ravana leela

கலகக்காரர் தோழர் பெரியார் திராவிடர் இனநலத்திற்காக, பார்ப் பன சனாதன மதமான இந்துமதத்தின் அடிப் படையைத் தகர்த்து எறியும்படி நடத்திய “இராவண லீலா” எனும் பண்பாட்டுப்புரட்சி நிகழ்வை இளைய தலைமுறை விளக்கமாக அறியவேண்டும்.

பெரியாரின் மறைவுக்குப் பிறகு, இந்திய வரலாற்றில் ஒரு சமுதாய புரட்சி இயக்கத்திற்குத் தலைமை தாங்கி, கடுமையான பல எதிர்ப்புகளைக் கடந்து திராவிடர் கழகத்துக்குத் தலைமை ஏற்ற அன்னை மணியம்மையார் போர்க்குணத்தோடு இயக்கத்தை வழி நடத்தினார்.

அந்தக் காலகட்டத்தில், .மத்திய அரசு 26.06.1975 இல் நாட்டில் நெருக்கடி நிலையை அமுலாக்கி செய்தித்தாள்கள் தணிக்கைக்கு உள்ளாகும் என்ற ஜனநாயகப் படுகொலையைத் துவக்கியது. 08.07.1975 இல் நெருக்கடி நிலைக்கு எதிராக விடுதலையில் தலையங்கம் தீட்டினார்.

மத்திய அரசின் அடக்கு முறைக்கு எதிராக ஊடகத்துறையில் எழுதப்பட்ட முதல் தலையங்கம் இதுவே ஆகும்.

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தசராப்பண்டிகை நாளில் வடபுலத்தார் டில்லி மாநகரிலேயே திராவிடப்பெரு வீரர்கள் இராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் உருவங்க ளுக்குத் தீமூட்டி திருவிழாக் கொண்டாடுகிறார்கள். அதிலே இந்தத் தேசத்தின் உச்சாணிப் பதவியிலே அலங்காரம் செய்து கொண்டிருக்கக் கூடிய ஜனாதிபதி, பிரதமர் போன்றவர்களும் கலந்து கொண்டு மகிழ்கிறார்கள் என்ற செய்தி ஊடகங்கள் மூலம் அன்னை மணியம்மையாரை வந்தடைந்த வுடன், திராவிடர் இனத்தை அவர்கள் எவ்வளவு கேவலமாக எண்ணியிருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று வெகுண்டெழுந்தார்.

திராவிடர்களின் சுயமரியாதை உணர்வைத் தீயிட்டு மகிழும் அந்தக் கூட்டத்திற்கு ஒரு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். நமது தன்மான உணர்வின் தலையிலே கால்வைத்து மிதிப் பவர்களின் சந்ததி உள்ளவரை மறக்காமல் இருக்கும்படி ஒரு பாடத்தைப் போதிக்கவேண்டும் என்ற உணர்வு, சுயமரியாதைக் கருவிலே பிறந்து, சுயமரியாதை ஊட்டத்திலே வளர்ந்த திராவிடர் கழகத்திற்கு ஏற்பட்டதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

இராமன் எரிப்பு நமக்குப் புதிதல்ல

1956 இல் ஒரு முறையும், 1966 இல் ஒரு முறையும் நாடெங்கும் இராமனையும், இராமாயணத்தையும் எரித்துக்காட்டியவர்கள் தான் நாம்! அப்படியும் அவர்களுக்குப் புத்திவரவில்லை என்றால் அதற்கு அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டியதுதானே நியாயம்! மயிலே மயிலே என்றால் இறகு போடுமா? மாநிலத்தின் மக்களை எல்லாம் ஒன்றுகூட்டி, கருஞ்சட்டைப் பட்டாளத்தை எல்லாம் அணி வகுக்கச் சொல்லி அந்த ஆரிய இராமனாதியர்களை மான பங்கப்படுத்தினால் தான் அவர்களுக்குப் புத்தி வருமா.... அல்லது ஆங்காங்கே துண்டு துண்டாக எதிர்ப்பைக் காட்டினால் புத்திவருமா?

