அச்சுறுத்தும் காலநிலை மாற்றம் விரைவில் ஏராளமான மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வெப்பப் பேரிடரை உருவாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வரும் நிலையில் ஆட்சியாளர்கள் இதை சமாளிக்க உடனடியாக செயல்பட, வெப்பத்தாக்குதல் முன்னெச்சரிக்கைகள் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கம் (The International Federation of Red Cross and Red Crescent Societies (IFRC) யு.எஸ். பன்னாட்டு வளர்ச்சி உதவி முகமைடன் (the United States Agency for International Development (USAid) இணைந்து இது பற்றிய உலகின் முதல் உச்சிமாநாட்டை அண்மையில் நடத்தியது.

இந்த நிகழ்நிலை மாநாட்டில் இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ள வெப்பத்தை குறைக்க மரம் நடுதல், உட்புற வெப்பநிலையை குறைக்க பிரதிபலிப்பு மேற்கூரைகளை அமைத்தல் போன்ற திட்டங்கள் விவாதிக்கப்பட்டன. 2023ல் உச்சபட்ச வெப்ப உயர்வுக்குப் பிறகு உலக மக்கட்தொகையில் பாதி பேர் அதாவது 3.8 பில்லியன் மக்கள் ஆண்டில் ஒரு நாளேனும் உயிரும் உடலும் நொறுங்கும் அளவுக்கு நிலவிய கொதிக்கும் வெப்பநிலையை அனுபவித்தனர். ஹரிக்கேன், சுனாமி, நிலநடுக்கம் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது நிசப்த கொலையாளி என்று வர்ணிக்கப்படும் இந்தப் பேரிடர் உரிய முக்கியத்துவத்தைப் பெறவில்லை.

கற்பனைக் கதையும் கண்ணெதிரில் நடப்பதும்

இதில் அரசாங்கங்கள், உள்ளூர் நிர்வாகங்கள், மனிதாபிமான குழுக்கள், நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் உயர் வெப்பத்தை சமாளிக்க உதவும் வழிகள் பற்றி பேசப்பட்டது. புயல்களுக்குப் பெயரிடுவது போல வெப்ப அலை வீச்சுகளை பிரபலப்படுத்த அவற்றிற்கும் பெயரிடும் முறையை கொண்டு வருவது பற்றி விவாதிக்கப்பட்டது.extreme heat in somalia“மில்லியன்கணக்கான இந்திய மக்களைக் கொன்ற வெப்பத்தாக்குதல் பற்றிய காட்சியுடன் தொடங்கும் கிம் ஸ்டான்லி ராபின்சனின் (Kim Stanley Robinson) வருங்கால அமைச்சரகம் (Ministry for the Future) என்ற அறிவியல் புனை நாவலில் கற்பனையாக கூறியுள்ளது. இதுபோல உண்மையில் இன்னும் பேரழிவு எதுவும் நடக்கவில்லை” என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இயக்குனர் ஜெனரல் ஜாகன் சாப்பகயின் (Jagan Chapagain) கூறுகிறார்.

மற்ற பேரிடர்களை விட வெளிப்படையாக கண்களால் பார்க்க முடியாத வெப்பத்தாக்குதல் மனித வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் திருடிச் செல்கிறது. இந்தப் பேரிடரால் மனித குலத்தின் கூட்ட மரணம் விரைவில் நிகழும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். பல உலக நாடுகளில் வெப்பம் மக்களின் துயரங்களுக்கு ஒரு முக்கிய காரணமாகிறது. அமெரிக்காவில் மற்ற பேரிடர்களால் ஏற்படும் உயிரிழப்புகளை விட இதனால் ஏற்படும் மரணங்கள் அதிகமாக உள்ளன.

ஆனால் இது திடீரென்று, மற்ற இடர்களைவிட மெதுவாக நிகழ்வதால் நம் புறக் கண்களால் இதன் தாக்கத்தை சுலபமாகப் பார்த்து உணர முடிவதில்லை. இதனால் இதன் தாக்கம் பற்றிய செய்திகள் மிகக் குறைவாகவே வெளிவருகின்றன. புயல்கள் போன்றவற்றால் ஏற்படும் இழப்புகள் போல் இல்லாமல் இதனால் ஏற்படும் இழப்புகளைக் கண்டறிய பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் ஆகிறது. நாற்பதாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட செஞ்சிலுவை சங்கத்தின் ரேடார் வரலாற்றில் இப்பேரிடர் செய்திகள் இப்போது அதிகமாக வருகின்றன.

