இந்திய சமூகத்தில் சாதி அடுக்குமுறை என்பது ஒடுக்குமுறைகளுக்கும், சுரண்டல்களுக்கும் முக்கிய காரணியாக செயல்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல், ஆதிக்க சாதியினருக்கு சமூகப் பாதுகாப்பு அளிக்கும் கேடயமாகவும் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் பாலியல் புகாரில் சிக்கி கைதான நடிகை புவனேஸ்வரியும், வாய்க்கு வந்த‌தைப் பேசி வம்பில் மாட்டிக் கொண்ட நடிகர் விவேக்கும் உடனடியாக புகலிடம் தேடியது முக்குலத்தோர் சாதிச்சங்கங்களிடம்தான். 'எங்க சாதிசனங்களை மீறி என்னைத் தொட்டுற முடியுமா?' என்கிற மிரட்டலைத்தான் அவர்கள் மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்கள்.

சாதி அடுக்குமுறையில் பங்கேற்காது, அதை வெளியில் நின்று ஒழிக்க வேண்டிய தலித் சகோதரர்களே சமயங்களில், எல்லோரும் அல்ல, தங்களது சுயலாபங்களுக்காக சாதிக்குள் ஒளிந்து பாதுகாப்பு தேடுகின்றனர். 'நான் தலித்ங்கிறதாலத்தான் எனக்கு இந்த கதி' என்று கூறுவது ஆதிக்க சாதியினரதைப் போல் மிரட்டல் அல்ல, இது கழிவிரக்கம். இந்தக் கழிவிரக்கம் பாமர மக்கள் சிலரிடம் இருக்கலாம். ஆனால் மெத்தப் படித்த எழுத்தாளர்களே தங்கள் மீதான விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்ளாமல் 'நான் தலித், அதனால் தலித் விரோதத்துடன் நடந்துகொள்கிறார்கள்' என்று சொன்னால் அது எவ்வளவு பரிதாபகரமானது. ஆனால் அந்தப் பரிதாபத்தைத்தான் இரவிக்குமார் செய்தார், இப்போது அவரது பாதச்சுவட்டில் நமது ஆதவன் தீட்சண்யாவும் வந்து நிற்கிறார்.

aadhavan_340ஆதவனுக்கு அப்படியென்ன கொடுமை நேர்ந்தது?

ஈழப் பிரச்சினை தொடர்பான அவரது நிலைப்பாடும், செயல்பாடுகளும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின. பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் அது தொடர்பாக எழுதிய கட்டுரைகள் கீற்றிலும், இனியொரு, வினவு உள்ளிட்ட தளங்களிலும் வெளிவந்தன. விமர்சனங்களுக்கான பதிலை ஆதவன் எழுதியிருந்தால், அதை கீற்று நிச்சயம் வெளியிட்டிருக்கும். இது ஆதவனுக்கும் தெரியும். ஆனால் ஆதவன் எழுதவில்லை. அது அவரது உரிமை. ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் விவாதங்களையும், விமர்சனங்களையும் திசை திருப்பும் விதமாக அவர் கூறுகிறார், 'நான் தலித். அதனால் கீற்று குழுவினர் என்மீது தலித் விரோதத்துடன் அவதூறு பேசுகிறார்கள்'. (அவரது விமர்சனக் கவிதை கீழே தரப்பட்டுள்ளது.)

ஆதவன் மீது அப்படியென்ன விமர்சனங்கள் வைக்கப்பட்டன?

1. எழுத்தாளர் தமிழ்நதிக்கான எதிர்வினையில், ஆணாதிக்கம் மிகுந்த கருத்துக்களை எழுதியிருந்தார்.

