இந்திய விடுதலைப் போர் குறித்த பல வரலாறுகள் உண்டு. 1857ஆம் ஆண்டுப் புரட்சி முதல் இந்திய விடுதலைப் போர் என்று வர்ணிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பும் பின்பும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே சிறியதும் பெரியதுமாகப் பல ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்புகள் தோன்றின. சிதறியும், பரந்த நோக்கமற்றும், தெளிவான திட்டமும் இல்லாமலும் தனிநபர் அல்லது சிறிய குழுக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இக் கிளர்ச்சிகள் நடத்தப்பட்டதால், இவற்றை முறி யடிப்பதில் காலனிய ஆட்சிக்கு சிரமமில்லாமல் போய்விட்டது. பல கிளர்ச்சிகள் விடுதலைப் போராட்டங்களாகக் கருதப்படவில்லை; சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளாகத்தான் பார்க்கப்பட்டன. இருப்பினும், இப்போராட்டங்கள் நாளடைவில் மக்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கம் பெரிது. இவை ஏற்படுத்திய விழிப்புணர்வை அடித்தளமாகக் கொண்டு தான் 1900-க்குப் பின்னர் இந்திய விடுதலை இயக்கம் கட்டியெழுப்பப்பட்டது. ஆனால் இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் இச்சிறு கிளர்ச்சிகள் புறந்தள்ளப் படுகின்றன; இவற்றின் தாக்கம் சிறுமைப்படுத்தப் படுகின்றன.

ஆங்கிலேய ஆட்சிக்கெதிராக 1763 முதல் 1852 வரை நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக வங்காளம், பீகார், தமிழ்நாடு, ஆந்திரா போன்ற பகுதிகளில் குறுநில மன்னர்களும் பல இனக் குழுக்களும் போர் தொடுத்தனர். 1854இல் பீகார் மாநில பாகல்பூரின் சாந்தால் பழங்குடியினர் ஆங்கிலேய ஆட்சிக்கெதிரான ஒரு நீண்ட யுத்தத்தை நடத்தினர். 1820 முதல் 1837 வரை சோட்டா நாக்பூரின் கோல் இனத்தவர் நடத்திய கிளர்ச்சியில் ஆயிரக்கணக்கான கோல் மக்கள் உயிரிழந்தனர்; 1889-1900 வரை பிர்சா முண்டா தலைமையில் முண்டா இனத்தவர் கிளர்ச்சி செய்தனர். 1857 முதல் 1870 வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆங்கிலேயரையும் அவர்களை அண்டி வாழ்ந்த நிலவுடைமையாளர்களையும் எதிர்த்து விவசாயிகள் போராடினர்.

சோவியத் யூனியனின் எழுச்சியைத் தொடர்ந்து இடதுசாரி சிந்தனை கொண்ட பல்வேறு இயக்கங்கள் 1920க்குப் பின்னர் தோன்றின. 1920இல் ஏஐடியுசி உருவான பின்னர் இந்திய விடுதலைக்கான போராட்டத்தில் தொழிலாளரும் தீவிரமாக இறங்கினர். அதே போல் 1910 தொடங்கி இந்திய விடுதலைக்காக இந்தியாவிற்கு வெளியே - அமெரிக் காவிலும், கனடாவிலும் - கதார் போன்ற இயக்கங்கள் தோன்றின. இவற்றின் இடையே காங்கிரஸ் தலை மையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டத் திலும், அதன் யுக்திகளிலும் நம்பிக்கையற்ற பலர், குறிப்பாக இளைஞர்கள், வன்செயல்களிலும், பயங்கரவாத நடவடிக்கைகளிலும் இறங்கினர்.

ஆனால் இன்று இந்த இயக்கங்களும், அவற்றுக்குப் பின் இருந்த சித்தாந்தங்களும் பேசப் படுவதில்லை. பொதுவுடைமை, சமூக சீர்திருத்தம், சமயச் சார்பின்மை போன்ற மக்களாட்சிக் கோட் பாடுகளை மையப்படுத்தி உருவான இந்த இயக்கங் களையும், அவற்றின் உந்துதலாக இருந்த தனி நபர்களையும் மீண்டும் பேசுவது அவசியமாகி விட்டது.

புரட்சிகரப் பயங்கரவாதம் வங்காளத்தில் தீவிர மாகச் செயல்பட்டது. இந்திய தேசியக் காங்கிரசை மையப்படுத்தி நடத்தப்பட்ட விடுதலைப் போராட்டம் தொய்வடைந்த நேரங்களில் மிகத் தீவிரமாகவும், பிற சமயங்களில் தேசிய இயக்கத்திற்கு இணையாகவும் புரட்சிகரப் பயங்கரவாதம் இருந்தது. இதன் சித்தாந்தங்களும், செயல்பாடுகளும் இளைஞர் களை வெகுவாகக் கவர்ந்தன. வன்முறை வழியாகவும், அது ஏற்படுத்தும் அச்ச உணர்வின் மூலமும் ஆங்கிலேயரை விரட்டி விட முடியும் என்ற கருத்து வலிமையாக முன் வைக்கப்பட்டது.

முதல் உலகப்போர் நிகழ்ந்தபோது புரட்சி கரப் பயங்கரவாதிகள் கடுமையான முறைகளில் ஒடுக்கப்பட்டனர்: அவர்களில் பெரும்பாலோர் சிறையில் அடைக்கப்பட்டனர்; பலர் தலைமறை வாகி விட்டனர். 1920 தொடக்கத்தில், மாண்டேக் - செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்களுக்குச் சாதகமான சமூக சூழல் தேவைப்பட்டது. இதற்காக, சிறையில் இருந்த பல புரட்சியாளருக்கு அரசு பொது மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்தது. இந்திய தேசிய காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தவுடன் காந்தி, சி.ஆர்.தாஸ் போன்ற தலைவர்களின் வற்புறுத்தலால் புரட்சியாளர்கள் பலர் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தனர்; சிலர் தங்களுடைய தனி வழி செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டனர். காந்திய மக்கள் இயக்கத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்தனர்.

ஜோகேஷ் சந்தர் சாட்டர்ஜி, சூர்யா சென், ஜதின் தாஸ், சந்திரசேகர் ஆசாத், பகத்சிங், சுக்தேவ், சிவ் வர்மா, பகவதி சரண் வோரா, ஜெய்தேவ் கபூர் போன்ற புரட்சிகரப் பயங்கர வாதத்தின் முக்கிய தலைவர்கள் வன்முறையைத் தவிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தில் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

ஆனால் பின்னர் ஒத்துழையாமை இயக்கம் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சி திரண்டு வந்த பெரும் நம்பிக்கையை உடைத்து நொறுக்கி விட்டது. தேசியத் தலைமையின் அடிப்படை யுக்திகளையும், அது வலியுறுத்திய அமைதி வழிகளையும் பல இளைஞர்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர்; மாற்று வழிகளைத் தேட ஆரம்பித்தனர். சுயராஜ்யவாதிகளின் பாராளுமன்ற அரசியலில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை; மாற்றம் எதுவும் தேவை இல்லை என்று வாதிட்டவர் களின் பொறுமையான, பரபரப்பற்ற கட்டமைப்புப் பணியிலும் நம்பிக்கை இல்லை. வன்முறை மட்டுமே நாட்டிற்கு விடுதலை தரும் என்ற கருத்து இவர்களில் பலரைக் கவர்ந்தது.

