இயற்கை சுற்றுச்சூழல் பிரச்சனைகள் என்பது நம் தமிழ் நாட்டில் தற்போது நடந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இயற்கை என்ற பொதுவான வார்த்தை நீர், நிலம், மண், கல் காற்று போன்ற உயிரற்ற பொருட்களும் தாவரங்கள் மற்றும் அமீபா தொடங்கி உணவுச் சங்கிலியின் மிக உயர்ந்த இடத்திலிருக்கும் பகுத்தறிவைக்கொண்டுள்ள மனிதர்கள் வரை அடங்கும்.
தற்போதைய சூழலில் மற்ற உயிரினங்களைப் பற்றிப் பேசினாலே “மனிதர்களுக்கே உத்திரவாதம் இல்ல, செத்துப்போனாக்கூட கண்டுக்கறதில்ல இதுல மத்த உயிரனத்தப்பத்தி எனக்கென்ன?” என்கின்றனர். எலி, வாத்து, மயில், காகம், கிளி, கழுகு, பறுந்து, மாடு, யானை, புலி, சிங்கம் போன்ற உணவுச் சங்கிலியின் அனைத்து நிலையிலிருக்கும் உயிரினங் களையும் கடவுள்களாக வைத்திருக்கும் அதே சமூகம், இயற்கையை வழிபட ஆரம்பித்த கற்காலத்தில் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தனர். ஆனால் காலப்போக்கில் இயற்கையை முற்றிலும் அழித்துவிட்டு, கோயில்களில் மட்டும் கற்சிலை களாக வைத்திருக்கின்றனர்.
இதற்கு காரணம் இயற்கையைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்துகொள்ளாமல் அல்லது தெரிந்தும் நமக்கென்ன என்று இருப்பதும் தான். இதன் விளைவாகத்தான் தற்போது நாம் அனுபவித்து வரும் பாதிப்புகள். இதுபோன்ற பாதிப்புகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ளவும் அதற்கான தீர்வைக் கண்டறியவும் ஆய்வுகள் குறைவாகவே உள்ளன. அறிவியல் பூர்வமாக பிரச்சனைகளையும் அப்பிரச்சனைகளுக்கான தீர்வையும் கண்டறியாமல் இருந்தால் எதிர் காலத்தில் இதைவிட பல மடங்கு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இதனால் சாலிம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாறு ஆய்வு மையம் “சுற்றுச்சூழல் மாசுபாட்டினைச் சுற்றுச்சூழல் கூறுகளில் குறிப்பாக பறவைகளில் மேற்பார்வை மற்றும் கண்காணிப் பிற்கான தேசிய மையம் அமைத்தல்” (“National centre for surveillance and monitoring of environmental contaminants in ecosystem special focus on birds in India”) என்ற திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் கால நிலை மாற்றம் துறையின் நிதியுதவி யுடன் தொடங்கியுள்ளது.
காரணம், பறவைகள் உயிர்க்குறிப்பானாகச் செயல்படுகின்றன. ஏனென்றால் அனைத்து வகை யான இடங்களிலும் (நீர், கடல், ஆறு, குளம், குட்டை, நிலம்- அடர்ந்த மலைக்காடுகள், காடுகள், விவசாய நிலங்கள், கிராமங்கள், நகரங்கள்) வாழ்ந்து அனைத்து வகையான உணவுகளை உண்டும் வாழ்கின்றன.
1.தேனுரிசான்,
2.தானிய உண்ணி
3. பழ உண்ணி
4. பூச்சி உண்ணி
5. மீன் உண்ணி
6. உயிருள்ள விலங்குகளை வேட்டையாடுபவை
7. இறந்த உயிரினங்களை உட்கொள்பவை.
இப்படி உணவுச்சங்கிலியின் அனைத்து நிலையிலும் உள்ள ஒரே உயிரினம் பறவைகள் மட்டுமே. மேலும் இதனால் சுற்றுச்சூழல் மாறுபாடுகளுக்கு உடனடியாக செயல்பட்டு நமக்கு எச்சரிக்கை அளிக்கும்.
ஆகையால் இந்தியா முழுவதும் இறந்த பறவைகளை ஆய்வுக்குட்படுத்தி, சுற்றுச்சூழலில் உள்ள பிரச்சனைகளைக் கண்டறிந்து தீர்வைச் செயல்படுத்த உள்ளோம். இதை ஆராய்ச்சி யாளர்கள் வேலை என்று ஒதுங்கிவிடாமல் பொது மக்களும் கவனிக்க வேண்டும். இதற்கு நீங்கள் யாரும் மெனக்கெட்டு நட்டப்பட்டு எதையும் செய்ய வேண்டியதில்லை. உங்களது அன்றாட வாழ்க்கை முறையைக் கூட மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை.
நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை எப்போதும் போல் ஏனோதானோ வென்று கடந்து போகாமல் கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்தாலே போதும். உதாரணத்திற்கு நம்ம ஊர்க் குளத்தில் (குளம் இருந்தால்…?) ஏன் தண்ணீர் திடீர் என்று நிறம் மாறியது? மீன்கள் எல்லாம் செத்து மிதக்குதாமே ஏன்? காற்றில் ஏதோ வேண்டாத நெடி வருதே, என்ன அது? நேற்று வரைக்கும் நம்ம வீட்டு மொட்டைமாடியில் வந்து உட்கார்ந்து போகும் மைனா போன்ற ஒரு பறவை எங்க ஒரு வாரமா காணமே? இப்படி ஏற்படுகின்ற திடீர் மாற்றங் களைக் கவனிக்கலாம்.
அல்லது நாம போற, வர்ற வழிகளில் ஏதேனும் ஒரு பறவை பறக்க முடியாம அல்லது நோய் தாக்கப்பட்டு அல்லது இறந்து கிடந்தாலோ அதை அலட்சியமாகக் கருதாதீர்கள், சமந்தப்பட்ட பறவையைப் பற்றி எங்களுக்குத் தகவல் சொல்லுங்கள். அதான் கையில் ஆண்டிராய்டு போன் இருக்கே ஒரு சூட், நெட்ட ஆன் பண்ணி, வாட்ச் அப்லயோ, முகநூல் வழியாகவோ இதை ஒரு தகவலாகப் பதிவு செய்யுங்கள்.
ப்ளீஸ் ப்ளீஸ் னு எத்தனையோ செய்திகளை தேவை இருக்கோ இல்லையோ குழுக்களில் பகிர்கிறோம். அதைவிட முக்கியமானது இது. எங்க ஆராய்ச்சிக்குழு இல்லேனா, வேற குழுக்களில் தொடர்ந்து பகிரலாம் அல்லது எங்களைத் தொடர்பு கொண்டு சொல்லலாம்.
கொஞ்சம் கூடுதலான அக்கறையும் சுற்றுச் சூழல் ஆர்வமும் இருக்கிற நண்பர்கள், ஏதோ ஒரு பறவை பாதிக்கப்பட்டிருந்தா, இறந்து கிடந்தா அது எங்கே? எப்போ? இறந்தது என்கிற தகவலோடு அந்தப் பறவையை எடுத்து, ஒரு தெர்மாக்கோல் பெட்டியில் குளிரூட்டப்பட்ட ஜெல்பேக் வைத்து எங்கள் முகவரிக்கு அனுப்புங்கள். (அந்த செலவுத் தொகையை உங்களுக்கு அனுப்பி விடுவோம்)
ஒரு காக்கா, குருவி இல்லே பேரு தெரியாத ஏதோ ஒரு பறவை இறந்து போச்சேன்னு எதுக்கு இவ்வளவு கவலைப்படணும்னு நீங்க தெரிஞ்சு கிட்டீங்கனா, இதோட முக்கியத்துவம் என்னான்னு புரிஞ்சுக்குவீங்க.
கருமேகம் கூடுனா, மயில் தோகை விரிச்சா மழை வரும்னு நமக்கு தெரியும் தானே? இப்படித் தான் பறவைகள் திடீரென்று பாதிக்கப்பட்டால் அடுத்ததாக அந்தப்பகுதியில் மனிதருக்கு ஏதோ ஆபத்து வரப் போகுதுனு அர்த்தம். நமக்கு வர்ற அபாயத்தை முன் கூட்டியே அறிவிக்கும் பறவை களோட வாழ்நிலையை நாம் கவனிக்கத் தவறினால் நமக்குத்தானே ஆபத்து.
நாய் குரைப்பதை அலட்சியப்படுத்தினால் திருட்டுக் கொடுக்க வேண்டும். பறவைகள் இறப்பை அலட்சியப்படுத்தினால் பேராபத்து வரும்போது நம்மைக் காக்க வழி தெரியாமல் தடுமாற வேண்டும். ஆதலால் மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் கீழே உள்ள மற்றும் தொலைபேசி எண்ணிற்கோ அல்லது அஞ்சல் முகவரிக்கோ தொடர்பு கொள்ளுங்கள்.
Dr.S.Muralidharan,
Senior Principal Scientist.
Division of Ecotoxicology,
Salim Ali Centre for Ornithology and Natural History (SACON),
Anaikatty, Coimbatore - 641 108.
Telephone- 0422-2203100, 124, 125 and 126.
வெ.கிருபாநந்தினி - 9488753659
வே.பாக்கியசிரி - 9487802211
காசா மோய்தின் - 7200110168
நிகழ்காலச் சூழலை கவனிப்போம்! எதிர்காலச் சூழலை காப்போம்!