மனிதருடைய செவி வெளிச்செவி, நடுச்செவி, உட்செவி என மூன்று பாகங்களைக் கொண்டிருக்கிறது. வெளிச்செவி  கண்ணால் காணக்கூடியது. வெளிச்செவியில் காணப்படும் துளை நடுச்செவிவரையில் நீண்டிருக்கும். நடுச்செவி ஒருபுறம் அடைபட்டுள்ள காற்று நிரம்பிய அறையாகும். நடுச்செவியையும், வெளிச்செவியையும் செவிப்பறை பிரிக்கிறது. வெளிச்செவிக்கும் நடுச்செவிக்கும் இடையே Eustachian எனும் குழாய் காற்றோட்டம் ஏற்படுத்துகிறது. புறச்செவியின் உள்ளே இருக்கும் காற்றழுத்தைவிட நடுச்செவியில் காற்றழுத்தம் அதிகரிக்கவோ, குறைவுபடவோ செய்யும்போது காதுகேளாமை, காதுவலி, சீழ் உருவாதல் ஆகிய நோய்கள் தோன்றுகின்றன. உட்காதில் காணப்படும் நுண்ணிய ஒலிஉணர் நரம்புத்தொகுதிகள் அதிர்வுகளை மூளைக்கு எடுத்துச் செல்கின்றன. ஒலிஅதிர்வுகளை மூளை ஒலியாக உணர்ந்து கொள்ளும். 

scientists_362நடுக்காதில் நீண்டகால நோய்த்தொற்று ஏற்படும்போது சீழ் உருவாகி விடுகிறது. மழைக்காலங்களில் நோய்க்கிருமிகள் எளிதில் பல்கிப் பெருகுகின்றன. இதனால் 75 சதவீத குழந்தைகள் காது நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். எதிர் உயிரிகளைக் கொண்ட மருந்துகளால் இந்த சீழ்வடியும் நோய் குணமாக்கப்பட முடியாமல் போகும்போது அறுவை சிகிச்சை நிபுணரால் மயக்கமருந்தின் உதவியால் காற்றோட்டக்குழாய்கள் நடுக்காதுக்குள் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக ஏழு லட்சம் குழந்தைகள் இந்தவகையான நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு செருகி வைக்கப்படும் குழாய்கள் நான்கு முதல் ஏழு மாதங்களுக்குள் கழன்று விழுந்துவிடுவதால் சீழ்வடியும் நோய் மீண்டும் உருவாகிவிடுகிறது.  

காதில் வலி ஏற்படுதல், சீழ்வடிதல் போன்ற நோய்கள் சாதாரணமாக எல்லா வயதினருக்கும் ஏற்படக்கூடியவை. இந்நோய்களை விரைவாக குணப்படுத்த துருப்பிடிக்காத எஃகினாலான ஒரு சாதனத்தை காதுநோய் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பு அளவில் சிறியது; உள்ளீடற்ற ஒரு உலோகத்தண்டினால் ஆனது. இதன் ஒரு முனை அகலமாக இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. உலோகத்தண்டின் ஒரு முனையை அறுவை சிகிச்சை நிபுணர் காதுக்குள் செலுத்தி நடுக்காதில் தேங்கியுள்ள சீழ்போன்ற திரவங்களை உறிஞ்சி எடுத்துவிடுவார். 

வழக்கமாக செய்யப்படும் அறுவை சிகிச்சையில் மூன்று சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மூன்று தனித்தனி சாதனங்களை ஒருங்கிணைப்பதும்,  செயல்பாடு வெற்றிகரமாக இருப்பதும் இந்த புதிய சாதனத்தின் சிறப்புகள் ஆகும். 

ஒரே ஒரு முறை அறுவை சிகிச்சை நிபுணர் நடுச்செவிக்குள் இந்த சாதனத்தை நுழைப்பதால் நோயாளியின் மயக்கநிலை நேரம் குறைகிறது. செவிக்குள் அதிக எண்ணிக்கையிலான கருவிகளை பலமுறை செலுத்தும்போது உட்செவியின் மெல்லிய தோல் சுவர்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. சில சமயங்கள் இந்த சேதத்தின் விளைவாக இரத்தம் கசியவும் வாய்ப்பு உள்ளது. இரத்தக்கசிவை பார்க்கும் வாய்ப்பு இல்லாததால் அறுவை சிகிச்சை மேலும் சிக்கலாகிவிடுகிறது. 

ஆதாரம்: http://english.farsnews.com/newstext.php?nn=8901070101

தகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It