நான் ஒரு குட்டி யானை. நான் எனது கூட்டத்துடன் இந்தியாவில் ஒரு காட்டில் வசிக்கிறேன். சிலநேரங்களில் நாங்கள் காட்டின் விளிம்பில் உள்ள கிராமங்களில் பயிர்களைத் தின்றுவிடுகிறோம். பின்னர் மனிதர்கள் எங்களைப் பதிலுக்குத் தாக்குகிறார்கள், வழக்கமாக இரு தரப்பிலும் சேதம் ஏற்படுகிறது.

எங்களுடைய வாழ்விடங்கள் சுருங்கிக் கொண்டிருக்கின்றன. நாங்கள் பட்டினியின் விளிம்பில் இருக்கிறோம். எங்களது நீர்நிலைகள் விரைவாக மறைந்து வருகின்றன. பலநேரங்களில் எங்களுக்குப் பருகுவதற்கே நீர்  கிடைப்பதில்லை. குளிப்பது பற்றிக் கேட்கவே வேண்டாம். காட்டிலிருந்து வெளியே வந்தால் நாங்கள் கொல்ல‌ப்படும் அபாயம் இருக்கிறது. நாங்கள் 'கொடிய’, ‘அபாயகரமான' விலங்குகள் என்று அவர்கள் கூறுகிறார்கள். என்ன முட்டாள்தனம்! சில மனிதர்கள் செய்வதைப்போல நாங்கள் பிற விலங்குகளை உண்பதில்லை.

elephant_300இதைவிட மோசமான விசயம் வேட்டைக்காரர்கள்தான். நான் பெரியவன் ஆனதும் எனக்குப் பெரிய தந்தங்கள் வளர்ந்துவிடும் என்றும் அப்போது நான் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்றும் என் அம்மா கூறுகிறார். நான் கொல்ல‌ப்படாவிட்டாலும் சிறை பிடிக்கப்படக் கூடும். சர்க்கஸ் அல்லது விலங்குக் காட்சி சாலைக்கு நான் கொண்டு செல்லப்படலாம். அல்லது மரங்களைச் சுமக்கவோ கோயில் திருவிழாக்காலங்களில் பங்கேற்பதற்கோ வேலையில் அமர்த்தப்படலாம்.

ஒரு யானை காட்டில் சுதந்திரமாக வாழ்ந்தால் 60 ஆண்டுகள் வாழ்கிறது. சிறைபிடிக்கப்பட்டால் எண்பது ஆண்டுகள் வாழ்கிறது என்று மனிதர்கள் கூறுகிறார்கள். ஆனால் பாதிக்கும் மேற்பட்ட யானைகள் 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிடுகின்றன. ஐந்தில் ஒரு யானை மட்டும் தான் 30 வயதைக் கடக்கிறது. காடு உண்மையிலேயே ஒரு அபாயகரமான இடம் தான்.

மனிதர்களே தங்கள் இயற்கையான வாழ்விடத்தில் இப்போது வாழ்வதில்லை. இந்தப் புவிக்கோளத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி மனிதன் தனக்கு நன்மை செய்து கொள்கிறான். அப்படியானால் யானைகள் காட்டை விட்டு வெளிய வந்து மனிதர்களுடன் ஏன் வசிக்கக் கூடாது. மனிதன் தான் பூமியில் சிறப்பாக வழங்கக் கூடியவன் அல்லவா?அவன் நிச்சயமாக அவனது நாய்களுக்கும், பூனைகளுக்கும், குதிரைகளுக்கும், பன்றிகளுக்கும் ஆடுகளுக்கும் கோழிகளுக்கும் வழங்குவது போல உணவும் இருப்பிடமும் வழங்கிக் கொடிய காட்டிலிருந்து எங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவான்.

                                2

அவன் அவற்றில் சிலவற்றைத் தின்று விடுகிறான் என்று எனக்குத் தெரியும். ஆனால் அனைத்தையும் தின்று விடுவதில்லையே. நான் நல்ல உழைப்பாளி. எனவே என்னைக் கொல்லமாட்டான் என்று எனக்கு உறுதியாகத் தெரியும். அவனுக்குத் தந்தங்கள் தருவேன். எனது வாளின் முடியைக் கொண்டு அவன் கைவளையமும் மோதிரமும் செய்து அணிந்து கொள்ளலாம். இருந்தாலும் என்னுடைய வால் மிகவும் குட்டை தான். எந்த வகையிலாவது அது நடைமுறையில் உதவுமா என்று எனக்குத் தெரியவில்லை.