வெப்ப அலையை சமாளிக்க 2018ல் முதல்முறையாக வட கொரியா, 2021ல் வியட்நாம், 2022ல் கிஜிக்ஸ்தான், தஜிக்கிஸ்தான், 2023ல் கிரீஸ், பங்களாதேஷ் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் நிதியுதவி கோரி அவசர அழைப்பு விடுத்தன. இந்த காலகட்டத்தில் வெப்ப அலைக்கான நிதியுதவியின் அளவு நான்கு மடங்கு உயர்ந்தது. புயல், நிலநடுக்கம் போன்ற பேரிடர்களுக்கு வழங்கப்படும் நிதியுடன் ஒப்பிடும்போது இந்த உதவி மிகக் குறைவே.

உயர் வெப்பத்தை சமாளிக்கும் உலகின் முன் மாதிரி நகரம்

இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் 2 டிகிரி வெப்பநிலை உயரும்போது ஏற்படும் உயிரிழப்புகள் நான்கு மடங்கு அதிகரிக்கும் என்று லேன்சட் (Lancet) என்ற பிரபல மருத்துவ ஆய்வு இதழ் கணித்துள்ளது. சீனாவில் ஆண்டிற்கு 20000 முதல் 80,000 வரை வெப்ப அலைகள் உருவாகும் என்று மற்றொரு புள்ளிவிவரம் கூறுகிறது. வெப்ப அலை பற்றிய தரவுகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. பல்வேறு வழிகளில் வெவ்வேறான தர நிர்ணய முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை துண்டுதுண்டான தரவு செய்திகளாக சேகரிக்கப்படுகின்றன. இதை மேம்படுத்துவதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கம்.

வெப்ப அலைவீச்சுகளால் 2023ல் பிரான்சில் 5,000, ஜெர்மனியில் 3,000, இங்கிலாந்தில் 2,295 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த நாடுகளில் மக்கட்தொகை குறைவு. மிகச் சிறந்த சுகாதாரத் துறை செயல்பாடுகள் இங்கு உள்ளன. இதே காலகட்டத்தில் இந்தியாவில் 179, பாகிஸ்தானில் 22, மலேசியா மற்றும் தாய்லாந்தில் இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர். குழப்பமும் குளறுபடிகளும் நிறைந்த அணுகுமுறையால் முரண்பாடான விவரங்கள் வெளியிடப்படுவதே இதற்குக் காரணம்.

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குகள்படி 1998-2017 காலத்தில் 166,000 உயிரிழப்புகள் சம்பவித்துள்ளது. வெப்ப தாக்குதலால் உலக மக்கத்தொகையில் 10% மட்டுமே உள்ள, ஆசியாவை ஒப்பிடும்போது குறைவான வெப்பநிலையுடைய ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தவர்களே மரணமடைந்தவர்களில் பாதி பேர். மிக பலவீனமான, எளிதில் பாதிக்கப்படக்கூடிய முதியோர், நோயாளிகள், திறந்தவெளியில் வேலை செய்யும் மக்கள் காற்றோட்ட வசதியில்லாத இடங்களில் வாழ்கின்றனர். இவர்கள் ஏழை நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

சியாரோ லியோன் நாட்டில் உள்ள ஃப்ரீ டவுன் நகரம் வெப்ப அலையை சமாளிப்பதில் உலகிற்கு முன் மாதிரியாக உள்ளது. இம்மாநாட்டில் பேசிய அந்நகரின் மேயர் இவானா-கிசாயேர் (Yvonne Aki-Sawyerr) வெப்ப அலை மேலாளரை (heat officer) நியமித்துள்ளார்.

இந்த நகரத்தில் அதிக பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய இடங்களை அடையாளம் காணுதல், வெப்ப அலை தாக்குதல் பற்றிய முன்னெச்சரிக்கை செய்திகளை வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் அனுப்புதல், திறந்தவெளி சந்தைகளில் நிழற்பரப்புகள் அமைத்தல், 2030ம் ஆண்டிற்குள் மரம் நடும் இயக்கத்தின் மூலம் குளிர்ச்சி தரும் 24 பெருவழிச் சாலைகளை உருவாக்குதல் போன்ற முன் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நகரின் 45% மக்கள் வாழும் குடிசைப் பகுதிகளில் கட்டிடங்கள் மீது சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடி படலங்கள் பொருத்தப்பட்ட மெல்லிய இரும்பு மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது கட்டிடங்களின் கீழ்ப்பகுதியில் வெப்பநிலையை 6% குறைக்க உதவியுள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மேற்கூரை அமைக்கும் பணிகள் எளிமையானதில்லை. கடுமையான புயல்களின்போது சந்தைகளில் இருக்கும் நிழற்பரப்புகள் தூக்கி எறியப்படுகின்றன. இதனால் இவை நீண்ட காலம் தாக்குப் பிடிக்கும் பொருட்களால் கட்டப்பட வேண்டியுள்ளது. இதற்கான நிதியைக் கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. என்றாலும் வெப்பத்தில் இருந்து பாதுகாக்கப்படுவது மக்களிடையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற திட்டங்கள் முன்பு செயல்படுத்தப்படவில்லை. புதிய தொழில்நுட்பங்களை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று இவானா-கிசாயேர் கூறுகிறார்.

