நாள்தோறும் வழக்கமாக குறைந்த அளவுள்ள ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிட்டு வருபவர்களுக்கு பலவிதமான புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இது வழக்கமாக தினசரி ஆஸ்பிரின் 75 மி.கி (Low dose) க்கு மிகாமல் தொடர்ந்து ஐந்து வருடங்களும், அதற்கு மேலும் சாப்பிடுபவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும் எனத் தெரியவருகிறது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பீட்டர் ராத்வெல் தெரிவித்த ஆராய்ச்சியின் முடிவு: (ஆதாரம்:லான்செட் (Lancet) என்ற டிசம்பர், 6, 2010 தேதியிட்ட மருத்துவ இதழ்)

உடலில் உள்ள ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைவதால் ஏற்படக் கூடிய மாரடைப்பு (Heart attacks) மற்றும் பக்கவாதத்தை (Strokes) தவிர்க்க, குறைந்த அளவு ஆஸ்பிரின் மாத்திரைகள் நாள்தோறும் கொடுத்து வருவது எந்த அளவு பயன் தரும் என்று ஆய்வு செய்யப்பட்டது. பேராசிரியர் பீட்டர் ராத்வெல்லின் மற்றொரு ஆய்வின்படி, குறைந்த அளவு ஆஸ்பிரின் உட்கொள்வதால் உடலின் பல பகுதிகளில் ஏற்படும் புற்று நோய்களின் தாக்கம் குறைந்து, அதனால் ஏற்படும் மரணங்களும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிய வந்தது.

ஏற்கெனவே மாரடைப்பு மற்றும் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், மறுபடியும் பாதிக்கப்படலாம் என்ற நிலையில் (குறைந்த அளவு ஆஸ்பிரின் கொடுப்பதால் வயிற்றிலிருந்து ரத்தக் கசிவு ஏற்படலாம் என்ற பின்விளைவையும் மனதில் கொண்டு) எச்சரிக்கையாக ஆஸ்பிரின் கொடுக்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனாலும், இரத்தக் குழாயில் ரத்த உறைவு ஏற்பட்டு மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய் வரலாமெனக் கருதி, அதைத் தவிர்க்க முன்னெச்சரிக்கையாக ஆஸ்பிரின் தருவதை வழக்கமாக்கக் கூடாது என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

உணவுக் குழாய்ப் பகுதி (Esopahgus), வயிறு, கணையம், பெருங்குடல், நுரையீரல், மூளை ஆகிய பகுதிகளில் ஏற்படும் புற்று நோய்களால் ஏற்படும் மரணம் 20 - 30 % குறைவதாகத் தெரிய வந்தது.

ஆஸ்பிரின் சாதாரணமாக முன்னெச்சரிக்கையாக அனைவருமே தொடர்ந்து சாப்பிட்டு வரலாமா என்றால், வயிற்றில் குடல் புண் (Gastric ulcer) உள்ளவர்களுக்கு இரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறார்கள்.

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It