மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மேலவளவு கிராமத்தில் இருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது பட்டூர் கிராமம். இங்கு பறையர் சமூகத்தினர் 350 வீடுகளும், மூப்பனார் சமூகத்தினர் 400 வீடுகளும், கள்ளர் சமூகத்தினர் 30 வீடுகளும் உள்ளன. கடந்த 31.07.2018 மாலை சபரீஸ்வரன் (21) என்னும் பறையர் சமூக இளைஞன் குளிக்கச் சென்ற போது அவரை வழி மறித்து எட்டுப் பேர் கொண்ட கும்பல் பட்டூரின் வயல்வெளிப் பகுதியில் மார்பிலும் மற்றும் பல இடங்களிலும் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். இந்தக் கொலையில் ஜாதி வெறி அமைப்புகளின் தூண்டுதல் இருப்பதாகக் கோரி பட்டூர் மக்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி போராடிக் கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாகத் ‘திருமாறன்ஜி’ என்பரின் தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் என்னும் அமைப்பு உடந்தை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கனவே திருமாறன் போன்றோர் ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவெறி அமைப்புகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, மதுரைப் பகுதியின் அமைதியை சீர் குலைக்கின்றார். இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரும் கைது செய்யப் பட்டு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
ஒரு கொலை அது நடந்தவுடன் குற்றவாளி களைக் கைது செய்யச் சொல்லி ஆர்ப்பாட்டம், போராட்டம் கண்டிப்பாக அவசியமானதே. அதே நேரத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் இனி தொடராமல் இருப்பதற்கு ஜாதி ஒழிப்பில் நம்பிக்கை உள்ள இயக்கங்கள், திரைப்படத் துறையினர், ஊடகங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
ஜல்லிக்கட்டும் இளவட்டக்கல்லும்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பட்டூர் பகுதியில் தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் (திருமாறன் ஜி) என்ற அமைப்பைச் சேர்ந்த குணபாலன் என்பவர் கரிகாலன் என்பவரின் ஆதர வோடு தங்கள் கொடியை ஏற்ற முயற்சித்துள்ளனர். அப்போது சபரீஸ்வரன் மற்றும் இளைஞர்கள் கூடி ஜாதி அமைப்புக் கொடியை இங்கு ஏற்றக்கூடாது என்றும் அப்படி ஏற்றினால் ஊரின் அமைதி கெடும் என்றும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதற்கு கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த குணபாலன் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
“நீங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் இப்படி செய்கிறீர்களா? பார்த்துக் கொள்கிறோம்” என்று மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார். இந்த வன்மம் தொடர்ந்துள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பட்டூரில் ‘இளவட்டக்கல்’ தூக்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் சில பறையர் சமூக இளைஞர்கள் கலந்து கல்லைத் தூக்க முயற்சி செய்துள்ளனர். அதற்கு “இந்தக் கல் எங்கள் ஜாதிக்குச் சொந்தமானது, மற்றவர்கள் தொடக் கூடாது” என்று கூறி ஜாதியைச் சொல்லி திட்டியுள்ளார் குணபாலன். அதைச் சபரீஸ்வரன் தட்டிக் கேட்டுள்ளார்.
கடந்த ஜுலை 31 ஆம் தேதி காலையில் மேலவளவு பகுதியில் ஜல்லிக்கட்டு விழா நடந்துள்ளது. அதைக் காண்பதற்காகச் சபரீஸ்வரன், நாகராஜ், அண்ணாமலை, ஆனந்தகுமார் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். அங்கே குணபாலன், அஜித்குமார் ,சுதர்சன், கார்த்திக் ஆகியோர் “இது எங்கள் ஜாதிக்கான திருவிழா, இங்கு நாங்கள் மெஜாரிட்டியாக இருக்கின்றோம். இங்கு உங்கள் வேலையைக் காட்ட முடியாது” என்று கூறித் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக அன்று மாலை சபரீஸ்வரன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலூர் பகுதி கள்ளர்களின் ஜாதி வெறி
மேலூர் பகுதி பெரும்பான்மையாகக் கள்ளர் சமூகமக்கள் வசிக்கக்கூடிய பகுதி ஆகும். இப்பகுதியில் உள்ள மேலவளவில்தான் முருகேசன் என்ற தலித் பஞ்சாயத்துத் தலைவர் 1997 ஆம் ஆண்டு வெட்டிக் கொல்லப்பட்டார். இப்பகுதியில் இன்னும் நாடு முறை நடைமுறையில் உள்ளது. கிராமப் பகுதிகளில் கூச்சமே இல்லாமல் பள்ளன், பறையன், சக்கிலி, அம்பட்டன், நாவிதன் என்று ஜாதிப் பெயரைச் சொல்லி அழைக்கும் பழக்கம் இன்னும் உள்ளது. கந்து வட்டிக் கொடுமை மிக அதிகமாக உள்ளது. அதில் பாதிக்கப்படும் தலித் மக்கள் குறிப்பாக பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.
