சென்னை அரசுப் பொதுமருத்துவமனைக்கு இராசீவ் காந்தி பெயரை வைக்கப் போவதாக தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி சட்டப்பேரவையில் அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.

இராசீவ்காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படை ஆறாயிரம் ஈழத்தமிழர்களைக் கொன்றது. ஆண்கள் - பெண்கள் - குழந்தைகள் என அனைத்துப் பிரிவினரும் கொல்லப்பட்டனர். அத்துடன் ஈழத்தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார்கள். வீடுகள் எரிக்கப்பட்டன. இவை அனைத்தும் சான்றுகளுடனும் புகைப்படங்களுடனும் பல நூல்களாக வந்துள்ளன. 

   இலங்கையிலிருந்து திரும்பி சென்னைக்கு வந்த இந்திய அமைதிப்படையினரை வரவேற்க மறுத்த அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி, “என் தமிழ்ச்சாதி மக்களை அழித்துவிட்டு வரும் இராணுவத்தை நான் வரவேற்கப் போகவில்லை” என்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்,

இராசீவ் காந்தியின் அதே பாதையில் அவர் மனைவி சோனியா காந்தி, இலங்கை அரசுக்கு இராணுவ உதவி, நிதியுதவி, உலக அரங்கில் அரசியல் உதவி என அனைத்தும் அளித்து 2009 இல் ஈழத்தமிழர்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்படுவதற்குத் துணை நின்றார்

      சிங்களக் கடற்படை தமிழீழ மீனவர்களைச் சுட்டுக் கொல்வதும் அடித்துக் கொல்வதும் தொடர்கிறது. 13.1.2011இல் கூட ஜெகதாபட்டினம் மீனவர் பாண்டியனை சிங்களக் கப்பற்படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்

இத்தனை தமிழின அழிப்புக்கும் பாராட்டுத் தெரிவித்து சிறப்பு விருது அளிப்பது போல் இராசீவ் காந்தியின் பெயரை வரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்கு சூட்ட விரும்புகிறார் கருணாநிதி.

குண்டடிபட்ட இராசீவின் உடல் சிறிது நேரம் அந்த மருத்துவமனையில் இருந்ததற்காக அவர் பெயரை வைப்பதாக முதல்வர் கருணாநிதி கூறுகிறார். அதே மருத்துவமனையில் பெரியார், கக்கன் முதலிய தமிழகத்தின் மிக முக்கியமான தலைவர்கள் பலர் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பெயரை இந்த மருத்துவனைக்கு வைக்காமல் இராசீவ் காந்தி பெயரை வைத்தது இனத்துரோகம் ஆகும். 

     கூட்டணியில் நீடிப்பதாக காங்கிரசு உறுதி கொடுத்ததற்கு நன்றிக்கடன் பட்டிருந்தால் தி.மு.க. தனது அண்ணா அறிவாலயத்தின் ஒரு பகுதிக்கோ அல்லது தனது கட்சியின் வேறொரு நிறுவனத்திற்கோ இராசீவ் காந்தி பெயரை வைக்கலாம். தனது பதவிக் கூட்டணிக்காக தமிழக அரசின் தலைமை மருத்துவமனைக்கு அவர் பெயரை வைக்கக் கூடாது.

1996 இல் ஆட்சிக்கு வந்தபோதும் கருணாநிதி இதே போல் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரசுக் கூட்டணிக்காக தமிழினத் துரோகி முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்திற்கு நினைவு மண்டபம் நிறுவினார். 1965இல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் 300 பேர்க்கு மேற்பட்ட தமிழக மாணவர்களையும் பொதுமக்களையும் சுட்டுக் கொல்ல ஆணையிட்டவர் பக்தவத்சலம். இந்தித்திணிப்பை எதிர்த்துத் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்த தியாகிகளைக் கொச்சைப்படுத்தி, வயிற்று வலி தாங்காமல், கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று கேலி பேசியவர் பக்தவத்சலம்.

அப்படிப்பட்ட பக்தவத்சலத்திற்கு சென்னையில் நினைவு மண்டபம் நிறுவிய கருணாநிதி 1965 மொழிப் போர் ஈகிகளுக்கு அந்தந்த ஊர்களில் நினைவு மண்டபங்களோ சிலைகளோ அமைக்கவில்லை. 

 எனவே சென்னைப் பொது மருத்துவனைக்கு இராசீவ் காந்தி பெயரை வைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று தமிழக முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.

Pin It