பிரதமருக்கு பொதுச் செயலாளர் கடிதம் - இராமலீலாவைத் தடை செய்க....!

17.10.1974 அன்று திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கி.வீரமணி அவர்கள் இந்தியப் பிரதமர் மாண்புமிகு திருமதி இந்திராகாந்தி அம்மையார் அவர்களுக்கு ஒரு நீண்ட விளக்கமான கடிதத்தை எழுதினார்.

அக்கடிதத்தில், “இந்திய அரசு இராமலீலா விழாவிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பிரதமர், ஜனாதிபதி போன்ற முக்கியமானவர்கள் அதில் கலந்து கொள்ளக்கூடாது.மீறி நடந்தால் வருந்தத்தக்க நடவடிக்கைகளை நாங்களும் மேற் கொள்ள வேண்டிவரும்”

இராமலீலாவைத் தடை செய்யாவிட்டால் “இராவணலீலா” நடந்தே தீரும். மூலை முடுக்குகளில் எல்லாம் இராமன், சீதை உருவங்கள் கொளுத்தப் படும் என்று முறையான வேண்டுகோளும் எச்சரிக்கையும் உள்ளடக்கி திராவிடர் இனத்தவரின் சுயமரியாதை உணர்வு கூர் தீட்டப்பட்டு பிரத மருக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.

 பிரதமர் அவர்களிடமிருந்து தக்க பதில் வராத நிலையோடு மட்டுமில்லாமல், இராமலீலா நடப்பது உறுதி என்றும், அதில் வழக்கம்போல் ஜனாதிபதியும், பிரதமரும் கலந்து கொண்டு மகிழ இருக்கிறார்கள் என்ற செய்தியும் பத்திரிகைகளின் பத்திகளை அடைந்தன.

உடல் நலமற்று சென்னை பொது மருத்துவமனையில் மருத்துவ உதவி பெற்று வந்த கழகத்தலைவர் அம்மா அவர்கள், அந்த நிலையிலும் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் அவசரத்தந்தி ஒன்று கொடுத்தார்கள்.

 “Your Participation in Ramalila.Burning the effigy of the great Dravidan hero Ravana,is Against all eannons of secularism and Highly Provolcing and insulting to millons of Dravidans hence Reguesting you to desist from this Dastardly ACT otherwise we Dravidans.Would be burning the effigies of Rama and you,on mass level throughout the length and breath of Tamilnadu“

தந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ‘You’ என்ற வார்த்தை ஜனாதிபதியையும் பிரதமரையும் குறிப்பிட்டு அவர்களது உருவத்திற்கும் தீவைக்கப் படும் என்று பொருள்படுவதால், தபால் தந்தித் துறையின் சட்ட விதிகளுக்குப் புறம்பானது என்றுகூறி அச்சொல் மறுக்கப்படவே, அச்சொல் நீக்கப்பட்டு அவசரத்தந்தி கொடுக்கப்பட்டது.

கழகத்தின் முறையீடுகள், வேண்டுகோள் ஆகியவற்றை புறந்தள்ளி திராவிடர் இனத்தின் சுயமரியாதையை நிராகரித்து அவமானப்படுத்தும் வகையில் அன்றைய மத்திய அரசு சர்வாதிகார மனோநிலையில் நடந்துகொண்டதை மறுநாள் செய்தித் தாள்களில் வந்த செய்திகள் கூறின.

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதுபோல் ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள் சைதன்யங்கள் புடை சூழ “இராமலீலா” வைபவம் ஜாம் ஜாம் என்று நடை பெற்ற செய்தி பத்தி பத்தியாக வந்தன! இராவணா தியர்கள் மட்டுமல்ல - அவர்களோடு கள்ளக்கடத்தல் மன்னர்களின் உருவப் பொம்மைகளும் சேர்த்துக் கொளுத்தப்பட்டிருக்கின்றன.