படிப்படியாக, இரண்டு புரட்சிகர பயங்கர வாதக் குழுக்கள் தோன்றின: ஒன்று, பஞ்சாப், உ.பி., பீகார் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது; இரண்டு, வங்காளத்தில் செயல்பட்டது. பல புதிய சோசலிச சக்திகளின் தாக்கம் இரண்டு குழுக்களின் மீதும் இருந்தது. ஒன்று, போருக்குப் பின்னர் தோன்றிய உழைக்கும் வர்க்கத்தின் தொழிற்சங்க எழுச்சி. இந்தப் புதிய வர்க்கத்தின் புரட்சி வலுவைப் புரிந்து கொண்ட இவர்கள், இந்த சக்தியைப் புரட்சிகரப் பயங்கரவாதத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினர். இரண்டு, ரஷ்யப்புரட்சியின் வெற்றியும், இந்தப் புதிய சோசலிச நாடு தன்னை நிலைநிறுத்திக் கொண்டதும் தாக்கத்தை ஏற்படுத்தின. இளம் சோவியத் நாடு மற்றும் போல்சேவிக் கட்சியிடம் இருந்து கற்றுக்கொள்ளவும், அவர்களுடைய உதவியைப் பெற்றுக் கொள்ளவும் ஆர்வமாக இருந்தனர். மூன்று, புதிதாகத் தளிர்விட்டுக் கொண்டிருந்த கம்யூனிசக் குழுக்கள் வலியுறுத்திய மார்க்சியம், சோசலிசம், உழைக்கும் வர்க்கம் போன்ற சிந்தனைகள் ஏற்படுத்திய தாக்கம்.

வட இந்தியாவின் புரட்சியாளர்கள்தான் ஏமாற்ற மனநிலையில் இருந்து முதலில் வெளியே வந்தனர். ராம் பிரசாத் பிஸ்மில், ஜோகேஷ் சாட்டர்ஜி, சச்சிதானந்த சன்யால் போன்ற அனுபவமிக்க தலைவர்களின் கீழ் மீண்டும் அணி திரண்டனர். சன்யாலின் ‘பந்தி ஜீவன்’ இவர்களின் பாட நூலாக மாறியது. 1924 அக்டோபர் மாதம் கான்பூரில் கூடினர்; ‘ஹிந்துஸ்தான் குடியரசு அமைப்பு’ என்ற போர்ப் படையை ஏற்படுத்தினர். காலனிய ஆட்சியைத் தூக்கியெறியும் ஆயுதப் புரட்சிகளை நடத்தவும், காலனிய ஆட்சிக்கு மாற்றாக, தேர்தலை அடிப் படையாகக் கொண்ட இந்திய ஐக்கிய நாடுகள் என்ற குடியரசை நிறுவவும் திட்டமிட்டனர்.

ஆயுதம் ஏந்திப் போராடும் முன்னர் பரவலான பிரச்சாரம் தேவை; மக்களை அணிதிரட்டி அவர் களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்; ஆயுதங்கள் வாங்க வேண்டும். இவற்றுக்கு நிதி தேவை. இதற்காக நடத்தப்பட்ட ‘கக்கோரி கொள்ளை’ தான் புரட்சிப்படையின் முதல் ‘செயல்’. 9 ஆகஸ்ட், 1925 அன்று எண் 8 புகைவண்டியைப் பத்து பேர் கக்கோரி என்ற அரவமில்லாத கிராமத்தில் நிறுத்தி ரயில்வே துறையின் பணத்தைக் கொள்ளையடித்தனர். அரசின் கடுமையான பதிலடி உடனடியாக வந்தது; ஏராளமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்; ‘கக்கோரி சதி வழக்கு’ நடத்தப்பட்டது; அஷ்பா வுல்லா கான், ராம் பிரசாத் பிஸ்மில், ரோஷன்சிங், ராஜேந்திர லாஹிரி ஆகிய நான்கு பேரும் தூக்கிலிடப் பட்டனர்; நான்கு பேருக்கு ஆயுள் காலச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு அந்தமான் அனுப்பப் பட்டனர்; மேலும் பதினேழு பேருக்கு நீண்ட காலச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. சந்திர சேகர் ஆசாத் பிடிபடவில்லை.

வட இந்தியாவில் இருந்த புரட்சியாளர்களுக்கு கக்கோரி வழக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது; ஆனால் அவர்களை ஒடுக்கிவிடவில்லை. உத்தர பிரதேசத்தில் பிஜோய் குமார் சின்ஹா, சிவ் வர்மா, ஜெய்தேவ் கபூர் போன்ற இளைஞர்களும், பஞ்சாபில் பகத்சிங், பகவதி சரண் வோரா, சுக்தேவ் போன்ற இளைஞர்களும் சந்திரசேகர் ஆசாத் தலைமையில் ஹிந்துஸ்தான் புரட்சிப் படையை மீண்டும் திரட்டினர். அதே சமயம், சோசலிசக் கருத்தாக்கத்தின் தாக்கு தலும் இவர்கள் மேல் இருந்தது. 1928, செப்டம்பர் 9,10 அன்று வட இந்தியாவில் இருந்த அனைத்து முக்கியமான இளைய புரட்சியாளர்களும் டில்லியில் உள்ள பிரோஷ்ஷா கோட்லா மைதானத்தில் ஒரு பொதுத் தலைமையை உருவாக்கினர்; சோசலிசத்தைக் குறிக்கோளாக ஏற்றுக்கொண்டனர்; இயக்கத்தின் பெயரை ‘இந்துஸ்தான் சோசலிச ரிபப்ளிக்கன் அசோசியேசன் (படை) என்று மாற்றினர்.

*

இந்துஸ்தான் படையினர் தனிநபர் சாகசத்தைத் தவிர்க்கத் தொடங்கினர்; தனிநபர் கொலைகளில் ஈடுபடவில்லை; மாறாக, வெகு மக்கள் அரசியல் செயல்பாடுகளில் இறங்கினர். இருந்தாலும் மீண்டும் அத்தகைய தனிநபர் வன்செயலில் இறங்க வேண்டிய சூழலும் வந்தது. 30 அக்டோபர் 1928 அன்று லாகூரில் சைமன் குழு எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தலைமை யேற்ற லஜபதிராயை காவல்துறை லத்தியால் கொடூரமாக அடித்தது. நெஞ்சில் கடுமையாகத் தாக்கப்பட்ட லஜபதிராய் இரண்டு வாரங்களில் (17 நவம்பர் 1928 அன்று) இறந்து போனார். லஜபதி ராயின் மரணத்திற்குப் பழி வாங்குவதற்காகத் தனிநபர் கொலை மீண்டும் தோன்றியது. ‘பஞ்சாபின் சிங்கம்’ என்று அழைக்கப்பட்ட ராய் இளைய தலைமுறையின் தலைவராகப் போற்றப்பட்டவர். எனவே அவருடைய மரணம் புரட்சியாளர்களுக்கு விடப்பட்ட நேரடி சவாலாகக் கொள்ளப்பட்டது. எனவே 17 டிசம்பர் 1928 அன்று லாகூரில் காவல் துறை அதிகாரி சாண்டர்ஸ் பகத்சிங், ஆசாத், ராஜ குரு ஆகியோரால் கொல்லப்பட்டார்.

லஜபதி ராய் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சாண்டர்ஸ்க்கு முக்கிய பங்கு இருந்தது. சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்ட பின் கொலை நியாயத்தை விளக்கி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன; “தகுதியற்ற, கீழான சாதாரண காவலர் கையால் நாடெங்கும் மதிக்கப்பட்ட மாபெரும் தலைவர் மரணமடைவது... இந்த நாட்டிற்கு அவமானம். இந்தக் கறையைத் துடைப்பது இந்திய இளைஞரின் கடமை... ஒருவரைக் கொன்று விட்டோம் என்பதில் வருத்தம்தான்; ஆனால் அவர் ஸசாண்டர்ஸ்] மனிதாபிமானமும், நியாயமும் இல்லாத ஒரு அமைப்பின் பிரிக்க முடியாத அங்கம்.

