தமிழக அரசுகளின் ஐக்கியக் கூட்டணி 

பித்துண்டா நகரம் மீண்டும் தமிழக ஐக்கியக் கூட்டணி அரசுகளின்கீழ் வந்து விடக் கூடாது என்பதற்காக, அது தரை மட்டமாக்கப்பட்டு கழுதைகொண்டு உழப்பட்டுள்ளது. டி.என்.சன்பக் (D.N.Shanbhag) என்பவர், www.freeindia.Org/biographies/kharavela/index.htm என்ற இணைய தளப் பக்கத்தில் தனது கட்டுரையில், தமிழக ஐக்கியக் கூட்டணி அரசுகள் பலமுறை கலிங்க அரசுக்கு தொல்லைகள் கொடுத்து வந்ததாகவும், காரவேலன் வடநாட்டின் மீது படை எடுத்துச் சென்ற போது, அவை கலிங்கத்தை தங்கள் காவல் அரணான பித்துண்டா நகரத்தைத் தலைமை இடமாகக் கொண்டு தாக்கியதாகவும், அதற்குப் பதிலடி தரும் விதமாகத்தான் காரவேலன் பித்துண்டா நகரத்தைத் தாக்கி, தமிழரசுகளின் நீண்ட கால ஐக்கியத்தை உடைத்து, விலை உயர்ந்த பொருட்களை கைப்பற்றியதாகவும், பித்துண்டா என்பது ஒரு துறைமுக நகரம் என்றும் குறிப்பிடுகிறார்.

Hathigumpha

(Hathigumpha on Udayagiri Hills, Bhubaneswar)

சன்பக் அவர்கள் தரும் செய்திகள், பித்துண்டா என்பது கலிங்கத்தின் தென் கிழக்கு எல்லையில் கடலோரத்தில் இருந்த தமிழக அரசுகளின் துறைமுகக் காவல் அரண் என்பதை உறுதி செய்கின்றன. தமிழக அரசுகள் மகதத்துக்கு அருகிலுள்ள வலிமையான, காரவேலனின் கலிங்க அரசுக்கு அடிக்கடி தொல்லை கொடுக்கும் அளவு வலிமை மிக்கவனாக இருந்தன என்ற அவரது செய்தி, தமிழ் அரசுகளிடையே ஐக்கியக் கூட்டணி இருந்தது என்பதை, மொழிபெயர் தேயப் பகுதிகள் இக்கூட்டணி அரசுகளின் கீழ் இருந்தன என்பதைச் சந்தேகமின்றி ஆதாரத்தோடு உறுதிப் படுத்துகின்றன.

அடுத்த வருடம் (13வது வரியில்), காரவேலனின் வலிமையை உணர்ந்த பாண்டிய அரசன் தொடர்ந்து வட நாடுகளோடு வணிகம் செய்ய, காரவேலனின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் என்பதை உணர்ந்து , அவனோடு சமாதானம் செய்து கொள்ளும் பொருட்டு, பெரும் அளவிலான பரிசுப் பொருட்களை அனுப்பி, காரவேலனோடு நட்புக் கொண்டுள்ளான். இதைத் தான் கல்வெட்டின் 13வது வரி குறிப்பிடுகிறது எனலாம். மாமூலனாரின் பாடல்களும் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டும் தமிழக அரசுகளிடையே ஐக்கிய கூட்டணி ஒன்று மிக நீண்ட காலமாக இருந்து வந்தது என்பதையும், மொழிபெயர்தேயப் பகுதிகளான ஆந்திரம், கர்நாடகம் முதலியன தமிழக அரசுகளின் கூட்டணியின் கீழ் பாதுகாக்கப்பட்டு வந்தன என்பதையும் உறுதிபடுத்துகின்றன.

