சென்ற கட்டுரையில் முதலாம் இராச ராசனை   ஏகாதிபத்தியவாதி என்று குறிப்பிட்டிருந்தோம். இந்தச்சொல்லாடல் நவீன காலத்தியது அல்லவா என்று சில வாசகர்கள் குழம்பியிருக்கலாம். முதலில் இந்தச்சொல்லினுடைய பொருளை ஆழ்ந்து நோக்க வேண்டும்.மற்ற எல்லாவற்றையும் நிராகரித்துத் தான் ‘மட்டுமே’ மேலெழும்பும் ஒரு நபரை அல்லது சித்தாந் தத்தையே ஏகஆதிபத்தியம் என்கிறோம். அமெரிக்கா என்பது ஒரு அரசின் ஏகாதிபத்தியம் என்றால்  மற்ற விளையாட்டுக்களை எல்லாம் அழித்து மேலெழும்பும் கிரிக்கெட் விளையாட்டுக் கலாச்சார ஏகாதிபத்தியம் அல்லவா?

சங்கராச்சாரியாரின் அத்வைத சித்தாந்தம் ஒரு தத்துவ ஏகாதிபத்தியம் அல்லவா? உலக மெல்லாம் தனக்கு மட்டுமே என்பது சங்க காலம் தொடங்கி மன்னர்களின் நோக்கமாக இருந் திருக்கிறது.

“ தென்கடல் வளாகம் பொதுமையின்றி

வெண்குடை  நிழற்றிய ஒருமையோர் “

என்று சங்க இலக்கியம் மன்னர்களின் ஏகாதிபத்திய உணர்வைக்குறிப்பிடுகிறது.

“ அகிலமெலாம் கட்டி ஆளினும்

கடல் மீது ஆணை செல்லவே நினைப்பார்” என்று பட்டினத்தாரும் பாடுவார்.

இராசராசனின் மெய்க்கீர்த்தியின் ( மெய்க் கீர்த்தி = மன்னர்களின் புகழ்ப்பாட்டு முன்னுரை) முதல் இரண்டு அடிகளைப் பாருங்கள்:

“ திருமகள் போலப்பெருநிலச்செல்வியும்

தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொள ”

என்பது முதல் இரண்டு அடிகளாகும். செல்வங்களும் நிலவளமும் பூமியில்  வேறு யாருக்கும் கிடையாது என்பது அவனது நோக்கமாகும்.

சோழமண்டலம் மட்டுமல்லாமல் பாண்டி மண்டலம், சேர மண்டலம் ஆகியவற்றோடும் ஈழ மண்டலத்தையும் வென்று தனக்கு மும்முடிச் சோழன் என்று  தானே  பெயர் சூட்டிக் கொண் டவன் அவன். அவை மட்டுமின்றி வேங்கை நாடு,கங்கை பாடி,தடிகை பாடி, நுழம்பபாடி, ஈழ மண்டலம், இவை எல்லாவற்றையும் வெற்றி கொண்டவன் அவன். அதாவது இன்றைய கர்நாடகத்தில் வடகிழக்குப் பகுதி,ஆந்திரத்தின் தென்பகுதி கேரளத்தின் தென்பகுதி இவை யெல்லாம் அவன் ஆட்சியின் கீழ் வந்தன.

அந்தந்த நாட்டுப் பண்டாரங்களைக் (பண்டாரம் = கருகூலம்)  கொள்ளையடித்த செல்வமே  216 அடி உயரமுள்ள கற்கோபுரத்தை உருவாக்கியது.வென்ற நாடுகள்  அனைத்துக்கும் அவன் தனது  9 பட்டப் பெயர்களையே சூட்டி னான்.  எடுத்துக்காட்டாக பாண்டி நாட்டுக்கு  ராஜராஜப்பாண்டி மண்டலம் என்று பெயர் சூட்டினான். தஞ்சைக் கோவில் கல்வெட்டு ஒன்று  “ உடையார் ஸ்ரீராஜராஜதேவர் மலைநாடு எறிந்து கொடுவந்த பண்டாரத்திலிருந்து எடுத்துச்செய்த” பொன்னாலான அணிகலன்களைப் பற்றிப் பேசு கிறது. அதாவது சேரநாட்டு அரச பண்டாரத்தைக் (கருகூலத்தை) கொள்ளையடித்துக் கொண்டுவந்த பொன்னால் கோவில் இறைவனுக்கு நகைகள் அளித்துள்ளான்.

ஐப்பசி மாதம் சதைய நட்சத்திரத்தில் பிறந்தவன்.எனவே தன்னுடைய பிறந்த நாளை கேரளா உட்பட எல்லாக் கோவில்களிலும் கொண் டாட ஏற்பாடு செய்தவன் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டோம்.