தன்னுடைய குறிக்கோள்கள் மாறிவிட்ட தையும், மக்கள் புரட்சி அவசியம் என்பதையும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று புரட்சிப் படை விரும்பியது. பொதுவாக மக்களின் உரிமை களையும், குறிப்பாக தொழிலாளரின் உரிமைகளையும் கட்டுப்படுத்த ‘பொதுப் பாதுகாப்புச் சட்டம்’ மற்றும் ‘வர்த்தகத் தாவாச் சட்டம்’ ஆகியவை மத்திய சட்டமன்றத்தில் புகுத்தப்படுவதைக் கண்டித்து 8 ஏப்ரல் 1929 அன்று அந்த மன்றத்தில் குண்டு வீசுவ தென்று முடிவு செய்யப்பட்டது. திட்டமிட்ட படியே பகத்சிங்கும், பி.கே. தத்தும் குண்டு வீசினர். குண்டை வீசியபின் இருவரும் தப்பி ஓட முயற்சியும் செய்யவில்லை. யாரையும் கொல்வது அவர் களுடைய நோக்கம் அல்ல; வீசப்பட்ட குண்டுகள் பலவீனமானவைதான்; கைதாகி, விசாரணையில் நீதிமன்றத்தைப் பிரசார மேடையாக்குவதுதான் அவர்களின் திட்டம்; மக்கள் மத்தியில் தங்களுடைய இயக்கத்தையும், சித்தாந்தத்தையும் பரவலாக்குவது தான் அவர்களின் எண்ணம். குண்டுவீச்சிற்குப் பின் மன்றத்தில் அவர்கள் வீசிய துண்டுப் பிரசுரங்களில் ‘செவிடர் கேட்க வேண்டும்’ என்று குறிப்பிட்டனர்.

பகத்சிங்கும், பி.கே தத்தும் பாராளுமன்றக் குண்டு வழக்கில் விசாரிக்கப்பட்டனர். பின்னர் பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு மற்றும் பல புரட்சி யாளர்கள் பிரபலமான பல சதி வழக்குகளிலும் விசாரிக்கப்பட்டனர். அச்சமின்றி, அரசு எதிர்ப்பு உணர்வு குன்றாமல், வழக்குகளை எதிர்கொண்டனர். ‘இன்குலாப் ஜிந்தாபாத்’, ‘ஏகாதிபத்தியம் ஒழிக’, ‘உழைக்கும் வர்க்கம் வாழ்க’ போன்ற முழக்கங் களை எழுப்பிக்கொண்டே தினமும் நீதிமன்றங் களுக்குள் வந்தனர்; ‘சர்வரோஷி கீ தமனா அப் ஹமாரா தில் மே ஹே’ (வீர மரணத்திற்காக எங்கள் இதயம் ஏங்குகிறது), ‘மேரா ரங்க் தே பசந்தி சோலா’ (வீரம், தியாகம் ஆகியனவற்றின் நிறமான சந்தன நிறத்தை என் ஆடைக்குத் தாரீர்) போன்ற பாடல்களை நீதிமன்றங்களில் பாடினர். இவை அனைத்தும் நாளிதழ்களில் வெளியாயின. நாடு முழுவதும் உள்ள மக்களின் ஆதரவையும், அனுதாபத்தையும் இவர்கள் பெற்றதில் வியப்பு இல்லை; வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். பகத் சிங்கின் பெயரை அறியாத வீடே நாட்டில் இல்லை. 1931 மார்ச் மாதம் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட செய்தி கேட்ட பல்லாயிரம் மக்கள் கண்ணீர் விட்டனர்; பலர் உண்ணவில்லை, பள்ளிகளுக்குச் செல்லவில்லை, அன்றாடப் பணிகளைக் கூடச் செய்யவில்லை.

சிறையில் இருந்த மோசமான நிலையை விசாரணைக் கைதிகளாக இருந்த புரட்சியாளர்கள் கண்டித்தார். இதற்காக இவர்கள் மேற்கொண்ட நீண்ட நாள் உண்ணாநிலைப் போராட்டம் நாட்டில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றவாளிகளாக அல்ல, அரசியல் கைதிகளாகத் தங்களை நடத்த வேண்டும் என்று வாதிட்டனர். உண்ணாநிலை மேற்கொண்ட புரட்சியாளர் பின்னால் நாடே திரண்டது.

ஒல்லி உருவமும், இரும்பு உறுதியும் கொண்ட ஜதின் தாஸ் 13 செப்டம்பர் அன்று, 64 நாள் உண்ணா நிலைக்குப் பின் மரணம் அடைந்தார். லாகூரில் இருந்து கல்கத்தாவிற்குப் புகை வண்டியில் அவர் உடலைக் கொண்டு சென்றபோது வழியில் ஒவ்வொரு புகைவண்டி நிலையத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். ஆறு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டு தாசின் உடலை மயானத்திற்குத் தூக்கிச் சென்றனர்.

‘லாகூர் சதி வழக்கு’ மற்றும் அது போன்ற பிற வழக்குகளில் ஏராளமான புரட்சியாளர் தண்டிக்கப் பட்டனர். பலருக்கு நீண்ட காலச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது; பல புரட்சியாளர்கள் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோருக்குத் தூக்குத்தண்டனை தீர்ப்பிடப்பட்டது; 23 மார்ச் 1931 அன்று தண்டனை நிறைவேற்றப்பட்டது.

வங்காளத்திலும் புரட்சிகரப் பயங்கரவாதிகள் ஒன்று திரள ஆரம்பித்தனர்; தலைமறைவு செயல் பாடுகளில் ஈடுபட்டனர். அதே சமயம் அவர்களில் பலர் காங்கிரஸ் அமைப்பிற்குள்ளும் தொடர்ந்து பணி செய்தனர். இதனால் காங்கிரசிடம் இருந்த வெகுமக்களுடன் தொடர்பில் இருந்தனர்; சிறிய நகரங்களிலும், கிராமப் புறங்களிலும் காங்கிரசிற்கு அமைப்புரீதியாக அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். சி.ஆர். தாசுடன் அவருடைய சுயராஜ் பணியில் ஒத்துழைத்தனர். தாசின் மறைவுக்குப் பின்னர் காங்கிரஸ் தலைமை இரண்டாகப் பிரிந்தது. சுபாஷ் சந்திர போஸ் தலைமை ஏற்ற பிரிவுடன் ‘யுகாந்தர்’ குழு பணியாற்றியது; ஜே.எம். சென் குப்தா பிரிவுடன் ‘அனுசீலன்’ சேர்ந்து கொண்டது.

புரட்சிக் குழுக்கள் பல செயல்களில் இறங்கின. கல்கத்தாவின் காவல்துறை ஆணையாளர் சார்லஸ் டேகார்ட் மாநகர மக்கள் அனைவரின் வெறுப் பையும் சம்பாதித்துக் கொண்டவர். டேகார்ட்டை ஜனவரி 1924இல் கொலை செய்யத் திட்டமிட்ட கோபிநாத் சாகா, தவறுதலாக டே என்ற ஆங்கி லேயரைக் கொன்று விட்டார். உடனே மொத்த மக்கள் மீதும் அரசு அடக்குமுறையை ஏவியது. இதற்கென்று தனிச்சட்டம் இயற்றினர்; பயங்கர வாதிகள் அல்லது பயங்கரவாதிகளின் ஆதரவாளர் என்ற சந்தேகத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் இச்சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சுபாஷ் சந்திர போசும், ஏராளமான காங்கிரஸ்காரரும் இதில் இருந்தனர். வெகுமக்களின் தீவிர எதிர்ப் பையும் மீறி சாகா தூக்கிலிடப்பட்டார். புரட்சி யாளர்களின் செயல்பாட்டிற்கு இதனால் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

பின்னடைவுக்கு மற்றொரு காரணமும் இருந்தது. புரட்சிக் குழுக்களுக்கு இடையேயும், உள்ளேயும் இருந்த மோதல்களும், பிளவுகளும், தனிநபர் தகராறுகளும் பின்னடைவை ஏற்படுத்தின; முக்கிய மான யுகாந்தரிலும் அனுசீலனிலும் இத்தகைய மோதல்கள் இருந்தன. ஆனால், இளைய புரட்சி யாளர்கள் புதிய குழுக்களாகத் திரண்டனர். யுகாந்தர் மற்றும் அனுசீலன் குழுக்களில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தவருடன் தோழமை உறவு களை ஏற்படுத்திக் கொண்டனர்; தங்களுக்கு இடையே தொடர்பு வைத்துக்கொண்டனர். சூர்யா சென் தலைமையில் செயல்பட்ட சிட்டகாங் குழு இந்தப் புதிய புரட்சிக்குழுக்களில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டது.

