korana_250உயிரிகளின் மரபுப்பொருள்கள் நியூக்ளிக் அமிலங்களால் (Nucleic Acids) ஆனவை. இவை டி ஆக்சிரைபோஸ் நியூக்ளிக் அமிலம் (De Oxyribose Nucleic Acid), ரிபோஸ் நியூக்ளிக் அமிலம் (Ribose Nucleic Acids) என இரு வகைப்படும். மரபுச் செய்திகள் (Genetic codes) டி.என்.ஏ. விலிருந்து ஆர்.என்,.ஏ.விற்கும், ஆர்.என்.ஏ.யி லிருந்து புரதத்திற்கும் செல்கின்றன. இவற்றில் இருக்கக் கூடிய மரபுச் செய்திகள் நான்கு நியூக்ளியோடைடு களின் (Nucleotides) அடிப்படை யில் இருக்கின்றது. இந்த நான்கு நியூக் ளியோடைடுகள் மரபுக்குறியீட்டை எடுத்துச் செல்கின்றன. இதைப் பற்றி ஆய்வுகளைச் செய்து இதனைக் கண்டுபிடித்தவர்கள் மார்ஷல் டபிள்யூ நிரென்பர்க் (Marshall W.Nirenberg), இராபர்ட் டபிள்யூ ஹாலி (Robert W.Holley) மற்றும் ஹர் கோவிந்த கொரானா என்ற அமெரிக்க வாழ் இந்தியர் ஆகிய மூவரும் ஆவர். இவர்கள் மூவருக் கும் இந்தக் கண்டுபிடிப்பிற்காக 1968ஆம் ஆண்டில், உடலியல்-மருந்தியலில் நோபெல் பரிசு வழங்கப்பட்டது.

 ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுவந்த காலத்தில் பஞ்சாபில் உள்ள ரெய்ப்பூரில் (Raipur) (இது தற்போது பாகிஸ்தானில் உள்ளது) 1922ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 9-ஆம் நாள் பிறந்தார். (ஐந்து பிள்ளைகளில் இவர் இறுதியாகப் பிறந்தார். ஒரு மகள் நான்கு மகன்கள்) இவருடைய தந்தையார் கிராமத்தில் வரி வசூலிப்பவராகப் (Patwari - taxation Official) பணியாற்றி வந்தார். இவருடைய குடும்பம் வறுமையில் வாடியபோதும், பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் தந்தை மிகுந்த ஆர்வம் காட்டினார்.  தற்போது மேற்கு வங்கத்தில் உள்ள முல்டான் (Multan) என்ற ஊரில் அமைந்திருந்த டி.ஏ.வி. உயர்நிலைப் பள்ளியில் (D.A.V.High School) பயின்றார். இரத்தன்லால் (Ratan Lal) என்ற ஆசிரியர் இவரைக் கவர்ந்தவராக விளங்கினார். பள்ளிப் படிப்பைச் சிறப்பாகப் பயின்று முடித்த இவர் லாகூரில் (Lahore) அமைந்திருந்த பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் (Punjab University) மேற்படிப்பைத் தொடர்ந்தார். இங்கு பேராசிரி யரும், சிறந்த ஆய்வாளருமான மதன்சிங் (Madhan Singh) என்பவரின்  மேற்பார்வையில் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்தார்.

1945-ல் இந்திய அரசின் உதவித்தொகை கிடைக்கப்பெற்று இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் (Liverpool University) சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு முனைவர் (Ph.D) பட்டம் பெற்றார். இங்கு ரோஜெர் ஜே.எஸ்.பீர் (Roger J.S. Beer) என்பவர் இவருக்கு வழிகாட்டியாய் விளங்கி னார்.  இங்கு வந்த பிறகு மேலைநாட்டுக் கலாசார வழியைப் பின்பற்ற ஆரம்பித்தார்.

 1948-49-ல் ஸ்விட்சர்லாந்தில் உள்ள பெடரல் தொழில் நுட்ப நிறுவனத்தில் (Federal Institute of Technology) ஆய்வினைத் தொடர்ந்து மேற் கொண்டார். விலாடிமிர் பிரிலாக் (Vladimir Brilog) என்ற பேராசிரியர் இவருடைய முன்னேற்றத்திற்கும், அறிவியல் ஆர்வம், பணியில் ஈடுபாடு, அதற்கேற்ற திறன்களை வளர்ப்பது, ஆகியவற்றின் வழிகாட்டியாக விளங்கினார்.

