தமிழ் அச்சுப் பண்பாடு : தொடர் கட்டுரை - 6

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக் காலத்தில், அச்சிடுதல் என்பது முதலீடு செய்து செய்யும் தொழிலாக உருப்பெறத் தொடங்கியது. அதற்கு முன் பிரித்தானிய ஆட்சியாளர்கள் மற்றும் கிறித்தவச் சமய நிறுவனங்கள் ஆகியவற்றின் கட்டுப் பாட்டில் மட்டும் செயல்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலங்களில், அச்சுத் தொழில் பரவலாகியது; அச்சுக் கூடங்கள் உருவாயின. புதிதாக உருவாகிய தொழில், சமூகத்தில் எவ்வகையில் எதிர்கொள்ளப்படுமோ, அவ்வகையில் எதிர் கொள்ளப்பட்டது. இலாபகரமான தொழிலாக அச்சுத் தொழில் வளர்வதற்குப் பலரும் அதில் முதலீடு செய்தார்கள். இவ்வகையில், ஆட்சியாளர்கள் மற்றும் சமய நிறுவனங்களின் வழி அச்சு செயல் பட்ட முறைகளிலிருந்து வேறு முறைகளில் அச்சு செயல்படத் தொடங்கியது.

அச்சுக் கருவியை வாங்கி, அச்சுத் தொழிலை மேற்கொள்வோர், இத்தொழிலையே இலாபகரமாகச் செய்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து செயல்படத் தொடங்கினர். அச்சு வழி உருப்பெறுவதை நுகர்வோர் யார்? அவர்களது நுகர்வை எவ்வகையில் திருப்தி செய்து, இலாபம் பெறுவது? ஆகிய பல கண்ணோட்டங்களில் செயல்படத் தொடங்கினர். வெகுசன நுகர்வுப் பண்டமாக அச்சு வழி உருப் பெறுவதை எவ்வகையில் கட்டமைப்பது என்ற புரிதலை நோக்கிச் செயல்பட்டனர். எழுத்தறிவுப் பெருக்கம், வாசிப்புப் பழக்கம் ஆகியவை அச்சுத் தொழில் வளர உதவும் அடிப்படையான தேவை களாகும். இந்தப் பின்புலத்தில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1900-1930) உருவான அச்சுப் பண்பாட்டைப் புரிந்துகொள்ள, நமது வசதி கருதி கீழ்க்காணும் பாகுபாடுகளைச் செய்து கொள்ளலாம்.

-              வெகுசன நுகர்வாக அச்சுவழி உருவானவை, எவ்வகையில் அமைந்தன என்பது குறித்த உரையாடல்

-              வாசிப்புப் பழக்கம் உருவான சூழலில் அதற்கென இதழியல் எனும் துறை அச்சின் உதவியோடு உருப்பெறுதல் குறித்த புரிதல்

-              சமயம் வெகுசனங்களிடம் செல்வாக்குப் பெற வேண்டும் என்பதற்காக, சமயங்கள் தொடர்பான செய்திகளை மிகுதியாக அச்சு ஊடகத்தில் வெளிப்படுத்தத் தொடங்கினர். பல்வேறு சமயங்களின் கருத்துக்கள் அச்சுவழி உரையாடலுக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம் அச்சுப் பண்பாடு உருப்பெற்ற முறை.

-              கதை வாசித்தல் மரபு, கதை கேட்டல் மரபிலிருந்து உருவானது. கதைப் புத்தகங்களை                 வெளியிடும் பதிப்பகங்கள் உருவாயின. இம்மரபு தமிழில் புதிய அச்சுப் பண்பாடு உருவாவதற்கு எவ்வகையில் உதவின? என்பது குறித்த உரையாடல்.

-              பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஏடுகளிலிருந்து அச்சுக்கு வரத் தொடங்கியதன் மூலம் பதிப்பு என்னும் புலமைத் துறை அச்சு            வழி உருப்பெற்ற வரலாறு குறித்த புரிதல்

-              பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக் காலத்தில் உருவான பள்ளிக் கல்வி முறை சார்ந்து, பாடப் புத்தகங்கள் உருவாக்கப்பட்டன அச்சுப் பண்பாட்டைக் கட்டமைப்பதில் பாடப்புத்தகங்கள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாடநூல் உருவாக்கம் இலாபம் தரும் அச்சுத் தொழிலாக உருப்பெற்றது. இத்தன்மை குறித்த உரையாடலும் கவனத்தில் கொள்ளுதல் அவசியமாகும்.

மேற்குறித்த பல்வேறு பரிமாணங்களில் உருவான அச்சுப் பண்பாடு, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் கால அச்சுப் பண்பாடாக நாம் புரிந்து கொள்ள முடியும்.