மேலூருக்கு அருகில் வெள்ளளுர் என்று ஒரு பகுதி உள்ளது. இப்பகுதியின் பெயரே வெள்ளளுர் நாடு என்றுதான் அழைக்கப்படுகிறது. வெள்ளளுர் பகுதியில் 80 சதவீத மக்கள் கள்ளர்களாகவே உள்ளனர். இந்தப் பகுதியில் ஒடுக்குமுறை அதிகமாக உள்ளது. மேலும் வெள்ளளூர்ப் பகுதியில் ‘வல்லடிக்காரர்’ என்ற கள்ளர்களின் குலதெய்வக் கோவில் உள்ளது. இங்கே தான் தேர்தல் நேரத்தில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்வார்களாம். இங்கே முடிவு செய்த பின்பு யாரும் மாறி வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறப் படுகிறது. பல அரசியல் தலைவர்கள் இங்கே வந்து இங்குள்ள தலைவரிடமும் பூசாரியிடமும் ஆதரவு கேட்டுச் செல்வார்கள்.
ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் வெளியூர் சென்று படிக்கக்கூடாது என்று சட்டமாகவே வைத்துள்ளார்கள். இப்போது அது மாறிவிட்டது. அமைப்பாக இல்லாத மக்களாகிய நாவிதர், வண்ணார், குயவர் போன்றவர்கள் இவர்களின் அடக்குமுறையில் அதிகம் பாதிக்கப்படு கின்றனர். மேலூரில் இருந்து நான்கு கி.மீ அருகில் உள்ள கள்ளம்பட்டி என்னும் ஊரில் ஆறு மாதங் களுக்கு முன்பு ஒரு கோவில் திருவிழா நடைபெற்றது. அதில் கோலப்போட்டி நடந்துள்ளது. அதில் கோலம் பெரிதாகப் போட்டதாகவும், புள்ளி கள்ளர் சாதியினர் போட்ட கோலத்தில் கலந்து விட்ட தாகவும் கூறிச் சண்டையாகி அடிதடியில் முடிந்தது. இப்படி மேலூர்ப் பகுதி முழுக்கவே தினம் தினம் ஜாதிய ஒடுக்குமுறை நடக்கின்றது. அது எங்கேயும் பதிவிலே வராமலே அன்றாட அவமானங்களாக அரங்கேறுகிறது.
ஜல்லிக்கட்டு என்னும் ஜாதிக்கட்டு
இந்தியக் கிராமங்கள் ‘ஊர்’ என்றும், ‘சேரி’ என்றும் கிழித்துப் போட்ட மாதிரி பார்ப்ப னியத்தால் பிரிந்து கிடக்கிறது. வாழ்விடம், வழிபடும் இடம் முதற்கொண்டு செத்தபிறகு புதைக்கும் சுடுகாடு வரை, தனித்தனியாகவே இருக்கின்றன. ஆனால் ஜல்லிக்கட்டு மட்டும் ஒற்றுமையாக நடப்பதாக நம்மிடையே கலாச்சாரக் காவலர்கள் கம்பு சுத்துகிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் ஜல்லிக்கட்டு நடக்கும் போதெல்லாம் ஜாதிய மோதல்கள் நடந்து வருகின்றன. சென்ற முறை சிவகங்கை பகுதியிலும், தேனி மாவட்டத்தில் உள்ள வையம்பட்டி பகுதியிலும் நடந்தது. இவை செய்தித் தாள்களில் வந்ததால் தெரிந்தது.