இதனிடையே இந்தியப் பிரதமர் இந்திரா அவர்களிடமிருந்து 28.10.1974 மற்றும் 04.11.1974 ஆகிய நாட்களில் கழகத்தலைவர் அன்னை மணியம்மை யாருக்கு இரண்டு பதில் கடிதங்கள் அலட்சிய மனோபாவத்தோடு தாமதமாக வந்து சேர்ந்தன. 28.10.1974 பிரதமர் இந்திரா எழுதிய பதில் கடிதத்தில்,

“இந்தியா மட்டுமின்றி ஆசியா முழுவதும் ‘தசரா’ கொண்டாடப்படுகிறது என்றும், இதில் இனத்துக்கு எதிரானது ஏதுமில்லை என்றும் திராவிடர் கழகத்தை நிறுவிய தலைவர் பெயரிலேயே இராமன் இருக்கிறது என்றும், “இராவணலீலா” நடத்துவதைக் கைவிட்டு நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகளில் கவனம் செலுத்துமாறும் அறிவுரை கூறியிருந்தார்.

04.11.1974 இல் மீண்டும் பிரதமர் இந்திராகாந்தி அன்னை மணியம்மையாருக்கு ஒருகடிதம் எழுதினார். அதில்

‘இராமலீலா’ குறுகிய இனப்பிரச்சனையோ, பிராந்தியப் பிரச்சனையோ இல்லை என்றும், மதச்சார்பின்மைக் கொள்கைக்கு முரணானது இல்லை என்றும் மீண்டும் கூறியிருந்தார். அதே நேரத்தில் கடவுள் மதத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் அவர்களது நம்பிக் கையை வலியுறுத்துவதற்கும் உரிமை உண்டு” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த இரண்டு கடிதங்களும் கழகத் தலைமைக்கு எந்த விதத்திலும் சமாதானம் கூறாமல் தாங்கள் நடத்திய இராமலீலா சரியானது எனவும் உங்களால் முடிந்ததைப்பார்த்துக்கொள்ளுங்கள் என சொல்லும் வகையிலும், எரியும் நெருப்பில் நெய் ஊற்றியதுபோல திராவிடர்களின் போராட்ட உணர்வை சீண்டிப் பார்க்கும் வகையிலும் அமைந்திருந்தது. அதன் எதிரொலியாக அடுத்து 30.10.1974 இல் “அன்போடும் உரிமையோடும்” என்ற தலைப்பில் அன்னை மணியம்மையார் எரிமலை வெடித்தது போல் கழகத் தோழர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அன்போடும் உரிமையோடும்

“அருமை இயக்கத் தோழர்களே மருத்துவமனையிலே இருந்து கொண்டே இதை நான் எழுதுகிறேன். நமது இலட்சியங்களை இதுநாள் வரை வெறும் அலட்சியத் தாலே கொன்று விடலாம் என்று கருதி வந்த டெல்லி ஆட்சியின் தலைவர்கள் இனி அது முடியாது என்பதை நல்ல வண்ணம் உணர்ந்து கொண்டார்கள் என்பதற்கு அடையாளம் நாம் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு உடன் பதில் வந்திருப்பதே போதுமானது.

பிரதமர் மிகப்பெரிய பதவியில் உள்ளவர், என்றாலும் நமது தெளிவான கேள்விகளுக்கும் பதில் அளிக்கவோ அவருடைய மதச் சனாதன நடவடிக்கைகளை நியாயப் படுத்தவோ அவரால் முடியவில்லை. நமது நாட்டில் உள்ள நாலாந்தரப் பார்ப்பனர் வைதிகர்களின் வாதங்களை உள்ளடக்கியதாகவே அவர் கடிதம் இருக்கிறது.

நமது தலைவர் தந்தை பெரியார் அவர்கள் வகுத்த லட்சியங்கள் வெற்றியை நோக்கி நடைபோடத் துவங்கிவிட்டன என்பதற்கு இவைகள் அச்சார அறி குறிகளாகும்.

எனது உடல்நிலை பற்றிக் கூட நான் கவலைப் படவில்லை தலைவர் அருமைத் தந்தையின் நினைவு நாளையொட்டி நமது இயக்கத் தோழர்கள், பகுத்தறிவு வாதிகள் இவர்களை கூட்டி மாபெரும் இன எழுச்சிப் பெருவிழாவாக “இராவணலீலா” நடத்தி அதில் நாம் திட்டமிட்டபடி காரியங்களைச் செய்தே தீரவேண்டிய நிலையில் இருக்கிறோம்.”

