காடழிப்பானது பல் வகையான உயிரினங்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக மாறி வருவதுடன் நீண்ட காலப்போக்கில் மனித இனத்துக்கு கேடு விளைவிப்பதாக அமையும். இவ் அயன மழைக்காடுகள் அழியும் இடங்களாக பிரேசலின் அமேசன் காடுகள், ஆபிரிக்காவின் கொங்கோ காடுகள், மலகாசி, கெய்ட்டி, பிலிப்பைன்ஸ், இலங்கையில் சசிங்கராஜவனம், சுமாத்திரா, யாவா, பனாமா, நைஜீரியா, இந்தோனேசியா, அமெரிக்காவின் கலிபோர்னியா, காபோன், கிழக்கு அவுஸ்திரேலியா போன்றவற்றில் நடைபெறுகின்றது. காடுகளின் சீரழிவு/தரமிழப்பு என்பது பொதுவாக தாவர போர்வைகளின் இழப்பு என்று கருத முடியாது.

amazon forest

இன்றைய புவி மேற்பரப்பில் 2/5 பங்கு காடுகளினால் மூடப்பட்டுள்ளது. இது மொத்த நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை அடங்கியுள்ள பகுதியிலும் பார்க்க 3.5 மடங்கு அதிகமாகும். உலகளாவிய ரீதியில் சராசரியாக 4499 million ha ஆக காணப்பட்ட காட்டு வளத்தில் அயன மண்டல காடுகள் சராசரியாக 2346million ha ஆக காணப்படுகிறது. இக் காடுகளில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 4 million ha வரை இடைநிலை காடுகளாக மாற்றமடைந்து வரும் அதேவேளை 1945 இன் பின் வளர்முக நாடுகளில் இக்காடழிப்பின் விகிதாசாரங்கள் அதிகரித்து உள்ளதோடு மத்திய அமெரிக்காவில் சராசரியாக 38% காடுகளும் ஆபிரிக்காவில் 24% காடுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. இவ் அயனமண்டல காடழிப்பானது பூகோளத்தில் வருடாந்தம் 6.5 million ha காணப்படுகிறது. இது மொத்த நிலப்பரப்பில் 0.6% ஆகும். இவ்வாறு காடழிப்புகள் அயன வலயப்பகுதிகளில் நடைபெற்று வருகின்றபொழுது தற்பொழுது ஆசிய பிராந்தியத்தில் 25% தென்கிழக்காசியாவிலும் 57% அமெரிக்காவிலும் காணப்படுகிறது. இவ் அயன காடுகளின் சராசரியான அடர்த்தி 1202 million ha ஆகும்.

இவ் அயனமழைகாடுகளின் சீரழிவிற்கான காரணங்கள் என்ற ரீதியில் நாம் பார்க்கின்ற போது பல காரணிகளை குறிப்பிடலாம். அமிலமழைத்தாகத்தினை உற்றுநோக்கும் போது அயனக்காடுகள் பரம்பல் அடைந்துள்ள பகுதிகளில் அமில மழையானது பொழிகின்ற போது அம் மழையின் தாக்கத்திற்கு பசும்போர்வைகள் ஆளாகி கருகி அழிவடைந்து செல்கின்ற நிலை காணப்படுகிறது. குறிப்பாக இந்தோனேசிய காட்டுப்பகுதி, அமேசன் காட்டுப்பகுதிகளில் இதனை அவதானிக்கலாம்.

இயற்கை இடர்களினை பார்க்கும்போது புவி மேற்பரப்பில் நடைபெறுகின்ற அயனச்சூறாவளி, மட்சரிவு,காட்டுத்தீ உள்ளிட்ட இயற்கை இடர்களினால் பசும் போர்வைகள் அழிவிற்கு உட்படுகிறது. குறிப்பாக 2008 அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ, 2011களில் அவுஸ்திரேலியாவில் விடோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ, 2013 களில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்ப்பட்ட காட்டுத்தீ போன்றவற்றினை குறிப்பிடலாம்

அயனச்சூறாவளியினை பார்க்கும்போது புவி மேற்பரப்பில் தாழமுக்க இறக்கம் ஏற்படுகின்ற பகுதிகளினை மையமாக கொண்டு தோற்றம் பெறுகிற அயனசூறாவளிகளினால் சுழிப்பு வலயமானது ஓர் பிரதேசத்தில் பிரசன்னமாகிறது. இதனால் அயன மழைக்காடு தாவரங்கள் அடி வேரோடு பெயர்க்கப்பட்டு அழிவடைகின்றது. குறிப்பாக 2012 களில் ஜனவரி மாதத்தில் அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாநிலத்தை 300km/h வேகத்தில் தாக்கிய யாசி சூறாவளியின் போது பல மரங்கள் அழிக்கப்பட்டன.