2. ஈழத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில், கேரளத்தில், மேற்கு வங்கத்தில், இங்கிலாந்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிடத்தில் என எங்கெல்லாம் சாதி இந்துக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சாதி இருக்கிறது. அதனால்தான் ஈழத்தில் இந்தியத் தமிழர்களை வெள்ளாளத் தமிழர்கள் அவமானப்படுத்துகிறார்கள்; இங்கு இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கேட்டு, பார்ப்பன மார்க்சிஸ்ட் தலைவர்கள் குறுக்குசால் ஓட்டுகிறார்கள். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படாத, காலியாக உள்ள இடங்களை பொதுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்னபோது அதை வரவேற்று அறிக்கை விட்ட ஒரே தமிழர் தலைவர் யார் தெரியுமா? சி.பி.எம் வரதராஜன்தான். வெள்ளாளத் தமிழர்களுக்காக ஈழப்பிரச்சினையை ஒதுக்கும் ஆதவன், கிரீமி லேயர் கேட்கும் சிபிஎம் கட்சியை ஒதுக்காமல் அண்டியிருப்பது ஏன்?

3. எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக பல மாநாடுகள், பொலிட்பீரோ கூட்டங்கள் நடத்திய பின்னர்தான், சாதியை ஒரு பிரச்சினையாகப் பார்க்கும் தெளிவு மார்க்சிஸ்ட்களுக்கு வருகிறதென்றால், அந்தத் தெளிவை உயிர் வாழ்வதற்கு உத்திரவாதம் இல்லாது, போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களிடம் ஆதவன் எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

4. புலிகள் சாதியைக் கணக்கில் எடுக்காததால்தான் ஈழப்போராட்டம் பலவீனமடைந்தது என்று கூறும் ஆதவன், சாதி குறித்து மௌனம் காத்துக் கொண்டே தொழிலாளர்களை ஒருங்கிணைக்க முயலும் மார்க்சிஸ்ட் பார்ப்பனர்களால்தான் இந்தியாவில் வர்க்கப்புரட்சி நடைபெறாமல் இருக்கிறது என்ற உண்மையை வெளிப்படையாகக் கூறமுடியுமா?

5. தேவேந்திர பூபதியின் கவிதைகளை யவனிகா ஸ்ரீராம்தான் எழுதிக் கொடுக்கிறார் என்று லீனா வால்பாறைக் கூட்டத்தில் பேசினார். தேவேந்திர பூபதி ஏற்பாடு செய்திருந்த மதுரை கடவுக் கூட்டத்தில் ஆதவனும், கா.சு.கண்ணனும் அதை மறுத்துப் பேசினார்கள். அந்த அரங்கத்திற்குத் தலைமை தாங்கிய ஆதவன், ‘வால்பாறை கூட்டத்தில் பகிரங்கமாக லீனாமணிமேகலையும், தமிழகம் முழுவதும் பல்வேறு எழுத்தாளர்களும் பேசி வருகிற இக்குற்றச்சாட்டைப் பற்றி பூபதியும், யவனிகாவும் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்’ என்றல்லவா பேசியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் தானாகவே முன்வந்து, தேவேந்திரபூபதி கவிதை எழுதுவதை நானே பார்த்தேன் என்று ஏன் சாட்சியம் கூறினார்? பிடித்து வரப்பட்ட சாட்சியத்திற்கு கொடுக்கப்பட்ட கூலி என்ன? காலச்சுவடுக்கும் கடவுக்குமான உயர்திணை மற்றும் அஃறிணை சம்பந்தமான கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் ஊரறிந்தது. ஆனால் புதுவிசைக்கும் கடவுக்குமான கொடுக்கல் வாங்கல்கள் இனிமேல்தான் ஊரறிய வேண்டியுள்ளது. எப்படியோ மனு ஆதரவாளனையும், மனு எதிர்ப்பாளனையும் மனுவின் மச்சினிச்சி லட்சுமி ஒன்றுசேர்த்து விட்டாள்.

