மனிதன் முதன் முதலாக பயிரிட ஆரம்பித்த ஒரு சில தாவரங்களுள் முதன்மையானது பேரீச்ச மரங்களாகும்.

சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்னதாக மெசபடோமியா பகுதியில் வாழ்ந்த மனிதன் முதலில் இம்மரங்களை பயிரிட ஆரம்பித்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. அகழ்வாராய்ச்சிகளிலும் பாறைப் படிவங்களிலும் பேரீச்சம் மரம், இலை, காய்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
ஆரம்பத்தில் மெசபொட்டேமியா, எகிப்து ஆகிய நாடுகளில் பயிரிடப்பட்டு வந்த பேரீச்சம்பழம் பிற்காலங்களில் தான் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. 1765க்கு பின்னர் தன் அமெரிக்க தீவுகளில் பயிரிடப்பட்டு உள்ளது. ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளாக அரேபிய பாலைவனங்களில் பயிரடப்பட்டு வந்துள்ளது.

பேரீச்ச மரங்கள் மிகவும் பசுமையானவை. மிகக் குறைந்த நீரில் இருந்தாலே உயிர் வாழக் கூடியவை. அதே சமயம் ஒரு ஹெக்டேருக்கு அதிக மகசூல் தரக்கூடிய மரங்களுள் முதன்மையானதும் பேரீச்ச மரங்களேயாகும். ஒரு ஆண்டின் உலக பேரீச்சம்பழ உற்பத்தி சுமார் முப்பது லட்சம் டன் ஆகும்.
 
பேரீச்சம் பழங்கள் மிகவும் சத்தானவை, உடலுக்கு சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிப்பவை. ஒரு கிலோ பேரீச்சம் பழம் சுமார் 3000 கலோரிக்கும் அதிகமான எரிசக்தியை தரக்கூடியது. இது பிற உணவுகளையும் பழங்களையும் விட பல மடங்கு அதிகமானதாகும். இதில் மாவுச்சத்து பல விதமான சர்க்கரை ரகங்களாகக் காணப்படுகிறது. குளூகோஸ் ஃப்ரக்டோஸ்களாக பிரிக்கக் கூடிய மாவுச்சத்துக்கள் அடங்கியுள்ளது. சில ரகங்களில் முழுவதுமே மாவுப்பொருட்கள் உடல் எளிமையாக எடுத்துக் கொள்ளக் கூடிய விதத்தில் கிடைக்கின்றது. இத்தகைய பழங்களை உட்கொள்ளும் பொழுது உடல் அதிக சக்தியை எளிமையாக பெற்றிட முடியும்.

பேரீச்சம்பழத்தில் அதிக அளவில் மெக்னீசியம் காணப்படுகின்றது. (600 மி.கி. 1 கிலோ பேரீச்சம்பழத்தில்) இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. பேரீச்சம்பழத்தை ஒரு நுண்ணூட்டச்சத்து சுரங்கம் என்றே அழைக்கலாம். ஏனெனில் அதில் எண்ணற்ற நுண்ணூட்டச் சத்துக்களும், தாதுப்பொருட்களும் உள்ளது.

நன்கு பழுத்த உலர்ந்த பழங்களை சுத்தம் செய்து விதை நீக்கி உண்பது நல்லது. பழங்களை பாலில் கொதிக்க வைத்து மசித்து உண்ணலாம். பழங்களை இரண்டாக நறுக்கி தேனில் ஊறப்போட்டு வைத்துக் கொண்டு தினசரி இரவு உண்ணலாம். பிற உணவுகளில் இனிப்பு சுவைக்காக பேரீச்சம் பழங்களை அரைத்து கலந்து உபயோகிக்கலாம்.

பேரீச்சம்பழங்களை பெரும்பாலும் திறந்த வெளிகளில் உலர வைப்பதால் அவற்றில் அதிகளவு தூசி படிந்திருக்கும். எனவே அவற்றை நன்கு சுத்தம் செய்து உண்பது மிக அவசியம்.

பேரீச்சம்பழத்தை எரித்து சாம்பலாக ஆக்கி அந்த சாம்பலில் என்ன என்ன உலோகங்கள் தாதுப்பொருட்கள் உள்ளன என கண்டறிந்ததில் கீழ்க்கண்டவை இருப்பது தெரிய வந்துள்ளது.

பொட்டாசியம்-50%, குளோரின்-15%, பாஸ்பரஸ்-8%, கால்சியம்-5%, இரும்பு-0.25%, மெக்னீசியம்-12% சல்பர்-10%.

Pin It