மட்சரிவினை அவதானிக்கின்றபோது மலைநாட்டு பகுதிகளில் திணிவுஅசைவு செயன்முறையின் பிரகாரம் தாக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு உயரம் குறைந்த பகுதிகளை நோக்கி அடி வேரோடு மரங்கள் முறிந்து விழுகின்றமையால் காடுகள் அழிப்பு குறிப்பாக இலங்கையில் கடந்த 2014 oct களில் கொஸ்லாந்தை பகுதிகளில் ஏற்பட்ட மட்சரிவு காரணமாக மரங்கள் வீழ்ந்து இடிந்து 9m உட்பகுதி மண்ணினுள் புதையுண்டன.

அதிகரித்து வருகின்ற சனத்தொகையினை பார்க்கின்ற போது வளர்முக நாடுகளில் அதிகரித்த சனத்தொகையினால் குடியிருப்பு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் கைத்தொழில் மையம் போன்றவற்றினை நிர்மாணிப்பதற்கு போதியளவு இடவசதி இன்மையினால் மேற்பரப்பு பசும்போர்வை அழிக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக 2013களின் தரவின்படி இந்தோனேசியாவில் 249 million சனத்தொகையும், பிரேசிலில் 201 million சனத்தொகையும் இலங்கையில் 21.6million சனத்தொகையும் இந்தியாவில் 1.23 billion சனத்தொகையும் சீனாவில் 1.31 billion சனத்தொகையும் காணப்படுமிடத்து உட்கட்டுமானஅபிவிருத்தி செயற்பாடு காரணமாக இங்கு காடுகள் துரிதமாக அழிக்கப்படுகின்றன எனலாம்.

விவசாய ரீதியான செயற்ப்பாடுகளினை அவதானிக்கின்ற போது புவி மேற்பரப்பில் விவசாயரீதியான நடவடிக்கைகள் என்னும் போர்வையில் பெருந்தோட்ட பயிர் உற்பத்திகளினை முன் எடுத்து கொள்வதற்காகவும் அடர்ந்த காடுகள் பற்றைக்காடுகள் காணப்படும் பகுதிகளில் அவற்றை எரித்து சாம்பலினை உழுது மண்ணை பண்படுத்துகின்ற சேனைப்பயிர் செய்கையாலும் பசும் போர்வைகள் அழிக்கப்பட்டு குறித்த பயிர் உற்பத்தி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பெருந்தோட்டப்பயிரான தேயிலை இறப்பர் தெங்கு போன்றனவற்றுக்காக இலங்கை, இந்தியா, சீனா போன்றவற்றிலும் சேனைப்பயிருக்காக இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஆபிரிக்கா, இலங்கை, இந்தியா போன்றவற்றிலும் காடுகள் அழிக்கப்படுகின்றன.

துறைசார்ரீதியான வேலைவாய்ப்புகளுக்காக அயன காடுகளானது வெட்டுமர ஏற்றுமதி, கடுதாசி உற்பத்திக்கான மரத்தூள் சேகரித்தல், காடுபடு திரவியங்களை பெற்று கொள்ளல் போன்ற செயன்முறைகளுக்காக பசும்போர்வை அதிகம் அழிக்கப்படுகிறது. குறிப்பாக தாய்லாந்து, இந்தோனேசியா, கிழக்கு அவுஸ்திரேலியா, இலங்கை போன்றவற்றில் இவ்வாறு நடைபெறுகின்றது.

இதை தவிர மந்தைவளர்ப்பு, எரிபொருள் தேவை, வர்த்தகநோக்கு, நீர்மின்சாரதிட்டம் போன்றவற்றுக்காக இக்காடுகள் இன்றுவரை அழிக்கப்படுகிறது. இதனால் இன்று பல்வேறு சூழல், காலநிலையியல் சார் பிரச்சனைகள் உருவாகின்றது. குறிப்பாக உயிர்ப்பல்வகைமைகள் பாதிக்கப்படல், மண்வளம் இழக்கப்படல், சூழலில் காபநீரோட்சைட் பெறுமானம் அதிகரித்தல், பழங்குடி மக்களின் வதிவிடங்கள் அருகி அழிவடைதல், சூழலியல் சுற்றுலாத்துறை பாதிக்கப்படல் போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன எனலாம். இன்றைய உலகில் காலநிலை மாற்றத்துக்கு ஏதுவான ஒரு பிரதான காரணியாகவும் காணப்படுகிறது எனலாம்.  

- எஸ்.கீர்த்தி, சண்டிலிப்பாய், இலங்கை

Pin It