6. தமிழ்நதி சேலத்திலிருந்து திருச்சி வரும் பயணத்தின் பொழுது, உங்களிடம் பூபதியின் நடவடிக்கைகள் குறித்து கூறியதாக நீங்கள் உங்கள் கட்டுரையில் பதிவு செய்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதையே உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், தமிழ்நதியின் வார்த்தைக்குப் பின்னால் இருந்த வலியை, உங்களால் ஏன் உணர முடியவில்லை? எவ்வளவு தோழமையுடன் அவர், இவ்விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பார்? அதற்கு நீங்கள் எவ்வகையில் உண்மையாக நடந்துள்ளீர்கள்? உங்கள் ஆத்ம நண்பர் பூபதியிடம் இதைப்பற்றி என்றேனும் கேட்டதுண்டா? அல்லது உங்கள் கட்சியின் மாதர் அமைப்பில் சொல்லி போராடச் சொன்னதுண்டா? எதுவுமில்லை. சரி, உங்கள் பெண்ணுரிமைப் போராட்டம் அத்துடன் முடிந்துவிட்டால் கூட பரவாயில்லை. இன்று தமிழ்நதி உங்களைப் பற்றி விமர்சித்து விட்டார் என்றவுடன் அதைத் தூக்கிப் போடுகிறீர்களே, அருவருப்பாக இல்லை!

7. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உலக தன்னார்வ அரசு சாரா நிறுவனங்களின் (N.G.O.) எதிர்ப்புரட்சி அரசியல் பற்றி ஒரு நூலையே எழுதியிருக்கிறார். புரட்சியாளர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் ச.தமிழ்ச்செல்வனும் ஆதவன் தீட்சண்யாவும், இலங்கை அரசு சார்பான, N.G.O. நபர்களுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கும், அவர்கள் நடத்தும் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கும் என்னவிதமான நியாயத்தை முன்வைக்கிறார்கள்?

8. ஈழப் போர் இறுதியை அடைந்த காலகட்டத்தில் பிரபாகரனை கொச்சைப்படுத்தும் விதமாக, ஒரு புகைப்படத் தொகுப்பு ஒன்றை புலி எதிர்ப்பாளர்கள் மின்னஞ்சல் பிரச்சாரமாக செய்தனர். அதை தமிழகத்தில் பரப்பும் வேலையை ஆதவன் செய்தார். அந்தப் புகைப்படத் தொகுப்பில், பிரபாகரன் அவரது குடும்பத்துடன் விருந்து உண்பது போன்று ஒரு படம் - ஈழமக்கள் உணவுக்காக வரிசையில் நிற்பது போன்ற ஒரு படம், பிரபாகரனின் மகன் வெளிநாட்டில் படிப்பது போன்ற ஒரு படம் -ஈழக்குழந்தைகள் தெருவில் நிற்பது போன்ற ஒரு படம். இதே போன்ற ஒரு புகைப்படத் தொகுப்பை - ஏழை பாட்டாளிகளின் வாழ்க்கையை பிரகாஷ் காரத் அல்லது ஆதவனின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு தயாரிக்க முடியாதா? பிரகாஷ் காரத் விமானத்தில் பயணிப்பது போன்று ஒரு படம் - ஒரு தலித் காலில் செருப்பு கூட இல்லாது வெயிலில் நடப்பது போன்று ஒரு படம், பிரகாஷ் காரத் பெரிய பெரிய அரசியல்வாதிகளுடன் விருந்து உண்பது போன்ற ஒரு படம் - பாட்டாளி ஒருவர் ஒரு ரூபாய் அரிசி வாங்கி ஒரு வேளை உண்பது போன்று ஒரு படம். இதைத் தயாரித்து அனுப்பினால், அதை ஆதவன் எல்லோருக்கும் ‘forward’ செய்வாரா?

9. 'அரசு என்றால் வன்முறைக்கருவி என்பது வீ.அரசுக்கும் பொருந்தும்போல' என்று எழுதிய ஆதவன் தான், ஈழப்போரில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த இலங்கை அரசின் பிரதிநிதிகளோடு, அதே அரசின் செலவில் நடத்தப்பட்ட இலக்கிய விழாவின் மேடையை பகிர்ந்து கொண்டார். இது என்னவிதமான அறம்?

10. லீனா மணிமேகலையின் கருத்து சுதந்திரத்திற்கு இன்று குரல் கொடுக்கும் ஆதவன், பால் சக்காரியா, மக்கள் தொலைக்காட்சியின் கருத்து சுதந்திரத்திற்காக என்றாவது பேசியிருக்கிறாரா?

11. கம்யூனிசத்தையும், கம்யூனிச இயக்கங்களையும் கொச்சைப்படுத்தியதற்காக ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல்’நாவலை கடுமையாக சாடிய ஆதவன், அதே வேலையைச் செய்த லீனாவை மட்டும் கொண்டாடுவது ஏன்?

