2013, நவம்பர் 8, வெள்ளிக்கிழமை அன்று ஒரு நிறுவன முதலாளியும், நானும்-தெரிந்த ஒரு வருமானவரி அலுவலரை வழியில் சந்தித்தோம். அப்பொழுது வருமானவரி அதிகாரி அவர்கள் கூறிய ஒரு சில உடல்நலப் பயிற்சிகள்.

“ஒரு மனிதரைப் பார்த்து இந்தப் பயிற்சியைச் செய் என்றால் ஒருமுறை அல்லது இருமுறை செய்துவிட்டு விட்டு விடுவார்கள். ஆனால் இந்தக் கோயிலுக்கு ஒரு மண்டலம் விரதம் இருந்து காலையில் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு 108 முறை கோயிலைச் சுற்றிவிட்டு ஒன்பதுமுறை காதைக் கையால் பிடித்துக் கொண்டு ஒன்பது தோப்புக் கரணம் செய்துவிட்டு வா என்றால் செய்வார்கள்.

இப்படி விரதம் இருப்பதால் உணவுப் பாதை சீர்படு கிறது. காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பதால் நுரையீரல் மற்றும் தோல்கள் நல்ல முறையில் பாதுகாக்கப்படுகின்றன. கோயிலைச் சுற்றியதில் நல்ல நடைப்பயிற்சி பெற்று சுறு சுறுப்பு அடைகின்றனர். காதைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடுவதால் கண் பார்வை நரம்புகள் நலம் பெற்று நீண்ட நாள் நல்ல பார்வை கிடைக்கின்றது. மூட்டுகளும் சீர்படுகின்றன. மேற்கண்ட நலன்கள் அனைத்தும் மனிதர்கள் மனம் வைத்தால் கோயிலுக்குப் போகாமலே, பூங்கா வுக்கு அல்லது மற்ற நல்ல இடங்களில் செய்யலாம். மனக் கட்டுப்பாடு இல்லாதவனுக்கு ஏற்படுத்தப்பட்டதுதான் கோயில்.

மனக்காட்டுப்பாடு உள்ளவனுக்கு எந்தக் கோயிலும் தேவை யில்லை. மேற்கண்ட பயிற்சிகளை அறிவியல் முறைப்படி நாமே செய்து நலம்பெற முடியும். இந்த மாதிரி நலன்களைக் கடவுள் கொடுத்தார் என்பது முட்டாள்தனம்” என்று கூறினார்.பதிலுக்கு என்னுடன் வந்த நிறுவன முதலாளி கூறியது. “அய்யா இப்பொழுது எல்லாம் அரசியல் கொள்ளையர்கள் திட்டமிட்டுத் திட்டங்களைத் தீட்டிக் கொள்ளையடிக்கின்றனர். மக்கள் நலம் பேணப்படுவது இல்லை. இனாம் கொடுத்தால் கூடும் கும்பலைப் பராமரித்தாலே ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று உள்ளனர்.

நல்ல கல்வி, நல்ல மருத்துவம், நல்ல குடிநீர், சுங்கவரிகள் இல்லாச் சாலைகள், வேலை வாய்ப்புகள் இவற்றை அரசே இலவசமாகச் செய்ய வேண்டும். செய்ய வில்லையே அய்யா. மேலும் நம்ம சனங்களும் நாம்தான் அரசியல்வாதி களால் பாதிக்கப்படுகின்றோம். நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும்; நம் கிராமப்புற ஏரிகள், குளங்கள், குட்டைகள், நீர்வாய்க்கால்கள் அனைத்தையும் தூர் எடுத்துப் பாதுகாக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவற்றை எல்லாம் செய்யாத அரசியல் வாதிகளை ஒழித்தாலே நாடு நலம் பெறும். வீடு கட்டாத விவசாய நிலத்து மனைகளைக் காலக்கெடு வைத்து மீண்டும் விவசாய நிலமாக்கினால் நமக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருக்கும்” என்று கூறினார்.

Pin It

சுற்றம் சூழ வாழ்தலே செல்வம்

     பெற்றதன் பயனாம்!

உற்ற நட்பே வாழ்வினில் எவர்க்கும்

     உயிர்காக்கும் துணையாம்!

நல்லோர் நட்பு வளர்பிறை போல

     நாளும் வளர்ந்திடுமாம்!

பொல்லார் நட்பு தேய்பிறை போலத்

     தேய்ந்து மறைந்திடுமாம்!

உடுக்கை நெகிழ்ந்தவன் கைபோல் நட்பு

     இடுக்கண் களைந்திடுமாம்!

இடித்துத் திருத்தித் தோழமை காக்க

     நட்பே விரைந்திடுமாம்!

அழிவைத் தடுத்து நன்னெறி காட்டி

     ஆக்கம் தரல்நட்பு!

விழியால் பார்த்தும் உதட்டால் சிரித்தும்

     மறைவது அல்லநட்பு!

நற்குடிப் பிறந்தார் பழிச்செயல் விரும்பார்

     நட்புக் கொளல்வேண்டும்!

உப்பாய் உலகிற்கு அமைந்தார் உறவை

     உவந்து போற்றவேண்டும்! 

- இரணியன், ‘தமிழ் அகம், கோவை

Pin It