சூர்யா சென் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டவர். பின்னர் சிட்டகாங்கில் இருந்த தேசியப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணி யாற்றினார். இதனால் ‘மாஸ்டர்தா’ என்று பிரிய மாக அழைக்கப்பட்டவர். புரட்சிகர நடவடிக்கை களுக்காகக் கைது செய்யப்பட்டார்; இரண்டு ஆண்டு (1926 - 1928) சிறைத் தண்டனைக்குப் பின்னர் காங்கிரசில் தொடர்ந்து பணிசெய்தார். சிட்டகாங் பகுதி காங்கிரசின் செயல்பாடுகளில் சென்னுக்கும், அவருடைய குழுவுக்கும் பெரும் பங்கு இருந்தது. 1929 இல் சிட்டகாங் மாவட்டக் காங்கிரஸ் குழுவின் செயலாளராக சூர்யா சென் செயல்பட்டார்; அவருடைய தோழர்கள் ஐந்து பேர் மாவட்டக் குழுவின் உறுப்பினராக இருந்தனர்.

சூர்யா சென் திறமையான, உற்சாகம் ஊட்டும் அமைப்பாளர்; எளிமையானவர்; அமைதியானவர்; ஒளிவு மறைவு இல்லாத உண்மையானவர்; தைரிய மானவர்; மனிதாபிமானத்துடன் பிரச்சினைகளை அணுகுபவர். மனிதாபிமானம் “புரட்சியின் முக்கிய பண்பு” என்று வலியுறுத்தியவர். கவிதையில், முக்கியமாக தாகூர், காஜி நஸ்ரும் இஸ்லாம் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

சூர்யா சென் விரைவில் தன்னைச் சுற்றி ஏராள மான புரட்சிகர இளைஞர்களைத் திரட்டினார். ஆனந்த்சிங், கணேஷ் கோஷ், லோகநாத் பால் ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள். வலுவான ஆயுத பலம் கொண்ட பிரிட்டிஷ் பேரரசுக்கு இந்தியாவில் சவால்விட முடியும் என்பதைக் காட்ட சென் எண்ணினார். இதற்காக, புரட்சி ஒன்றைச் சிறியதாக இருந்தாலும்கூட, திட்டமிட்டார். சிட்டகாங்கில் இருந்த இரண்டு ஆயுதக்கிடங்கு களில் நுழைந்து, அங்கிருந்த ஆயுதங்களைக் கைப் பற்றி, அவற்றைக் கொண்டு ஆயுதப்படை ஒன்றைத் திரட்டுவது; நகரின் தொலைபேசி, தந்தித் தொடர்பு களை அழிப்பது; சிட்டகாங்கிற்கும், வங்காளத் திற்கும் இடையே இருந்த ரயில்வே தொடர்பை சீர்குலைப்பது என முடிவு செய்யப்பட்டது. எச்சரிக்கையாகத் திட்டமிட்டு 18 ஏப்ரல் 1930 இரவு பத்து மணிக்கு செயலில் இறங்கினர்.

கணேஷ் கோஷ் தலைமையில் ஆறு பேர் காவல்துறை ஆயுதக்கிடங்கைக் கைப்பற்றினர். ‘இன்குலாப் ஜிந்தாபாத்’, ‘ஏகாதிபத்தியம் ஒழிக’, ‘காந்தியின் ஆட்சி அமைத்து விட்டோம்’ என்று முழக்கங்கள் எழுப்பினர். லோகநாத் பால் தலைமையில் மற்றொரு பத்து பேர் துணைப்படை ஆயுதக்கிடங்கிற்குள் நுழைந்தனர். அங்கு இருந்த லீவிஸ் ரக துப்பாக்கி களையும் 303 ராணுவத் துப்பாக்கிகளையும் கைப் பற்றினர்; ஆனால் குண்டுகள் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. (பின்னர் இந்த இழப்பு புரட்சியாளர் திட்டத்திற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது). தொலைபேசி, தந்தி தொடர்புகள் அழிக்கப்பட்டன; ரயில் போக்கு வரத்து குலைந்து போனது. இந்தியன் ரிப்பப்ளிகன் ஆர்மி (இந்தியக் குடியரசு படை), சிட்டகாங் கிளை என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் களில் அறுபத்தி ஐந்து புரட்சியாளர்கள் பங்கேற்றனர்.

அனைத்துப் புரட்சியாளரும் காவல்துறை ஆயுதக்கிடங்கிற்கு வெளியே கூடினர். தூய வெள்ளை காதி வேட்டியும், நீண்ட மேல் சட்டையும், காந்தித் தொப்பியும் அணிந்து சூர்யா சென், ராணுவ மரியாதை ஏற்றுக்கொண்டு, தேசியக் கொடியை ஏற்றினார்; தற்காலிகப் புரட்சி அரசையும் அறி வித்தார். ‘வந்தே மாதரம்’ ‘இன்குலாப் ஜிந்தா பாத்’ என்று முழங்கினார்.

எந்த நேரமும் ஆங்கிலேய ராணுவம் சிட்ட காங் வந்துவிடும் என்ற நிலையில், ராணுவத்தை எதிர்த்துப் புரட்சிப்படை நிற்க முடியாது என்பதால், பொழுது விடியும் முன்பே ஊரை விட்டு வெளி யேறினர். பாதுகாப்பான இடம் தேடி சிட்டகாங் மலை அடிவாரம் நோக்கி நடந்தனர். 22 ஏப்ரல் அன்று ஜலாலாபாத் மலையில் ஆயிரக்கணக்கான ஏகாதிபத்திய படைவீரர் புரட்சியாளர்களைச் சூழ்ந்து கொண்டனர். கடுமையான சண்டையில் எண்பது பிரிட்டிஷ் படையினரும், பன்னிரண்டு புரட்சி யாளர்களும் கொல்லப்பட்டனர். இதன் பின் சுற்றி இருந்த கிராமங்களுக்குள் கலைந்து சென்று விடுவ தென்று சென் முடிவு செய்தார். இந்தக் கிராமங்களில் சிறிய குழுக்களாகச் சேர்ந்துகொண்டு அரசாங்க ஊழியர் மீதும், அரசாங்க உடைமைகள் மீதும் தாக்குதல் நடத்தினர். அரசின் தீவிர தேடுதல் முயற்சிகளையும், அடக்குமுறைகளையும் தாங்கிக் கொண்டு, மூன்று ஆண்டுகளுக்கு இக்கிராம மக்கள் (பெரும்பாலும் இஸ்லாமியர்) புரட்சியாளர்களுக்கு உணவும், பாதுகாப்பும் கொடுத்தனர்; கடைசியில் 16 பிப்ரவரி 1933 அன்று சூர்யாசென் பிடிபட்டார்; விசாரணைக்குப் பின் 12 ஜனவரி 1934 அன்று தூக்கிலிடப்பட்டார். அவருடன் போரிட்ட பலரும் பிடிபட்டனர்; நீண்டகாலச் சிறைத்தண்டனை பெற்றனர்.

சிட்டகாங் நிகழ்வுகள் வங்க மக்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ‘புரட்சி எண்ணம் கொண்ட இளைஞரின் சிந்தனையை’ இந்த நிகழ்வுகள் தூண்டிவிட்டன, ‘பல்வேறு பயங்கர வாதக் குழுக்களில் சேரும் இளைஞரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது’ என்று அரசாங்க வெளியீடு குறிப்பிட்டது. 1930 இல் புரட்சிகர செயல்பாடுகள் புதிய உந்துதல் பெற்றன; 1931 - 1932களில் அவற்றின் வேகம் அதிகரித்தது. மரண பயமின்றி ஏராளமான நிகழ்வுகள் நடந்தன. மிதினாபூர் மாவட்டத்தில் மட்டும், மூன்று பிரிட்டிஷ் நீதிபதிகள் கொல்லப் பட்டனர்; இரண்டு ஆளுநர்களைக் கொல்ல முயன்றனர்; இரண்டு தலைமைக் காவல் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த மூன்று ஆண்டுகளில் இருபத்திரண்டு அரசு உயர் அதிகாரிகளும், இருபது அலுவலரும் கொல்லப்பட்டனர்.