இவைதான் அருள் எழிலன், யமுனா ராஜேந்திரன், வளர்மதி, தமிழ்நதி, அமுதன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் ஆதவன் மீது விமர்சனங்களாக வைத்தவை. ஏதேனும் விடுபட்டிருந்தால் நண்பர்கள் தெரிவிக்கலாம். இவற்றில் எது தலித் விரோதமானது என்பதை ஆதவன் விளக்கினால் ந‌ல‌மாக இருக்கும்.

ஈழ ஆதரவு தொடர்பான விவாதங்களில் ஆதவன் மட்டும் விமர்சிக்கப்படவில்லை; கருணாநிதி, ஜெயலலிதா, நெடுமாறன், திருமாவளவன், ஜெகத் கஸ்பர், அ.மார்க்ஸ், தமிழ்ச்செல்வன், எஸ்.வி.ராஜதுரை உட்பட பலர் மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன என்ப‌தையும் இங்கு குறிப்பிட‌ விரும்புகிறோம்.

தலித் இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான சரண்குமார் லிம்பாலே தலித் முரசுக்கு அளித்த பேட்டியில் தலித் இலக்கியம் குறித்து இவ்வாறு கூறுகிறார்: “...பக்தி இலக்கியங்களின் மறு உலக சிந்தனைகள், நடுத்தர சிற்றுடைமை வர்க்கத்தினரின் ஆசைகள் ஆகியவற்றில் தலித் இலக்கியம் பங்கேற்பதில்லை. தலித் இலக்கியங்கள் இன்ப உணர்ச்சிகளையோ, மென்மை உணர்வுகளையோ அல்லது தன்னைத்தானே வெறுத்து இரக்கம் கொள்கிற உணர்வுகளையோ கொடுப்பதில்லை. அவை ஒரு தலித்திடம் உள்ள சுயமரியாதை உணர்வை சுடர்விட்டு எரிய வைக்க வேண்டும். சுயமரியாதை என்பதைத்தான் முதல் கருத்தாகவும் முன் வைக்க வேண்டும். ‘நான் பிறந்தேன், வர்ணாசிரமத்தினர் தாக்கினார்கள், நான் பிச்சைக்காரனானேன்' என்று எழுதுவதில் கெட்டிக்காரத்தனம் இருப்பதாகத் தெரியவில்லை.”

என்ன செய்வது? ஆதவன் அதைத்தான் தனது கெட்டிக்காரத்தனமாகக் காட்டுகிறார்.

எவர் ஒருவர் மீதான விமர்சனங்களை வெளியிடும்போதும், அவரது சாதி பார்த்து கீற்று வெளியிடுவது இல்லை. கொலைவழக்கில் கைதான ஜெயேந்திரனும் சரி, அவனுக்கு கார் அனுப்பி மாமா வேலை பார்த்த இந்து ராமும் சரி பார்ப்பனர்கள் என்பதால் மட்டுமே நாம் விமர்சிக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை அங்கீகரிக்க மறுக்கிற, அதன் மீது அதிகாரம் செலுத்துகிற பார்ப்பானாக இருந்தாலும் சரி அல்லது சூத்திரனாக இருந்து கொண்டே தன்னிலும் கீழான மக்கள் மீது சாதித் தீண்டாமையை ஏவும் முதலியார், செட்டியார், நாய்க்கர், தேவர், நாடார், வன்னியர் என எந்த ஆதிக்க சாதியாக இருந்தாலும் கீற்று அதை ஆதரித்தது இல்லை; ஆதரிக்கப் போவதும் இல்லை. தலித்தா தலித் அல்லாதவர்களா என்ற பிரச்சனை வரும்போது தலித் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாடே கீற்றின் நிலைப்பாடு.