மேலூர் பகுதியில் நமது களஆய்வின் போது அங்கு பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடப்பதாகவும் அங்கு தாழ்த்தப் பட்டோர் மாடு பிடிக்க முடியாது என்றும் கூறினர். மேலவளவில் வேடிக்கை பார்க்கச் சென்றவரிடம் தானே சண்டை இழுத்துள்ளார்கள். இங்கே ஜல்லிக்கட்டு நடந்தாலே சண்டை வரத்தான் செய்யும் என்கின்றனர் மக்கள். ‘தைப்புரட்சி’ என்று பேசியவர்கள் கொஞ்சம் கண்ணைத் திறந்து மேலவளவைப் பாருங்கள். உங்கள் பண்பாட்டுப் புரட்சியில் வாழவேண்டிய 21 வயது இளைஞன் சாகடிக்கப்பட்டுள்ளான். இதற்கு மேலாவது பெரியாரிஸ்ட்டுகள், இடதுசாரிகள், அம்பேத் கரிஸ்ட்டுகள் ஜல்லிக்கட்டு போன்ற விழாக்களை தடை செய்யச் சொல்லி அரசை வலியுறுத்த வேண்டும்.
ஜாதீயை வளர்க்கும் திரைப்படங்கள்
இன்றைக்குத் தமிழ் சினிமாவில் பல இயக்குநர்கள் தங்கள் மண் சார்ந்த வாழ்வியலைப் படம் பிடிப்பதாகக் கூறிக் கொண்டு பழமை வாதத்தைப் பாதுகாப்பதும், ஜாதியத்தை உயர்த்திப் பிடிப்பதுமே தங்களின் வேலையாக உள்ளனர். கமலஹாசன், பாரதிராஜா, முத்தையா போன்ற இயக்குநர்கள் கள்ளர் மற்றும் அகமுடையார், மறவர் சமூகத்தினரைப் பற்றி எடுக்கும் படங்களைக் கொண்டாடி மகிழ்கின்றனர். தேவர்மகன், கிழக்குச் சீமை தொடங்கி மதயானைக்கூட்டம், கொம்பன் என அனைத்தும் ஜாதியத்தை நிலை நிறுத்தும் படங்களாக இருக்கின்றது. அப்படங்களைத் தங்களுக்கான அடையாளமாக இளைஞர்கள் சுவரொட்டிகளில் வெளிப்படுத்துகின்றனர். ஆபாசக் காட்சிகளைத் தணிக்கை செய்வது போல, சமூகத்தின் ஆபாசமாக இருக்கும் ஜாதியை வைத்துப் படம் எடுப்பதைத் தணிக்கையில் தடை செய்ய வேண்டும்.
கலாச்சாரக் காவலர்களாக மாறும் முற்போக்குவாதிகள்
சமூகத்தில் நிலவும் ஜாதியை ஒழிப்பதாகச் சொல்லும் பல இயக்கத்தினர்கூட, பாரம்பரியம், பண்பாடு என்ற பெயரில் ஜாதியை நிலை நிறுத்தும் நிகழ்வுகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். குறிப்பாக குல தெய்வம், கிராம தெய்வ வழிபாடுகள் முழுக்க முழுக்க ஜாதியைக் காப்பாற்றுகின்றன. ஆனால் அவற்றை நாங்கள் எதிர்த்துப் பேச மாட்டோம் என்றும் - அது நமது தமிழர்களின் கலாச்சாரம் என்றும் கூறுகிறார்கள். ஜாதிய மோதல்களில் நடந்த கொலைகள், தாக்குதல்கள் பெரும்பாலும் கோவில்களையும் வழிபாடுகளையும் மையமாக வைத்தே இருக்கிறது.