‘தமிழ்நூல் விவர அட்டவணைகள்’ 1867-ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டுள்ளன. 1900-1910 காலங்களில் வெளிவந்த நூல்கள் குறித்த விவரங் களைக் கூறும் தமிழ்நூல் விவர அட்டவணை 3626 நூல்களை பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளன. இந்நூல்களில் அதிகமான எண்ணிக்கை கீழ்க் காணும் பொருண்மைகளில் அமைந்திருப்பதைக் காண்கிறோம். மாந்திரிகம், ஜாலவித்தை, சோதிடம், தொடுகுறி சாத்திரம், மனையடி சாத்திரம், கை ரேகை சாத்திரம் ஆகியவை குறித்த நுல்கள் கணிசமான அளவில் அச்சிடப்பட்டிருப்பதை அறிகிறோம். இவ்வகையில், வெகுசனங்களின் நம்பிக்கை சார்ந்த அடிப்படையில், வாய்மொழி மரபாகச் சமூகத்தில் புழக்கத்தில் இருப்பவை, அச்சிடப்பட்டதைக் காண்கிறோம். வாய்மொழி யாக இருப்பதை அச்சிடுவதன் மூலம், பெரும்பான்மை யோரின் நுகர்வுகளை அச்சுவழி கொண்டு வந்தனர். இதனால், இத்தொழில் இலாபகரமான தொழிலாக உருப்பெற வாய்ப்பு ஏற்பட்டது. வெகுசனங்கள் கூடும் சந்தைகள், நடைபாதைகள், கோயில் அருகில் உள்ள இடங்கள், நாட்டு மருந்துக் கடைகள் ஆகிய பிற இடங்களில் இவை விற்பனை செய்யப்பட்டன. இவ்வகையில் உருவான அச்சுப்பண்பாடே இன்றும் கூட செல்வாக்குடன் இருப்பதைக் காண்கிறோம். தமிழில் அதிக அளவு விற்பனையாவது சோதிட நூல்கள் என்பதை நாம் இங்குக் கவனத்தில் கொள்வது அவசியம்.

எழுத்துக்கூட்டி வாசிக்கும் வாசிப்பாளர்கள், நமது சூழலில் மிகுதியாக உருவாயினர். வட்டார மொழிகள், புலமையான செயல்பாடுகளுக்கு இக்காலத்தில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிய வில்லை. புலமைசார் மொழியாக ஆங்கிலமே கருதப்பட்டது. எனவே, குறைந்தபட்ச எழுத்தறிவு பெற்றவர்களின் தேவை கருதியே தமிழ் அச்சுக் கூடங்கள் செயல்பட்டன. இதனால் ‘பெரிய எழுத்துப் புத்தகங்கள்’ உருவாயின. கூத்து நூல்களும், சித்த மருத்துவ நூல்களும் மிகுதியாக உருவாக்கப் பட்டன. இவ்வகையில், வாய்மொழி மரபின் நேர்வாரிசாக அச்சு மரபு மேற்குறித்தவகையில் செயல்பட்டதை அறிகிறோம். தமிழில் உருவான வெகுசனப் பண்பாட்டிற்கும் இவ்வகையான நூல்கள் உருவாக்கத்திற்கும் தொடர்பு இருப்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் செயல்பட்ட தமிழ் அச்சுப் பண்பாடு ஒரு சில இந்திய மொழிகளோடு ஒப்பிடும்போது, நமக்கெனத் தனி மரபுகளைக் கொண்டு செயல்பட்டதைக் காண்கிறோம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், கிறித்தவம் போன்ற சமய நிறுவனங்கள் இதழ்களை நடத்தின. இவை முதன்மையாக சமயப் பரப்புதலுக்காவே நடத்தப்பெற்றன. ஓய்வாகப் படிக்கும் வாசகனுக்கான இதழியல் கூறுகளை அவை பெற்றிருக்கவில்லை. ஆனால், எழுத்தறிவு வளர வளர, வாசிப்புப்பழக்கமும் உருப்பெறத் தொடங்கிற்று. இத்தன்மை, கால ஒழுங்கிற்குட்பட்ட அச்சிடுதல் உருவாக வழி கண்டது. இதுவே இதழியல் என உருவானது. பருவம் என்பது இதழியலின் அடிப்படையாகும். எனவே எழுத்தறிவு, அச்சுக்கருவி இவற்றின் இணைவால் உருவான அச்சுப் பண்பாடுதான் இதழியலில் புரிந்துகொள்ளப்படுகிறது. தமிழ்ச் சூழலில் இச் செயல்பாடு, சமய மரபுகளிலிருந்து படிப்படியாக விடுபட்டு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இதழியலாக முழுமை பெற்றது. அச்சுப் பண்பாட்டின் முதன்மையான துறை இதழியலே. சமயங்கள் தொடர்பான கருத்துக்கள் நீண்ட நெடிய பாரம் பரியத்தைக் கொண்டவை அச்சுக்கருவி வருகை யோடு, சமயக் கருத்துப்பரப்பில் சொல்பாடுகள் புதிய முறைகளைக் கண்டுபிடித்தன. இவ்வகையில் அச்சுக் கருவி சமயவாதிகளுக்கு, மிகவும் உதவும் ஊடகமாக உருப்பெற்றது. புத்தகங்கள் என்பவை புனிதமானவை. அவற்றை ஒருசிலரே வாசிக்க முடியும். எல்லோரும் வாசிக்க இயலாது என்ற கருத்துப்பிரச்சாரம், மதவாதிகளிடம் காணப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ‘கூசயஉவள’ எனப்படும் குறுநூல்கள் சமயப் பரப்பலுக்காகவே உருவாக்கப் பட்டன. ஒரு சமயத்தைச் சேர்ந்தவர், இன்னொரு சமயத்தை விமர்சனம் செய்வதற்குக் குறுநூல்களை உருவாக்கி வெளியிட்டனர். இச்செயல்பாட்டை தனித்த அச்சுப் பண்பாடாகக் கருத இடமுண்டு.

