இந்தியாவின் 85 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இந்திய அணியில் விளையாடிய 289 ஆண் கிரிக்கெட் வீரர்களில், 4 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்கள். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில், கறுப்பின மக்களின் குறைவான பிரதிநிதித்துவம் கருத்தில் கொள்ளப்பட்டதைப்போல, இந்தியா வில் தாழ்த்தப்பட்ட கிரிக்கெட் வீரர்களின் குறைவான பிரதிநிதித்துவம், கண்டுகொள்ளப் படவில்லை. தென்னாப்பிரிக்க விளையாட்டுத் துறையின் தூண்டுதலால், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம், கறுப்பர்களுக்கான இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது. இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்துவதற்கு முன்பு வரை, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம், எந்த சர்வதேச போட்டியையும் நடத்த அனுமதிக்கப் படவில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்திய குடியரசு கட்சி தலைவர் ராமதாஸ் அத்வாலே (மத்திய அமைச்சர்), கிரிக்கெட்டில் இடஒதுக்கீட்டை கொண்டுவர தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். ஆனாலும், இந்த சிக்கலைப் பற்றி இதுவரை எந்த உயர்மட்ட கலந்துரையாடலும் நடைபெறவில்லை. கிரிக்கெட்டில், தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பதற்கான காரணங்களை இந்த கட்டுரையில் ஆராய்வோம்.

kohli cricketஇந்தியாவில் 17 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தும், வினோத் காம்பிளி, ஏக்னாத் சோள்கர், கர்சன் கவ்ரி, புவனேஷ்வர் குமார் ஆகிய நான்கு தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே, இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளனர். இந்திய ஜாதி அமைப்பின் கடைநிலையில் இருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள், தங்களுடைய ஜாதி அடையாளங்களை மறைத்து வாழும் நிலை இருப்பதால், இந்த நால்வரைத் தவிர வேறு தாழ்த்தப்பட்டவர்கள் யாரேனும், இந்திய அணிக்காக விளையாடியுள்ளனரா? என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் பார்ப்பனர்களோ, தங்கள் மக்கள்தொகையை விட மிக அதிக அளவில் கிரிக்கெட் அணியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பாரபட்சமான வீரர்கள் தேர்வுமுறை, பார்ப்பன வாழ்வுமுறைக்கு உகந்த வகையில் கிரிக்கெட் விளையாட்டின் (ஒருவருக்கொருவர் உடல்ரீதியாக மோதிக் கொள்ளத் தேவையற்ற) மெதுவான போக்கு ஆகியவையே இந்த ஆதிக்கத்துக்கான காரணமாக கூறப்படுகின்றன.

அறிஞர்களின் ஆய்வுகள்

தாழ்த்தப்பட்டவர்கள் குறைவான எண்ணிக்கையில் அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான சில காரணங்களை எழுத்தாளர் ராமச்சந்திர குஹா, தன்னுடைய “A corner of a foreign field: The Indian history of a british sport (2014)” என்ற ஆய்வு நூலில் முன்வைத்துள்ளார். 20 – ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, பல்வன்கர் பாலூ என்ற தாழ்த்தப்பட்ட கிரிக்கெட் வீரரும், அவருடைய மூன்று சகோதரர்களும், ஹிந்து ஜிம்கானா அணிக்காக விளையாடியுள்ளனர். 1932 – ஆம் ஆண்டு உலகின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடப்பதற்கு முன்பே, இவர்கள் ஓய்வு பெற்றுவிட்டனர். ஆனால், பிற்கால தாழ்த்தப் பட்டவர்கள், இவர்களை ஏன் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளவில்லை? என்றும் ராமச்சந்திர குஹா கேள்வியெழுப்பி யுள்ளார். விளையாட்டு வீரனாவதை விட, வழக்கறிஞராவதையும், மருத்துவராவதையும், அரசு அதிகாரியா வதையும், பேராசிரியராவதையுமே தாழ்த்தப் பட்டவர்கள் முக்கியமாக கருதியிருக்கலாம் என்றும் கருதுகிறார்.