இந்த பித்துண்டா நகரம் குறித்து, ஒரிசாவின் பொருளாத வரலாறு என்கிற நூலும், விக்கிபீடியாவும் தரும் தகவல்களைக் காண்போம்.பித்துண்டா(PITHUNDA): பண்டைய கலிங்கத்தின் மிக முக்கிய நகரம் பித்துண்டா ஆகும். மகாவீரர் (கி.மு. 599-527) காலத்தில், இந்தpப் பித்துண்டா நகரம் கலிங்கத்தின் மிக முக்கிய நகர் மையமாக இருந்துள்ளது என உத்தரதயான சூத்திரம் (UTTUTTARADHAYANA SUTRA) என்கிற சமண நூல் குறிப்பிடுகிறது. இந்த பித்துண்டா துறைமுக நகரம் குறித்து டாலமி(கி.பி. 90-168) தனது புவியியல் நூலில் (GEOGRAPHY OF PTOLEMY) குறிப்பிட்டுள்ளார். இந்தப் பித்துண்டா துறைமுகம், பண்டைய கலிங்கத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள முக்கியத் துறைமுகம் எனவும் இரண்டாவது பெரிய துறைமுகம் எனவும் விக்கிபீடியா குறிப்பிட்டுள்ளது. இந்த நகரத்தைக் காரவேலன் தமிழ் அரசுகளின் கூட்டணியிடமிருந்து கைப்பற்றிக் கழுதைகளைக் கொண்டு உழுதான் என்ற தகவலும் தரப்பட்டுள்ளது. காரவேலனின் ஆண்டு கி.மு. 209-170 எனச் சொல்லப்பட்டுள்ளது. ஆதாரம்: 1.ஒரிசாவின் பொருளாதார வரலாறு-நிகார் இரஞ்சன் பட்னாய்க், பக்: 22, 24, 131, 137. (ECONOMIC HISTORY OF ORISSA BY NIHAR RANJAN PATNAIK, PAGES – 22, 24, 131,137) 2.விக்கிபீடியா.

நிகார் இரஞ்சன் பட்னாய்க் அவர்களும், விக்கிபீடியாவும் தரும் செய்திகள் இந்தப் பித்துண்டா நகரம் கலிங்கத்தின் பண்டைய இரண்டாவது பெரிய துறைமுக நகரம் என்பதையும், கலிங்கத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த துறைமுக நகரம் என்பதையும் தமிழரசுகளின் கூட்டணியிடமிருந்து கலிங்க மன்னன் காரவேலனால் இந்நகரம் கைப்பற்றப்பட்டு கழுதை கொண்டு உழப்பட்டது என்பதையும் உறுதி செய்கின்றன. டாலமியின் புவியியல் நூலும் இந்நகரம் குறித்துக் குறிப்பிட்டுள்ளது என்கிற செய்தி இந்நகரம் முன்பிருந்தே ஒரு புகழ் பெற்ற துறைமுக நகரமாக இருந்துள்ளது என்பதை உறுதி செய்கிறது.

காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு குறித்துச் சதானந்தா அகர்வால் தனது ‘சிரி காரவேலா’ என்கிற நூலில் தந்த விடயங்களுக்கு சில விடயங்களில் மாறுபட்ட வேறொரு மொழிபெயர்ப்பு விக்கிபீடியா மூலம் தரப்பட்டுள்ளது. இந்த மொழிபெயர்ப்பு தான் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்பாக இருந்துவருகிறது போல் தெரிகிறது.

Hathigumpha inscription of kharavela of kalinga

Line(11): ……….And the market Town Pithunda founded by the Ava king he ploughs of assess; and (he) thoroughly breaks up the Confederancy of the T(r)amira(Dramira) countries of one hundered and thirteen years, which has been a source of danger to (his) country(Janapada)

Line(13): ……….And a wonderful and marvelous enclosure of stockade for driving in the elephants(he) ……… and horses, elephants, jewells, rubies of wellas, numerous pearls in hundereds (he) causes to be brought here from the Pandiya king. (Source: en.m.wikipedia.org/wiki/kalinga_india )

இதன்படி 11ஆவது வரியை, “ஆவா அரசனால் உருவாக்கப்பட்ட பித்துண்டா என்கிற வணிக நகரத்தைக் கழுதைகளைக்கொண்டு ஏர் பூட்டி உழுதான். தனது நாட்டுக்கு ஆபத்தைத் தரக்கூடியதாகவும், 113 வருடங்களாகவும் இருந்த தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணியை முழுவதுமாக உடைத்தெரிந்தான்” எனப் பொருள் கொள்ளலாம்.