மனிதர்களின் அடிப்படையான பண்புகளில் ஒன்று, யாரிடமாவது கதைகேட்க ஏங்குவது ஆகும். இப்பண்பு மிகப் பழமையான மரபு. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுமார் இருபது பெண் எழுத்தாளர்கள் இருந்துள்ளனர். இவர்கள் எழுதிய நாவல்கள் பரபரப்பாக விற்பனை ஆயின. எழுத்தறிவு பெற்ற பெண்கள் வாசித்தல் என்பது இயல்பாக நடைமுறையில் இருந்தது. இதன் தொடர்ச்சியாகவே விறுவிறுப்புப் பண்பு கொண்ட துப்பறியும் நாவல்கள் உருவாக்கப் பட்டன. ‘நாவல் டெப்போ’ எனும் நிறுவனம்

1920-களில் உருவாக்கப்பட்டு, அது மிகுதியான துப்பறியும் நாவல்களை வெளியிட்டது. இத் தன்மை வழி உருவான அச்சுப் பண்பாடு தமிழ்ச் சூழலில், குறிப்பிடத்தக்க தாக்கங்களை உருவாக்கியது.

தமிழ்த்தொல்பழம் இலக்கிய, இலக்கண நூல்களைச் சுவடிகளிலிருந்து அச்சுக்குக் கொண்டு வரும், பதிப்புத்துறை அச்சுச் செயல்பாட்டில் உருவானதுதான். இத்துறை வழி உருவான நூல்கள், எவ்வகையில் மதிப்பிடப்படுகின்றன? என்ற கேள்வியை எழுப்பலாம். அச்சுப் பண்பாட்டின் செழுமையான மரபாகவே பதிப்புத்துறையைக் கருதவேண்டும். தமிழ்ச்செவ்வியல் நூல்களைப் பதிப்பித்துக் கொண்டு வந்ததன் மூலம், தமிழின் தொல்பழம் மரபு கண்டறியப் பட்டது. இச்செயல் அச்சுச் செயல்பாட்டின் முதன் மையான செயல். எனவே, ஏடு அச்சு பதிப்பு என்ற போக்கில் அச்சுப் பண்பாட்டை விரிவாகக் கற்றறியும் தேவையுண்டு.

பள்ளிக்கூடம் வழி உருவான எழுத்துப் பயிற்சி, வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி, அதன் வழி இதழியல் போன்ற அச்சுப் பண்பாட்டை உருவாக்குகிறது. ஆனால், எழுத்துப் பயிற்சி பெறு வதற்கெனத் தேவைப்படும் புத்தகங்கள், மற்றும் குறிப்பு ஏடுகள் ஆகியவற்றின் உற்பத்தி, அச்சுப் பண்பாட்டின் அடிப்படைகளாக அமைகின்றன. ‘பாடநூல்கள்’ என்பவை, நவீன அச்சுமரபின் விளைவுகளே. இக்கூறுகள் வழி உருப்பெறும் அச்சுப் பண்பாட்டைப் புரிந்துகொள்ளும் தேவை உண்டு. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான அச்சுப் பண்பாடு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் விளைபொருளே. இருப்பினும், இக்காலத்தின் தனித்தன்மைகளையும் அச்சுப் பண்பாடு உள்வாங்கி, தனதாக்கியுள்ளது.

(உங்கள் நூலகம் அக்டோபர் 2010 இதழில் வெளியானது)

Pin It