ஆயுதக்கிடங்குகள் கொள்ளை அடிக்கப்பட்ட தையும், புரட்சிகரப் பயங்கரவாத செயல்பாடுகள் புத்துயிர் பெறுவதையும் கண்ட அரசு முதலில் பதறியது; பின்னர் சுதாரித்தது. வழக்கம் போல் அடக்குமுறையில் இறங்கியது. புதிதாக இருபது அடக்குமுறைச் சட்டங்களை நிறைவேற்றியது; அனைத்து தேசியவாதிகள் மீதும் காவல்துறையை ஏவியது. சிட்டகாங் நகரின் எல்லா வீடுகளுக்கும் தீயிட்டது; பலருக்கு அபராதம் விதித்தது; மொத்தத்தில், ‘அச்சுறுத்தல் ஆட்சி’ நடந்தது. சில நாட்களுக்கு முன்னர் கல்கத்தாவில் நேரு ஏகாதி பத்தியத்தைக் கண்டித்தும், காவல்துறையின் அடக்குமுறை தவறு என்றும் பேசி இருந்தார்; புரட்சியாளரின் முறை பயனற்றது, காலத்திற்குப் பொருத்தாதது என்றாலும், அவர்களின் வீரமும், தியாகமும் சிறப்பானது என்று பாராட்டினார். இந்தப் பேச்சை தேச விரோதப் பேச்சு என்று குற்றஞ்சாட்டி 1933-இல் நேருவுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.

*

வங்காளத்தில் நடத்தப்பட்ட புரட்சிகர பயங்கர வாதச் செயல்களில் பெருமளவில் இளம்பெண்கள் ஈடுபட்டது குறிப்பிடத்தக்க அம்சம். சூர்யா சென்னின் தலைமையில் ஏராளமான பெண்கள் புரட்சி யாளருக்கு அடைக்கலம் கொடுத்தனர்; தகவல் கொண்டு செல்பவராகச் செயல்பட்டனர்; ஆயுதங் களைப் பாதுகாத்தனர்; கைகளில் துப்பாக்கி ஏந்திப் போரிட்டனர். பிரிதிலா வாடேடர் என்ற பெண் தாக்குதல் நடத்தும் போது உயிர் இழந்தார்; கல்பனாதத் (பின்னர் கல்பனா ஜோஷி) கைது செய்யப்பட்டு, சூர்யா சென்னுடன் சேர்த்துக் குற்றஞ் சாட்டப்பட்டார்; ஆயுள் தண்டனை பெற்றார். டிசம்பர் 1931 இல், கோமிலாவில், சாந்தி கோஷ், சுனிதி சவுத்திரி என்ற இரண்டு பள்ளி மாணவிகள் மாவட்ட நீதிபதியைச் சுட்டுக் கொன்றனர்; பிப்ரவரி 1932 இல் பட்டமளிப்பு விழாவில், பினா தாஸ் என்ற மாணவி பட்டத்தைப் பெறும் போது ஆளுநரை நேருக்கு நேர் சுட்டார்.

முந்தைய புரட்சியாளருடனும், பகத்சிங்குடன் ஒப்பிடும்போது, சிட்டகாங் புரட்சியாளர்கள் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைச் சாதித்தனர். தனி நபர் சாகசத்தைத் தவிர்த்து விட்டு, கூட்டுச் செயல் பாட்டில் இறங்கினர்; தனிநபரைக் குறி வைக்க வில்லை; மாறாக, காலனித்துவ அரசின் செயல் பிரிவுகளைச் சிதைத்தனர். இளைஞருக்கு வேகத்தைக் கொடுப்பதும், அரசு நிர்வாகத்தை நம்பிக்கை இழக்க வைப்பதும்தான் குறிக்கோள். கல்பனா தத் (ஜோஷி) கூறியதைப் போல, “சிட்டகாங் தாக்கு தலைத் தொடர்ந்து, சிட்டகாங்கை மீட்க அரசு படைகளை அனுப்பும்; அப்போது நடைபெறும் போரில் புரட்சியாளர்கள் இறந்து விடுவர்; அவர்களின் மரணம் அவர்களுடைய நாட்டு மக்களுக்கு முன்னு தாரணமாகவும், உந்துதலாகவும் இருக்கும்”; அல்லது சூர்யா சென் ஆனந்த குப்தாவிடம் குறிப்பிட்டதைப் போல, “தனிநபர் அச்சுறுத்தலுக்கு மாற்றாக, ஒருங்கிணைக்கப்பட்ட, திட்டப்மிடப்பட்ட, ஆயுதப் போராட்டத்தை முன்வைக்க வேண்டும். இதைத் தியாக உணர்வு கொண்ட இளைஞர் படை ஒன்று செய்து காட்ட வேண்டும். நம்மில் பலர் இதில் இறந்து போவோம். ஆனால், உயர்ந்த குறிக்கோளுக்காக மடியும் நம் தியாகம் வீண் போகாது.”

*

1920, 1930களில் தோன்றிய வங்கப் புரட்சி யாளரிடம் சமயப்பற்று இல்லை; முன்பு காணப் பட்ட சமய உணர்வுகளை உதறிவிட்டனர்; சமயத்தின் பெயரால் உறுதிமொழிகள் எடுத்துக் கொள்வதை விட்டுவிட்டனர். சில குழுக்களில் இஸ்லாமிய இளைஞர்களும் இருந்தனர். சத்தார், மீது அகமது, பக்கீர் அகமது மீயான், தனு மீயான் போன்ற இளைஞர்கள் சிட்டகாங் குழுவில் இருந்தனர்; சிட்டகாங் நகரைச் சுற்றி இஸ்லாமியரின் ஆதரவும் புரட்சியாளர்களுக்குக் கிடைத்தது.

ஆனாலும் சமூகக் கண்ணோட்டத்தில் புரட்சி யாளர்கள் பிற்போக்குவாதிகளாகத்தான் இருந்தனர்; பரந்த சமூக - பொருளாதாரக் குறிக்கோள்கள் இல்லை; முக்கியமாக, சுயராஜ் கட்சியில் பணி யாற்றிய புரட்சியாளர்கள், நிலவுடைமையாளரை எதிர்த்துப் போராடிய விவசாயிகளை ஆதரிக்கத் தவறிவிட்டனர்.

*

பகத்சிங்கும் அவருடைய தோழர்களும் பல புதிய சிந்தனைகளைப் புகுத்தினர். புரட்சியைப் பற்றிய சிந்தாந்தம், புரட்சியின் நோக்கங்கள், புரட்சியின் வடிவங்கள் ஆகியவற்றில் இச்சிந்தனைகள் வந்தன. இந்தப் புதிய போக்கு ஹிந்துஸ்தான் படைக் குள்ளேயே வந்தது: “மனிதரை மனிதர் சுரண்டும் அனைத்து அமைப்புகளையும் ஒழிப்பது” குறிக் கோள் என்று 1925இல் வெளியிடப்பட்ட பிரகடனம் கூறியது. இதற்கும் முன்பே, அக்டோபர் 1924 இல் கூடிய அதன் முதல் கூட்டத்தில் ‘சோசலிசப் புரட்சிக் கருத்துக்களையும், கம்யூனிசக் கொள்கைகளையும் பரப்புவோம்’ என்று குறிப்பிட்டது. ரயில்வே, பிற போக்குவரத்துத் துறைகள், இரும்பு, கப்பல் கட்டுதல் போன்ற பெரிய தொழில்களை தேசிய மயமாக்கும் திட்டமும் இருந்தது. இதைப் புரட்சி யாளர்களின் ‘தி ரெவல்யூஷன்’ (புரட்சி) என்ற அவர் களுடைய பத்திரிகையில் தெரிவித்தனர். ‘தொழி லாளர், விவசாயிகள் அமைப்புகளை’ ஏற்படுத்தி, அவற்றின் மூலமாக ‘ஒருங்கிணைக்கப்பட்ட ஆயுதப் புரட்சி’ ஏற்பட வழி தேடவும் திட்டமிட்டனர்.