 1949 இறுதியில் இந்தியா திரும்பியவர் மீண்டும் இங்கிலாந்து திரும்பி முனைவர் ஜி.டபிள்யூ. கென்னெர் பிரிலாக்  (Vladimir Brilog) பேராசிரியர் ஏ.ஆர். டோட் (A.R.Todd) என்பவர்களுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டார். 1950-52 ஆண்டுகளில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் (Cambridge University) புரதங்கள், நியூக்ளிக் அமிலங்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். 1952-ல் அங்கு எஸ்தர் எலிசபெத் (Esther Elizabeth Stipler) என்ற மங்கையின் நட்பு கிடைத்தது. பிறகு அவரையே திருமணம் செய்துகொண்டார். இவ்விணையருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் பிறந்தனர்.

 1952-ல் பிரிட்டிஷ் கொலம்பியா ஆய்வகத்தில் முனைவர் கோர்டன் எம்.ஷ்ரம்  (Gordon M.Shrum) என்பவரின் அழைப்பின் பேரில் ஆய்வாளராகப் பணியேற்றுக் கொண்டார்.  முனைவர் ஷ்ரம் அவர்கள் அளித்த உற்சாகத்தினாலும், முனைவர் ஜேக்கெம்பெல்  Dr.Jack Campbell) என்பவர் அவர்களின் ஆலோசனையுடன் பாஸ்பேட் எஸ்டர்கள் (Phosphate esters), நியூக்ளிக் அமிலங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். இவருடன் மேலும் பலரும், ஆய்வு களுக்கு உறுதியாக இருந்தபோதிலும், முனைவர் கோர்டன் எம்.டெனெர் (Gordon M.Tener) என்பவர் குழுவின் ஆய்வு முன்னேற்றத்திற்கு மிகச் சிறந்த வழிகாட்டியாய் விளங்கினார்.

 1960-ல் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் (University of Wisconsin) அமைந்துள்ள நொதிகள் பற்றிய ஆய்வு நிறுவனத்தில் (Institute of Enzyme Research) இணைந்து அனைத்து ஆய்வுகளையும் தொடர்ந்து மேற்கொண்டார். அப்பொழுது அமெரிக்கா வில் இவருக்குக் குடியுரிமை அளிக்கப்பட்டது. 1962 முதல் 1970 வரை பேராசிரியராகவும், உயிர்வேதியியல் (Bio chemistry) பேராசிரியராகவும், அந்நிறுவனத்தின் துணை இயக்குநராகவும் பணியாற்றினார்.

 1970இறுதியில் மசாசுசெட்ஸ் பல்கலைக் கழகத்தில் (Massachusetts Institute of Technology) உயிரியல், வேதியியல் போதிக்கும் ஆல்ஃப்ரெட் ஸ்லோவன் (Alfred Sloan) பேராசிரியராகப் பணியில் அமர்ந்தார். அதே சமயம் தன்னுடைய ஆய்வுக ளையும் தொடர்ந்தார். முதன் முதல் இவருடைய ஆய்வுச் சாலையில் ஜீனை (Gene) செயற்கை முறையில் உருவாக்கினார்.

ஒரே மாதிரியான இரண்டு அலகுகளைக் கொண்ட ரிபோ நியூக்ளிக் அமிலம் இரண்டு மாறுபட்ட அமினோ அமிலங்களை (Amino Acids) உற்பத்தி செய்கிறது. இது செரைன் (Serine) மற்றும் லியூசைன் (Leucine) என்ற இரு குறிமுறைகளைக் (Codes) காட்டுகிறது. ஒரே மாதிரியான மூன்று அலகுகளைக் கொண்ட ரிபோ நியூக்ளிக் அமிலம் மூன்று வேறுபட்ட குறிமுறைகளை உருவாக்குகிறது. ஒரே மாதிரியான நான்கு அலகுகள் இரு பெப்டைடுகள் (peptides) மற்றும் மூன்று பெப்டைடுகளை மட்டும் உருவாக்கி நிறுத்தக் குறியன்களை (stop codens) வெளிப் படுத்துகிறது. கொரானா தன் குழுவினருடன் இணைந்து, அனைத்துக் குறிமுறைகளின் தாயாக, உயிரியல் மொழியில் அனைத்து உயிரிகளுக்கும் பொதுவாக மூன்று எழுத்து வார்த்தைகளில் கூறினார்.  மூன்று நியூக்ளியோடைடுகளின் ஒவ்வோர் அமைப்பும் ஒரு குறிப்பிட்ட அமினோ அமிலத்தைக் குறிக்கின்றன. ஒலிகோ நியூக்ளியோடைடு (Oligo Nucleotide) என்பதை முதன் முதல் தொகுத்துக் காட்டியவர் கொரானா அவர்கள்.

 இந்த ஆய்வுகளுக்காக இதே ஆய்வுகளில் தனியே ஈடுபட்ட மார்ஷல் டபிள்யூ நிரென்பர்க், இராபர்ட் டபிள்யூ ஹாலி ஆகியோருடன் சேர்த்து ஹர் கோவிந்த கொரானா ஆகிய மூவருக்கும் 1968ஆம் ஆண்டிற்கான, உடலியல்-மருந்தியல் பிரிவில் நோபெல் பரிசு வழங்கப்பட்டது.

