இன்றைக்கு அறிவியலாளர்கள் சிரமப்பட்டு, கண்டு பிடிக்கும் பல உண்மைகளை நமது சனாதன மதப் பெரியவர்கள் தங்களுடைய தொலைநோக்குக் கூர்ந்த அறிவுத் திறத்தால் அறிந்து கொண்டிருந்தார்கள். அவற்றை மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்தும் பொருட்டு பல எளிய நடைமுறைகளை வழக்கத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவ்வழக்கத்தைப் பின்பற்றுவோர்கள் இன்றும் நன்மைகளைத் துய்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? மேலைநாட்டு அறிவியலாளர்கள் இந்து மதப் பழக்க வழக்கங்களை ஆராயும் போது, அறிவியல் வளராத அந்தக் காலத்திலேயே இப்படியொரு நுணுக்கமான நடைமுறைகளை வழக்கத்திற்குக் கொண்டு வந்த நமது முன்னோர்களின் மேதைமையை அறிந்து திகைத்துப் போகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

          இதற்கு எடுத்துக் காட்டாக ஒன்றைப் பார்ப்போம். மார்கழி மாதம் அதிகாலையில் 6 மணிக்கு முன்னால் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்ற வழக்கம் அறிவியல் அடிப்படையில் நன்மை பயக்கும் பழக்கமாகும். மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரையில் காற்று மண்டலத்தில் ஓசோன் மிக அதிகமாகக் கிடைக்கிறது. ஓசோன் என்பது உயிர்வளியின் (ஆக்ஸிஜன்) மூன்று அணுக்கள் சோர்ந்து அமைந்த காற்றாகும். சாதாரணமாக காற்று மண்டலத்தில் உயிர்வளியின் இரண்டு அணுக்களால் ஆன உயிர்வளி தான் இருக்கும். இந்த மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரைக்கும் மட்டும் தான் உயிர்வளியின் மூன்று அணுக்கள் கொண்ட ஓசோன் கணிசமான அளவில் இருக்கும். இந்த ஓசோனுக்கு வீரியம் அதிகம். இதைச் சுவாசிப்பதால் நம் உடலில் உள்ள இரத்தம் விரைவாகச் சுத்தம் அடைகிறது. நரம்பு மண்டலத்தைத் துடிப்பாக வைத்துக் கொள்வதன் மூலம் நினைவாற்றல் பெருகுகிறது.

          இவ்வாறு நன்மை பயக்கும் ஓசோனைச் சுவாசிப்பதற்கு நாம் வெளியில் செல்ல வேண்டும். இவ்வளவு அதிகாலையில் வெறுமனே ஒரு மனிதனை வெளியே சென்று ஓசோன் நிறைந்த காற்றைச் சுவாசிக்கச் சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் எத்தனை பேர் கேட்பார்கள்? அதற்குப் பதிலாக மார்கழி மாதம் அதிகாலை 6 மணிக்கு முன்னால் கோயிலுக்குப் போகும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால், மக்கள் அனைவரும் ஓசோனைச் சுவாசித்து உடல் நலம் சிறந்து, நினைவாற்றல் பெருகி  நன்மை அடைவாரகள். ஆகவேதான் மார்கழி மாதம் அதிகாலையில் கோயிலுக்குப் போக வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

          இன்றைய அறிவியலாளர்கள் இது போன்று நம் இந்து மதப் பழக்க வழக்கங்களில் பொதிந்துள்ள அறிவியல் அம்சங்களை அறிந்து திகைத்துப் போகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்து மதத்தை அறிவியல் மதம் என்று பாராட்டுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

