விண்ணில் உள்ள பிரகாசமான நட்சத்திரங்களில் ஒன்றைச் சுற்றி தூசுப் புயல் ஏற்பட்டதை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஹோமல்ஹவ்ட் (Fomalhaut) என்ற பூமிக்கு அருகில் இரவு வானில் பிரகாசிக்கும் இந்த நட்சத்திரத்தைச் சுற்றி விண்கல் பட்டை (asteroid belt) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரம் பூமியில் இருந்து 25 ஒளி ஆண்டுகள் தொலைவில் பிஸ்கிஸ் ஆஸ்ட்ரினஸ் (Piscis Austrinus) அல்லது சதர்ன் ஃபிஷ் (Southern fish) என்ற நட்சத்திர மண்டலத்தில் உள்ளது.

இலையுதிர் காலத்தில் இந்த விண்மீனை பூமியின் தென்கோளப் பகுதியில் இருந்து தெளிவாகக் காணலாம் என்றாலும், வட கோளத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தும் இதை நன்கு பார்க்க முடியும். இதன் பிரகாசம் மற்றும் அமைவிடம் இப்போதும் விண்வெளி ஆய்வுகளுக்கு வழிகாட்டும் ஒன்றாகப் பயன்படுகிறது.fomalhautஜேம்ஸ் வெஃப் தொலைநோக்கியின் தகவல்கள்

ஹப்பிள் மற்றும் பிற உபகரணங்கள் இதற்கு முன்பு நடத்திய இது பற்றிய ஆய்வுகளில் 440 மில்லியன் ஆண்டு வயதுடைய இந்த நட்சத்திரத்தைச் சுற்றி தூசுகள் மற்றும் பிற இடிபாடுகள் நிறைந்து காணப்பட்டதாகக் கூறின. ஆனால் அந்த படங்கள் இந்த இளம் விண்மீனைச் சுற்றிக் கொண்டிருந்த காஸ்மிக் பொருட்களை பகுதியளவே காட்டின. இப்போது உயர் தொழில்நுட்பத்துடன் செயல்படும் ஜேம்ஸ் வெஃப் (James Webb) தொலைநோக்கி இந்த தூசுக்கள் பற்றி விரிவான தகவல்களை அனுப்பியுள்ளது.

விண்கற்கள் சுற்றி வரும் பட்டை

விண்மீனின் உள்வட்டத்திற்கும் அப்பால் அமைந்துள்ள விண்கல் பட்டையில் பாறைகள் இருப்பதை இந்த படங்கள் காட்டுகின்றன. பிரபஞ்சத்தில் சூரியக் குடும்பத்திற்கும் அப்பால் கோள்களின் மோதலால் உருவானவையே இவை என்று கருதப்படுகிறது.

தொலைதூர விண்வெளிப் பரப்பில் கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் உருவானது பற்றி அறிய இந்த ஆய்வுகள் உதவும் என்று அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி மற்றும் ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியர் ஆண்ட்ராஸ் கஸ்பார் (Andras Guspar) கூறுகிறார்.

இந்த விண்மீனுக்கு அப்பால் சூரியக் குடும்பத்தில் காணப்படும் க்ய்விப்பெர் பட்டை (Kuiper belt) போல விண்கல் பட்டை காணப்படுகிறது என்று தெரியவந்துள்ளது. க்யிவிப்பர் பட்டையிலேயே புளுட்டோ மற்றும் எரிஸ் (Eris), ஹாமியா (Haumea), மேக்மேக் (Makemake) போன்ற குள்ளக்கோள்கள் காணப்படுகின்றன. இப்பகுதியிலேயே விண்வெளி ஆய்வாளர்கள் பிரம்மாண்டமான தூசு மண்டலத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

விண் பாறைகளின் மோதல்

400 மைல் அகலம் உள்ள இரண்டு விண் பாறைகள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் இந்த தூசு மண்டலம் உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஜேம்ஸ் வெஃப் தொலைநோக்கியில் பொருத்தப்பட்டுள்ள அகச்சிவப்புக்கதிர் கருவிகள் படமெடுத்து அனுப்பிய விவரங்களில் இருந்தே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து இந்த விண்மீனைச் சுற்றி கண்ணுக்குப் புலப்படாத கோள்கள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இவற்றின் ஈர்ப்பு மண்டலத்தால் சூரியக்குடும்பம் போல ஒரு நட்சத்திரக் குடும்பம் இந்த விண்மீனைச் சுற்றி உருவாகியிருக்கலாம். நெப்டியூன் போன்ற குறைந்த நிறையுடையவையாக இந்த கோள்கள் இருக்கலாம் என்று நேச்சர் விண்வெளியியல் (Nature Astronomy) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ள இந்த ஆய்வுக்கட்டுரை கூறுகிறது.

நிலவுக்கும் செவ்வாய்க்கும் சென்று குடியிருப்புகளை அமைத்து பின் அங்கு இருந்து பயணம் செல்வது பற்றி கனவு காணும் மனிதனுக்கு இந்த ஆய்வுகள் வழிகாட்டியாக அமையும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மேற்கோள்கள்: https://www.theguardian.com/science/2023/may/08/dust-cloud-discovered-around-one-of-skys-brightest-stars?CMP=Share_AndroidApp_Other

https://www.nature.com/articles/s41550-023-01962-6

**

Pin It