பேக்டிரியோ டொராப்சின் (Bacteriorhodopsin) என்ற புரத உறையின் உயிரி வேதியியல் -ஒளியன் ஆற்றலை (photon energy) புரோட்டான் வாட்ட ஆற்றலாக (Proton gradient energy) மாற்றம் பெற - ரோடோப்சின் பார்வை நிறமி (visual pigment rhodopsin) தொடர்பான அமைப்பை - ஆய்வு செய்வது தொடர்ந்தது.

 korana_nobel_370நோபெல் பரிசுடன் கூட கொரானா மேலும் பல பரிசுகளையும், விருதுகளையும் வென்றார். 1968-ல் ஹவாயில், ஹோனலூலுவில் அமைந்துள்ள வாட்டுமுல் அமைப்பு (Watumull Foundation) சிறப்புமிக்க சேவைக்கான விருதை இவருக்கு அளித்துச் சிறப்பு செய்தது. 1971-ல் பென்சில் வேனியாவில், பிலடெல்பியாவில் அமைந்துள்ள அமெரிக்கக் கழகத்தின் செயல்வெற்றிச் சாதனைக்கான (American Academy of Achievement Award) விருதை அளித்தது. 1972-ல் இந்திய அரசு பத்ம விபூஷன் (Padma Vibushan) விருதை அளித்துக் கௌரவித்தது. 1972-ல் கொல்கத்தாவில் உள்ள போஸ் நிறுவனம் ஜே.சி.போஸ் பதக்கத்தை அளித்தது. 1973-74 ஆண்டுக்கான அமெரிக்க வேதியியல் பிரிவின் சிகாகோ பிரிவு வில்லர்ட் கிப்ஸ் பதக்கத்தை (Willard Gibbs Medal) இவருக்கு வழங்கியது. கெய்ர்ட்னர் அமைப்பு அனைத்துலக விருது, லூயிசா குரோஸ் ஹார்விட்சு பரிசு (Louisa Gross Horwitz Prize), ஆல்பர்ட் லாஸ்கரின் அடிப்படை மருத்துவ ஆய்வுக்கான  விருது (Albert Lasker Award for Basic Medical Research) முதலிய விருதுகளை கொரானா பெற்றுள்ளார்.

 அமெரிக்க தேசிய அறிவியல் கழகம், அமெரிக்க அறிவியல் முன்னேற்றக் கழகம் முதலிய வற்றில் இவர் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.         1971-ல் ரஷ்யாவின் அறிவியல் கழகத்தில் அயல்நாட்டு உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். 1974-ல் இந்திய வேதியியல் கழகத்தில் கௌரவ ஆய்வு உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.  ஸ்க்ரிப்ஸ் ஆய்வு நிறுவனத்தின் அறிவியல் ஆளுநர்கள் குழுவில் இவர் ஓர் உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.

அறிவியலில் மரபுப் பொறியியல் (Genetic Engineering) என்ற புதிய பிரிவு தோன்றுவதற்குக் காரணமாக விளங்கியவர் என்ற வகையில் கொரானா அவர்களுக்கு இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் வரலாற்றில் முக்கியமான இடம் உண்டு.

 விஸ்கான்சின் மேடிசன் (Wisconsin-Madison), உயிர்தொழில் நுட்பத் துறை, இந்தியா-இந்தோ-அமரிக்க அறிவியல் தொழில் நுட்ப அமைப்பு (Indo-US Science and Technology Forum) ஆகியவை இணைந்து 2007-ல் கொரானா நிகழ்வு (Khorana Program) என்ற அமைப்பை உருவாக்கி கொரானாவின் ஆய்வைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதில் இந்தியா, அமெரிக்காவைச் சேர்ந்த பல அறிவியல் அறிஞர்கள், தொழில் அதிபர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் பங்கெடுத்து வருகின்றனர். பட்டதாரி, மேற்படிப்பு முதுகலை மாணவர்கள் ஆகியோரின் ஆய்வு மனப்பான்மையை மேம்படுத்துதல், கிராமப்புற வளர்ச்சி, உணவுப் பாதுகாப்பு முதலியவற்றில் முக்கியத்துவம் தொடர்ந்து வருகிறது. 2009-ல் கொரானாவை இந்நிகழ்வுக்கு வரவழைத்து, அவரைப் பெருமைப்படுத்தினார்கள்.

 2011 - இந்த ஆண்டில் நவம்பர் மாதம் 9ஆம் நாள் மசாசுசெட்ஸ் கன்கார்ட் என்ற இடத்தில் தன்னுடைய 89ஆவது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

(அறிவியல் ஒளி டிசம்பர் 2011 இதழில் வெளியானது)

Pin It