மே மாதம் இறுதியில் பௌர்ணமி தினத்து அன்று முதுமலை காட்டுப் பகுதியில் உள்ள சிறியூர் கிராமத்தில் இருந்து மாலை நேரத்தில் மசினகுடி நோக்கி காட்டுப்பாதையில், பொலிரோ ஜீப்பில் மெதுவாக வந்து கொண்டிருந்தோம். ஒவ்வொரு திருப்பத்திலும் கவனமாக இருபுறமும் கூர்ந்து கவனித்து கொண்டு, யானை நிற்கிறதா... என்று ஆவலோடு அனைவரும் அமைதியாக கவனித்து கொண்டும், கானகத்தை இரசித்து கொண்டும், இரதம் போல் சென்று கொண்டிருந்த வண்டி ஒரு திருப்பத்தில் திரும்பும் பொழுது, மயக்கும் மாலை வேளையில், இடப்புறம் புல் மேட்டில் அறிக்குருவி ஓன்று எங்கள் கண்களில் பட்டது. நாங்கள் பார்த்த அதே வேளையில் அறிக்குருவியும் தலையை நிமிர்த்தி எங்களை பார்த்தது. வண்டியை நிறுத்தினோம். சில வினாடிகளில் தலையைத் தாழ்த்தி புல்லில் மேயத் தொடங்கியது.

 Pipits என்று பறவை இயலில் அழைக்கப்படும் அறிக்குருவிகள், பெரியது (Larger Pipits), சிறியது (Smaller Pipits), என பதிமூன்று வகைகள் காணப்படுகின்றன. இவற்றில் சில வகைகள் குளிர்காலத்தில் வலசைப் பறவைகளாக வந்து செல்கின்றன. பெரும்பாலும் இமயமலைப் பகுதியில் இருந்தும், வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் இருந்தும் குளிர்காலத்தில் இந்தியா முழுவதும் இடம்பெயர்ந்து பரவலாக காணப்படுகின்றன. மேற்கு மலைத் தொடர்ச்சியில், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வாழக்கூடிய (Endemic) அறிக்குருவி, நீலகிரி அறிக்குருவி, Nilgiri Pipit (Anthus Nilghiriensis) என்று அழைக்கப்படுகிறது. நீலகிரி அறிக்குருவி மேற்கு மலைத் தொடரில் உள்ள நீலகிரி மற்றும் பழனி மலை தொடர்களில் சுமார் 1000 மீட்டர் உயரத்தில் இருந்து  1500 மீட்டர் உயரம் வரை காணப்படுகின்றன. களக்காடு முண்டந்துறை பகுதியிலும் நீலகிரி அறிக்குருவிகள் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 அறிக்குருவிகள் வானம்பாடியைப் போல உடல்வரிகள் தோற்றமளித்தாலும் வானம்பாடி (Lark) குடும்பத்தை சேர்ந்தது அல்ல. அறிக்குருவிகள் வாலாட்டி (Wagtail) குடும்பத்தை சேர்ந்தது. தலை அமைப்பும், கால்களும் வேறுபடுத்திக் காட்டுவதை உற்று கவனித்து அறிந்துக் கொள்ள முடியும். இது சிட்டுக்குருவியை விட சற்று நீண்ட வாலும், நீண்டு மெலிந்த அலகும், உடலின் மேற்பாகம் தவிட்டு நிறத்தில் கருப்புக்கோடுகள் நிறைந்து காணப்படும். தெளிவான தவிட்டு நிற கண் புருவமும், உடலின் மேற்பாகத்தில் இருக்கும். கறுப்பு கோடுகளும் அறிக்குருவிகளை அடையாளம் காண உதவும். அறிக்குருவிகள் மரங்களின் நிழல்களிலும், புல்வெளிகளிலும், இரை மேயும் இடத்தில் அசையாது நின்று விட்டால், கண்களுக்கு புலப்படாது. தொல்லை ஏற்பட்டால் அருகில் உள்ள செடி அல்லது மரங்களின் கிளைகளில் சென்று அமர்ந்து கொள்ளும். நகர்ந்து செல்லும் போதும், இலைக்களுக்கு அடியில் உள்ள சிறு வண்டுகள், பூச்சிகள், விதைகள் போன்றவற்றை இரையாக மேயும் போதும் அதன் நடையும், வரிகள் உள்ள அதன் உடலும், நமது கண்களையும், மனதையும் மயக்கும்.
