சொக்கநாத நாயக்கர் மறைவுக்குப் பின் ராணி மீனாட்சி மதுரையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். வாரிசு இல்லாத காரணத்தினால் மன்னர் திருமலை நாயக்கரின் தம்பி வழி வந்த மன்னர் விஜயகுமாரன் என்பவனை சுவீகாரம் எடுத்துக் கொண்டார். ராணி மீனாட்சியின் சுவீகாரப் புத்திரன் விஜயகுமாரனின் தந்தையான பங்காரு திருமலை என்பவர் தளபதி வேங்கடாச்சாரி உதவியுடன் மதுரை அரசைக் கைப்பற்ற பல்வேறு சூழ்ச்சிகளும் குழப்பமும் செய்து வந்தார்.

மதுரையில் ஏற்பட்டிருந்த உள்நாட்டுக் குழப்பங்களைக் கூர்ந்து கவனித்து வந்த ஆற்காட்டு நவாப் தோஸ்த் அலி கான் மதுரையை வென்று கப்பம் பெறத் தீர்மானித்தான். இதன் காரணமாக தன்னுடைய மகன் சப்தர் அலிகான் மருமகன் சந்தா சாகேப் தலைமையில் தன் படையை அனுப்பி வைத்தான். வலியவன் எளியவனை கொள்ளையடிப்பது வாடிக்கைதான்.

மதுரை அரசைக் கைப்பற்ற நினைத்து வந்த நவாப் படை அந்தக் காரியம் அவ்வளவு எளிதாக நிறைவேறக் கூடியது அல்ல என்பதைப் புரிந்து கொண்டதும் அதனை முறியடிக்க அதற்கான சூழ்ச்சிகளை செய்ய முனைந்தனர். ராணி மீனாட்சிக்கு எதிராக பங்காரு திருமலைக்கும் தளபதி சந்தா சாஹேப் லஞ்சம் கொடுத்து அவர்களை ராணி மீனாட்சிக்கு எதிராகத் தூண்டிவிட்டனர். இதனால் மதுரைக்குள் உள்நாட்டு போர் வெடித்தது.

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்த விரும்பிய ஆற்காட்டு நவாப் சர்தார் அலிகான் ராணி மீனாட்சியையும் பங்காரு மலையையும் சமரசம் செய்து வைக்க விரும்புவதாக வரவழைத்தான். நியாயம் விரும்பிய ராணி மீனாட்சி அதற்கு உடன்பட்டு சென்றபோது பூனை அப்பம் பங்கு வைத்தக் கதையாய் மதுரை அரசினை பங்காரு மலையிடம் ஓப்படைக்க வேண்டும் என்று கூறி அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை சந்தா சாஹேபிடம் ஒப்படைத்துவிட்டு நவாப் சப்தர் அலிகான் ஆற்காடு திரும்பினார்.

எங்கிருந்தோ வந்த ஆற்காட்டான் மதுரை அரசியலில் மூக்கை நுழைத்து தீர்ப்பு வழங்கி தன்னுடைய ஆட்சியை பறிப்பதை எண்ணி நிலை கலங்கிப் போனாள் ராணி மீனாட்சி. உள்ளும் புறமும் துரோகமும் பகையுமான சூழ்நிலையில் ராணி மீனாட்சி என்ன செய்வாள்? இருப்பினும் ஒரு சாதுர்யமான முடிவு எடுத்தாள். ஆற்காடு சந்தா சாஹேபுக்கு ஒரு கோடி லஞ்சம் கொடுத்து பங்காரு மலைக்கு ஒப்படைக்கச் செய்திருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய உதவி கோரினாள்.

ராணி மீனாட்சி சந்தா சாஹேபை மிகவும் அந்நியோன்யமாக நம்பி இந்தக் காரியத்தில் ஈடுபட்டாள். ஆனால் வஞ்சகமே உருவான பணப்பித்து பிடித்த ஆதிக்க வெறியனிடம் நியாயத்தை எதிர்பாக்கலாமா! நம்ப வைத்துக் கழுத்தறுத்தான். அவர்களின் கடவுள் புத்தகமான திருக்குரான் மீது சத்தியம் செய்வதாகக் கூறி ஒரு செங்கல் மீது பட்டுத் துணி போர்த்தி ராணி மீனாட்சிக்கு பொய் சத்தியம் செய்து அவளது கோரிக்கையை ஏற்பதாகக் கூறினான் சந்தா சாஹேப்.

அவனுடைய கபட நாடகம் அறியாது அவனுடைய சத்தியத்தை நம்பி சந்தா சாஹேபை கோட்டைக்குள் வர அனுமதித்தாள் ராணி மீனாட்சி. அனுமதி வேண்டி பங்காரு திருமலையிடம் பேசி  உடன்பாடு செய்து கொண்டாள். மதுரையைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற நயவஞ்சக எண்ணத்திலிருந்த சந்தா சாஹேப் ஆற்காடு சென்று புதுப்படை பலத்துடன் வந்து ராணி மீனாட்சியை தந்திரமாக சிறைப்படுத்தி வஞ்சம் புரிந்தான். சந்தா சாஹேப் தனக்கு புரிந்த துரோகம் எண்ணி மனம் நொந்து போன ராணி மீனாட்சி நஞ்சுண்டு தற்கொலை செய்து கொண்டாள். ராணி மீனாட்சியுடன் மதுரை நாயக்கர் வம்சமும் அழிந்தது.

- ஜெகாதா

Pin It