சதானந்தா அகர்வால் தந்ததையும், இதனையும் இணைத்து கீழ் கண்டவாறு பொருள் கொள்ளலாம். “11ஆம் ஆட்சியாண்டில் 1300 வருடங்களாக(113 வருடங்களாக) இருந்து வந்ததும், புகழ்பெற்ற நகரங்களைக் கொண்டதும், தனது நாட்டுக்கு ஆபத்தைத்தரக் கூடியதுமான தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணியை உடைத்து முந்தைய கலிங்கமன்னர்களால்(ஆவா அரசன்) உருவாக்கப்பட்ட பித்துண்டா என்கிற வணிக நகரத்தைக் கைப்பற்றிக் கழுதைகொண்டு உழுதேன். பின் வாங்கிய எதிரிகளிடம் இருந்து விலைமதிப்பற்ற ஆபரணங்களையும், கற்களையும் கைப்பற்றிக்கொண்டேன்”

மேற்கண்ட தகவல்களின் படி பித்துண்டா நகரம் என்பது கலிங்கத்தில் உள்ள ஒரு வணிக நகரம் என்பதும் அந்நகரம் தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணியின் கீழ் இருந்து வந்தது என்பதும் உறுதியாகிறது. தமிழக அரசுகளின் ஐக்கிய கூட்டணியால் தனது கலிங்க அரசுக்கு ஆபத்துவரும் என காரவேலன் கருதினான் என்பது கல்வெட்டிலேயே சொல்லப்பட்டுள்ளது. அந்தப் பயத்தின் காரணமாகவே தனது முன்னோர்களால் உருவாக்கப் பட்டிருந்த போதிலும், கலிங்கநாட்டுக்குச் சொந்தமான நகரமாக இருந்த போதிலும் அதனைக் கழுதை கொண்டு உழுதான் எனலாம். மீண்டும் தமிழர்கள் அதனைக் கைப்பற்றித் தனக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என அவன் கருதினான். தமிழர்கள் பெரும் கடற்படையைக் கொண்டிருந்ததால் அவர்களால் அந்நகரத்தை எளிதாகக் கைப்பற்றிக் கொள்ளமுடியும் என அவன் நம்பியிருக்கலாம். தமிழர்கள் மீண்டும் அந்நகரத்தைக் கைப்பற்றுவதைத் தடுக்கவே, அந்நகரத்தை அவன் கழுதை கொண்டு உழுதான். ஆனால் தமிழர்கள் தங்களது கடற்படை வலிமையால் அதனை மீண்டும் கைப்பற்றிக்கொண்டனர்.

1300 ஆண்டுகள் என்பதற்குப் பதில் 113 ஆண்டுகளாக தமிழரசுகளின் கூட்டணி இருந்ததாக எடுத்துக்கொண்டாலும், அதன் மூலம் இந்தப் பித்துண்டா நகரம் 113 ஆண்டுகளாகத் தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணியின் கீழ் தான் இருந்து வருகிறது என்பது பெறப்படுகிறது. பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி தமிழகம் அல்லாத பிறதேயத் துறைமுக நகரங்களைத் தனது பெரும் கடற்படை கொண்டு கைப்பற்றினான் என்பதைப் புறப்பாடல்கள் தெரிவிக்கின்றன. அவனால் கைப்பற்றப்பட்ட துறைமுக நகரங்களில் ஒன்றாக இது இருக்கலாம் (“செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக் கடற்படை குளிப்ப மண்டி” புறம்-6, வரி:11,12). அவனது காலம் கி.மு. 320-280 ஆகும். 113 ஆண்டுகள் என்பது ஓரளவு பொருந்திப்போகிறது.