போராட்டத்துக்கு உ.பி, கோவா அமைப்புகள் ஆதரவு

maniammai 24728.11.1974 அன்று வெளியான அம்மாவின் அறிக்கை அய்யா அவர்களின் நினைவு நாளுக்கு மறுநாளை டிசம்பர் 25ஆம் நாளை “இராவணலீலா” நடக்கும் நாளாக அறிவித்தது. போராட்டம் என்னும் அறிவிப்பு வந்தது.

உ.பி.யிலிருந்து அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அமைப்பின் நிறுவனர், அம்மா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், “இராவணலீலா” நிகழ்ச்சியில் பங்கேற்கத் தோழர்களுடன் வருவதாகக் கடிதம் எழுதினார். கோவாவில் இருந்து “சத்திய சோதக் சமாஜம்” என்னும் அமைப்பு முழு ஆதரவு தெரிவித்தது.

உ.பி.யிலிருந்து அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைச் சாதியினர் சம்மேளனத்தின் நிறுவனர் திரு ஜி.எல்.சாகு மற்றும் திருவாளர்கள் நந்தலால்சிங் யாதவ், சாலிக்ராம் குரீல், சந்திரசேகர் ஆகியோர் “இராவணலீலா” வைபவத்திலே கலந்துகொள்ள இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தமிழகத் தலைநகரம் வந்துவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து உ.பி.மாநிலம் கான்பூரிலிருந்து இராம் நாராயண்மாலி, டாக்டர் ஜலிஸ்வர் பிரகாஷ் ஆகியோரும் வந்து சேர்ந்தனர்.

நல்ல திருப்பம் ஏற்பட்டுவிட்டது. நாடெங்கும் “இராவணலீலா” பேச்சுதான். சென்னையை நோக்கிப் புறப்படத் தயாராகி விட்டோம்! தனித் தனிப் பேருந்துகள் பேசிவிட்டோம். இந்த இரயில்களில் இத்தனை இத்தனை பேர்கள் வருகிறோம் என்ற செய்திகளைத் தாங்கி வந்த கடிதங்களைப் பிரித்து படித்து மாளவில்லை.

திராவிடர் கழக சார்பில் எழுதிய கடிதங்கள் பிரதமர் எழுதிய கடிதங்கள் ஏடுகளில் வெளிவந்தன. “இராமலீலா”- “இராவணலீலா” பற்றிய விவாதங்கள் பரபரப்பாக பேசப்பட்டன. தமிழக சட்டமன்றத்தில் காங்கிரசு உறுப்பினர் அனந்தநாயகி உள்ளிட்டவர்கள் “இராவண லீலா”வை தடைசெய்யக் கோரினார்கள். முதல்வர் கருணாநிதி “இராவணலீலா” பக்தர்கள் மனதை புண் படுத்தும் என்றால் “இராமலீலா” பகுத்தறிவாளர்கள் மனதை புண்படுத்தாதா? என்றார்.

தினத்தந்தி நாளிதழில் “நீங்கள் இராவணனை எரித்தால் நான் இராமனை எரிப்பேன்” என்ற கருத்துப் படம் அந்நாளில் பரபரப்பாக பேசப் பட்டது.

இராமன், இலட்சுமணன், சீதைக் கும்பல் தீயின் ருசி பார்க்கும் நாட்கள் மிகவும் நெருங்கி விட்டன. நாட்கள் நெருங்க நெருங்க எதிரிகளுக்குத் திகில் பிடித்துக் குலுங்க ஆரம்பித்துவிட்டது! கடைசி கட்ட முஸ்திபுகளிலே குதிக்க ஆரம்பித்துவிட்டனர். வாய் திறக்காது கிடந்த காஞ்சிசங்கராச்சாரியார் ‘இராவணலீலா’ வை எப்படியாவது தடுத்தாகவேண்டும்;இதனால் மதம் போகும் சித்தாந்தம் சாகும் என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

தமிழக சட்டமன்றத்திலோ ‘இராவணலீலா’ வைத் தடைசெய்யச் சொல்லி ஒத்திவைப்புத் தீர்மானங்கள் கிடுகிடுத்தன. வடக்கிலோ பிரேம் சந்த்குப்தா என்பவரின் தலைமையின் கீழ் ‘இராவணலீலா’ எதிர்ப்புக் கமிட்டி அமைக்கப் பட்டு பிரதமரிடம் தூது சென்றது.

