கடலிற்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள கலைச்சிற்பங்கள் மூலம் பவளப் பாறைகளைக் காப்பாற்றும் முயற்சியில் பிஜி தீவு ஈடுபட்டுள்ளது. நாகுலா (Nacula) தீவில் கடலுக்கு அடியில் நிறுவப்பட்டுள்ள கலைச்சிற்பங்கள் ஆழ்கடல் நீரில் மிதந்தபடி காலநிலை மாற்றத்தை சமாளித்து வாழும் புதிய பவள உயிரினங்களை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. எழில் கொஞ்சும் நீலக்கடல் நீரும், அழகிய கடற்கரை மணற்பரப்பும், எஃகு சிற்பங்களில் வளர்ந்துள்ள பவள உயிரினங்களுடன் கடலின் தரைப்பகுதியும் காட்சி தருகின்றன.

கடல்நீர் வெப்பமடைவதால் அழிந்துவரும் பவளப் பாறைகளைக் காக்க இந்தப் புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பஞ்கள் கடலின் உப்புநீரால் அரிக்கப்படாத வகையில் உருவாக்கப்பட்டு கடல்நீரில் நீண்ட காலம் கெடாமல் இருக்கும் எவர்சில்வரால் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய 137 சிற்பங்களில் இப்போது முப்பது வகை பவளப்பாறை உயிரினங்கள் வாழ்கின்றன. இந்த வடிவங்கள் மாற்றி அமைக்கப்படக் கூடியவை. பவள உயிரினங்களிடம் இருந்து மரபணு பொருட்களை சேகரிக்கும் வகையில் இவை அமைக்கப்பட்டுள்ளன.steel sculptures in nacula islandசிற்ப வடிவங்களில் வளரும் உயிரினங்கள்

காலநிலை மாற்றத்தை வெற்றி கொண்டு வாழும் பவள உயிரினங்களை உருவாக்க இது உதவும். உலகின் முதல் சிற்ப வடிவ பவள உயிரினங்களுக்கான வங்கி (Scultpural Coral Bank) என்று வர்ணிக்கப்படும் இந்த சிற்ப அமைப்புகள் லாபநோக்கமில்லாத பவளப் பாறைகளைக் காக்கும் அமைப்பு (Not-for-profit group Counting Coral) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கு வாழும் பவளப்பாறைகள் அனைத்தும் தூய்மையானவை. ஆனால் காலம் செல்லச் செல்ல சூழல் சீரழிவால் இவை மெல்ல மெல்ல உயிரிழந்தன. இது தனக்கு அதிர்ச்சி அளித்ததாக இந்நிறுவனத்தின் தோற்றுநர் ஜாலியன் காலியர் (Jolyon Collier) கூறுகிறார்.

2023ன் முதல் பாதியில் வீட்டி லெவு (Viti Levu) என்ற பிஜியின் பெரிய தீவு மற்றும் நாட்டின் சில பகுதிகளில் இந்த உயிரினங்கள் வேகமாக அழிந்து வருகின்றன என்று பவளப் பாறைகளைக் கண்காணிக்கும் அமைப்பு (Coral Reef Watch) மற்றும் பிஜி வானிலை ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து எச்சரித்தன.

மக்கள் வாழ்வில் இரண்டறக் கலந்த கடல்

பிஜி நாட்டின் 75% மக்கள் கடலோர வாழ்வுடன் பின்னிப் பிணைந்தே வாழ்கின்றனர். கலாச்சாரம், நல வாழ்வு, நாட்டின் அடையாளத்தில் கடல் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. பவளப்பாறைகளின் முக்கியத்துவம் பற்றி பிஜி மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இந்த வடிவங்கள் ஒரு நூலகம் போல பவளப் பாறைகளின் மரபணு விவரங்களை சேகரித்து இந்த உயிரினங்களுக்கான ஒரு மரபணு வங்கியாக செயல்படுகிறது.

இந்த உயிரினங்களில் இருந்து வருங்காலத்தில் புவி வெப்ப உயர்வு, கடல் நீர் சூடாதல், காலநிலை மாற்றம் போன்றவற்றைத் தாங்கி வளரும் சூப்பர் உயிரினங்களை உருவாக்க முடியும். எவர்சில்வர் கூடுகளில் வளர்க்கப்பட்டவற்றில் பல மரபணு வலிமையில்லாத பவளப்பாறை உயிரினங்கள் அழிந்து விட்டன. வெப்ப அலைத்தாக்குதல், சூடான கடல், புயல்கள், மாறும் பருவநிலைகளில் வலுவான உயிரினங்களை நட்டு வளர்ப்பது சவால் நிறைந்ததுதான் என்றாலும் வலிமையான சிற்ப வடிவங்கள் மாறி வரும் சூழலை சமாளிக்க உதவுகின்றன.

