அன்டோன் வொன் லியுவென்ஹோக் (Anton Von Leeuwen hock), (1623-1723) என்ற டச்சு அறிவியலார் நுண்நோக்காடியால் (microscope) பல சோதனைகள் செய்து கூர்நோக்கியில் நுண்ணுயிரிகளையும் பிற நுண்மங்களையும் (microbes) முதன் முதலாகக் கண்டறிந்தார். அறிவியலை அவர் முறையாகக் கற்றவரல்லர். ஆம்ஸ்டர்டாமில் துணி வாணிகத் தொழிலில் முதலில் ஓர் எழுத்தராகப் பணியாற்றினார். பிறகு தன் சொந்த ஊரான டெல்வ்ட் (Delft) டில் சொந்தமாக வாணிகம் புரிந்தார். அங்கே தன் பெரும்பாலான நேரத்தைப் பூதக்கண்ணாடி கொண்டு சோதனைகள் செய்வதிலும் கழித்தார். அப்போது நானூறு வளைக் கண்ணாடிகளுக்கு (lens) மேல் தேய்த்து ஒரு லென்ஸ் கொண்ட உயர்ந்த நுண்ணோக்காடிகள் உற்பத்தி செய்தார்.

அவர் கண்டுபிடித்த நுண்ணோக்காடி மூலமாக 'நுண் விலங்குகளின்' (tiny animals)) புதிய உலகம் கண்டார். மணல் மணிகளின் நிறை குவியலைப் போன்ற நுண்ணுயிர்த் தொகுதிகளை நூற்றுக்கணக்கில் கணக்கிட்டு மதிப்பிட்டார். "நான் நாள் தோறும் உப்பைக் (Salt) கொண்டு வாய்த்தூய்மை செய்கிறேன். இருப்பினும் நெதர்லண்டில் வாழும் மக்கள் தொகையை விட மிகுதியான உயிர்வாழ் விலங்குகளை நான் என் வாயில் சுமக்கிறேன். அது எப்படி முடியும்" என அவர் கேட்டு எழுதியுள்ளார். இலண்டனிலுள்ள ராயல் சொசைட்டிக்கு (Royal Society in London)1673 ஆண்டு முதல் அவர் தன் நுண்ணோக்காடியின் கூர் நோக்கியில் தொடர்ந்து கண்ட முடிவுகளை அனுப்பத் தொடங்கினார்.

லியுவென்ஹோக் சிறு வடிவங்கள் கொண்ட விலங்குகளின் வாழ்க்கையைக் குறிப்பாக ஆய்வு செய்தார். அந்துப்பூச்சி (Weevils), தெள்ளுப்பூச்சி (fleas), பேன் (lice) ஆகியவை தாமாகவே உற்பத்தியானவை அல்ல என்றும் குப்பையில் உற்பத்தியாகுபவை அல்ல என்றும் கண்டறிந்து இதுவரை எண்ணிவந்த இதற்கு எதிரான கருத்துகள் பிழையானவை என்றும் அவரால் காட்ட முடிந்தது. எறும்புகளை (ants) ஆய்ந்து அவற்றின் முட்டைகள் என இதுவரை நினைக்கப்பட்டு வந்ததை கிரைஸலிசஸ் (Chrysalises) என அழைக்கப்படும் முழுமையான பூச்சிகள் அவை என நிறுவினார். ஒரு காலத்தில் நினைத்தது போலச் சிப்பிகள் (mussels) மணலில் உருவானவை யல்ல என்றும் விலங்குமீன் அல்லது மலங்கு (eels) பனித்துளியால் (dew) ஆக்கப்படுவதில்லை என்றும் செய்முறை விளக்கம் காட்டி அந்நினைப்புகளைப் பொய்யாக்கினார்.

இருப்பினும் அவருடைய பணிகள் மருத்துவச் சிந்தனையில் உடனடிப் பயனை விளைவிக்கவில்லை. பல ஆண்டுகள் மக்கள் நுண்ணுயிர்கள் தாமாகவே உற்பத்தியாகின்றன என்றே நினைத்து வந்தனர். அறிவியலாளர்கள் கூட நீண்டகாலம் சிறு நுண்ணுயிரினம் தம்முள் இனப்பெருக்கம் செய்து கொள்பவை என்பதை ஏற்கத் தயங்கி வந்ததுண்டு.

 (உடலும் மருந்தும் நூலிலிருந்து)

Pin It