கீற்றில் தேட...

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ சிகிச்சை வடிவில் சைனாவில் துளையீட்டு மருத்துவமுறை (Acupuncture) தோன்றிற்று. அன்று முதல் சீனர்களால் வழக்கமாகப் பின்பற்றப்படுகிறது.

acupuncture_370மனித உடலிலுள்ள 360 குறியிடங்களில் ஒன்றிலோ பலவற்றிலோ சிறிய உலோக ஊசிகளைச் சொருகிச் செயல்படுத்துவதில் இந்தச் சிகிச்சை முறை அமைந்துள்ளது. இந்தக் குறியிடங்கள் ஒவ்வொன்றையும் இங்கிங்குள் ளன என இடப் பெயரினைப் பழைய சீன மருத்துவர்கள் வழங்கியுள்ளனர். அந்த ஒவ்வொரு குறியிடமும் குறிப்பிட்ட செயல் கடமையையோ (functions) உடலின் ஓர் உறுப்பையோ சார்ந்ததாகும். அதற்கேற்ப ஓர் இருதயம் அல்லது ஒரு நுரையீரல் வரிசை, குறிப்பிட்ட உறுப்பிற்குத் தொடர்புபடுத்தும் பொருத்தமான குறியிடங்களைச் சேர்க்கும் வழி அமைப்பில் இருக்கக்கூடும். ஒரு நோயாளி கண் நோய்த் தொல்லையுடைய வராயிருந்தால் கட்டாயமாகக் கண்ணிலோ கண்ணருகிலேயோ இருக்கவேண்டுமென்ப தில்லாமல் கண்ணுக்குத் தொடர்புள்ள கண் வழியில் (line) துளையீட்டு ஊசிகளைச் சொருகினால் போதுமானது. துளையீட்டு ஊசிகள் ஆழமாகச் செல்ல வேண்டியதில்லை. அவை வலியையும் தோற்றுவிக்கா. ஒருமுறை சிகிச்சை செய்யப் பத்து நிமிடங்களுக்கு மேல் தேவைப்படாது.

எவ்வாறு துளையீட்டு மருத்துவமுறை வேலை செய்கிறது என்பது குறித்துத் தெளிவாக ஏதும் தெரியாது. ஆனால் சில அறிவியலார்கள் துளையீட்டு ஊசிகள் நரம்புகளைச் சார்ந்த நோய்களுக்கு விடுவிப்புத் தரக்கூடும் எனக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்த நூற்றாண்டு முதல் இந்தச் சிகிச்சைமுறை மேற்கு நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் வெகுவான ஐயுறவுக் கோட்பாடு இருந்தது. ஆனால் சமீப காலமாகத் துளையீட்டு மருத்துவமுறை பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நோயைப் போக்கிச் சீர்படுத்துவதுடன் அசையாமல் பயனுடைய வடிவில் மயக்க மருந்தாகவும் இருப்பது காணப்பட்டுள்ளது.