பாசிகளால் நீல நிறமாதல், புயல்கள் போன்றவற்றை சமாளித்து வாழும் உயிரினங்கள் வலுவாக வளரும்வரை பவளப்பாறைகள் இந்த அமைப்புகளில் தொடர்ந்து நட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தக் கூடுகளில் இருக்கும் உயிரினங்களின் எண்ணிக்கை இடைவேளைகளில் கணக்கிடப்படுகிறது. பெரிதாக வளர்ந்தபின் அவை இந்த அமைப்புகளில் இருந்து நீக்கப்படுவதில்லை. மாறாக கூடுகளின் இணைப்புகள் தளர்க்கப்பட்டு வளர்ந்த உயிரினங்கள் நாற்றங்கால்களுக்கு கொண்டு சென்று பராமரிக்கப்படுகின்றன.

முதலில் வளர்ந்த பவளப்பாறைகள் எவர்சில்வர் வடிவங்களில் விடப்படுகின்றன. அவை ஒவ்வொரு புதிய இணைப்புடன் சேர்க்கப்படும்போது மேலும் மேலும் அடர்த்தியாக வளர்கின்றன. இவற்றிற்கு அவ்வப்போது முடித்திருத்தம் செய்யப்படுவது போல கூடுதல் வளர்ச்சியடைந்தவை அகற்றப்பட்டு ஒருசில ஆண்டுகளுக்கு அப்படியே விடப்படுகின்றன. இதனால் இவற்றின் அடிப்படை மூலக்கூறு அடர்த்தியாகி வலுவடைகிறது. தீவு மக்களுக்கு இத்திட்டம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கடலோரத்தில் வலை வீசி மீன் பிடித்த முன் தலைமுறையினர்

முந்தைய தலைமுறையினர் கடலோரத்தில் வலைகளை வீசியே மீன் பிடித்தனர். ஆனால் இப்போது அப்படியில்லை. கடலிற்கு சென்றே மீன் பிடிக்க வேண்டியுள்ளது. இப்புதிய முயற்சியின் மூலம் எங்கள் முன்னோர் வாழ்ந்த காலத்தில் இருந்த செழுமையான பவளப்பாறைகள் நிறைந்த கடல்வளத்தை எங்களால் மீண்டும் பெற முடியும் என்று நம்புவதாக தீவுவாசியும் சூழல் பிரச்சாரகருமான லேபன்னா இவால்யு (Laben Naivalu ) கூறுகிறார்.

தீவு மக்கள் மற்றும் Blue lagoon resort ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்த கடலுக்கடியில் மிதக்கும் உலோகச் சிற்பஞ்கள் இப்பகுதிக்கு வருவோர் எவரையும் ஒரு நிமிடம் நிnறு, கவனித்து, கண்டு, மகிழ்ந்து, மற்றவரிடம் செய்தியைp பகிரும் வகையில் உள்ளன.

இத்திட்டம் சுற்றுலாப்பயணிகளுக்கு புதிய ஆழ்கடல் உலகைக் காட்டித் தருகிறது. சிற்ப வடிவங்கள் அமைத்து பவளப்பாறை உயிரினங்களை வளர்க்கும் தனிச்சிறப்பு மிக்க, புதிய சிந்தனையுடன் செயல்படும் இத்திட்டம் சூழல் விழிப்புணர்வை மேம்படுத்தும், பவளப்பாறைகளைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்தும் என்று பிஜி சுற்றுலா வளர்ச்சித்துறை தலைமைச் செயல் அலுவலர் ப்ரண்ட் ஹில் (Brent Hill) கூறுகிறார்.

மரபணு வங்கியின் மூலம் பவளப்பாறை உயிரினங்கள் காப்பாற்றப்படும். இது கடல்சார் சூழல் மண்டலத்தையும் காக்க உதவும். இதன் மூலம் வருங்காலத் தலைமுறையினருக்கு இது குறித்த உணர்வை ஏற்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேற்கோள்https://www.theguardian.com/world/2023/aug/05/fiji-underwater-sculptures-coral-reef-restoration?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It