அகில இந்திய சமணர் தலைவரோ “தமிழக அரசே இராவணலீலா-வைத் தடைசெய்!” என்று அவசர அவசரமாக அறிக்கைவிட்டார். அகில இந்திய ‘ராம்நாத் சம்பிரதாயா’ என்ற அமைப்பின் தலைவர் மகத்வைஷ்ணவதாஸ் என்பவர் அந்த அமைப்பின் சார்பிலே ஜனாதிபதியைச் சந்தித்து ‘இராவணலீலா’வைத்தடை செய்ய ஜனாதிபதியின் செல்வாக்கை - அதிகாரத்தைப் பயன்படுத்தும்படிக் கெஞ்சினார்கள். தமிழக அரசு ‘இராவணலீலா’ வைத்தடை செய்யாவிட்டால் தமிழக அரசையே ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டுமாம் - அந்தக் கட்டம் வரை போய்விட்டார்கள்.

முதல்வர் மற்றும் காவல்துறை உயர் அலுவலரின் முயற்சியும், நமது நிலையும்

நீண்ட அவகாசமும் அளிக்கப்பட்டு இப்போது செயலில் இறங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுக் காரியமாற்ற சில தினங்களே இருக்கும்போது இரு சாராருக்கும் அறிவுரை கூறினார் தமிழ்நாட்டு முதல்வர். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் கீழே கண்ட பதிலை பதிவு செய்தார் கழகத் தலைவர் மணியம்மையார்.

“நமது மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய முதல்வருக்கு நாம் அன்புடன் தெரிவித்துக்கொள்வது, இராவணலீலா நடத்துவதை நாம் நிறுத்த வேண்டும் என்று விரும்பினால் இனி ‘இராமலீலா’ நடத்து வதில்லை; பிரதமரோ, ஜனாதிபதியோ இராமலீலாவில் கலந்துகொள்வதில்லை என்று எங்களுக்கு கூட அல்ல, தங்களிடத்தில் வாக்குறுதி ஒன்றினைத் தருவார்கள் என்றால் நாம் “இராவணலீலா” நடத்தி இராமனை எரிப்பதை நிறுத்துவது பொருள் உள்ளதாக இருக்கும்.”

இந்த உரையாடலை அன்றைய நாளில் இன்டியன் எக்ஸ்பிரஸில் நாளிதழில் எழுதி இருக்கிறார்கள். எப்படித் திரித்து எழுதினார்கள் தெரியுமா?

மணியம்மையார் இந்த ‘இராவணலீலா’வை நிறுத்த வேண்டும் என்றால் மத்திய அரசாங்கத்தில் இருந்து உத்தரவு வந்தால்தான் கேட்பார்களாம். நாங்கள் சொல்வதை (தமிழக அரசு) ஏற்றுக் கொள்ளவில்லை என்று மாநில அரசுக்கும், திராவிடர் கழகத்திற்கும் மோதலை உருவாக்கும் வண்ணம் எழுதியிருந்தார்கள்.