13ஆவது வரியின் பொருள் அகர்வால் அவர்களுடையதைவிடச் சிறப்பாக இருக்கிறது எனலாம். இதன்படி, “யானைமேல் ஏறிச் செல்வதற்கான, மிகுந்த அழகும், மிகுந்த சிறப்பும் கொண்ட இருக்கை ஒன்றினையும், நூற்றுக்கணக்கான குதிரைகளையும், யானைகளையும், உயர்ந்த கற்களையும், மணிகளையும் ஆபரணங்களையும் எனது இடத்திற்கே அனுப்பச் செய்தேன்” எனப் பொருள் கொள்ளலாம். பாண்டிய மன்னன் பல பரிசுப்பொருட்களை அனுப்பி காரவேலனோடு நட்பு கொண்டான் என்பதே இதன் பொருளாகும். ஆனால் சிலர் காரவேலன் தமிழகத்தின் மீது படையெடுத்துத் தாக்கி வென்று திரைகளாக இப்பரிசுப்பொருட்களைப் பெற்றான் என்கின்றனர். காரவேலனின் கல்வெட்டு தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணி குறித்த அவனது பயத்தை, அச்சத்தை வெளிப்படுத்துகிறது. தமிழர்கள் தன்னால் வெல்லப்பட முடியாதவர்கள் என அவன் கருதியதை அவனது கல்வெட்டின் வாசகங்கள் காட்டுகின்றன. இந்நிலையில் அவன் தமிழகத்தைப் படையெடுத்து வென்றிருந்தால் அதனைக் கண்டிப்பாகத் தனது கல்வெட்டில் குறித்திருப்பான்.

தனது முதல் 10 ஆட்சி ஆண்டுகளின்போது, பித்துண்டா கலிங்கத்திற்குள் இருந்தபோதும் அவன் அதனைக் கைப்பற்றவில்லை. தமிழகத்தின் செல்வ வளத்தை அதன் கடற்படை வலிமையை அவன் அறிந்திருந்தான். அவர்கள் மௌரியப் பேரரசைத் தோற்கடித்ததையும் அவன் அறிந்திருப்பான். அதனால் அவன் தமிழரசுகளோடு மோத விரும்பவில்லை. மகதம், சாதவ கன்னர்களின் அரசு போன்ற பலவற்றையும் வென்ற போதும் அவன் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பித்துண்டாவைக் கைப்பற்றவில்லை. அவன் ஆட்சியேற்ற 11ஆவது ஆண்டில்தான், பல நாடுகளை வென்றபின், அதுவும் தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்பதை அறிந்த பின்னர்தான், தனது கலிங்க நாட்டில் இருந்த பித்துண்டா நகரத்தைத் தாக்கிக் கைப்பற்றிக் கொண்டான். ஆகவே அவன் தமிழகத்தை மட்டுமல்ல தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணியின் கீழ் இருந்த தக்காணப்பகுதிகளைக்கூட தாக்கவில்லை என்பதே உண்மை.

காரவேலனின் சுயசரிதை பற்றிக்கூறும் இன்னொரு கட்டுரையில், திரு. சன்பக் அவர்கள் கீழ்கண்ட விபரங்களை வழங்குகிறார். காரவேலனது முன்னோன் அசோகனால் கலிங்கத்தை ஆள நியமிக்கப்பட்டான் எனவும் அவன் அசோகனுக்குப்பின் தனி சேடி வம்சத்தைத்(chedi dynasty) தொடங்கிய அரசன் ஆவான் எனவும் அவனது மகன் தான் காரவேலனின் தந்தை மகாமேகவாகனா(Mahameghavahana) என்பவன் எனவும் இந்த மகாமேக வாகனனின் ஆட்சிக் காலத்தில் கலிங்க மக்கள் இயற்கையின் சீற்றத்தால் மிகவும் துன்பப்பட்டார்கள் எனவும் இச்சமயத்தில் தமிழரசுகள் ஒரு ஐக்கிய கூட்டணி ஆகி சக்திமிக்க மகதத்தையே எதிர்த்து நின்றார்கள் எனவும் பின்னர் அவர்கள் கலிங்க மக்களுக்குப் பிரச்சினைகளைத் தர ஆரம்பித்தார்கள் எனவும் அதனாலும் கலிங்க மக்கள் மிகவும் துன்பத்துக்குள்ளானார்கள் எனவும் கூறியுள்ளார்.