‘கைத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கி மீது கொண்டுள்ள ஆசையை’ இளைஞர் துறக்க வேண்டும். ‘புரட்சிக்காக சதித்திட்டங்களில் இறங்க வேண்டாம்’, ‘வெளிப்படையான இயக்கங்களில்’ பணியாற்ற வேண்டும் என்றும் தூக்குத்தண்டனைக்காகக் காத்திருந்த ராம்பிரசாத் பிஸ்மில் வேண்டுகோள் விடுத்தார். இந்து-இஸ்லாமியர் ஒற்றுமைக்குப் பாடுபட வேண்டும், அனைத்து அரசியல் குழுக் களையும் காங்கிரஸ் தலைமையின் கீழ் ஒன்று சேர்க்க வேண்டும் என்று மக்களைக் கேட்டுக் கொண்டார். கம்யூனிசத்தின் மீதும், ‘இயற்கை வளங்களின் மீதும் ஒவ்வொருவருக்கும் சம உரிமை உண்டு’ என்ற கோட்பாட்டின் மீதும் தனக்கு இருந்த நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்தார்.

1907ஆம் ஆண்டு பிறந்த பகத்சிங், புரட்சி யாளர் அஜித்சிங்கின் உறவினர்; சிறந்த சிந்தனை யாளர்; ஏராளமாக வாசிப்பவர்; அவருடைய கால கட்டத்தில் மிக அதிகம் வாசித்த தலைவர்களில் ஒருவர். சோசலிசம், சோவியத் யூனியன், பிற புரட்சி இயக்கங்கள் பற்றி லாகூர் துவாரகதாஸ் நூலகத்தில் இருந்த அனைத்து நூல்களையும் முழுமையாகப் படித்தவர்; குறிப்பாக, ரஷ்யா, அயர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளைப் பற்றிய நூல்களைப் படித்தார்; சுக்தேவ் மற்றும் பிறருடன் சேர்ந்து வாசிப்புக்குழுக்களை ஏற்படுத்தினார்; ஆழமான அரசியல் விவாதங்களுக்கு ஏற்பாடு செய்தார். புரட்சிப்படையின் அலுவலகம் ஆக்ராவுக்கு மாற்றப்பட்ட பின்னர், அங்கும் ஒரு நூலகத்தை நிறுவி, உறுப்பினரை வாசிக்கவும், புரட்சிக் கருத்துக் களை விவாதிக்கவும் வலியுறுத்தினார். அவருடைய சட்டைப் பைகளில் எப்போதும் புத்தகங்களைத் திணித்து வைத்திருந்தார்; தன்னுடைய தோழருக்கு அவற்றைத் தயங்காமல் கொடுத்தார்.

சிறைத் தண்டனை பெற்ற பிறகு, சிறையை ஒரு பல்கலைக் கழகமாகவே மாற்றியவர். புரட்சி உருவாக்கத்தில் கருத்தாக்கத்தின் பங்கை வலியுறுத்தினார். “கருத்துக்கள் என்ற சாணைக்கல்லில்தான் புரட்சியின் வாள் தீட்டப்படுகிறது” என்று லாகூர் உயர்நீதிமன்றத்தின் முன் அறிவித்தார். பகத்சிங்கின் பரந்த வாசிப்பும், ஆழமான சிந்தனையும் புரட்சிப்படை முழுவதும் நிறைந்தது. சுக்தேவ், பகவதி சரண் வோரா, சிவ் வர்மா, பிஜோய் சின்கா, யஷ்பால் ஆகிய அனை வரும் சிறந்த சிந்தனையாளர்கள். ஆங்கில அறிவு அதிகமில்லாத சந்திரசேகர ஆசாத் கூட இதில் கவனமாக இருந்தார்; முழுமையாக விளக்கப்படும் வரை எந்தக் கருத்தையும் ஏற்றுக்கொள்ள மறுத்தார். விவாதங்கள் மூலம் புதிய கருத்துக்களைப் புரிந்து கொண்டார். புரட்சியாளரின் நிலைப்பாட்டை அறிவித்த நூல் ‘தி பிலாசஃபி ஆப் தி பாம்’ (குண்டின் தத்துவம்). இதை எழுதிய பகவதி சரண் வோரா இதை ஆசாத்தின் தூண்டுதலில், அவருடன் முழுமை யாக விவாதித்த பின்னர் எழுதினார்.

1929இல் கைது செய்யப்படும் முன்னரே பயங்கரவாதத்தின் மீது தனக்கு இருந்த நம்பிக் கையை பகவதிசிங் கைவிட்டுவிட்டார்; தனிநபர் சாகசத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டார். மார்க்சியம் நோக்கித் திரும்பினார்; பரவலான மக்கள் இயக்கங்கள் மட்டுமே வெற்றிகரமான புரட்சிக்கு இட்டுச் செல்லும் என்றார்; அதாவது, ‘மக்களுக்காக மக்களே’ நடத்தும் இயக்கங்கள் தான் வெற்றி பெறும். இதற்காகத்தான் 1926 இல் ‘பஞ்சாப் நவ்ஜவான் பாரத சபா’ என்ற அமைப்பை ஆரம்பிக்க உதவி செய்தார்; அதன் நிறுவனச் செயலாளராகவும் பணி செய்தார். இந்த சபாவை புரட்சியாளரின் முகமாக மாற்றினார். இளைஞர், விவசாயிகள், தொழிலாளர் மத்தியில் வெளிப் படையாக அரசியல் பணிபுரிய இந்த அமைப்பைப் பயன்படுத்தினார். கிராமங்களில் இதன் கிளை களை அமைக்க ஏற்பாடு செய்தார். இந்த அமைப்பின் கீழ், மண்ணெண்ணெய் விளக்கில் படங்கள் காட்டி அரசியல் உரைகள் நிகழ்த்தினார். இதே போல், பகத்சிங்கும், சுக்தேவும் மாணவர் மத்தியில் வெளிப்படையாக , சட்டபூர்வமாக அரசியல் பணியாற்ற லாகூர் மாணவர் பேரவையைப் பயன்படுத்தினர்.

சமூகத்தில் சுரண்டப்படும், ஒடுக்கப்படும் மக்களைப் புரட்சி சிந்தனை கொண்ட அறிவு ஜீவிகள் மூலம் திரட்டி மக்கள் இயக்கத்தைத் தொடங்கி, அவற்றை வளர்ப்பதுதான் புரட்சி என்று பகத்சிங்கும், அவருடைய தோழரும் கருதினர். 1929 முதல் 1931 வரை தங்களுடைய உரைகளிலும், நீதிமன்றங்களிலும், வெளியேயும் இந்தக் கருத்தை வெளிப்படுத்தினர். “புரட்சியின் உண்மையான படை கிராமங்களிலும், தொழிற் சாலைகளிலும்தான் உள்ளது” என்று பகத்சிங் அறிவித்தார். “நான் ஒரு பயங்கரவாதி போல் செயல்பட்டுள்ளேன்; ஆனால் நான் பயங்கரவாதி அல்ல... என்னுடைய ஆரம்பகட்டத்தில் அப்படி இருந்திருக்கக்கூடும்; ஆனால் இன்று நான் பயங்கரவாதி அல்ல என்பதை முழு நம்பிக்கை யுடன் அறிவிக்கிறேன். இந்த வழிகள் மூலம் நாம் எதையும் ஈட்ட முடியாது, என்று தெளிவாக நம்புகிறேன்” என்று 2 பிப்ரவரி 1931 அன்று இளைஞருக்கு எழுதினார்.