 
நீலகிரி அறிக்குருவிகள்  மலைப்பகுதிகளில் உள்ள மண் தடத்தில் அல்லது சிறு கற்கள் அடர்ந்த சிறு மண் கட்டிகள் உள்ள ஓரத்தில் தட்டு போன்ற ஆழமில்லாத அழகான கூட்டை கட்டுகின்றன. சில இடங்களில் சிறு புதர் செடிகளுக்கு அடியிலும் அறிக்குருவிகளின் கூட்டை காண முடியும். கூட்டில் இரண்டு அல்லது மூன்று முட்டைகள் வெளிறிய மஞ்சள் நிற முட்டைகள் இருக்கும்.
 மனிதன் கால் படாத காடுகளே இல்லை என்று குறிப்பு ஓன்று உள்ளது. நம் நாட்டில் மனித நடமாட்டம் மட்டும் அல்லாமல் மனித தலையீடும், அட்டகாசம் இல்லாத காடுகளே இல்லை எனலாம். ஒவ்வொரு வருடமும் கோடை காலங்களில் மனிதர்களால் தீ வைக்கப்பட்டு அழிந்து போகும் இயற்கை வளங்களும், அழிந்து போகும் உயிரினங்களின் வாழ்விடங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ள படாத அழிவுகளின் நிலைகள் ஏராளம். விளைவுகள் நம்மை மெல்ல மெல்ல தாக்கி கொண்டு இருப்பது கூட அறியாமல், செய்த தவறையே திரும்ப திரும்ப செய்து கொண்டு இருப்பதும். இதை அறிந்தவர்களும், அரசும் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது இயற்கை ஆர்வலர்களுக்கும், இயற்கை நேயர்களுக்கும் வேதனை அளிப்பதாக உள்ளது.
நீலகிரி அறிக்குருவிகள், புல்வெளிகள், புற்கள் உள்ள சதுப்பு வெளிகள் சார்ந்து வாழும் மலைப்பகுதிகளில் கால்நடைகளின் மேய்சல் நிலமாக மாறி வருவதும் அதன் வாழ்விடங்கள் சேதாரம் ஏற்பட்டு மெல்ல அழிந்து வருவதும், நீலகிரி அறிக்குருவிகள் அழிவை நோக்கி தள்ளப்பட்டு வரும் பாதிக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் தீயினால் காடுகளில் உள்ள புல்வெளிகளும், புதர் செடிகளும், சிறு தாவரங்களும் அதை சார்ந்து வாழும் உயிரினங்களும் அழிந்து வருவதுடன், நீலகிரி அறிக்குருவிகள் வாழ்விடங்கள் குறைந்து, சுருங்கி அதன் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றது. நாங்கள் பார்த்து கொண்டிருந்த அறிக்குருவி தலையை தூக்கி எங்களை பார்ப்பதும், பிறகு இரையை மேய்வதுமாக இருந்தது. அடுத்த முறை நாம் வரும் போது அறிக்குருவியோ அதன் வாழ்விடமான புல்வெளியோ இல்லாமல் இருக்கலாம். மனிதனின் அடுத்த தலைமுறைக்கு நீலகிரி அறிக்குருவி இது தான் என காட்டுவதற்காக ஒளிப்படங்களை எடுத்துக் கொண்டோம்.
பறவைகளை பார்த்து மகிழ்ச்சியோடு நாம் வீடு திரும்புவது போய், துக்கத்தோடு, கவலையோடு காட்டை விட்டு வெளியேறும் நிலை இன்றைக்கு வந்து விட்டது. அரிதான, அழகான பறவைகளை பார்க்கும் போது இனி இதை பார்க்க முடியுமா? என்கிற சந்தேகம் வந்து விட்டது. “பறவைகள் இன்றி மனிதர்கள் வாழ முடியாது” என்று பறவை இயல் அறிஞர் டாக்டர் சலீம் அலி கூறிய கருத்துப்படி நமது அடுத்த தலைமுறை வாழ முடியாத அவல நிலை ஏற்பட்டு கொண்டு இருப்பதை அறிய முடிகிறது. மெல்ல எங்கள் வண்டியை நகர்த்தினோம். வண்டி சத்தத்தில் நீலகிரி அறிக்குருவி விர்ர்ர்...... என்று பறந்து அருகில் உள்ள சிறு மரத்தின் கிளையில் அமர்ந்தது.
Pin It