குஹாவின் இந்த கருத்துக்கு நேரெதிரான கருத்தை, போரியா மஜும்தார் முன்வைக்கிறார். அவர் சர்வதேச விளையாட்டு வரலாற்று இதழில் எழுதிய, “Cricket in India: Representative playing fields to restrictive preserve (2006)” என்ற ஆய்வு கட்டுரையில், பல்வன்கர் பாலூவுக்கு கிடைத்த வாய்ப்பு, மற்ற தாழ்த்தப்பட்டவர் களுக்கு கிடைக்கவில்லை என்கிறார். இங்கிலாந்து அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கிரிக்கெட் இருந்தவரை, தாழ்த்தப்பட்டவர் களுக்கு நல்ல பிரதிநிதித்துவம் இருந்ததாகவும், பிற்காலத்தில், தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனதற்கு, பிற்கால இந்தியாவின் பெரு ‘கார்ப்பரேட்’ நிறுவனங் களின் ஆதரவே காரணமெனவும் சுட்டிக் காட்டுகிறார். பெருநிறுவனங்களின் கட்டுப் பாட்டுக்குள், கிரிக்கெட் விளையாட்டு சென்றதால், அது படித்த மேட்டுக்குடி நகர மக்களின் விளையாட்டாக மாறிப் போனதாக வும், இதுவே அணியில் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதித்துவ வீழ்ச்சிக்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். சமீபத்தில் இயக்குனர் சுசீந்திரனின் இயக்கத்தில் வெளியான “ஜீவா” (2014) என்ற தமிழ் திரைப்படத்தில், வீரர்களை தேர்வு செய்யும்போது, பூணூலை அணிந்துள்ளனரா? என்பதை அறிய, முதுகைத் தடவிப்பார்க்கும் முறையை வெளிப்படையாக காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“கிரிக்கெட்டில் வியர்வை சிந்த வேண்டிய தில்லை; பிறரைத் தொட வேண்டியதில்லை; சுறுசுறுப்பும் தேவையில்லை. இவை பார்ப் பனர்களின் சோம்பேறித்தனமான வாழ்க்கை முறைக்கு பொருத்தமாக இருப்பதாலேயே, ஒட்டுமொத்த கிரிக்கெட் விளையாட்டு துறையுமே பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. குறிப்பாக, 1960-1990 வரை, 11 பேரைக் கொண்ட இந்திய அணியில், ஏறத்தாழ 6 பேர் பார்ப்பனர்களாக இருந்துள்ளனர். சில நேரங்களில் 9 பேர் வரை பார்ப்பனர்கள் அணியில் இடம்பெற்ற வரலாறும் உண்டு. சோம்பேறித்தனமான கிரிக்கெட் அணியின் நிலை இவ்வாறு இருக்கையில், இந்தியாவின் தேசிய விளையாட்டான சுறுசுறுப்பான ஹாக்கி அணியிலோ, பார்பனரல்லாதோரே பெரும் பான்மையாக இருந்து, விளையாடி வருகின்றனர்.” “கிரிக்கெட் அதிக நேரத்தை விரயமாக்கும் விளையாட்டாக இருப்பதால், அது மேட்டுக்குடியினரின் விளையாட்டாக மாறிவிட்டது” என்ற எழுத்தாளர் ஆன்ட்றூ ஸ்டீவென்சனின் கருத்தும், போரியா மஜும் தாரின் கருத்துக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

தெருவோரங்களில், சிறுவர்கள் விளை யாடும் கிரிக்கெட் விளையாட்டுகளில், மட்டைக்குச் சொந்தக்காரனாக இருக்கும் சிறுவன், தானே முதலில் மட்டை வீச வேண்டுமென்றும், இதற்கு சம்மதித்தால் மட்டுமே, தன்னுடைய மட்டையை பிறருக்கு விளையாடத் தருவதாகவும் நிபந்தனை விதிப்பதுண்டு. இதே போல்தான், முற்கால இங்கிலாந்து கிரிக்கெட் அணியிலும், பணம் படைத்தவர்கள் மட்டை வீசுபவர்களாகவும், பணம் இல்லாமல், கிரிக்கெட் சங்கத்தின் பணத்தில் விளையாடுபவர்கள் பெரும்பாலும் பந்து வீசுபவர்களாகவும் இருந்தனர். இதே நடைமுறை, பல்வேறு வடிவங்களில் இன்றும் பல அணிகளில் தொடர்கிறது. தென்னாப்பிரிக்க அணியில், வசதியான வெள்ளையர்கள் பெரும்பாலும் மட்டை வீசுபவர்களாகவும், ஏழையான கறுப்பர்கள் பெரும்பாலும் பந்து வீசுபவர்களாகவும் இருக்கின்றனர். கிரிக்கெட் விளையாட்டு உருவாக்கப்பட்டு ஒரு நூற்றாண்டு கடந்துவிட்ட நிலையில், 2014 – இல் தான் முதன்முறையாக ஒரு கறுப்பர் (டெம்பா பவுமா), தென்னாப்பிரிக்க அணியில் மட்டை வீச்சாளராக களம் இறங்கினார். தென்னாப்பிரிக்க கறுப்பர் நிலையில் தான் இந்திய தாழ்த்தப்பட்டவர்களும் இருக்கின்றனர்.

