நோயினால் வரும் பக்க விளைவுகள்:

இந்நோயின் அறிகுறியாக மூட்டு வலி, உடலில் தடிப்பு, சிறுநீரில் இரத்தம், புரதம் போன்றவைகள் தோன்றக்கூடும். மூளை தாக்கப்பட்ட நிலையில் ஆழ்ந்த மயக்கத்திற்குச் செல்வார்கள். தன்னிலை தடுமாற்றம், நினைவிழப்பு, வயிற்றில் நீர், கால் வீக்கம் இருப்பின், ஈரல் பழுதுடன் மூளைப் பழுதும் ஏற்பட்டுள்ளது என்று பொருள். மூளை வீக்கம், செரிமான உறுப்புகளில் இரத்த ஒழுக்கு, சுவாசப் பழுது, இருதயப் பழுது முதலியவை களுடன் சிறுநீர் பழுதும் ஏற்படுவது, நோய் முற்றிய நிலையில் சாவை எதிர் நோக்கும் அறிகுறிகளாகும். இவ்வறிகுறிகள் தோன்றிய பிறகு சராசரியாக சுமார் 80 விழுக்காட்டினர் சாவைத் தழுவுகின்றனர்.

தீவிர தொற்று கல்லீரல் அழற்சி பி-யினால் தாக்குண்டவர் 3-லிருந்து 5-விழுக்காடு நாள்பட்ட கல்லீரல் அழற்சிக்கு ஆளாகி வாடுகிறார்கள்.

மருத்துவம் :

திடீர் கல்லீரல் அழற்சிக்கு ஓர் குறிப்பிட்ட மருத்துவம் இல்லை. இவ்வழற்சி தானாகவே சற்று ஓய்வுடன் இருக்க குணமாகிவிடும். இதற்கு நம் நாட்டில் நாட்டு மருத்துவமாக கீழாநெல்லி மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. இச்சமயத்தில் நாம் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.  இம்மருந்துகள் இவ்வகை மஞ்சள் காமாலையைக் குணப்படுத்துவதால் எல்லா வகைக்கும் இதே மருத்துவத்தைக் கொடுக்கின்றனர்.

மஞ்சள் காமாலை என்பது பல வகைப்படும். இதில் ஒரு வகையே இவ்வழற்சி ஆகும். ஆகவே, மஞ்சள் காமாலைக்காகச் சோதனை செய்து தகுந்த மருத்துவம் பெறுவது அறிவுடைமை ஆகும்.  நோயைச் சரிவரக் கண்டறியும் பொருட்டு சோதனை செய்ய மருத்துவ மனையில் நோயின் அறிகுறிகள் கூடுதலாக உள்ளவர்களையும், முதியவர்களையும் சேர்ப் பது அவசியம். நோய் உள்ளபொழுது உடல் உழைப்பு இன்றி இருப்பது அவசியம். இவர்களுக்குக் குமட்டல் இருப்பதால் அதிக அளவு கலோரி உள்ள உணவு அவசியம். வாய் வழியாக உணவு அருந்த முடியாத பொழுது சிரை வழியாக சில நேரங்களில் அதிக அளவு உணவை நீராகச் செலுத்த வேண்டும். கல்லீரலைத் தாக்கும் மருந்துகளைக் கொடுக்கக் கூடாது. உடல் அரிப்பு இருப்பின் கொலாஸ்டிரிமின் என்ற மருந்துகளைக் கொடுக்கவும். கார்டிசோன் மருந்து இந்த வகை நோய்க்கு ஏற்றதல்ல. கல்லீரல் அழற்சி பி-யின் பொழுது பரிசோதனைக்காக இரத்தம் ஊசி மூலம் எடுக்கும்பொழுது கை உறைகளை மாட்டிக் கொள்வது நலம். மருத்துவர்கள் நோயாளியைத் தொட்ட பின் கை கழுவுதல் அவசியம். அவர்களுடைய கழிவுப் பொருள் களை மிகக் கவனமாக அப்புறப்படுத்த வேண்டும்.

மாற்றுத் தடுப்பு முறை:

தொற்று கல்லீரல் அழற்சி ஏ-யைத் தடுப்பதற்கு இன்மியுனோகுளோபிலின் உதவுகிறது. இம்மருந்தை செவிலியர், மருத்துவர், மற்றும் நோயாளியுடன் உறவினர்களுக்கு 0.02 மிகி என்ற அளவில் கொடுக்கவேண்டும். இம்மருந்து இந்நோய்கள் உள்ள நாடுகளுக்குச் செல்லும் சுற்றுப் பயணிகளுக்கு அந்நாடுகளுக்குச் செல்வதற்கு முன்பு ஓர் தடுப்பு மருந்தாகக் கொடுக்க வேண்டும். கல்லீரல் அழற்சி பி-க்கு இம்மினோகுளோபிலின் இப்பொழுது தடுப்பு முறையாகக் கொடுக்கப் படுகிறது. இம்மருந்து 0.25-0.27 மிகி அளவு கொடுக்கவேண்டும்.