இப்படிப்பட்ட பகத்சிங்கும், அவருடைய தோழரும் ஏன் தனிநபர் வன்செயல் சாகசத்தை நாடினர்? ஒன்று, வேகமாக ஏற்பட்ட அவர்களுடைய சிந்தனை மாற்றங்கள். அவர்களுடைய கடந்த காலமும் நிகழ் காலமும் பிரிக்க முடியாத வகையில் அமைந்துவிட்டன; பல பத்தாண்டு சிந்தனை களையும், செயல்களையும், ஒரு சில ஆண்டுகளில் கடந்தனர். மேலும் கருத்துக்களை உள்வாங்குவது, திடீரென, உடனடியாக ஏற்படுவது இல்லை; சமய மாற்றத்தைப் போன்றது அல்ல; நீண்ட கால வரலாற்றுச் செயல்பாடு. இரண்டு, அவர்களுக்கு இருந்த இக்கட்டு: அவர்களுடைய தொண்டர் எங்கிருந்து வருவர்? அவர்களை எங்கிருந்து, எப்படித் திரட்டுவது? மக்கள் மத்தியில் எவ்வாறு வருவர்? மக்கள் மத்தியில் பரவி, அவர்களிடம் அரசியல் பணி செய்யும் தொண்டர் தேவை; பொறுமையான, அறிவுபூர்வமான, அரசியல் பணி காங்கிரசின் பாணி; அத்தகைய செயல்பாட்டைத் தவிர்க்க, தாண்டிச் செயல்பட விரும்பினர். இவற்றிற்குக் கிடைத்த பதில்: இளைஞரைச் ‘செயல்’ மூலம் ஈர்ப்பது. புரட்சிக்கு முதல் கட்டத் தொண்டரை ‘வீரச்செயல்கள்’ மூலம் திரட்டுவது; அதனை அடுத்து வரும் நீதிமன்ற வழக்குகளில் இச்செயல் களை நியாயப்படுத்துவது; நீதிமன்றங்களை பிரசாரத்திற்குப் பயன்படுத்துவது. புரட்சியின் இறுதிக் கட்டத்தில்1930, 1931 ஆம் ஆண்டுகளில் இதைத்தான் செய்துகொண்டிருந்தனர். தண்டிக்கப் பட்ட தோழரின் சிறந்த முன் உதாரணங்களை உயர்த்திப் பிடித்தனர். “மரண தண்டனை பெற்று விட்டதால் மனம் தளர்ந்து விட்டார் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்காமல், அதே சமயம் இளைஞர்கள் வன்முறையைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்வது சிரமமாக இருந்தது” என்று தன்னைப் பகத்சிங் குறிப்பிட்டார். விரைவில் வாழ்க்கைப் பாடம் வந்தது: தியாக உணர்வை ஒருமுறை இழந்துவிட்டால் மீட்பது எளிது அல்ல.

பகத்சிங்கும், அவருடைய தோழர்களும் மற் றொன்றையும் சாதித்தனர்: புரட்சியின் வரையறை யையும், பரப்பையும் விரிவுபடுத்தினர். வெறும் தீவிரவாதமும், வன்முறையும் மட்டுமே புரட்சி என்று கருதப்படவில்லை. தேசத்தின் விடுதலை - ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி - தான் புரட்சியின் முதல் குறிக்கோள். ஆனால், அதையும் தாண்டிச் செல்ல வேண்டும்; புதிய சோசலிச சமூக அமைப்பை. ‘மனிதரை மனிதர் சுரண்டும் முறையை ஒழிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தனர். பகவதி சரண் வோரா, சந்திரசேகர் ஆசாதி, யஷ்பால் ஆகியோர் எழுதிய ‘தி பிலாசஃபி ஆப் த பாம்’ (குண்டின் தத்துவம்) நூலில் ‘புரட்சி’ என்ற கருத்தை வரையறுத்தனர்: புரட்சி என்பது “அரசியல், பொருளாதாரச் சுரண்டலுக்கு வாய்ப்பு தராத புதிய சமூக அமைப்பை ஏற்படுத்தும் குறிக்கோள் கொண்ட சுதந்திரமான, சமூக, அரசியல், பொருளா தாரச் செயல்பாடு”. இதே கருத்தை ‘பாராளுமன்ற குண்டு வழக்கு’ நீதிமன்றத்தில் பகத்சிங் வலியுறுத் தினார்: “ரத்தம் சிந்தும் செயல் மட்டுமே புரட்சி அல்ல; தனிநபர் பழி வாங்குதலும் அல்ல. அநீதியை மையமாகக் கொண்டு செயல்படும் இன்றைய அமைப்பை மாற்றவேண்டும் என்பதுதான் புரட்சி.

சிறையில் இருந்து எழுதிய கடிதத்திலும் இதைக் குறிப்பிட்டார்: “அன்னியரின் கட்டுப் பாட்டில் இருந்து மட்டும் அல்ல, நிலவுடைமை யாளர் மற்றும் முதலாளிகளின் பிடியில் இருந்தும் விவசாயிகள் விடுதலை பெற வேண்டும்”. 3 மார்ச் 1931 அன்று பகத்சிங் அனுப்பிய கடைசி செய்தியிலும் இதையே வலியுறுத்தினார்: “தங்களுடைய சொந்த ஆதாயத்திற்காக ஒரு சில சுரண்டல்காரர்கள் பொது மக்களின் உழைப்பைச் சுரண்டுவது நிற்கும் வரை இந்தியாவில் போராட்டம் தொடரும்; சுரண்டுபவர் ஆங்கிலேயரா, ஆங்கிலேயர் இந்தியர் கூட்டணியா அல்லது இந்தியரா என்பது முக்கியம் அல்ல”. சோசலிசத்தை அறிவியல் ரீதியாக வரையறுத்தார் பகத்சிங்; “முதலாளித்துவத்தையும் வர்க்க ஆதிக்கத் தையும் ஒழிப்பது”. மார்க்சியத்தையும், வர்க்க அணுகுமுறையையும் முழுமையாக பகத்சிங் ஏற்றுக் கொண்டார். புரட்சிக்கு வழி வகுக்கும் பணியாளராகத்தான் தன்னைப் பார்த்தார்; புரட்சி யாளராகத் தன்னைக் கருதவில்லை. இந்தியாவில் சோசலிசத்தைத் தொடங்கி வைக்கும் எளிய தொண்டராகவும், சோசலிச, கம்யூனிச கருத்து களைப் பரப்பும் கொள்கை பிரச்சாரப் பணியாள ராகவும் தன்னைக் கருதிக் கொண்டார்.

அரசியலில் பகத்சிங்கின் இரண்டு நிலைப் பாடுகள் முக்கியமானவை. முழுமையாக, முற்றிலும் சமயச்சார்பற்று இருந்தார். வகுப்புவாதத்தால் நாட்டிற்கும், தேசிய இயக்கத்திற்கும் ஏற்படும் ஆபத்துக்களைப் பற்றித் தம் சம காலத்தவரை விட நன்றாக அறிந்திருந்தார். ஏகாதிபத்தியத்தைப் போல வகுப்புவாதமும் மிகப்பெரிய எதிரி என்று தன்னிடம் வந்தவரிடம் அடிக்கடி கூறினார்.

ஏப்ரல் 1920 இளைஞர் மாநாட்டில் ‘நவ்ஜவான் பாரத் சபா’ மறுசீரமைக்கப்பட்டது. அப்போது சமய-சாதி அமைப்புகளில் உறுப்பினராக இருக்கும் இளைஞரும் சபாவில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தை பகத்சிங்கும், அவருடைய தோழரும் கடுமையாக எதிர்த்தனர். “சமயம் ஒருவரின் தனிப்பட்ட கருத்து; வகுப்புவாதம் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று” என்று வாதிட்டார். 1927 தொடக்கத்தில் வகுப்புவாதக் கொலைகளைக் ‘காட்டுமிராண்டித்தனம்’ என்று கண்டித்தார்; “வகுப்புவாதக் கொலைகளில் ஈடுபடுவோர், ஒரு செயலைச் செய்ததற்காக ஒருவரைக் கொல்வதில்லை; ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்தவர் என்பதால் தான் கொலை செய்யப்படுகிறார்”. ஆனால் அதே நேரம், சமய வேறுபாடுகளைப் பொருட்படுத்தாத புதிய, இளைஞர் படை ஒன்று முன் வருவதைப் பார்த்தார். “இவர்கள் மனிதரை மனிதராக முதலில் பார்த்தனர்; இந்தியர் என்ற கண்ணோட்டம் இரண்டாவதாகத்தான் இருந்தது” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