‘பிள்ளை கெடுத்தாள் விளை’சிறுகதை தொடர்பான விவாதங்கள், உத்தப்புரம் சுவர், கண்டதேவி போராட்டம், மேலவளவு வழக்கு, கயர்லாஞ்சி படுகொலை, அருந்ததியர் உள்ஒதுக்கீடு, சிறப்பு உட்கூறு திட்டநிதி, நிரப்பப்படாத தலித் பணியிடங்கள், உயர்நீதிமன்ற மாணவர்கள் மோதல், பழையகோட்டை அம்பேத்கர் சிலை விவகாரம் என தலித் மக்களின் பிரச்சினைகளை முன்னுரிமை கொடுத்து கீற்று தொடர்ந்து பிரசுரித்து வருகிறது. இதிலெல்லாம் ஆதவனுக்கு கீற்றுடன் உடன்பாடுதான். அவரே பல கட்டுரைகளை கீற்றிற்கு அனுப்பியிருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம் தோன்றாத கீற்றின் ‘தலித் விரோதம்’, அவர் மீதான விமர்சனங்கள் வந்தவுடன் அவருக்குத் தெரிகிறது. ஒன்று புரியவில்லை, தலித்தியக் கோட்பாட்டை ஆதவன் தன்னிலிருந்துதான் அணுகிறாரா?

பார்ப்பனியத்தின் மீதான, ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைக்கு எதிராக கோபம் கொப்பளிக்கும் படைப்புகளை முன்வைத்தபோது அதை கீற்று வெளியிட்டது. அதே ஆதவன், இங்கிலாந்து பயணத்திற்குப் பிறகு – தனது நண்பர்களுக்காக - ஈழப்போராட்டத்தை தலித் அரசியலை முன்வைத்து போக்கடிக்கும் வேலையைச் செய்தபோது, அவர்மீது எழுந்த விமர்சனங்களை நண்பர் என்றும் பாராமல் வெளியிட்டது. நண்பருக்காக முகதாட்சண்யம் பார்த்திருந்தால் ஆதவனுக்கு நாங்கள் என்றும் தலித் ஆதரவாளர்களாகவே இருந்திருப்போம்.

புரட்சிகர இயக்கங்களை, அதில் பங்குகொள்வோரைக் கொச்சைப்படுத்தும் விதமாக லீனா கவிதை எழுதியதையும், அதற்கான விமர்சனங்களை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாக சித்தரித்ததையும் கண்டித்து கீற்றில் கட்டுரைகள் வெளிவந்தன. லீனாவுக்கு ஆதரவாக ‘கல்வியறிவு மறுக்கப்பட்டிருந்த நிலையை முறித்துக்கொண்டு ஒரு பெண் எழுதுவதே ஆண்மைய வாதத்திற்கு எதிரானதுதான்’ என்று ஆதவன் எழுதுகிறார். ஒரு பெண் எழுதுவதெல்லாம் ஆணாதிக்கத்திற்கு எதிரானது என்றால், ரமணி சந்திரன், தமிழிசை சௌந்தர்ராஜன் எழுதுவதும், பேசுவதும் ஆணாதிக்கத்திற்கு எதிரானதுதானா? இதை இன்னும் கொஞ்சம் நீட்டித்துப் பாருங்கள். பொள்ளாச்சி மகாலிங்கம், ராஜேஷ்குமார் என பார்ப்பரனல்லாதோர் எழுதுவதெல்லாம் பார்ப்பனிய எதிர்ப்பு எழுத்து. நவீன காலனியாதிக்கத்திற்கு உள்ளாகும் இந்தியாவிலிருந்து எழுதும் ஜெயமோகன் எழுதுவதெல்லாம் ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுத்து! யோசிக்கும்போதே சிரிப்பு வரவில்லை?

இந்திய சமூகம் எதிர்கொள்ளவேண்டிய மிக முக்கிய பிரச்சினை சாதிதான் என்பதில் புதுவிசையுடன், கீற்றும் உடன்படுகிறது. அதே நேரத்தில் தலித் அரசியலை முன்வைத்து ஈழப்பிரச்சினையை காலி பண்ண முயலும் புதுவிசையின் நிலைப்பாடு கீற்றிற்கு ஏற்புடையதல்ல‌. சாதி பெரிய பிரச்சினை என்பதற்காக உலகமயமாக்கல், சுற்றுச்சுழல் சீரழிவு, ஈழ மக்கள் படுகொலை, மேற்குவங்கம், சட்டீஸ்கர் மாநிலங்களில் பழங்குடியின மக்களின் மீதான தாக்குதல்கள் இவற்றை ஒதுக்கித் தள்ளி விட முடியாது.