காவல்துறைக்கு கழகத் தலைவரின் பதில் உரை

இராவணலீலா நடைபெறுவதற்கு முதல் நாள் போராட்டத்தை எப்படியும் நிறுத்திவிட மய்ய அரசு கலைஞர் அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. எனவே காவல்துறை சென்னை மாநகர ஆணையராக இருந்த கே.ஆர்.ஷெனாய் அவர்களும், துணை ஆணையர் துரை அவர்களும் அம்மாவை வந்து சந்தித்தனர். சுமார் 1 மணிநேரம் அம்மாவிடம் பேசிப் போராட்டத்தைக் கைவிடுமாறு தங்கள் பகுதி வாதங்களை எடுத்து வைத்தனர். எதற்கும் மணியம்மையார் பணியவில்லை. காவல்துறை ஆணையர் அவர்கள் சொன்னார்கள்,

“நான் இதுவரை தந்தை பெரியார் அவர்களிடத்தில் பலமுறை வந்து வெற்றி பெற்றே இருக்கின்றேன். உங்களிடத்தில்தான் முடியவில்லை. இவ்வளவு பிடிவாதமாக நீங்கள் இருப்பது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. அய்யா அவர்கள் இருந்தால் இவ்வளவு நேரம் எங்களை பேசக்கூட வைத்திருக்க மாட்டார்கள். ஏதாவது ஒப்புதல் கொடுத்து அனுப்பி இருப்பார்கள்”

என்றார். அதற்கு பதில் உரையாக நாங்கள் எங்கள் கடமையைச் செய்கிறோம். நீங்கள் உங்கள் கடமை எதுவோ அதைச் செய்யுங்கள் என்று அமைதியாக எடுத்துரைத்தார்கள்.

போராட்டக்களம்

24.12.1974 சென்னை பெரியார் திடல் கருஞ்சட்டைத் தோழர்களால் நிரம்பியது. தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மற்றும் அமைச்சர் பெருமக்களும் இயக்கத் தோழர்களும் அய்யா நினைவு நாளிலே வீழ்ந்த இனம் மீண்டும் வீறுபெற சுயமரியாதை சங்கநாதம் செய்தனர். இறுதியாக கழகத்தலைவர் அன்னை மணியம்மையார் உரையாற்றும் போது, “ஆத்தூர் மாநாட்டுத் தீர்மானத்தைச் சுட்டிக்காட்டி சட்டத்திற்க்குட்பட்ட கத்தியைக் கழகத்தவர் ஒவ்வொருவரும் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார். அன்னையாரின் ஆணை உடல் சிலிர்க்க வைத்தது.

பொதுச் செயலாளர் கைது

முதல்நாள் நிகழ்ச்சியின் முடிவாகக் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி அவர்கள் “நடக்கப்போகும் இராவணலீலா நிகழ்ச்சிக்கு முன்பே தாம் கைது செய்யப்பட்டாலும் படலாம் எந்த விலை கொடுக்கவும் நாம் தயாராக இருக்கிறோம்” என்றார். அவர் உரையாற்றியதைப் போலவே, பேசி முடித்ததும், வெளியே வந்தபோது பொதுச் செயலாளர் திரு.கி.வீரமணி அவர்களுடன் தோழர்கள் திருவாரூர் தங்கராசு, தோலி.ஆர் சுப்ரமணியன், தஞ்சை க.மா.குப்புசாமி, பொத்தனூர் சண்முகம், திருப்பத்தூர் ஏ.டி.கோபால், திருச்சி என்.செல்வேந்திரன், கோவை இராமக்கிருட்டிணன் ஆகியோர் முன்கூட்டியே கைது செய்யப்பட்டு, “இராவணலீலா“ நிகழ்ச்சி முடிந்த பிறகு 25.12.1974 இரவு 9.30 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.

அரசியலில் தி.மு.க. முகாம்களில் இருந்தாலும், சமுதாய இழிவைத் துடைக்கும் போரில் தொண்டராகத் தங்களை ஒப்படைத்துக்கொள்ள என்றும் தயார் என்று திரு.ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களும், சட்டமன்ற உறுப்பினர் திரு.இராசகோபால் அவர்களும் எடுத்துரைத்தார்கள்.

இறுதியாகக் கழகத்தலைவர் அன்னையார் அவர்கள், “நாம் காலக்கெடு கொடுத்த நேரம் நெருங்கிவிட்டது. இதுவரை ‘இராமலீலா’ கூட்டத் தாரிடமிருந்து எந்த வித பதிலும் இல்லை. இனி ‘இராமலீலா’ நடத்துவதில்லை என்று இப்போது வாக்குறுதி கிடைத்தால் கூட ‘இராவணலீலா’ நடத்துவதை நிறுத்திவிடத் தயாராக இருக்கிறோம்” என்று எடுத்துரைத்தார்கள்.