லஜபதி ராய் மீது பகத்சிங் அதிக மரியாதை வைத்திருந்தார். ஆனால் தன்னுடைய வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில் லஜபதி ராய் வகுப்புவாதியாக மாறியதைக் கண்ட பகத்சிங், லஜபதிராயையும் விடவில்லை. அவருக்கு எதிராக அரசியல் - கருத்தியல் பிரசாரத்தில் இறங்கினார். லஜபதிராயை மதித்த தால், வெளிப்படையாக, கடுமையான சொற்களைத் தவிர்த்தார். வெர்ட்ஸ்வர்த் என்ற ஆங்கிலக் கவிஞர் மக்களாட்சிக் கோட்பாடுகளுக்கு எதிராக மாறியதைக் கண்டித்து ராபர்ட் பிரௌனிங் ‘த லாஸ்ட் லீடர்’ (காணாமல் போன தலைவர்) என்ற கவிதை எழுதினார். இதை பகத்சிங் இதே தலைப்பில் லஜபதி ராயைக் கண்டித்து வெளியிட்டார். ‘ஒரு பிடி வெள்ளிக்காக எங்களை விட்டுச் சென்றார்’ என்று இக்கவிதை தொடங்கியது; ‘நாங்கள் வளமாக முன்செல்வோம்; ஆனால் அவருடன் அல்ல; பாடல்கள் எங்களுக்கு உற்சாகம் தரும்; ஆனால் அவருடைய யாழில் இருந்து அல்ல’; ‘அவருடைய பெயரை அழித்து விடுங்கள்; இன்னும் ஒரு ஆன்மாவை இழந்தோம் என்று எழுதுங்கள்’ என்று குறிப்பிட்டார் - ஆனால் எங்கேயும் லஜபதி ராயைக் குறித்த நேரடி விமர்சனம் இல்லை; முன் அட்டையில் லஜபதிராயின் புகைப்படம் இருந்தது.

‘நவ் ஜவான் பாரத் சபா’ விதிகளை வடி வமைத்தபோது சமயச் சார்பின்மையை வலியுறுத்தி பகத்சிங் இரண்டு விதிகளை எழுதினார்: (i) “வகுப்புவாதக் கருத்துக்களைப் பரப்பும் வகுப்பு வாத அமைப்புகளுடனும், கட்சிகளுடனும் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது”; (ii) “சமயத்தைத் தனிமனிதரின் சொந்தக் கருத்தாகக் கொண்டு, அதன் அடிப்படையில் மக்கள் மத்தியில் சமய சகிப்புத்தன்மையை உருவாக்குவது”.

சமயம் மற்றும் மூட நம்பிக்கைகளின் பிடியில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டியது அவசியம் என்று பகத்சிங் உணர்ந்தார். தூக்கிலிடப்படுவதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் ‘வொய் ஐ அம் என் எத்தீஸ்ட்’ (எனக்கு ஏன் கடவுள் நம்பிக்கை இல்லை) என்ற கட்டுரை எழுதினார்; சமயத்தையும், சமயத் தத்துவத்தையும் இக்கட்டுரையில் கடுமையாக விமர்சித்தார். தன்னுடைய கடவுள் மறுப்புக் கொள்கைப் பயணத்தையும் இதில் விவரித்தார்; புராணங்கள் மீதும், சீக்கிய மற்றும் பிற சமயக் கோட்பாடுகளின் மீதும் நம்பிக்கை இழந்ததையும், பின்னர் இது கடவுள் மறுப்புக் கோட்பாடாக மாறியது என்பதையும், கடவுள் இல்லை என்ற முடிவுக்கு எப்படி வந்தார் என்பதையும் இதில் கூறினார். “புரட்சியாளராக இருப்பதற்கு மிகுந்த தார்மீக வலு தேவை; விமர்சனமும், சுய சிந்தனையும் அவசியம்” என்று குறிப்பிட்டார். “முன்னேற்றத்தை விரும்பும் எந்த மனிதனும் பழைய நம்பிக்கையை விமர்சிக்கவேண்டும், கேள்வி கேட்கவேண்டும், கடவுள் மற்றும் சமய நம்பிக்கையின் ஒவ்வொரு மூலை, இடுக்கு அம்சத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். கடவுள் மறுப்பு நம்பிக்கை உலக செயல்பாடுகள் மீதும் தனக்கு இருந்த நம்பிக்கையில் இறுதி வரை உறுதியாக இருந்தார்: “இறுதி வரை, தூக்கு மேடை வரை, தலை நிமிர்ந்து நிற்க விரும்புகிறேன்” என்று எழுதினார்.

அரசின் பதிலடி நடவடிக்கை புரட்சியாளரைச் சிதறடித்து அழித்தது. பிப்ரவரி 1931 இல் அலகா பாத் நகரப் பூங்கா ஒன்றில் சந்திரசேகர் ஆசாத் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பின்னர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய பகுதிகளில் புரட்சி இயக்கம் மறைந்தது. சூர்யா சென்னின் தியாக மரணத்தைத் தொடர்ந்து வங்காளத்தின் நீண்ட காலப் புரட்சி பயங்கரவாதம் முடிவுக்கு வந்தது. அந்தமானிலும், பிற சிறைகளிலும் மறு சிந்தனை ஆரம்பமானது. ஏராளமான புரட்சியாளர்கள் மார்க்சியம் மற்றும் வெகு மக்களின் சோசலிசப் புரட்சி நோக்கித் திரும்பினர். கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சி சோசலிசக் கட்சி, பிற இடதுசாரி கட்சிகளில் சேர்ந்தனர். பலர் காந்தியைப் பின்பற்றி காங்கிரசில் இணைந்தனர்.

புரட்சிகர பயங்கரவாத அரசியலில் பெரும் குறைகள் இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்களுடைய போராட்டம் மக்கள் இயக்கமாக மாறவில்லை; வெகுமக்களை அரசியல்ரீதியாகத் திரட்டி அவர்களை அரசியல் செயல்பாட்டிற்குள் கொண்டு வரவில்லை; மக்களுடன் தொடர்பைக் கூட ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.

புரட்சிகரப் பயங்கரவாத இயக்கங்களின் செயல் பாடுகள் வன்முறையை அடித்தளமாகக் கொண் டிருந்ததால் அவற்றைத் தடைசெய்வதும், ஒடுக்கு வதும் எளிதில் நியாயப்படுத்தப்பட்டன. இந்த இயக்கங்களின் பல தலைவர்களின் தலைமறைவு வாழ்க்கை இயக்கங்களின் வளர்ச்சிக்கு இடை யூறாக இருந்தது. புரட்சிகரப் பயங்கரவாதத்தை ஒடுக்க ஆங்கிலேய ஆட்சி கையாண்ட கொடூர மான ஒடுக்குமுறைகள் இந்த இயக்கங்களில் பரவலாவதைத் தடுத்தன.

இருப்பினும், தேசிய விடுதலை இயக்கத்திற்குப் புரட்சியாளர்கள் பெரும் பணி செய்தனர். அவர் களுடைய ஆழமான தேசப்பற்று, வீரம், உறுதி, மற்றும் தியாக சிந்தனை மக்களுக்கு வேகம் கொடுத்தன. தேசிய உணர்வு வளர்வதற்குப் பெரும் உதவியாக இருந்தது. சோசலிச உணர்வு நாடெங்கும் பரவுவதற்கு, முக்கியமாக வட இந்தியாவில் வேரூன்று வதற்குப் புரட்சிகர பயங்கரவாதம் முக்கிய காரண மாக இருந்தது.

துணை நூற்பட்டியல்

1.            Challenge - A Saga for India’s Struggle for Freedom, edited by Nitish Ranjan Ray, et.al., New Delhi, 1984.

2.            Shiv Varma, editor, Selected Writings of Shaheed Bhagat Singh, New Delhi, 1986.

3.            Budhadeva Bhattacharyya, editor, Freedom Struggle and Anudhilan Samiti, Vol.One.

4.            Bipan Chandra, ‘The Ideological Development of the Revolutionary Terrorists in Northern India in the 1920s,’ in his Nationalism and Colonialism in Modern India.

(உங்கள் நூலகம் ஜூலை 2012 இதழில் வெளியான கட்டுரை)

Pin It