பூனா கிரிக்கெட் சங்கத்தில், 100 மணி நேரம் பந்து வீசியும், தனக்கு ஒரு முறை கூட மட்டை வீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற தகவலை, தாழ்த்தப்பட்ட கிரிக்கெட் வீரர் பல்வன்கர் பாலூ, தன் மகனிடம் பதிவு செய்து விட்டு சென்றிருக்கிறார். தண்ணீர் அருந்த, பாலூவுக்கு தனி குவளையும், அணியின் பார்ப்பன முன்னேறிய மற்றும் பிற்படுத்தப்பட்ட வீரர்களுக்கு தனி குவளையும் வழங்கப்பட் டுள்ளது. ஜாகீர் கான், மொகமது அசாருதீன், இர்ஃபான் பதான் போன்ற இஸ்லாமிய கிரிக்கெட் வீரர்கள், மற்ற இஸ்லாமியர்களுக்கு, முன்மாதிரியாக இருப்பதைப் போல, தாழ்த்தப்பட்ட கிரிக்கெட் வீரர் ஒருவர் கூட, மற்ற தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்மாதிரியாக இல்லாத சூழல் நிலவுகின்றது.

இஸ்லாமியர் பிரதிநிதித்துவ நிலை

1970களில் 48 சதவீத டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள், மும்பை, சென்னை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய 6 நகரங்களைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர். இந்த நிலை மாறி, இன்னும் பல ஊர்களில் இருந்து வீரர்கள் தேர்வாகும் நிலை ஏற்பட்ட பின் தான், இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்தது. 1950-1990 வரை, தன்னுடைய முதல் கிரிக்கெட் போட்டியை விளையாடிவர்களில், வெறும் 4% பேர் மட்டும் தான் இஸ்லாமியர்கள். பெருநகரங்களின் ஆதிக்கம் குறைந்த பின், 21ஆம் நூற்றாண்டில், இந்த விழுக்காடு 12.5% ஆக உயர்ந்தது.

பெண்கள் கிரிக்கெட்டின் நிலை

ஆண்களின் கிரிக்கெட், ரஞ்சி கோப்பை போட்டிகள், பெருநிறுவனங்கள் மோதும் போட்டிகள், இலாபநோக்கோடு விளையாடும் ஐ.பி.எல் போட்டிகள் என்று பெரு நிறுவன மயமாகிவிட்ட நிலையில், பெண்களின் கிரிக்கெட்டோ, பெரும்பாலும் அரசு நிறுவனங் களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இந்திய பெண்கள் அணியின் 15 பேர் கொண்ட குழுவில், 10 பேரைத் தேர்ந்தெடுத்து அனுப்புவது, ஓரளவு சமூகநீதியை பின்பற்றும் இந்திய இரயில்வே துறையாகும். இதனால் தான், ஆண்கள் அணியைப் போல் இல்லாமல், பெண்கள் அணி கணிசமான அளவு தாழ்த்தப் பட்டவர்களைக் கொண்டுள்ளது. இது ராமச்சந்திர குஹாவின் கருத்தை தவறாக்கி, போரியா மஜும்தாரின் கருத்தை சரியாக்கி இருக்கிறது.

இடஒதுக்கீடே தீர்வு

தென்னாப்பிரிக்காவில் கடைநிலை கிரிக்கெட் போட்டிகளிலேயே முறையான இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இரண்டாம் நிலை போட்டிகளுக்கு, இடஒதுக்கீட்டின்படி ஆட்கள் தேவைப்படும் போது, கடைநிலை வீரர்களிடம் இருந்து, சுலபமாக வீரர்களைத் தேர்ந்தெடுக்க முடிகிறது. இதே போல், முதல்நிலை போட்டிகளுக்கு, இரண்டாம் நிலையில் இருந்தும், மூன்றாம் நிலையில் இருந்தும் வீரர்களை தேர்ந்தெடுப்பது சுலபம் ஆகிறது. ஆள் பற்றாக்குறையும் ஏற்படுவ தில்லை. இடஒதுக்கீட்டால் திறமை போய்விடும் என்று பல மூத்த, ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களும், விமர்சகர்களும் நினைத்தனர். ஆனால், தென்னாப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணியோ, தரவரிசைப் பட்டியலில், 7 – ஆம் இடத்தில் இருந்து, 2 – ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. எனவே, இந்த இட ஓதுக்கீட்டு முறையை இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசிய மாகிறது. இதை இந்திய கிரிக்கெட் சங்கமே நடைமுறைப்படுத்தலாம். சங்கம் இதை நடைமுறைப்படுத்த மறுக்கும்பட்சத்தில், நீதிமன்றமே முன்நின்று, தாழ்த்தப்பட்டவர் களுக்கான இடஒதுக்கீட்டுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்