இதன்பின்தான் மகாமேக வாகனனுக்கு காரவேலன் பிறந்து வளர்ந்து அரசன் ஆனான் எனவும் அவனது 10ஆம் ஆட்சியாண்டில் வட பகுதிக்குப் படையேடுத்துச் சென்று ஒன்றன்பின் ஒன்றாக பல அரசர்களை அவன் வென்றான் எனவும் முன்பே பலமுறை கலிங்க மக்களுக்குப் பிரச்சினைகள் தந்து வந்த தமிழ் அரசுகள், அவன் வடக்கே சென்றிருந்த போது இதுதான் தக்க சமயம் எனக் கருதி கலிங்கத்தைத் தாக்கத் தொடங்கினார்கள் எனவும் அதனைக் கேள்விப்பட்டக் காரவேலன், முன்பே தமிழ் அரசுகளுக்குப் பாடம் போதிக்க வேண்டும் என்று விரும்பிய அவன், மின்னல் வேகத்தில் திரும்பி வந்தான் எனவும் ஆசிரியர் கூறுகிறார்.

மேலும் கட்டுரை ஆசிரியர், தமிழர்கள் பித்துண்டா என்கிற துறைமுக நகரத்தைத் தங்களின் தலைமையகமாகக் கொண்டு கலிங்கத்தைத் தாக்கினார்கள் எனவும் காரவேலன் கடுமையான எதிர்த் தாக்குதலைத் தொடுத்தான் எனவும் அவனது திடீர்த் தாக்குதலை எதிர்பார்க்காத தமிழரசுகள் பெரும்தோல்வியைச் சந்தித்தன எனவும், கோபம் அடங்காத காரவேலன் பித்துண்டா நகரத்தை அழித்துக் கழுதைகொண்டு உழுதான் எனவும் அதன் பின்னரும் திருப்தியடையாது அவ்வரசுகளைத்தாக்கி அவர்களின் ஒற்றுமையை உடைத்தான் எனவும் தமிழரசுகள் தோற்றுப்போய் தங்கள் சொந்த இடங்களுக்கு ஓடினர் எனவும் தெரிவித்துள்ளார். (Source:yousigma.com/biographies/kharvela.html; MMBiography of King Kharvela)

மேற்கண்ட தரவுகளை இணைத்துப் பார்ப்பதன் மூலம், காரவேலன் கல்வெட்டு தரும் தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணி 1300 அல்லது 113 ஆண்டுகளாக இருந்து வரும் செய்தி(மிக நீண்ட காலமாக தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி இருந்து வந்துள்ளது எனக் கொள்ளலாம்), கலிங்கத்தின் பித்துண்டா நகரம் தமிழரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த செய்தி, தமிழரசுகள் வலிமைமிக்க மகதத்தை எதிர்த்து நின்ற செய்தி(அதாவது தமிழ் அரசுகள் மௌரியப்பேரரசின் தமிழகப் படையெடுப்பை முறியடித்த செய்தி எனக் கொள்ளலாம்), பித்துண்டா நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கலிங்கத்தைத் தாக்கிய செய்தி, பாண்டிய வேந்தன் நிறையப் பரிசுப் பொருட்களை அனுப்பிக் காரவேலனுடன் நட்பு கொண்ட செய்தி(வணிகத்தைப் பாதுகாப்பதில் தமிழரசுகள் உறுதியாக இருந்தன எனக் கொள்ளலாம்), சாதவாகனர்கள் தமிழை ஆட்சி மொழியாகக் கொண்டிருந்த செய்தி முதலியன கீழ்க்கண்டவற்றை உறுதி செய்கின்றன என முடிவு செய்யலாம். அவை, தமிழ் அரசுகளின் ஒற்றுமையையும், அவர்களின் கடற்படை வல்லமையையும், அவர்களின் உலகளாவிய வணிகத்தையையும், தக்காணம் என்கிற மொழிபெயர் தேயம் தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணியின் கட்டுப்பாட்டில் இருந்தது என்கிற மாமூலனாரின் கூற்றையையும் உறுதி செய்கின்றன எனலாம்.

(தொடரும்) 

-    கணியன் பாலன், ஈரோடு.

Pin It