அவரது மெய்க்கீர்த்தியின் மூன்றாவது அடி “ காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி”  என்பதாகும்.

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கல் வெட்டு ஒன்றில் இவ்வரியை அடுத்து “மலை யாளிகள் தலையறுத்து” என்ற தொடர் காணப் படுகிறது.

தஞ்சைக்கோவிலுக்குத் தான் மட்டுமின்றித் தன் பணியாளர்கள அனைவரையும்  நன்கொடை அளிக்கச் செய்திருக்கிறான்.தன்னுடைய பெயரே எல்லா இடங்களிலும் விளங்க வேண்டும் என்பதற்காகப் பணியாளர்களுக்கு மிக உயர்ந்த விருதாகத் தன்னுடைய பெயரான ‘ராஜராஜன்’ என்பதை அளித்துள்ளான்.

ராஜராஜப் பெருந்தச்சன்

ராஜராஜப் பெருந்தையான்

(ரத்தினங்களைத் துணியில் தைப்பவர்)

ராஜராஜப் பெருநாவிசன்

என்பவை போன்ற பட்டங்களை அளித் துள்ளான்.

அதுமட்டுமில்லாமல் அளவு கருவிகளுக்கும் தன்னுடைய பெயரையே சூட்டியுள்ளான் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.இது மட்டுமின்றி  தஞ்சைக் கோவிலுக்கான  400 ஆடல் மகளிரும் சோழ மண்டலத்திலிருந்த 112 கோவில்களிலி லிருந்து தருவிக்கப்பட்டவர்கள்.

சிவபெருமான் நடராசத்  திருக்கோலமே அவன் மனம் விரும்பிய வடிவமாகும். அத்திரு மேனியை “ஆடவல்லான்”  என்று குறிப்பிடும் ராச ராசன் அதற்காகவே 400 தளிச்சேரிப் பெண்டுகளை ( ஆடுமகளிர்-தேவ தாசிகள்) நியமித்தான்.

தஞ்சைக்கோவில் பணியாளர் 1100 பேரில் 400 பேர் ஆடல் மகளிர் ஆவர். இவையன்றிக் கோயிற்பாதுகாவலர்களாக ‘திருமெய்க்காப்பு’ எனப்படும் பணியாளர்களை நியமித்தார். இவர்களைச் சோழ மண்டலத்திலுள்ள பல்வேறு ஊர்ச்சபையாரும் அரசன் ஆணைப்படி அனுப்பி யுள்ளனர்.

இவையன்றி வாரிசு அரசியலின் வழிகாட்டி யாகவும் அவன் திகழ்ந்துள்ளான்.தான் வென்ற பாண்டி மண்டலத்தை ஆளத் தன் பிள்ளைகளை நியமித்து அவர்களுக்குச் சோழ பாண்டியர் என்று பட்டம் கொடுத்தார்.சோழ பாண்டியர் என்ற பெயர் தாங்கிய கல்வெட்டுக்கள் பல மதுரை-நெல்லை மாவட்டங்களில் காணப்படுகின்றன.

“இவனுக்கு 15 மனைவியர் இருந்தனர். பட்டத்தரசி தந்தி சக்தி விடங்கி ஆவார்.முதலாம் ராசேந்திரனைப் பெற்றெடுத்த பெருமைக்குரியவர் வானவன் மாதேவி” என்று வரலாற்றாளர் குறிப்பிடுகின்றனர்.

பல்வேறு ஊர்களிலுள்ள நிலங்களிலிலிருந்து தஞ்சைக்கோவிலுக்குக் காணிக்கடனாக ஆண் டொன்றுக்கு வந்த நெல் 1 லட்சத்து 20 ஆயிரம் கலம் ஆகும்.எனவே இந்தக் கோயில்பணியாளர் களில் கணிசமான அளவு கணக்கெழுதுவோர் இருந்துள்ளனர். 4 பண்டாரிகள், 116 பரிசாரகர் 6 கணக்கர்கள் 12 கீழ்க்கணக்கர்கள் இக்கோவிலில் பணி செய்துள்ளனர். கோவிலுக்குரிய விளக்கு களுக்கு நெய் அளக்க 400 இடையர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். இவர்களுக்கு  ‘வெட்டிக்குடிகள்’ என்று பெயர்.அதாவது சம்பளமில்லா வேலைக் காரர்கள் என்று பொருள். இவர்கள் வசம் ஒப்பு விக்கப்பட்ட எண்ணிக்கையிலான  ஆடுமாடுகளின் ‘மிகுபயன்’(Surplus) மட்டுமே ஊதியமாகும். அதாவது 96 ஆடுகள் அல்லது 48 பசுக்கள் அல்லது 32 எருமைகள் ஒரு ‘ இடையன் வசம்’ ஒப்புவிக்கப் படும். இந்த எண்ணிக்கை குறையாமல் வைத்துக் கொண்டு அவன் கோவிலுக்கு நெய் அளக்க வேண்டும். எனவே இந்த ஆடுகளுக்கும் மாடு களுக்கும் “ சாவா மூவாப் பேராடுகள் அல்லது பசுக்கள் ”  என்று பெயர்.அதாவது இவர்களைப் பொறுத்தமட்டில் அரசுக்கு பொருட்செலவோ நெற்செலவோ கிடையாது.

