கடந்த 10 ஆண்டுகளாகவே நரம்பியல் வல்லுநர்கள் உடம்பு அரிப்பதற்குக் காரணம் என்பதைப் பற்றி தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் வலிக்குக் காரணமான நரம்புகள்தான் அரிப்பு உணர்வுக்கும் காரணம் என்று பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்து வேறு வேலைக்குச் சென்றுவிட்டனர்.

வாஷிங்டன் பல்கலையின் மருத்துவப் பிரிவின் நரம்பியல் வல்லுநர் சென் என்பவர் எலிகளின் ஜீனோமை ஆராய்ந்தபோது கேஸ்ட்ரின் ரிலீசிங் பெப்டைட் ரிசப்டார் (GRPR Gastrin Releasing Peptide Receptor) என்றொரு ஜீனைச் செயல்படுத்தும் நரம்பு செல்கள்தான் அரிப்பிற்குக் காரணமான தகவல்களை மூளைக்கு அனுப்புகிறது என்றும் அவை முதுகுத்தண்டில்தான் செயல்படுகின்றன என்றும் கண்டுபிடித்துள்ளார். 

பாம்பெசெரின் என்ற நரம்பு விஷத்தைப் பயன்படுத்தி மேற்கூறிய ஜிஆர்பிஆர் புரதத்தைத் தாங்கிய நரம்பு செல்களை பரிசோதனை முறையில் எலிகளிடம் நீக்கியபிறது அதற்கு அரிப்பே ஏற்படவில்லை என்பதை நிரூபித்தார் திரு சென். அரிப்பை உண்டு பண்ணும் பொருளை தோலில் போட்டுத் தேய்த்தாலும் அந்த எலிக்கு அரிப்பு ஏற்படவில்லையாம்.

இனி எரிச்சலூட்டும் அரிப்பை நீக்க மருந்து கண்டுபிடிப்பதுதான் பாக்கி.

- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It