இந்தியாவில் கி.மு.3500 ஆண்டுகளுக்கு முன்பே சிறைபிடிக்கப்பட்ட யானைகள் இருந்திருக்கின்றன. எங்களுடைய முன்னோர்களான சடை யானைகளும் ராட்சத யானைகளும் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பூமியை வலம் வந்திருக்கிறார்கள். பின்னர் அவர்கள் 1300 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து விட்டார்கள்.

நாங்களும் அழிவின் விளிம்பில் இருக்கிறோம். 1970ல் உலகில் 1.5 மில்லியன்  காட்டு யானைகள் இருந்தன. இருபதாண்டுகளில் அவை 6,40,000 ஆகக் குறைந்து விட்டன. இந்தியாவில் இப்பொழுது 30,000 யானைகள் மட்டுமே இருக்கின்றன. மிக மூத்த யானை இதை என்னிடம் கூறியது.

கடந்த 100 ஆண்டுகளில் 65 பாலூட்டி இனங்கள் அழிந்து போயுள்ளன. ஆசிய சிங்கங்களுக்கு என்ன நடந்தது என்று பாருங்கள். காட்டின் ‘அரசன்’ என்றழைக்கப்படும் சிங்கம் இன்று குஜராத் கீர் சரணாலயத்தில் அடைபட்டுவிட்டது. பிற அனைத்து இடங்களிலும் மறைந்து விட்டது. 2010 ஏப்ரலில் அந்தக் காப்பகத்தில் 411  சிங்கங்கள் மட்டுமே இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகில் 1,00,000 புலிகள் இருந்தன. இந்தியாவில் மட்டும் 40,000 புலிகள் இருந்தன. இன்று உலகில் 6020 புலிகள் மட்டுமே உள்ளன. இந்தியாவில் 1409  மட்டுமே உள்ளன. விரைவிலேயே புலிகள் இனம் அழிந்துவிடும். எங்கள் நிலை தேவலாம். ஆனாலும் நாங்களும் கவலையடைந்து தான் இருக்கிறோம்.

மனிதனோடு சேர்ந்து வாழக் கற்றுக்கொண்ட பறவைகளும் விலங்குகளும் பிழைத்திருக்கின்றன என்பதை வரலாறு காட்டுகிறது. மனிதர்களோடு சேர்ந்து வாழக் கற்றுக்கொள்வது நிச்சயமாக அறிவுடைமை தான்! நாய்களையும் பூனைகளையும் காண எனக்குப் பொறாமையாக இருக்கிறது. அவர்கள் அச்சம் கொள்ள எதுவும் இல்லை. வேலையும் செய்யவேண்டியதில்லை. உண்பதற்கு நிறையக் கிடைக்கிறது. ஏராளமான வசதிகள். ஒரு யானையால் இதை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.

                                  3

யானைகளாகிய எங்களுக்கு நிறைய உணவு தேவை. நாங்கள் கண்டிப்பான தாவர உண்ணிகள். இந்தப் புவிக்கோள் ஏற்கனவே 630 கோடி மனிதர்களுக்கு உணவளிக்க வேண்டியுள்ளது. இன்னும் ஏராளமான உயிரினங்களுக்கு உணவளிக்க வேண்டும். நாங்கள் உயிர் வாழ்வதற்கு என்ன வாய்ப்புக்கள் இருக்கின்றன? நாங்கள் புதிய வாழ்விடத்தைத் தேடியாக வேண்டும். மனிதர்கள் மட்டும் எங்களைப் பராமரிக்கும் பொறுப்பையும் உணவுக்காக அலையும் துன்பத்திலிருந்து பாதுகாக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வார்களானால் எனக்கு வேலை செய்வதில் மறுப்பேதுமில்லை. யானைகள் வேலை செய்தால் என்ன தவறு? மனிதர்கள் வேலை செய்வதில்லையா?

நான் சிறை பிடிக்கப்படுவதை வெறுக்கிறேன். ஆனாலும் யானைப் பாகர்கள் மட்டும் இன்னும் சிறிது மனிதாபிமானத்தோடு நடந்து கொள்வார்களானால், பின்னர் மனிதர்களோடு எங்களது வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். பிறகு நாங்கள் பயிர்களை அழிக்க மாட்டோம்; மனிதர்களைத் தாக்க மாட்டோம் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.         

நன்றி: தி இந்து நாளிதழ்
26.12.2010.

புஷ்பா குருப் 
தமிழில்: வெண்மணி அரிநரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It