மேலும் பூப்பு நன்னீராட்டு விழா, காதுகுத்து விழா போன்ற மூடநம்பிக்கைகள் நிறைந்த விழாக்களையும் ஆதரிக்கின்றனர். கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் மக்களைப் பின்னோக்கி அழைத்துச் செல்லாமல், சமூக மாறுதல்களை உள்வாங்கி ஜாதியை நிலை நிறுத்தும் பண்பாடுகளுக்கு எதிராக மாற்றுப் பண்பாடுகளை முன் வைக்க வேண்டும். மேலூர் போன்ற பகுதிகளில் பண்பாட்டு மாற்றத்திற்கான பரப்புரையும், விழாக்களையும் முன்னெடுக்க வேண்டும்.
கள்ளர்கள் ஆதிக்க ஜாதியா? அடிமை ஜாதியா?
கள்ளர் சமூகத்தினர் தங்களை ஆண்ட பரம்பரை என்று நினைத்துக் கொண்டும், நாடே தங்களைக் கண்டு பயப்படும் அளவிற்கு வீரமான ஜாதி என்றும் நினைத்துக் கொண்டும் உள்ளனர். ஆனால் சமூகத்தில் அவர்கள் பார்ப்பனர்கள் விதைத்த நஞ்சால் சூத்திரர்களாக மட்டுமல்லால் குற்றப் பரம்பரையாகவும் வாழ்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி அற்றவர்களாகவும் இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் குற்றப்பரம்பரை என்பதைப் பெருமையாகப் பார்க்கின்றனர். உண்மையில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் பொருளாதாரம், கல்வி, என அனைத்திலும் பின்தங்கியுள்ளவர்களாக உள்ளனர்.
இவ்வளவு பெரிய சமூகத்தில் இன்னும் ஒருவர் கூட உயர் நீதிமன்ற நீதிபதியாக வரவில்லை. ஐ.ஐ.டி போன்ற உயர் கல்வி பற்றிய புரிதல் இல்லை. திருமாறன் போன்ற கிரிமினல்கள் தலைவர்களாக வருவதற்கு இவர்கள் அடியாட்களாகப் பயன் படுகின்றனர். இவர்களிடம் ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு பி.ஆர்.பி.போன்றோர் நிலங்களையும், உழைப்பையும் சுரண்டுகின்றனர். இவர்களின் முரட்டுத்தனத்தை திரைப்படத்துறையினர் தங்கள் இலாப வெறிக்குப் பயன்படுத்துகின்றனர்.
ஜாதி ஒழிப்பு இயக்கங்களின் கடமை
பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக நாம் இருப்பதும் அவர்களின் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளையும், கொலை முதலிய சமூகக் குற்றம் செய்பவர்களைத் தண்டிக்கத் துணை நிற்பதும் ஜாதி ஒழிப்பு இயக்கங்களின் கடமை யாகும். அதே நேரத்தில் பார்ப்பனியச் சமூகக் கட்டமைப்பில் பின்தங்கியுள்ள ஒரு சமூகத்தின் அறியாமையைச் சுட்டிக்காட்டி - நீயும் அடிமைதான் என்று உணர வைத்து, உன் உழைப்பைச் சுரண்டும் பார்ப்பன அதிகார வர்க்கத்திற்கு எதிராக அணி திரள வேண்டிய அவசியத்தை உணர வைக்கும் பொறுப்பும் நமக்கு உள்ளது.
பிற்படுத்தப்பட்ட மக்களின் அறியாமையை, அவர்களின் ஜாதி வெறியை அவர்கள் பகுதிக்கே சென்று உணரவைத்து அவர்களைத் திருத்தும் கடமை மார்க்சிய, பெரியாரிய இயக்கங்களின் கடமையாகும். அவர்கள் எதை வீரம் என்கிறார் களோ அது முட்டாள்தனம் என்று புரிய வைக்க வேண்டியது திரைப்படத்துறையினரின் கடமை யாகும்.
(இக்கட்டுரைக்கான தகவல்களைத் திரட்டிக் கொடுத்த, திராவிடர் விடுதலைக்கழக மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் மா.பா.மணிகண்டன் அவர்களுக்கும், மின்னம்பலம் மின்இதழுக்கும் காட்டாறு குழுவின் நன்றி)