ஆதவன்! சாதிப்பிரச்சினையை ஒழித்துவிட்டு சம்பள உயர்வு கேட்டு போராடலாம் என்றோ, அர்ச்சராகும் உரிமையை அடைந்தபிறகு உற்பத்தியில் பங்கு கேட்கும் போராட்டத்தைத் தொடரலாம் என்றோ என்றாவது தொழிற்சங்கங்களிடம் பேசியிருக்கிறீர்களா? இரட்டைக் குவளை முறையை ஒழித்தபிறகு அணுசக்தி ஒப்பந்தம், சிறப்புப் பொருளாதார மண்டலம் இவற்றை எதிர்க்கலாம் என்று புதுவிசையில் எழுதியிருக்கிறீர்களா? ஆனால், ஈழப்பிரச்சினை என்று வரும்போது மட்டும் சாதியைத் தூக்கி முன்னே போடுகிறீர்கள்.

புதுவிசையை வெளியிட தேவேந்திர பூபதி உதவியதற்காக, யாரும் கேட்கமாலேயே அவருக்காக வாதாடுகிறீர்கள். ஷோபாசக்தியின் நட்புக்காக கம்யூனிஸ்ட்களைக் கொச்சைப்படுத்தும் லீனா மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து சுதந்திரம் என்று பேசுகிறீர்கள். ஆனால், ‘கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எதுவொன்றையும் எழுதிவிட்டுச் செல்லும் உரிமை எழுத்தாளனுக்கு இல்லை’ என்று முழங்கிய ஆதவனையும் எங்களுக்குத் தெரியும். கீற்றின் நிலைப்பாடும் அதுதான். ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ சிறுகதையில் தலித் பெண்ணைக் கொச்சைப்படுத்திய எழுத்தாளர் சுந்தரராமசாமியை நீங்கள் கடுமையாகக் கண்டித்தீர்கள். அது சரியானது என்பதால் நாங்களும் அதை முழுமனதுடன் வெளியிட்டோம். வி.பி.சிங்கை இந்தியா டுடே கொச்சைப்படுத்தியபோது அதை கடுமையாகக் கண்டித்து, கட்டுரை எழுதினீர்கள்; கீற்று ஏற்பாடு செய்த கூட்டத்திலும் கலந்து கொண்டீர்கள். இப்போது லீனா விவகாரத்திலும் கீற்று அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறது. ஆதவனும் அதே நிலைப்பாட்டில்தான் இருப்பார் என்று எதிர்பார்த்தால், இல்லை நீங்கள் மாறிவிட்டீர்கள். லீனாவுக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது என்கிறீர்கள். பால் சக்காரியாவிற்கு இல்லையா என்று கேட்டால், ‘நான் தலித், கீற்று அவதூறு செய்கிறது’ என்கிறீர்கள்.

உத்தப்புரம் தொடர்பான கட்டுரையில், எப்போதும் மீசை முறுக்கியபடி போஸ் கொடுக்கும் தலித் தலைவர்கள் குறித்து சாடியிருந்தீர்கள். சரி! கல்வி மறுக்கப்பட்ட பெண்கள் எழுதுவதெல்லாம், ஆணாதிக்கத்திற்கு எதிரானது என்றால், தோளில் துண்டு போடுவதற்கே மறுக்கப்பட்டிருந்தவர்கள் தற்போது மீசை முறுக்குவது சாதி அடக்குமுறைக்கு எதிரான செயல் அல்லவா? என்ன செய்ய? எதிரிகளை குத்திக் கிழிப்பதற்கு ஒரு பேனாவும், நண்பர்களை சொரிந்து கொடுக்க ஒரு பேனாவும் வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறது.