நாம் சென்ற கட்டுரையில் குறிப்பிட்ட்டது போல அளவுகளின் துல்லியத்தன்மை ஏகாதி பத்தியத்தை அடையாளம் காட்டும்  ஒரு அம்சமாகும்(கணிப்பொறிக்காலத்தை நினைவு கொள்க). 

ஒரு மாநிலமும் வரியிலிருந்து தப்ப முடியாது. சோழ சாம்ராஜ்யத்தில் நிலப் பரப்பைத் துல்லியமாக அளந்து இறை வசூல் செய்யும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

“ நிலன் நாற்பத்தொன்பதரையே

நான்குமா முக்காணிக்கீழ் அரையே

ஒரு மாவரைக் கீழ் முக்காலே ஒருமாவினால்

இறைகட்டின காணிக்கடன்...”

என்று வரும் இந்நிலப்பரப்பின் அளவினைக் காண்போம்.

இக்கல்வெட்டிலிருந்து அந்நாளில் நிலப் பரப்பைக் கணக்கிட வேலி,

குழி, சதுரசாண், சதுர அங்குலி,சதுரநூல் இவற்றை அலகீடாகக் கொண் டிருந்தனர் எனத்தெரிகிறது.

மேலும், ஒரு வேலி பரப்பளவுள்ள நிலத்தை 320 சம பங்குகளாக்கி அதன் ஒரு பங்கை முந்திரி  (1/320) என்றும் முந்திரிக்கும் கீழுள்ள பரப்பை மேலும்  320 சமபங்கு களாக்கி அதன் ஒரு பங்கைக் கீழ் முந்திரி (1/320 ஒ 1/320 ) என்றும் கீழ் முந்திரிக்குக் கீழ் உள்ள நிலத்தை மேலும் 320 சமபங்குகளாக்கி அதன் ஒரு பங்கைக் கீழ் கீழ் முந்திரி

(1/320 ஒ 1 /320 ஒ 1/320 ) என்றும் குறிப் பிட்டனர். கீழ் கீழ் முந்திரிக்குக் கீழுள்ள மிகச் சிறிய நிலப் பரப்பை இருபத்தைந்து சம பங்குகளாக்கி அதன் ஐந்து பங்கைக் கீழ்கீழ்கீழ் நான்குமா என்றும் பத்துப்பங்கை கீழ்கீழ்கீழ் எட்டுமா என்றும், பதினைந்து பங்கைக் கீழ்கீழ்கீழ் அரையே இருமா என்றும், இருபது பங்கைக் கீழ்கீழ்கீழ் முக்காலே ஒருமா என்றும், இருபத்து ஐந்து பங்கை கீழ் கீழ் முந்திரி என்றும் வகுத் துள்ளனர்.

இறுதியில் கணக்கிடும் மிகச்சிறிய நிலப்பரப்பின் அளவு கீழ் கீழ் முந்திரிக்குக் கீழுள்ள மேற்கூறிய நான்கு அளவு முறை களில் ஏதாவது ஒன்றினைக்கொண்டு முடியும்.

பொதுவில், நிலப்பரப்பின் அளவு முறை கீழ் கீழ் முந்திரி என்ற அளவிலேயே முடியும். நில அளவையை மேலே குறித்த முறையில் முந்திரி,அரைக்காணி,காணி, அரைமா,முக்காணி,ஒருமா, மாகாணி , கால்,அரை,முக்கால்,ஒன்று  என்று கீழ் கீழ் முந்திரியிலிருந்து முந்திரி முண்டிரியாகக் கீழ் முந்திரி, முந்திரி வேலி வரையில் கூட்டி அலகிட்டு அதன் பரப்பை அட்டவணை ஒன்றில் காட்டியுள்ள வாய்ப்பாட்டின்படிக் கணக்கிட்டு வேலிக்கணக்கில் குறித்துள்ளனர்.

(செம்மலர் ஜூலை 2010 இதழில் வெளியானது)

Pin It