“நாளும் ஒரு ஆப்பிள் பழத்தை நாடும் மனிதனை மருத்துவன் நாடமாட்டான்” என்றொரு பழமொழி உண்டு. பழமொழிகள் பொய்ப்பதில்லை என்பது மறுபடியும் மெய்பிக்கப்பட்டிருக்கிறது.

கார்னல் பல்கலைக்கழக பேராசிரியர் ரூய் ஹாய் லியு என்பவர் ஆப்பிள் பழம் பெண்களின் மார்பகப் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக தன்னுடைய ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கிறார்.

ஆப்பிள் பழம் மட்டுமல்லாது காய்கறிகளும் இதே பண்புகளைக் கொண்டிருப்பதாக இவரது கட்டுரை தெளிவாக்குகிறது. புதிய ஆப்பிள் பழச்சாறு கொடுக்கப்பட்டதால் எலிகளின் பால்சுரப்பிகளில் தோன்றிய கட்டிகள் சிறியதாகிப்போயின. ஆப்பிள் பழச்சாற்றின் அளவு கூடும்போது கட்டிகளின் அளவு இன்னும் சிறுத்துப்போனது. மேலும் இந்தக்கட்டிகள் தீங்கற்றவையாகவும் மாறிப்போயின. மனிதர்களிலும் விலங்குகளிலும் மார்பகப்புற்றுநோய்க்கு காரணமான adenocarcinoma எனப்படும் ஆபத்தான கட்டிகள் மரணத்தை விளைவிக்கக்கூடியவை. பேராசிரியர் லியு ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட விலங்குகளில் இந்த கட்டிகளின் பாதிப்பு 81 சதவீதமாக இருந்தது.

24 வாரங்களுக்கு நாளொன்றுக்கு ஓர் ஆப்பிள் பழத்தின் சாறு வீதம் கொடுக்கப்பட்ட விலங்குகளில் இந்த கட்டிகளின் பாதிப்பு 57 சதவீதமாக குறைந்தது.

நாளொன்றுக்கு மூன்று ஆப்பிள் பழங்களின் சாறு வீதம் கொடுக்கப்பட்ட விலங்குகளில் இந்த கட்டிகளின் பாதிப்பு 50 சதவீதமாகவும், நாளொன்றுக்கு ஆறு ஆப்பிள் பழங்களின் சாறு கொடுக்கப்பட்ட விலங்குகளுக்கு இந்த பாதிப்பு 23 சதவீதமாகவும் குறைந்து போயிருந்தது.

ஆப்பிள்பழங்களில் காணப்படும் phytochemicals எனப்படும் வேதிப்பொருள்கள் மார்பகப் புற்றுநோய் செல்களில் வீக்கத்தை ஏற்படுத்தும் NFkB என்ற பாதையை தடைசெய்துவிடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அன்றாட உணவில் பழங்களையும் காய்கறிகளையும் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால் பால்சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோய் கட்டுப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதே பொருள் குறித்து ஏற்கனவே பல ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இருந்தாலும் அந்தக் கட்டுரைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக கார்னல் பல்கலைக்கழக பேராசிரியர் லியு வின் புதிய ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது. பெண்களை அச்சுறுத்தும் மார்பகப் புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆற்றலை ஆப்பிள் பழத்தில் அதிகமாக உள்ள phenolics or flavonoids எனப்படும் phytochemicals பெற்றிருக்கின்றன என்பதை படம் தெளிவாக்குகிறது.

தகவல்: மு.குருமூர்த்தி