கட்சியோ, நண்பர்களோ யார் தவறு செய்தாலும் அதை தவறு என்று சொல்லும் துணிவும், நேர்மையும் எழுத்தாளனுக்கு வேண்டும். மாதவராஜிடம் அந்த நேர்மை இருக்கிறது. அப்படி இல்லாத உங்களைப் போன்றவர்கள் மீது விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அந்த விமர்சனங்களையாவது நேர்மையாக எதிர்கொள்ளுங்கள்.

"யார் மனதும் நோகாமல், எல்லோருக்கும் பிடித்தமானதை எழுதிக் காட்டுகிற பபூன் டெக்னிக் எனக்கு கைவரவில்லை. எதை எழுதினாலும் கோவித்துக்கொள்ளவென்று ஒரு கூட்டமோ கோஷ்டியோ இருப்பதைப் பார்த்த பிறகுதான் திருவாளர்.வாசகரும் பொத்தாம்பொதுவானவரல்ல என்பது உறைக்கிறது" என‌ நீங்க‌ள் எழுதியதுதான் கீற்றின் நிலைப்பாடும்.

‘யாருடைய முதுகையும் சொறிந்து கொடுக்க நான் நகம் வளர்க்கவில்லை’ என்று எழுதியிருக்கிறீர்கள். படிக்க நன்றாகத்தான் இருக்கிறது. உங்கள் கைகளில் இருக்கும் அழுக்கு, நண்பர்களின் முதுகை சொறிந்து கொடுத்ததால் வந்தது என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். பிறகு இன்னொன்று, இந்தக் கட்டுரைக்காக கீற்றின் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்ட்த்தின் கீழ் வழக்கு தொடுக்கச் சொல்லி கேட்டுவிடாதீர்கள்!!

அனைத்து அமைப்பினருக்கும், வாசகர்களுக்கும்...

கீற்று இணையதளம், எந்த அமைப்பையும் சாராத நான்கு நண்பர்களால் நடத்தப்படுகிறது. இதில் எங்களுக்கு எந்த லாப நோக்கமும் இல்லை. எந்த ஆதாயத்திற்காகவும் யாரையும் அனுசரித்து இயங்க வேண்டிய அவசியமும் இல்லை. எந்தவொரு இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட வேண்டி, அவர்களிடம் காசு வாங்கியதுமில்லை. சமூக மாற்றத்திற்காக இயங்கும் அனைத்து இயக்கங்களும், எழுத்தாளர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் இடமாகவும், விவாதிக்கும் தளமாகவும் கீற்று இருக்க வேண்டுமென விரும்புகிறோம். அந்த வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் எங்களால் முயன்ற வேலையைச் செய்து வருகிறோம்.

கீற்று இணையதளத்தைத் தொடங்கியபோது, தலித்திய அமைப்புகள், இடதுசாரி இயக்கங்கள், பெரியாரிய இயக்கங்கள், தமிழ்த்தேசிய அமைப்புகள், அதிதீவிர இடதுசாரி இயக்கங்கள், சிறுபான்மையினர் இதழ்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு, அவர்களது கட்டுரைகளையும், இதழ்களையும் கீற்றில் பிரசுரிக்கக் கேட்டோம். பலர் ஒத்துக்கொண்டனர்; சிலர் மறுத்தனர். ஒத்துக்கொண்ட சிலர் சில மாதங்கள் மட்டும் அனுப்பினர்; பிறகு மறந்து விட்டனர். சில பத்திரிக்கைகள் நின்று போயின.

இதையெல்லாம் எதற்குச் சொல்கிறோம் என்றால் எந்தவொரு இயக்கத்தின் மீதும் எங்களுக்கு காழ்ப்புணர்ச்சி இல்லை என்பதற்காகவே. எங்களுக்கு எந்தவொரு மதத்தின் மீதும் விருப்பில்லை. மதங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட வேண்டியவையே. அதே நேரத்தில் இந்துமதத்தின் சாதியப்பிடியில் சிக்கியிருக்கும் தலித் மக்கள், சமூக விடுதலைக்காக மதம் மாறுவதை ஆதரிக்கிறோம். பெரும்பான்மை ம‌த‌ச் ச‌மூக‌த்தினரால் ஒடுக்குத‌லுக்கு உள்ளாகும் அப்பாவி சிறுபான்மையின‌ருக்கு ஆதர‌வாக‌ நிற்கிறோம். ஆர்.எஸ்.எஸ்., இந்துமுன்னணி உள்ளிட்ட இந்துமதவெறிக்கும்பலை எதிர்ப்பது போலவே, இஸ்லாமிய அடிப்படைவாதிகளையும், கிறிஸ்துவ அடிப்படைவாதிகளையும் எதிர்க்கிறோம்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான விமர்சனம் கீற்றின் மீது வைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கீற்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு ஆதரவானது; ம.க.இ.க.வுக்கு எதிரானது என்றார்கள். இப்போது தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவானது; ம.க.இ.க.வுக்கு ஆதரவானது என்கிறார்கள்.