          மேற்கண்ட விளக்கங்களைப் பெறுவதற்கு நீங்கள் பெரிய மதாச்சாரியரையோ மதப் பிரச்சாரகரையோ நாட வேண்டியதில்லை. இந்து மதத்திலுள்ள 80 சதவிகிதத்தினருக்கும் அதிகமானோர் இவ்விளக்கங்களைச் சரளமாகத் தருகின்றனர். இந்துக்கள் மட்டுமல்ல; இப்பொழுது கிருத்துவர்களும் இவ்விளக்கங்களைத் தர ஆரம்பித்து விட்டனர். மார்கழி மாதம் அதிகாலையில் சென்ற கிருத்துவ பஜனைக் குழுவினரிடம் விசாரித்த போது ஓசோனின் அருமை பெருமைகளைப் பற்றி விரிவாக விளக்கினார்கள். ஓசோனினால் கிடைக்கும் நன்மைகளைப் பங்கு போட கிருத்துவர்களும் போட்டிக்கு வந்து விட்டார்கள்.

          ஆனால் உண்மை என்னவென்று தெரியுமா? ஓசோன் என்பது ஒரு நச்சு வாயு. அது மனிதனின் சுவாச அமைப்பைப் பாழ்படுத்தும். மனிதனை மட்டுமல்ல, அது விலங்குகளுக்கும் தீங்கானது. விலங்குகளுக்கு மட்டுமல்ல, தாவரங்களுக்கும் தீங்னானது. தாவரங்களுக்கு மட்டுமல்ல, ஜடப் பொருட்களான ரப்பர், துணிவகைகள் ஆகியவற்றிற்கும் தீங்கானது. அது எப்படி எந்த அளவிற்குத் தீங்கானது என்பது ஆர்.டி.ராஸ் (R.D.Ross) என்பவர் தொகுத்து Van Nostrand Reinhold Company (New york / Cincinati / Toranto / London / Melbourne) வெளியிட்டிருக்கும் Air Pollution and Industries (தொழிற்சாலைகளும் காற்று மாசு படுதலும்) என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நூலில் உள்ள சில விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

 மனிதனுக்குக் கேடு

          1.காற்றில் ஐந்து கோடியில் ஒரு பங்கு என்ற அளவில் ஓசோன் இருந்தால் மூச்சு திணறத் தொடங்கும்.

          2. காற்றில் ஒரு கோடியில் மூன்று பங்கு என்ற அளவில் ஓசோன் இருந்தால் மூச்சுக் குழாயில் வலி எடுக்கும்; களைப்பு ஏற்படும்; தலைவலி உண்டாகும்.

          3. காற்றில் பத்து லட்சத்தில ஒரு பங்கு என்ற அளவில் ஓசோன் இருந்தால் சிலர் மரணமே கூட அடைந்து விடுவார்கள்.

          4. பொதுவாக ஓசோனைச் சுவாசித்தால் முதுமைத் தன்மை விரைவாக ஏற்படும். (பக்கம் 242)

விலங்குகளுக்குக் கேடு

          மனிதனுக்கு ஏற்படும் கேடுகள் அனைத்தும் விலங்குகளுக்கும் பொருந்தும். (பக்கம் 44)

தாவரங்களுக்குக் கேடு

          காற்றில் பத்து கோடியில் மூன்று பங்கு ஓசோன் இருந்தால் இலைகள் பழுப்படையும். இலை நரம்புகள் வலுவிழக்கும். (பக்கம் 44,46,49)

ஜடப் பொருட்களுக்கும் கேடு

          காற்றில் பத்து கோடியில் ஒரு பங்கு ஓசோன் இருந்தால் ரப்பரின் மேற்பகுதியில் வெடிப்பு ஏற்படும். நூல் மற்றும் துணிகள் நைந்து விடும். (பக்கம் 25)

           இவ்வளவு கேடுகளை விளைவிக்கும் ஓசோன் காற்றில் நிறைய இருப்பதாகவும் அது உடல் நலனுக்கு நல்லது என்றும் எப்படி கதை கட்டினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

          அறிவியலும் மதங்களும் என்றைக்குமே எதிரிகள் தான். அறிவியல் உணமையை மேலும் மேலும் ஆராயும். அது கசப்பாக இருந்தாலும் தொடர்ந்து பயணிக்கும். மதங்களோ மூட நம்பிக்கைகளை வளர்க்கத்தான் பாடுபடும். அறிவியல் மூட நம்பிக்கைகளை அடித்து நொறுக்கி முன்னேறிவிட்டால், அதுவரைக்கும் ஏற்பட்டு இருக்கும் வளர்ச்சிகளுக்கு மதச் சாயம் பூசி உள்வாங்கிக் கொள்ளும். வரலாறு முழுவதும் இப்படித் தான் நடந்திருக்கிறது.