திராவிடர் கழகம் எவ்வளவு பொறுப்பு ணர்ச்சியோடும் கவலையோடும் எந்தப்பிரச்சனை யையும் அணுகுகிறது என்பதற்கு அன்னையார் அவர்களின் இந்த பேச்சு ஒன்று போதுமே!

எரிந்தான் இராமன்!

25.12.1974 அன்று பெரியார் திடலில், நடிகவேள் எம்.ஆர்.இராதா அரங்க மேடையில் கம்பீரமான தோற்றம் கொண்ட கழகத்தோழர்கள் அணைக்கரை டேப் தங்கராசு இராவணனாகவும், மேல்காவனூர் கே.பி.சாமிநாதன் கும்பகர்ணனாக வும், தஞ்சை சாமிநாதன் மேகநாதனாகவும் வேடமணிந்து வந்து நின்றபோது விண்ணைப் பிளக்கும் முழக்கங்கள்.உணர்ச்சி ஆரவாரங்களுக் கிடையே, அதுவரை தோழர்களால் இரகசியமான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18 அடி உயர இராமன், 17 அடி உயர இலட்சுமணன், 16 அடி உயர சீதை உருவ பொம்மைகள் இழுத்து வரப்பட்டன.

அன்னை மணியம்மையார் முதல் நெருப்பை வைக்க தோழர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு கொளுத்த “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன; ஆம்! அன்னையார் தீ மூட்டிவிட்டார்! ஆரியக்கும்பல் இராமன், சீதை, இலட்சுமணன் கும்பல் எரிந்தது - எரிந்தது எரிந்து கொண்டே இருந்தது. எரிமலை வெடித்தோ - பூகம்பம் நிகழ்ந்ததோ - கடல் வெள்ளம் வந்ததோ! அப்பப்பா எத்தகைய முழக்கங்கள் எழுச்சிச் சங்கநாதங்கள்! “தந்தை பெரியார் வாழ்க! “அன்னையார் வாழ்க” தந்தை பணியை முடித்தோம்-முடித்தோம்!” என்ற எழுச்சி முழக்கங்கள் எங்கும் முழங்கின. உலக வரலாற்றி லே கூட இதற்கு ஈடான எழுச்சி நிகழ்ச்சிகளை விரல் விட்டு எண்ணுவது கூடக் கடினம்.

ஆயிரம் ஆயிரம் தாய்மார்கள்,தோழர்கள் எல்லாம் ஆளுக்கொரு “இராமன் –சீதை - இலட்சுமணன்” படங்களைக் கையில் பிடித்துக் கொளுத்தித் தீர்த்தனர். பெரியார் திடல் மக்கள் கடலாய் விரிந்து பரந்து எழுச்சி அலைகள் புயலாய்க் கிளம்பிக் கிடந்தன. மத்திய அரசுத்துறையோ இதைத் தொலைக்காட்சிப் படம் எடுத்தது.

அன்னையார் கைது

காவல் துறையினர் வந்தார்கள் கழகத்தலைவர் அன்னையாரைக் கைது செய்கிறோம் என்றார்கள். நமது அன்னையார் ‘மிக்க மகிழ்ச்சி’ என்றார். சிறைப் பறவையான தந்தையின் வாரிசு அல்லவா? அதனால்தான் மகிழ்ச்சி என்றார்கள். அவ்வளவு தான் பெருமழையோடு புயலும் சேர்ந்தால் எவ்வளவு கிடுகிடுக்குமோ அவ்வளவு பெரியார் முழக்கப் பேரலைகள்! அன்னையார் வாழ்க! அன்னையார் வாழ்க!! என்ற இடிமுழக்கங்கள் அமளி துமளி செய்தன. கட்டுப்பாட்டின் கரைகள் உடையுமோ என்ற அச்சம் இருந்தாலும் கட்டு உடையவில்லை;தந்தை தந்து சென்ற பயிற்சியும், அன்னையார் அவர்கள் வலியுறுத்திய சொல்லும் அவர்களைச் சமன்படுத்தின.