மருந்து நச்சுகளால் உண்டாகும் கல்லீரல் அழற்சி:

காற்று, உணவு அல்லது இரத்தக்குழாய் ஆகியவை மூலமாக உடலிற்குள் உள் செல்லும் வேதியல் பொருள்களினால் ஈரல் பழுது ஏற்படும். (எ.கா.) கார்பன் டெட்ரா குளோரைடு,டிரைகுளோர் எத்திலீன், மஞ்சள் பாஸ்பரஸ் மற்றும் அமனிட்டா, சாலிரினா போன்ற நச்சு நாய்க்குடை, இவைகளின்றி மருந்துகளும் இதய, ஈரல் பழுதை ஏற்படுத்து கின்றன. மருந்துகள் ஈரலை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கக்கூடும். கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தும் முக்கியமான மருந்துகள் பல. அவைகள் மயக்க மருந்தான ஹாலத்தேன் மற்றும் குளோர் புரோமோசிஸ் கருத்தடை மாத்திரை, டெட்ராசைக்கிளின், சுரத்திற்குத் தரப்படும் பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளாகும்.

இம்மருந்துகள் கல்லீரலைப் பல வழிகளில் தாக்குகின்றன. குறிப்பாக மிதையில் டெஸ்டோஸ்டிரோஸ், தைராய்டு எதிர்ப்பு மருந்தான மெத்திமசோல், எரித்ரோ மைசின் என்ற எதிர் உயிர் மருந்து, நார்யித் தினோடிரல்லுடன், மெனஸ்புரோலாக் என்ற கருத்தடை மருந்து, குளோரோபுரோமைடு போன்ற நீரிழிவு மாத்திரைகள் மற்றும் குளோரோ புரோமிசின் என்ற மன அமைதி மருந்துகள் ஈரலில் பித்த நீர் தேக்கத்தை உண்டாக்கி அழற்சியை ஏற்படுத்தும். டெட்ராசைக்கிளின் என்ற எதிருயிர் மருந்து ஈரலில் கொழுப்பை அதிகமாக்கும். ஹாலத் தேன் (மயக்க மருந்து) டைபிளேஹட் டாசின்(வலிப்பு எதிர்ப்பு மருந்து) மித்தயில் டோப்பா(மிகை இரத்த அழுத்த மருந்து) ஐசோனியாசைட்(காசநோய் மருந்து) குளோரோதைசைடு(நீர்ப்பெருக்கி மருந்து) ஆகியவைகள் கல்லீரல் அழற்சியை உண்டாக் கும். கார்பன் டெட்ரோ குளோரைடு, மஞ்சள் பாஸ்பரஸ், அமினிட்டா என்ற நாய்க்குடை, அசிட்டபினபின் என்ற வலிபோக்கி மருந்து முதலியவைகள் கல்லீரல் அழிவு ஏற்பட உதவும். ஆகவே, மருத்துவ ஆலோசனை இன்றி மருந்து உண்ணக் கூடாது.

நாள்பட்ட தீவிர கல்லீரல் அழற்சி:

இவ்வகை ஈரல் அழற்சியில் ஈரல் அழிவு-அழற்சி-இறுக்கம் முதலியவைகள் ஏற்பட்டு சிரோசிஸ் என்ற ஈரல் இறுக்க நோயை உண்டாக்கும். அல்லது இவ்வழற்சி யுடன் சிரோசிஸ் நோயும் சேர்ந்து காணப்படும்.

இந்நோயைக் கண்டறிய அறிகுறிகளால் முடிந்தாலும் திசுப் பரிசோதனை மூலமே நோயைச் சரிவர மற்ற நோய்களிலிருந்து வேறுபடுத்தி அறிய முடியும்.

நாள்பட்ட தீவிர கல்லீரல் அழற்சிக்கு மூலகாரணம் கல்லீரல்-பி, நான்-பி, நான்-ஏ. கல்லீரல் நுண்ணுயிரிகள் தொற்றுடன் காணப்படும்பொழுதே ஏற்படுகிறது. மேலும் சிறுநீரக மாற்று அறுவை மற்றும் மலமிளக்கி மருந்து ஆன்சிபினிசடின், மிகை இரத்த அழுத்த நோய் மருந்து கூடுதல் மற்றும் காசநோய் மருந்து ஐசோநியாசிட் போன்ற வைகளாலும் ஏற்படும்.

இவ்வகை நோயின் பொழுது ஈரல் செல்கள் தொடர்ந்து அழிவுறுவது அவர்களின் உடலில் காணப்படும் நோய் எதிர்ப்புத் தன்மைக்கும், ஜீன்களுக்கும் ஏற்படும் ஓர் தொடர்புடைய செயலாகவே கருதப்படுகிறது.

(அறிவியல் ஒளி - 2012 ஜனவரி இதழில் வெளியான படைப்பு)

Pin It