் கைது செய்து சிறையிலடைத்தது.

 மௌலானா ஹஸ்ரத் மஹானி, 1935 ஆம் ஆண்டு தனியாக ஒரு கட்சியைத் துவக்கினார். அக்கட்சியின் மூலம் இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தினார்.

 உருது இலக்கியத்தில் தணியாத ஆர்வம் கொண்டு, உருது கவிதையில் புதுமைகள் பல படைத்தார். மனிதன் மீது மாளாத காதல் கொண்டு இவர் இயற்றி பாடிய பாடல்கள் காலம், மொழி, இடம், தேசம் என அனைத்தையும் கடந்து இன்றும் ஒலிக்கின்றன. இவரது கவிதைகள் பத்து பெரும் தொகுதிகளாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

 உத்திரபிரதேச சட்டசபையிலிருந்து 1945 ஆம் ஆண்டு, இந்திய அரசியல் நிர்ணய சபைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

 அரசியல் சட்ட நிர்ணய சபை விவாதத்தின் போது, சர்தார் வல்லபாய் படேல் சில வார்த்தைகளை கடுமையாக கூறினார். உடனடியாக ஹஸ்ரத் மஹானி எழுந்து நின்று, “இங்கே முஸ்லிம்கள் அனாதைகளாக்கப்பட்டு விட்டதாக சர்தார் வல்லபாய் படேல் ஒரு போதும் எண்ண வேண்டாம். இங்கு நான் உள்ளேன். அவர்களின் உரிமைகளுக்காகவும் நலனுக்காவும், இறுதி மூச்சுள்ளவரை வாதாடுவேன்; போராடுவேன்" என்றார்.

 இந்திய அரசியல் சட்ட நிர்ணய சபைக் கூட்டம் 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் கூடியது. “இந்தியா சுதந்திரமான , இறையாண்மை மிக்க, சனநாயக குடியரசு ; இதன்மூலம் இந்திய மக்கள் அனைவருக்கும் நீதி, சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்கிறது" என்ற முகப்புரை வாசிக்கப்படுகிறது. அப்பொழுது அந்த அவையில் இருந்தவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து கரங்களை உயர்த்தினர். பண்டித ஜவகர்லால் நேரு மௌலானா ஹஸ்ரத் மஹானியிடம் ஓடி வந்தார், “என்ன செய்கிறீர்கள்? நீங்கள் ஒருவர் மட்டுமே எதிர்த்து வாக்களிக்கிறீர்கள்! என்ன ஆனது உங்களுக்கு?" என வினவினார்.

 “பண்டித ஜவகர்லால் நேரு அவர்களே! ஆம், எனது ஒரு வாக்காவது எதிர்ப்பாக விழட்டும்! ஏனென்றால் இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு இந்தச் சட்டம் எந்த நியாயத்தையும் வழங்கவில்லை" என்றார்.
 
 மேலும், இந்திய அரசியல் சட்டம் சோவியத் நாட்டு அரசியல் சட்டத்தை ஒத்ததாக அமைய வேண்டும் என்று வற்புறுத்தினார். ஒற்றை நபராக இருந்தாலும், மனசாட்சிக்கு சரியெனப்பட்டதை துணிவுடன் கூறும் இயல்பு கொண்டவராக விளங்கினார்.

 மௌலானா ஹஸ்ரத் மஹானி, அறுபது ஆண்டுகளுக்கு முன்பே முன்வைத்த கருத்துக்கள் இன்றும் மிகவும் பொருத்தமாக உள்ளது. இன்று இந்தியாவில் இஸ்லாமியர்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதும், மதக்கலவரங்களில் கொல்லப்படுவதும் அன்றாட நிகழ்வுகளாகி விட்டது. இஸ்லாமியர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் புறந்தள்ளப்பட்டு வருகின்றனர் என்பது கண்கூடான உண்மை.

 கொல்கத்தாவில் 1949 ஆம் ஆண்டு நடைபெற்ற சோசலிஸ்ட் மாநாட்டில் கலந்து கொண்டார். லக்னோவில் 1951 ஆம் ஆண்டு தமது எழுபத்து மூன்றாவது வயதில் காலமானார். அவர் மறைந்தாலூம் அவர் இயற்றிய கஜல் பாடல்கள் இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தானிலும் புகழ் பெற்று விளங்குகிறது.

 பாகிஸ்தானில் இவரது பெயரால் நினைவு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நகருக்கு இவரது பெயர் சூட்டப்பட்டடுள்ளது. தமது சகாக்களான ஜோஸ் மலிஹாபதி, நசீர் ஹஸீம் உட்பட பலர் பாகிஸ்தான் பக்கம் சாய்ந்த போதும், இவர் இந்தியாவின் பக்கமே நின்றார் என்பது வரலாறு கூறும் செய்தி!

Pin It