அன்னையார் அவர்களோடு நீடாமங்கலம் அ.ஆறுமுகம், தஞ்சை இராஜகோபால், குடந்தை ஆர்.பி.ஸ்டாலின், சேலம் சித்தையன், பெண்ணா கரம் பி.கே.இராமமூர்த்தி, வழக்கறிஞர். எஸ்.துரை சாமி, கரூர் வீரண்ணன், கரூர் கே.கே.பொன்னப்பா, திருச்சி து.மா.பெரியசாமி, திருவண்ணாமலை எஸ்.கண்ணன், வில்லிவாக்கம் ஏ.தியாகராஜன், பெரியகுளம் ச.வே.அழகிரி, மற்றும் அரூர் வி.ஆர்.வேங்கன் உட்பட பதின் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

பஞ்சாப் அம்பேத்கரிய அமைப்பின் ஆதரவு

உத்திரப் பிரதேசத்திலிருந்து வந்த இராவணலீலா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாகு அவர்கள் ஆற்றிய உரையில், “அடுத்த ஆண்டு ‘இராவணலீலா’ நாங்கள் நடத்துவோம். நீங்களும் வாருங்கள்” என்ற சூளுரையோடு வட நாட்டிலிருந்து வந்தவர்கள் சென்றனர்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகர் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் பி.டி.ஷந்தத் அவர்கள் கழகத்தலைவர் அன்னையார் அவர்கட்கு எழுதியுள்ள கடிதம் இது.

“தாழ்த்தப்பட்ட சம்பூகன் தவம் செய்தான் என்பதற்காக அவனை வெட்டிய, இராமனின் உருவத்தைத் தீயிட்டுக் கொளுத்திய நிகழ்ச்சிக்கு எங்களுடைய கழகத்தின் சார்பாகப் பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். சரியான முறையில், சரியாகச் செய்யப்பட்ட காரியமிது. உங்களுடைய கழகம் காட்டியுள்ள இச்சீரிய உதாரணத்தைப் பஞ்சாப் இளைஞர்களும் பின்பற்றத் தயாராக இருக்கிறார்கள் என்பதைத் தங்களுக்கு உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 1974 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள், ஆதிக்கத்தை எதிர்த்துக் கிளம்பிவிட்ட ஓர் புரட்சி நாளாக, வரலாற்றில் மறக்க முடியாத நாளாக என்றென்றும் நிலைத்திருக்கும். நம்முடைய மரியாதைக்குரிய தலைவர்களான தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகியவர்களின் இலட்சியங்கள் இவை. இந்தத் துணிவு மிக்க செயலுக்கு எங்களுடைய உளமார்ந்த பாராட்டுக்களை அருள்கூர்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்.”

இப்படி “இராவணலீலா” நிகழ்ச்சி இந்தியா வெங்கும் எதிரொலித்தது. அய்யா அவர்களுக்குப் பின்பு அன்னை மணியம்மையார் அவர்கள் தலைமையில் இந்த இயக்கம் எவ்வளவு சிறப்போடும், விழிப்போடும், கட்டுப்பாட்டோடும் வீறுகொண்டு எழுந்திருக்கிறது என்பதற்கு “இராவணலீலா” சிறந்ததோர் எடுத்துக்காட்டு!

தொகுப்புக்கு உதவிய நூல்களுக்கு நன்றி:

  1. விடுதலை - தந்தை பெரியார் 97ஆவது பிறந்தநாள் மலர்.
  2. இராவணலீலா ஏன்? - தோழர் கி.வீரமணி

3.தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை. ஈ.வெ.ரா. மணியம்மையார் - ந.க.மங்கள முருகேசன்.

4.‘இராவணலீலா’ தமிழ்நாட்டின் தேசிய விழா - ஈ.வெ.ரா.மணியம்மையார்

Pin It