          ஓசோன் கதை என்னவென்றால், அது மூன்று அணுக்கள கொண்ட உயிர்வளி; வீரியம் மிக்கது என்று படித்தவுடன், ஏமாற்றுக் கலையைத் தவிர வேறு எதையுமே ஆராய விரும்பாத, வேறு எதிலுமே நிபுணத்துவம் பெற விரும்பாத மதவாதிகள் அது உடல் நலுனுக்கு நல்லது என்று தாங்களாகவே முடிவு கட்டி விட்டாரகள். அதை எந்த இடத்தில் மத உரிமை கோருவது என்று தீவிரமாக யோசித்தார்கள். அவர்களுடைய கண்களில் மார்கழி மாத அதிகாலை பளிச்சென்று தென்பட்டது.உடனே மார்கழி மாத அதிகாலையில் ஓசோன் இருக்கிறது; அதைச் சுவாசித்தால் உடலுக்கு நல்லது என்று கதை கட்டி விட்டார்கள். மத நிறுவனர்களின் (முட்டாள்களின்) மேதாவிலாசத்தை மதப் பிரச்சாரகர்கள் (அயோக்கியர்கள்) மதத்தை ஏற்றுக் கொள்பவர்களிடம் (காட்டுமிராண்டிகளிடம்) சொல்லிச் சொல்லிப் பூரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

          இன்று மிகப் பலர் மார்கழி மாத அதிகாலையில் கோயிலுக்குப் போவது காற்றில் கிடைக்கும் ஓசோனைச் சுவாசிக்கத் தான் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்கள். ஆனால் உண்மை இதற்கு நேர் எதிரிடையானது. மார்கழி மாதம் மட்டுமல்ல; எந்த மாதத்திலும் காற்றில் ஓசோன் இருப்பதில்லை. இது மதவாதிகளின் கட்டுக் கதையே.

          இது போல் மதம் அறிவியலைச் சார்ந்து இருக்கிறது என்றும் மதம் அறிவியலை விட மேம்பட்டது என்றும் கூறும் அனைத்து விவரங்களும் அயோக்கியத்தனமான பொய்களே. ஓசோன் விஷயத்தில் மிக எளிதாக விளக்க முடிகிறது. மற்ற விஷயங்களிலும் ஆழமாக ஆராய்ந்தால் மதவாதிகள் செய்யும் புரட்டு தெளிவாகத் தெரியும்.

          அது சரி! மதவாதிகள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? மக்கள் மதிமயக்கத்தில் இருக்கும் வரையில் தான் சுரண்டல் கொள்ளையை நடத்த முடியும். மக்கள் தெளிவு பெற்றால் சுரண்டும் வர்க்கத்திற்கு ஆபத்து. மதங்கள் எப்பொழுதுமே சுரண்டும் வர்க்கத்திற்குத்தான் துணையாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சுரண்டும் வர்க்கத்தினர் உழைக்கும் வர்க்கத்தை அடக்கி ஆள்வதற்கு இராணுவத்தையும் காவல் துறையையும் விட மதவாதிகளையே அதிகம் சார்ந்துள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனால் தான் மதவாதிகள் மக்களை மயக்க விதவிதமான புரட்டுகள் செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் நீங்கள் உறுதியாக இருந்தால் மதவாதிகள் உங்களுடன் கணக்கு தீர்த்துக் கொள்வார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

- இராமியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It