உடலின் அனைத்து வளர்சிதை மாற்றங்களும் நடைபெறும் மேடை கல்லீரல்தான்.

நம் உடலின் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல். இது ஒரு ஆச்சரியமான உறுப்பு என்று கூட கூறலாம். கல்லீரல் சுமாராக 36,000 பணிகளை அனாயசமாக, சும்மா போகிறபோக்கில் செய்கிறதாம். கல்லீரல் 80% சேதமடைந்தாலும் கூட, சாதாரணமாக பணி செய்யும். அதுபோலவே, 80% வெட்டி வெட்டி எடுத்துவிட்டாலும் கூட, அடுத்த 15 -20 நாட்களில் துரித கதியில் படுவேகமாக அதன் பழைய அளவுக்கே வளர்ந்து விடும். இதன் மீள்திறனும், தாக்குப் பிடிக்கும் தன்மையும் மாயாவி போலதான்.

கல்லீரலும் இதயம், மூளை போல முக்கியத்துவம் வாய்ந்ததுதான். இது இல்லாவிட்டால் நம்பாடு வெகு சிக்கலாகிவிடும். இது கருஞ்சிவப்பு நிறத்தில் வயிற்றில் பெரும்பகுதியை அடைத்துக் கொண்டு, கொழுக்மொழுக்கென்று இரு பகுதிகளாக இருக்கிறது. வலது பகுதி, இடதை விடப் பெரியது. கல்லீரலும் மூளையும் எடையில் சமமானவைகள். அதாவது 1400 கிராம்!

நம் உடலின் முக்கிய வேதித் தொழிற்சாலையும், சுத்திகரிப்பு தொழிசாலையும் இதுதான். நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையற்றதும், தீங்கு விளைவிப்பவையும் இருந்தால், அவற்றை உடனடியாக வெளியேற்றுகிற வேலையைச் செய்வது கல்லீரல்தான். அது மட்டுமல்ல உண்ணும் உணவை, உடலுக்கு வேண்டிய வடிவத்தில் மாற்றிக் கொடுப்பதும் கல்லீரல் தான். நம் உடனடி தேவைக்குப் போக, உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிளைகோஜனாக சேமித்து வைக்கப்படுவதும் இங்கேதான். உடலில் தேவைக்கேற்ப, தேவையான இடத்தில் தேவையான அளவு, தேவையான நேரத்தில், குளுகோஸை அவ்வப்போது விநியோகம் செய்வதும் கல்லீரல்தான்.

நம் உடலுக்கு வேண்டாத பொருள் அனைத்தையும் பிரித்து, கரைத்து இரத்தத்தின் வழியே சிறுநீரகத்துக்கு அனுப்பி வெளியேற்ற உதவுகிறது. மருந்து, மாத்திரை, வைரஸ், பாக்டீரியா போன்றவற்றை கல்லீரல் கரைக்கா விட்டால், சிறுநீரகம் அவற்றை வெளியேற்ற முடியாது. உடலில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் யூரியாவையும் சேகரித்து அனுப்புகிறது.

எண்ணெய்ப் பொருள்களை சீரணம் செய்வது கல்லீரல்தான். இதிலுள்ள பித்தப் பையின் சுரப்பி நீரான பித்தநீர் தான், எண்ணெய் மற்றும் கொழுப்பை உடைத்து சீரணம் செய்கிறது. அதனால்தான், மஞ்சள் காமாலை வந்தால், மருத்துவர் உடனடியாக பால் பொருள்கள், எண்ணெய் வஸ்துக்களை நிறுத்தச் சொல்கிறார். ஏனெனில் மஞ்சள் காமாலை என்பது ஹெபடிடிஸ்(Hepatitis) A, B & C போன்ற வைரஸ்களால் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவது.

புரதத்தை உடல் உட்கிரகிக்கும் எளிதான அமினோ அமிலங்களாக கல்லீரல் மாற்றித் தருகிறது. கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A, D, E & K யின் சேமிப்பு கிடங்கு இதுதான். கொழுப்பின் உற்பத்திக் கலனும்/களனும் இங்கேதான். இரத்தம் உறைவதற்கான உதவி செய்பவதும் கல்லீரலே. நாம் சாப்பிடும் வலிநிவாரணி உட்பட அனைத்து வகை மருந்துகளையும் பிரித்து பிரித்து ஆய்வது கல்லீரலே!

கல்லீரலில் இரண்டு பெரிய இரத்தக் குழாய்கள் உள்ளன. அதன் உதவியால்தான் இத்தனை பணிகளும் நடக்கின்றன. இந்த உறுப்பில் 96% நீர்தான் உள்ளது. இதன் மீள் திறனும், பணிப் பளுவும் அளப்பரியது. எனவே நல்ல உணவு உண்டு, நிறைய நீர் அருந்தி, நல்ல உடற்பயிற்சி செய்து கல்லீரலை காக்க வேண்டியது மிக மிக அவசியம். கல்லீரல் நன்கு வேலை செய்யவில்லையென்றால், தோலும், கண்ணும், நகமும் மஞ்சளாகிவிடும். மலம் வெள்ளையாக இருக்கும். சில வைரஸ் பாதிப்புகள், சில மருந்துகள், மதுபானம் போன்றவை கல்லீரலை சிர்ரோசிஸ் (cirrhosis) வந்து செயலிழக்கச் செய்துவிடும். மாசு கலந்த காற்று, மன அழுத்தம், உடல் பருமனும் கூட கல்லீரலைப் பாதிக்கும். சர்க்கரை நோய், மன அழுத்தம், உடல் பருமன், மஞ்சள் காமாலை போன்றவை கல்லீரலில் கொழுப்பு உருவாக வழி வகுக்கும். பாதிக்கப்பட்ட கல்லீரலை, கல்லீரல் மாற்று சிகிச்சை மூலம் சரி செய்யலாம். குடும்பத்தினர்/இரத்த உறவினர்தான் கல்லீரல் தரவேண்டும். கல்லீரலும் புற்றுநோய் பாதிப்புக்கு ஆட்படும்.

■1997ல் லண்டனில் 5 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இப்போதும் அவர்கள் நன்றாக உள்ளார்கள். இதுதான் உலகிலேயே, கல்லீரல் மாற்று சிகிச்சை செய்த குறைந்த வயது குழந்தைகள்.
■அமெரிக்காவில் சிரோசிசால் இறப்பவர்கள் வருடத்திற்கு 25,௦௦௦000.
■இந்தியாவில் சிர்ரோசிஸ் இறப்பு: 2007ல் 1776; 2008ல் 1965; 2009ல் 2048.

ஏப்ரல் 19 அன்று உலக கல்லீரல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மக்களிடையே கல்லீரல் பற்றிய விழிப்புணர்ச்சி உருவாக்கவும், இந்த அற்புத உறுப்பைக் காப்பாற்றவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இப்போது மக்களுக்கும் மற்றும் உடல் பாதுகாப்புத் துறையில் இருப்பவர்களுக்கும் கூட கல்லீரல் மற்றும் அதன் நோய்கள் பற்றிய தகவலையும் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது என ஐக்கிய நாட்டு சபை கருதுகிறது. அதற்காகவே, இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

Pin It