சட்டச் சிக்கல்கள்

உச்சநீதிமன்றம், சட்டவிதி எண்32 – இன்படி, ஒரு பொதுத்துறை நிறுவனத்துக்கு சில உத்தரவுகளை இட முடியும். உயர்நீதிமன்றமும், விதி எண் 226 இன் கீழ் உத்தரவுகளை இட முடியும். விதிகள் 14 – 16 இல் குறிப்பிடப்பட்டுள்ள சமத்துவத்துக்கான உரிமைகளின் அடிப்படை யில் இந்த உத்தரவுகள் இருக்கலாம். உச்சநீதி மன்றம் பயன்படுத்தும் விதி எண் 32, பொதுத் துறை நிறுவனங்களுக்கானது; பொது அமைப்பு களுக்கானது. ஆனால், உயர்நீதி மன்றங்கள் பயன்படுத்தும் விதி எண். 226, பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, தனிநபர் களுக்கும், இன்னபிற அதிகார மையங்களுக்கும் பொருந்தும் விதியாகும்.

எந்த விதியைப் பயன்படுத்துவது என்று தெரிய வேண்டுமென்றால், இந்திய கிரிக்கெட் சங்கம் (BCCI) ஒரு பொதுத்துறை அமைப்பா? தனியார் அமைப்பா? என்பது தெரிய வேண்டும். ஜீ தொலைக்காட்சிக்கும், மத்திய அரசுக்கும் இடையே 2005 – இல் நடந்த வழக்கில், சட்ட விதி எண் 12 – இன்படி, இந்திய கிரிக்கெட் சங்கம், மாநில, மத்திய அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொது சங்கம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. எனவே, உச்சநீதிமன்றம், விதி எண். 32 – ஐ பயன்படுத்தி, இந்திய கிரிக்கெட் சங்கத்திற்கு உத்தரவிட முடியாது. ஆனால், அணியின் செயல்பாடுகள், வீரர்ர்கள் தேர்வு ஆகிய பொதுக் கடமைகளை, இந்திய கிரிக்கெட் சங்கம் செய்வதால், உயர்நீதிமன்றங்களால், இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு உத்தரவிட முடியும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2015 – இல் இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கும், பீஹார் கிரிக்கெட் சங்கத்துக்கும் இடையே நடந்த வழக்கிலும், இது உறுதியாகின்றது. எனவே, நீதிமன்ற வழிமுறைகளின்படி, அடிப்படை உரிமையான இடஒதுக்கீட்டை நீதிமன்றங் களால் கொண்டுவர முடியும்.

அதே வேளையில், சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் (ஐ. சி. சி.) விதி எண். 2.9 – இன் படி, ஒரு நாட்டின் கிரிக்கெட் சங்க நடவடிக்கைகளில் அரசு தலையிட்டால், அந்த நாட்டின் கிரிக்கெட் சங்க அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியும். ஆனால், தென்னாப்பிரிக்க அணியில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்த போது, ஐ.சி.சி. செய்தி தொடர்பாளர் ஃபர்லாங்க், இதில் தலையிட முடியாது என்றும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம், அரசின் தலையீட்டை குற்றச்சாட்டாக வைத்தால் மட்டுமே தலையிட முடியும் என்றும் கூறிவிட்டார். இந்தியாவில் நடைபெற்ற லோதா குழு வழக்கில் (2015), இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு எதிரான உச்சநீதிமன்ற; தீர்ப்பை, அரசின் தலையீடாக எடுத்துக் கொள்ளுமாறு, பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாகூர், ஐ.சி.சி. தலைவர் ஷஷாங்க் மனோகரிடம் முறையிட்டார். ஆனால், இந்த முறையீட்டால், உச்சநீதிமன்றம், அவருடைய பதவியைப் பறித்தது (2017). அதே நேரத்தில், ஐ. சி. சியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை, அரசின் தலையீடாக ஏற்காமல், இந்த விவகாரத்தில் தலையிட மறுத்து விட்டது. எனவே, நீதிமன்றங்கள் துணிந்து நின்று, இடஒதுக்கீட்டு முறையை, கிரிக்கெட் விளையாட்டில் கொண்டு வர வேண்டும்

(Economic and Political Weekly ஆய்விதழில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு)

தமிழில்: ம.கி.எட்வின் பிரபாகரன்

Pin It