எந்தெந்த காலத்தில் எந்தெந்தப் பிரச்சினை மேலெழுகிறதோ அதற்கு கீற்று முகம் கொடுக்கிறது. அதற்காக மற்ற செய்திகளை புறந்தள்ளுவதில்லை. உத்தப்புரம் பிரச்சினையில் கூடுதல் கவனம் செலுத்தியபோதுதான், இடஒதுக்கீடு தொடர்பான கட்டுரைகளையும் வெளியிட்டோம். ஈழப்பிரச்சினை பற்றியெரிந்த காலத்தில்தான், சட்டக்கல்லூரி மாணவர் மோதல் தொடர்பான கட்டுரைகளையும் வெளியிட்டோம்.

கீற்று எங்களுக்கு முழுநேர வேலை இல்லை. பிழைப்புக்காக வேறு வேலை செய்வதால், கட்டுரைகளைப் பிரசுரிப்பதிலும், பின்னூட்டங்களை அனுமதிப்பதிலும் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் எந்தவொரு இயக்கத்தின் கருத்தையும் கீற்று பிரசுரிக்காமல் நிராகரித்ததில்லை, எங்கள் மீதான விமர்சனங்களையும் சேர்த்தே.

கட்டுரைகள், பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் எழுதுபவரது சொந்தக் கருத்துக்களே! அவை அனைத்துமே கீற்று ஆசிரியர் குழுவுக்கு உடன்பாடானது என்று யாரும் கருதவேண்டியதில்லை. பின்னூட்டங்களைப் பொறுத்தவரை, பொதுவெளியில் வைக்கத் தகுதியில்லாத வார்த்தைகள் ஏதும் இருக்கிறதா என்பதை மட்டுமே பார்த்து அனுமதிக்கிறோம். விவாதங்கள் ஆரோக்கியமாக இருப்பதும், தரம் தாழ்வதும் அதில் பங்குகொள்பவர்களின் குணம், பண்பாடு சார்ந்த பிரச்சினை.

எங்களுக்கு இசைவான கட்டுரைகளை மட்டுமே வெளியிடுவதற்கான தனிச்சொத்தாக கீற்றை நாங்கள் பாவிக்கவில்லை. கீற்றில் வரும் கட்டுரைகளில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என்ற தப்பெண்ணமோ, மாற்றுக்கருத்தை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்யும் குறுகிய எண்ணமோ எங்களிடம் இல்லை. ஏனென்றால் கருணாநிதி மீதான அல்லது திமுகவின் மீதான விமர்சனத்தை, திராவிடக் கருத்தியல் மீதான விமர்சனமாக நாங்கள் சுருக்கிப் பார்ப்பதில்லை. எந்தவொரு தனிநபரையும், அமைப்பையும் தாண்டி, கருத்தியல் இருக்கிறது என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.

இந்தத் தளத்தை அடிப்படைவாதிகள் யாரும் பயன்படுத்தாமல் தடுப்பதையும், தளத்திற்கான செலவுகளை ஈடுகட்டுவதையும், படைப்புகளை கூடியமட்டும் பிழைதிருத்தி வெளியிடுவதையும் மட்டுமே எங்கள் வேலையாகக் கருதுகிறோம். எல்லோரையும் திருப்திப்படுத்துவது எங்கள் வேலையுமல்ல; எல்லாருக்குமான இனிப்பும் எங்களிடம் இல்லை.

-     கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It