வெப்பநிலையை சமாளிக்க குளிர்சாதன பேருந்துகள்

வெப்ப அலைக்குத் தயாராக இருக்க உதவும் செயல்களை செஞ்சிலுவை சங்கம் மேற்கொண்டு வருகிறது. ஹனாய் வியட்நாமில் மே 2023ல் ஏற்பட்ட ஒரு வெப்பத் தாக்குதலுக்கு முன்பு தன்னார்வலர்கள், தெரு வியாபாரிகள், இரு சக்கர வாகனங்களில் செல்வோர், வெளிப்புற வேலை செய்பவர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் குளிர்சாதன வசதியுடைய, குளிர்ச்சி தரும் நகரும் பேருந்துகளை நிறுத்தினர். குளிர்ந்த நீர் விநியோகம், அமர நிழல் தரும் இடங்கள் ஏற்படுத்தப்பட்டன.

வெப்பநிலை அடிக்கடி 45 டிகிரிக்கும் கூடுதலாக நிலவும், ஈரப்பதம் அதிகம் உள்ள நேபாளத்தில் உயரம் குறைவான தென்பகுதிகளில் தன்னார்வலர்கள் முன்னெச்சரிக்கை செயல்முறையை மேம்படுத்த, உள்ளூர் நிர்வாகத்தினர் குளிருந்த தங்குமிடங்களை அமைக்க, உயர்வெப்பநிலை சம்பவங்களின்போது மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வலியுறுத்திவருகின்றனர். 2023ல் உயர் வெப்பம் காரணமாக டெராய் (Terai) பகுதியில் பள்ளிகள் பல நாட்கள் மூடப்பட்டன.

“இளைஞர்களிடையில் இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்று அந்நாட்டின் செஞ்சிலுவை சங்க பேரிடர் பிரிவு இயக்குனர் சாகர் ரெஸ்தா (Sagar Shrestha) கூறுகிறார். கூட்டத்தில் அரசுகள் இந்த பேரிடரை சமாளிப்பது பற்றிய வழிமுறைகளை சமூகங்கள், நகரங்கள், நிறுவனங்களுக்கு வழங்க உதவும் அதிதீவிர வெப்பநிலைக்கான செயல் மையத்தை ஏற்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன.

வெப்ப அலை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் உலகளவில் இரண்டு மாதங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் 2 அன்று உலக வெப்ப அலை விழிப்புணர்வு நாள் கொண்டாடப்படும். மற்ற பேரிடர்கள் போல வருங்காலத்தில் செஞ்சிலுவை சங்கம் இந்த பேரிடர்ஐ குறைக்க உதவும் கருவிகள், திட்டமிடுதல்கள், உடனடி மீட்புப் பணிகள், வழிகாட்டுமுறைகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. மற்ற பேரிடர்கள் போல இதற்கு ஒரு நிலைப்படுத்தப்பட்ட வழிமுறை இல்லை. மனித குலம் இன்னும் இதற்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை.

உலகின் வெப்ப அலைத் தாக்குதல்கள் பற்றிய இந்த முதல் மாநாட்டின் மூலம் அறிவியல் புனைவாக எழுதப்பட்ட நாவலில் கூறப்பட்டுள்ளவை கற்பனையாகவே இருக்க இப்போதே மனித குலம் செயலில் இறங்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

** ** **

மேற்கோள்கள்

https://www.theguardian.com/environment/2024/mar/27/extreme-heat-summit-to-urge-leaders-to-act-on-threat-from-rising-temperatures?

&

 https://www.ifrc.org/article/heatwaves-ifrc-global-heat-summit-tackle-invisible-killer

&

https://www.ifrc.org/press-release/global-summit-announces-sprint-action-tackle-consequences-extreme-heat#

&

https://www.usaid.gov/news-information/press-releases/mar-28-2024-usaid-and-ifrc-hold-global-summit-extreme-heat-launch-global-action-sprint

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It